Saturday, December 26, 2020

அவர்கள் வீடுகளில் தீபாவளி உண்டா ?

 தீபாவளி என்றாலே குழந்தைகள்தான். அவர்களின் கள்ளமில்லா சிரிப்பும் கொண்டாட்டமும் தானே தீபாவளி.

இந்தியாவின் கோடிக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகள் கல்வியை இழந்தது மட்டுமல்ல, பட்டினியிலும் பரிதவித்துக் கிடக்கின்றனர். அரசுப் பள்ளிகளின் கிடைக்கும் சத்துணவுதான் அவர்களை ஊட்டி வளர்த்தது . இப்போது அவர்களிடமிருந்து சிரிப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

லட்சக்கணக்கான மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருக்கின்றனர்.

காட்டிலும் , மேட்டிலும், வயலிலும், பட்டறையிலும், தெரு ஓரத்திலும் உழைக்கின் றனர் . சிரிக்க அவர்களுக்கு எது நேரம் ?

இணையவழிக் கல்வி மாணவரை அறிவுச் செல்வங்களாக்கும். ஆனால், எந்த மாணவரை?

பட்டினியைப் போக்கக் கரும்பு வெட்டும் மாணவனின் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம் ? அரிவாளா. ஆண்ட்ராய்ட் ஃபோனா?

அரிவாளைப் போட்டு விட்டு அவன் சிரிப்பானா ? இந்தக் குழந்தைகளின் பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளிடம் பாசம் இல்லையா ? ஏன் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்? வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, குழந்தைகளின் பட்டினியைக் காண சகிக்காமல்தான் வேலைக்கு அனுப்புகிறார்கள்.

அவர்தம் வாழ்வைத் தட்டிப் பறித்தவர் யார்? அதிகாரத்தின் உச்சியில் பீடம் கொண்டவரின் ஒரு கண முடிவு, இவர்களைப் பாதாளத்தில் தள்ளியிருக்கிறது.

நாடே ஸ்தம்பித்தது. பல கோடி மக்களை அகதிகளாக்கித் துரத்தியடித்தது. நாட்டின் நெடுஞ்சாலைகளில், ரயில் தண்டவாளங்களில் குழந்தைகளை , சொற்ப உடமைகளை சுமந்து நூற்றுக்கணக்கான கி.மீ.க்கு மக்கள் நடந்தனர் . சொந்த ஊர் சென்று அடைந்தனரா ? எத்தனை பேர் மடிந்தனர் ? அரசிடம் கணக்கு இல்லை . உலகமெல்லாம் கரோனா தாக்கியதே! வேறு எந்த நாடாவது புலம்பெயர் தொழிலாளர்களை இப்படி விரட்டியடித்ததா ? இல்லை, இது பாரத புண்ணிய பூமியின் தவப்புதல்வர்களுக்கு மட்டுமே கிடைத்த வரமா ? இவர்கள் எல்லாம் சிரிக்காமல் தீபாவளி விடியுமா ? இவர்களுக்கும் குழந்தைகள் உண்டு. 

பெற்றோரின் தோளிலும் இடுப்பிலும் இப்படி எத்தனை குழந்தைகளை பார்த்தோம்.

பச்சிளங் குழந்தை ஒன்று , தாய் மடிந்து கிடப்பதும் தெரியாமல், புடவையைப் பிடித்து இழுத்து, எழுப்பப் பார்த்ததே இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் தீபாவளியோ சிரிப்போ உண்டா?

பொருளாதாரம் நசிந்து கிடக்கும்போது, நிமிர்த்து நிற்பது வேளாண்மை ஒன்றே. அந்த விவசாயிகளின் அடிவயிற்றில் அடித்து, அவர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்களே ! அவர்கள் வீடுகளில் தீபாவளி உண்டா ?

#தமிழ் இந்து தீபாவளி மலரில்

முனைவர் வே. வசந்திதேவி.

15.11.2020 முகநூல் பதிவு



No comments: