Monday, November 12, 2018

இருளர்களின் இதயம் - அ.மார்க்ஸ் அறிமுகம்


தமிழகத்தில் வாழும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களைப் பலரும் அறிவதில்லை. ஆக ஒடுக்கப்பட்ட இப்பழங்குடி மக்கள் இன்றளவும் குற்றப் பரம்பரை யினராகவே காவல்துறையால் நடத்தப்படுகின்றனர். குற்றப் பரம்பரைச் சட்டங்கள் எல்லாம் இல்லாமற் போனபின்னும்கூட இன்றும் காவல்துறையினர் இவர்கள் மீது தம் தேவைகளுக்காகப் பொய் வழக்குப் போடுவது, பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்குவது என்பதெல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தியூர் விஜயா எனும் இருளர் இனப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை ஒட்டி அவர்களுக்காக நீதி வேண்டிய போராட்டத்தைத் தொடங்கிய காலம் முதல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து அவர்கள் மத்தியில் வேலை செய்து வருகிறார் பேரா பிரபா கல்விமணி (Prof Kalyani).
பழங்குடி மக்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்குள்ள பெரும் பிரச்சினை இனச் சான்றிதழ் பெறுவது. அதை எளிமைப்படுத்த அரசு தயாராக இல்லை. அடுத்த பிரச்சினை தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள காவல்துறை பிரச்சினை. இவை தொடர்பாக அம்மக்களுக்குத் தேவையான ஊதவிகளைச் செய்வது, புகார்கள் எழுதுவது, வழக்குகள் நடத்துவது, இருளர் பிள்ளைகளுக்குக் கல்வி வசதிகள் செய்து தருவது முதலானவைகளுக்காகவே பேரா பதவியிலிருந்து voluntary retirement பெற்று உழைத்து வருபவர் பேரா கல்விமணி. திண்டிவனம் மேம்பாலம் அருகில் அவர் உருவாக்கியுள்ள "பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்" அமைப்பின் சிறு அலுவலகம் எப்போதும் அவர்களுக்காகத் திறந்தே இருக்கும்.
தோழர் முருகப்பன் ராமசாமி, சிஸ்டர் லூசினா மற்றும் பல தோழர்கள் பேரா கல்விமணி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். இருளர்களுக்கான இதழ் நடத்துவது, மாநாடுகள் நடத்துவது, அவ்வப்போது சிறு வெளியீடுகள் கொணர்வது எனப் பலதிறப்பட்ட பணிகளை கல்விமணி அவர்களின் இயக்கம் செய்து வருகிறது. நடிகர் சூரியா குடும்பத்தினர், நீதியரசர் சந்துரு, தோழர் சுகுமாரன் கோவிந்தராசு முதலானவர்களும் பல்வேறு வகைகளில் கல்விமணி அவர்களின் பணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
தொடக்க காலத்தில் நானும் அவ்வப்போது சென்று வருவது வாக்கம். கடந்த பத்தாண்டுகளாக எனக்கு தொடர்பு விட்டுப் போய்விட்டது. சென்ற வாரம் திண்டிவனம் செல்ல நேர்ந்தபோது நீண்டநாட்களுக்குப் பின் இருளர் சங்கக் கட்டிடத்திற்குச் சென்றேன். தற்போது தோழர் முருகப்பன் அவர்கள் அங்கிருந்துகொண்டு கல்விமணி அவர்களுக்குத் துணையாக அவரது பணிகளில் செயல்பட்டு வருகிறார். அப்போது அவர் எழுதித் தொகுத்துள்ள இக்குறுநூலைப் பெற்றுக் கொண்டேன்.
இருளர்கள் போன்ற அதிக மக்கள் தொகையற்ற, அதுவும் சிதறிக்கிடக்கிற வகையில் பெரிய அளவு வாக்கு பலம் இல்லாத சிறு பிரிவு மக்களை யாரும் கவனிப்பதில்லை. அவர்களில் விழிப்புணர்வு பெற்ற ஒரு சிலர்தான் ஏதோ அவர்களால் முடிந்த, தெரிந்த அளவு நலப் பணிகளைச் செய்து வந்துள்ளனர். அப்படியான ஒரு இருளர் சமூகச் செயல்பாட்டாளரான வி.ஆர் ஜெகன்னாதன் (1937 - 78) என்பவர் குறித்து சமீபத்தில் முருகப்பன் எழுதி வெளியிட்டுள்ள இக்குறுநூலைத் தந்தார். கல்விமணி அவர்களின் பணிகளில் துணையாய் இருப்பவர்களில் ஒருவரான அருட் தந்தை ரஃபேல் ராஜ் அவர்களின் 'கவசம்' நிறுவனம் இந்நுலை வெளியிட்டுள்ளது.
குறைந்த வயதில் மாரடைப்பில் இறந்துபோன ஜெகன்னாதன் ஆயுள் காப்பீட்டுக் கழகம், சென்னைத் துறைமுகம் முதலியவற்றில் வேலை செய்தவர். இருளர் மக்களின் பிரச்சினைகளை எடுத்து இயங்கியபோது அவரது வீடே இயக்க அலுவலகமாக மாறி இருந்துள்ளது. 'ஆதிவாசிகள் சேவா சங்கம்' அமைத்து வட தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் தம்மால் முடிந்ததைச் செய்துள்ளார். 1961ல் தமிழக அரசு இவரை "தமிழ்நாடு ஆதிவாசிகள் ஆலோசனைக்குழு' உறுப்பினர் ஆக்கியுள்ளது. இந்திரா பிரதமராக இருந்தபோது மத்திய அரசு விருது அளித்துள்ளது. இவரது திருமணம் பெரியார் தலைமையில் நடந்துள்ளது. இவரது முதல் குழந்தை பிறந்தபோது காமராசர் தன் தாயாருடன் வந்து வாழ்த்துச் சொல்லியுள்ளார்.
இவரது தலைமையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம் வாசிக்கும்போது இருளர் குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகள்லிம் மக்களின் குடியிருப்புப் பிரச்சினைகள், இருக்கும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் பிரச்சினைகள் முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ளது தெரிகிறது. இருளர் பிரச்சினையில் அரசு எவ்வளவு அக்கறையின்றி உள்ளது என்றால், வாழ்நாள் முழுக்க அவர்களின் பிரச்சினை, அவர்களுக்குச் சான்றிதழ் என அலைந்த ஜெகன்நாதனுக்கான சான்றிதழை அவர் இறந்த பின்பே அரசு தந்துள்ளது.
தோழர் முருகப்பன் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர், ஏற்கனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து நீண்ட காலம் செயல்பட்ட போது தமிழகத்தில் 'வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' செயல்படுத்தப்படும் விதம் தொடர்பாக ஒரு மிக விரிவான நூலை ஏராளமான விவரங்களுடன் தொகுத்த அனுபவம் அவருக்கு உண்டு. எட்கார் தர்ஸ்டனின் பழங்குடி மக்கள் பற்றிய தொகுப்பில் இருளர்கள் குறித்த பகுதி முழுமையாக இந்நூலில் பிற்சேக்கையாகச் சேர்த்துள்ளார்..
எல்லோராலும் புறக்கணிக்கப்படும் சிறிய மக்கள் குழுமங்கள் மத்தியில் பணிசெய்து மறைந்த பலரும் எந்த அடையாளமும் பதிவும் இன்றி காலத்தில் கரைகின்றனர். அவர்களின் வாழ்வை ஏதோ கிடைத்த வரையிலேனும் தொகுத்து ஆவணப்படுத்துவது முக்கியம். அந்த வகையில் இக்குறுநூல் முக்கியமான ஒன்று.
முருகப்பனுக்கும் இந்நூலை வெளியிட்டுள்ள கவசம் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

(06-11-18 அன்று பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தனது முகநூலில் எழுதிய பதிவு)


மருத்துவர் வே.மணி - நீங்காத நினைவுகளுடன் அஞ்சலிகள்...

பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவதில் முனைப்புடன் இருந்ததைப் போன்றே, கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தவர். கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்க வந்த தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களை பள்ளி வாயிலில் நின்று வரவேற்று அழைத்து வந்தார். விழாவில் குழந்தைகளுக்கு பரிசினை வழங்கி பாராட்டினார். இதுதான் பள்ளியில் பங்கேற்ற கடைசி நிகழ்வாக இருக்குமென்று நினைக்கின்றேன். உடல்நிலை சரியில்லாமல் திடீரென 3 ஆம் தேதி மறைவுற்றார். யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத மரணம். திராவிடர் கழகத்திலும் தீவிரமாய உறுதியாய் செயல்பட்டு வந்தவர். மறுநாள் 4-ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் எந்தவித மதச் சடங்குகளும் கடைபிடிக்கப்படாமல் நினைவேந்தல் நிகழ்வுடன் நடைபெற்றது. 

பள்ளியின் மதிய உணவுத் திட்டத்திற்கு ஆலோசகராகவும், பெரும் நன்கொடையாளர்களை பள்ளியின் ஆதரவாளராகவும் மாற்றியவர் ஆகும். பெரியாரிய பற்றாளர். 

திண்டிவனம் வருகை தந்திருந்த புனிதப்பாண்டியன் அவர்களிடம் அம்பேத்கர் அவர்களின் ’நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூலை கையெழுத்திட்டுப் பெற்றார். 
மறைந்த மருத்துவரின் பணிகளும், 

செயல்பாடுகளும் அவரின் நினைவுகளைப் போற்றும்.
நீங்காத நினைவுகளுடன் அஞ்சலிகள்...

Tuesday, May 8, 2018

நீட் தேர்வு மையமும் சிறைச்சாலையும்


நீட் தேர்வு மையமும் சிறைச்சாலையும்
--------------------------------------------------------------நாடு முழுவதும் 13,26,000 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இதில் தமிழக மாணவர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தமிழ்நாட்டிலும்; 5,800 பேர் கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய பிறமாநிலங்களிலும் தேர்வு எழுதினர்.  த்துடன் புதுச்சேரியில் 8,894 பேர் எழுதினர்.  

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத தமிழக அரசு ஓராண்டு விலக்கு பெற்றது. கடந்த ஆண்டு எவ்வளவு போராடியும் அனிதாவின் உயிர் இழந்ததுதான் மிச்சம். இந்த ஆண்டும் கேரளா எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் தந்தை இறந்துபோனதுடன், திரும்பும் வழியில் இரு மாணவனின் பெற்றோர் என மூன்று தந்தைகள் மரணமடைந்துள்ளனர்.  

நீட் தேர்வு வேண்டாம், ரத்து செய்யப்படவேண்டும் என்ற நிலையில் நீட் தேர்வையொட்டி உயிரிழப்புகள் தொடரும் சூழலில் இந்தத் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்து  சிலவற்றை பார்க்கவேண்டியுள்ளது.

மீறப்படும் குழந்தை உரிமைகள்.

நேற்று எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை, அவரது மகனும், தேர்வெழுதிய மாணவனுமான கஸ்தூரி மகாராஜாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. காரணம் மாணவனின் வயது 17 சிறுவன். அதனால் அவர்களது உறவினரை வரவழைத்து உடலை ஒப்படைத்தனர். சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகள் உடன்படிக்கை படி 18 வயதுக்கு கீழானவர்கள் குழந்தைகள் ஆகும். இதனை ஏற்று உடன்படிக்கைளில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவிலும் 18 வயதுவரை குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர். (பாலியல் குற்ற வழக்கு வேறு)

குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது என்பதுடன் அவர்களுக்கான உரிமைகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமமான உரிமை(பிரிவு 14), பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை (பிரிவு 21), தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளுக்குமான உரிமை (பிரிவு 21) என குறிப்பிட்டுள்ளது. மேலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படவேண்டும் எனவும் தனியாக பிரிவு 15(3) ல் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா குழந்தை உரிமைகள் உடன்படிக்கையில் 1.உயிர் வாழ்தல், 2. பாதுகாப்பு,     3. வளர்ச்சி 4. பங்கேற்பு ஆகிய 4 உரிமைகளையும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு அரசும் வழங்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனை செய்வதாக இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இதனடிப்படையில் பார்த்தோமானால் நீட் தேர்வு மையத்தில் சோதனை என்ற பெயரில் மாணவர்கள் நடத்தப்படுவது குழந்தை உரிமை மீறலாகும். மேலும் இது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் ரீதியான வன்கொடுமை, சித்திரவதை, தாக்குதல் என்றும் கூறலாம். குழந்தைகள்/மாணவர்கள் மிகமிக மென்மையான, நுட்பமான மனநிலையையும், உணர்வுகளையும் கொண்டவர்களாகும். சந்தோஷமாக பட்டாம்பூச்சிகளாக வண்ண வண்ண சிறகடித்து பறப்பதுதான் குழந்தைகளின்  இயல்பு. அது அவர்கள் உரிமையும் கூட. வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் வெட்டப்படுவதுபோன்று தேர்வு மையங்களில் ஆழ்ந்த மனவேதனைக்கும், அவமானத்திற்கும் குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் இவ்வாறு நடத்தப்படுவதை குழந்தை உளவியல் நோக்கில் அனுகினால் பெரும் ஆபத்தும் உள்ளது. அதாவது அலைச்சலும், காத்திருத்தலும் தரும் வேதனையான மனநிலையில் தேர்வு மையம் செல்லும்போது அங்கு சோதனை என்ற பெயரில் அனுபவிக்கும் சித்திரவதை / வன்கொடுமைகள் குழந்தைகள் மனதில் மாறாத வடுக்களாக நிற்கும். காலப்போக்கில் இந்த வேதனை, அலைச்சல், அவமானம், சித்திரவதை எல்லாம் வன்மமாக மாறுவதற்கான ஆபத்தும் உள்ளது. பிற்காலத்தில் மருத்துவராக பணியாற்றுகையில் இந்த வன்மம் அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரானதாக இருக்கவேண்டும். மாறாக சிகிச்சைக்கு செல்லும் ஏழை, எளிய மக்கள் இந்த வன்மத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற ஆபத்து உள்ளது. நான் சொல்கின்ற இந்த சிக்கலை மேம்போக்காக அனுகினால் என்னை திட்டுவதோடும், விமர்சிப்பதோடும் முடிந்துவிடும். மாறாக மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களோடு புரிந்து அனுகினால் தீர்வை நோக்கி செல்லமுடியும்.

குறிப்பாக சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிற பிறமாவட்டங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆற்றுப்படுத்துதல் (கவுன்சிலிங்) கட்டாயம் தேவை. வெளிமாநிலம் சென்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கட்டாயம் கவுன்சிலிங் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் மனதில் உள்ள அழுத்தங்கள் வெளியாகும். மனம் இளகுவாகும்.


தேர்வு மையமும் சிறைச்சாலையும்

மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படும் காட்சிகளைப் பார்க்கும்போது, சிறைகளில் குற்றவாளிகளை அனுப்புவது போன்று உள்ளது. சிறைச் சாலையில் அடைக்கப்படும் குற்றவாளிகளை சிறைக்குள் நுழைந்ததும்  உடைகள் களையப்படும், அணிகலன்கள் (கைகடிகாரம், மோதிரம், தோடு, மூக்குத்தி, கயிறு, சங்கிலி உள்ளிட்ட அனைத்தும். சோதனையிடும் காவலரின் மனநிலை பொறுத்தே செருப்பு அணிவது, கையில் எடுப்பது, வீசி எறிவது எல்லாம்) நீக்கப்படும். வெறும் உள்ளாடையுடன் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு உடைகள் அணிய அனுமதி கிடைக்கும். இதற்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை, மாணவர்கள் அனுமதிக்கப்படும் காட்சிகள்.
சிறையில் அடைக்கப்பட்டோரை பார்க்க மனுபோட்டு காத்திருப்பவர்களைப் போல உள்ளது, பெற்றோர்கள் பள்ளி முன்பு மரத்தடியிலும், கடைகள் அருகிலும், சாலை ஓரங்களிலும் காத்திருக்கும் அவலம்.

கல்வியை எட்டமுடியாத மக்கள்

இன்னமும்கூட நீட் தேர்விற்கு எப்போது, எப்படி விண்ணப்பம் செய்வது என்பது தெரியாமல் பலகிராமப்புற மாணவர்கள் உள்ளனர். இன்னும் வெளிப்படையாக நேரடியாக சொல்வதெனில் இன்றும்கூட பள்ளி கல்லூரி செல்லமுடியாத நிலையும், சூழலும் பல கிராமப்புற மாணவர்களுக்கு உள்ளது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.

தற்போது கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்பதாக மாறிவருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வியை எளிதில் அணுகமுடியாத, பெற முடியாத சூழலே உள்ளது.

இறுதியாக திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பதிவில் இருந்த வாக்கியத்தோடு இதனை நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும். ‘’மாணவர்கள் அரசியலாக்கபடாமல், போராடும் குணம் கொண்டவர்களாக மாற்றப்படாமல் அவர்களையும், அவர்களது உரிமைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மாணவப் பருவத்தில் இயல்பாக வரும் போராடும் குணத்தை நமது பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் காயடித்து வைப்பது இன்றைய அவலத்தினை எதிர்த்து நிற்கும் போர்குணம் கொண்ட மாணவர் எழுச்சியைத் தடுத்து வைத்திருக்கிறது.

நாம் இன்று கொந்தளிக்கின்றோம். கவலைப்படுகின்றோம். கோபம் கொள்கின்றோம். இதே உணர்வு மாணவர்களிடத்தில் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களது இரும்புப் பிடியைத் தளர்த்தினாலேயே நீட் போன்ற அக்கிரமங்களுக்கான தீர்வை மிக எளிதாகப் பெற்றுவிட இயலும். பிராய்லர் கோழிகளாக மாணவர்களை மாற்றிய பின்னர், நீட் போன்ற வன்மங்களை-அயோக்கியத்தனங்களை மிகத் தைரியமாக களமிறக்குகிறது அரசு” திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்து மிகமுக்கியமான ஒன்றாகும். இன்றையச் சூழலில் அரசியல்மயமாவது, அரசியல்படுத்துவது என்றால் அது வாக்கு அரசியல் என்று பார்க்கப்படுகின்றது. இச்சூழல் மாறவேண்டும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 31% மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்தால் தேர்வு மையம் ஒதுக்கமுடியவில்லை என சிபிஎஸ்சி கூறுகின்றது. ஆனால் மார்ச் மாதமே விண்ணப்பிக்க கடைசி என்ற நிலையில் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்துள்ளனர். தங்களிடம் கேட்கவில்லை எனக்கூறிவிட்டு தமிழக அரசு எளிதாக இதிலிருந்து கழண்டுகொள்கிறது. தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளை சுமார் 6 லட்சம் பேர் தமிழகத்திலேயே எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் விண்ணப்பத்திருந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேருக்கு தமிழகத்தின் 10 நகரங்களில் மொத்தம் 170 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகத்தில் விண்ணப்பித்திருந்த 96,000 பேருக்கு 187 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Wednesday, March 28, 2018

உச்சநீதி மன்றத்தின் சாதிய தீர்ப்பு : பாதுக்காக்கவேண்டும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை.
சட்டத்தின் நோக்கம்.

குற்றங்களைக் தடுக்கவும் உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவர்கள் நீதி மற்றும் உரிய நிவாரணம் பெறவும், குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை அளிக்கும் நோக்கில்தான் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மீறல் சம்பவத்தினை எப்போதும் பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்கவேண்டும், அணுகவேண்டும். இது மனித உரிமைகளின் மீதான அக்கறை என்பது ஒருபக்கம் என்றாலும் இதுதான் ஜனநாயகமும் கூட. அதுவும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதிதுறையும் நீதிமன்றங்களும் பொறுப்போடும் அக்கறையோடும் இருக்கவேண்டும். பாதிக்கப்படும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை  மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள்தான் உள்ளது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இத்தீர்ப்பு தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை அதிகரிக்கச் செய்யும் என்கிற அச்சத்தினை உருவாக்கியுள்ளது.  

வன்கொடுமை தடுப்புச் சட்டம்
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் 1976 ஆகியவைகளின் போதாமையைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 விதிகள் 1995; வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 உருவானது. “பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து அதன்மூலம் விரைவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதி, நிவாரணத்தை வழங்குவதுடன் மறுவாழ்வு அளிப்பதற்கும் வழிவகை செய்யவது” என்ற நோக்கத்துடன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 63 ஆண்டுகள் ஆகியும் வன்கொடுமைகள் குறையவில்லை. சட்டமும் முழுமையாக் நடைமுறை படுத்தப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் சாதிய தீர்ப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரசு மருந்தியல் கல்லூரி பொருட்கள் அறைப் பாதுகாவலர் (Store keeper) ஒருவர் தன்னை சாதி இழிவு செய்த அரசு தொழில் நுட்பக் கல்லூரி இயக்குர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடுகின்றார். விசாரித்த மகாராஷ்டிரா உயர்நீதி மன்றம் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிடுகிறது. இதனை எதிர்த்து இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டோர் செய்த இந்த மேல்முறையீட்டு இந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் ஒரு அநீதியான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் அதில் எவரையும் கைது செய்யக்கூடாது, குற்றம் சாட்டப்படவருக்கு முன் ஜாமீன் வழங்கவேண்டும், அரசு பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவரை பணி நியமனம் செய்த அதிகாரியின் ஒப்புதல் பெற்றுதான் வழக்கு பதிவு, வன்கொடுமை செய்த ஆதிக்கச் சாதியினரை காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் பெற்றே கைது செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது இந்த சட்டத்தையே முடக்குவதாக உள்ளதுடன்,  இந்தியா முழுவதும் பல்வேறு சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பல ஆண்டுகள் போராடி நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகவும் உள்ளது. மேலும்  இதனால் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது

இந்த ஆபாத்தான தீர்ப்பினை காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எதிர்த்துள்ளன. மேலும் ஜனநாயகத்தில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை பாதுகாக்கவேண்டியுள்ளது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளையும், சாதிய இழிவுகளையும் இச்சட்டம் முழுமையாக தடுக்கவில்லை என்றாலும் கூட குறைந்த பட்ச பாதுகாப்பினை அளிப்பதாக உள்ளது. 

நீதிமன்றங்கள் வழக்கினை பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் அணுகியே வழிகாட்டுதல்களையு, தீர்ப்புகளையும் வழங்கவேண்டும். மாறாக இப்படி குற்றஞ்சாட்டப்பட்டோரை பாதுக்காக்கின்ற நோக்கில், காப்பாற்றுகின்ற எண்ணத்தில் தீர்ப்புகளை வழங்குவது என்பது நாடு ஜனநாயகத்தன்மையிலிருந்து விலகி பெரும் ஆபத்தினை எதிர்கொள்ளப்போகின்றது என்பதையே காட்டுகின்றது. மக்கள் நல அரசு என்பதிலிருந்து மாறி சட்டத்தின் கீழான அரசு / நாடு என்கிற பெரும் ஆபத்துக்கான வாய்ப்பும் உள்ளதையே இத்தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது.

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

தமிழகத்தில் 2017 ல் 1519; 2016 ல் 1304; 2015 ல் 1752 வழக்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் வழக்குகளில் தண்டனை விகிதம் இந்திய அளவில் 47% உள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தண்டனை விகிதம் இந்திய அளவில் 25% உள்ளது. ஆனால் தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் வெறும் 7% உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி தேசிய அளவில் தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக தேசிய அளவில் 2015 ஆம் ஆண்டு 38,670 (4.7%) வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.   ஆனால் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைவிட 4080 (5.5%) அதிகமாக நிகழ்ந்துள்ளதை இதன்மூலம் அறியவலாம். மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினர் அளித்த 46119 புகார்கள் வழக்குப் பதியாமல் காவல் நிலையத்திலேயே முடித்து வைக்கப்பட்டுளது. இன்னொன்றும் முக்கியமாக பார்க்கவேண்டியுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 2014 ல் 89423; 2015 ல் 94172; 2016 ல் 106958 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகள் எத்தனை என்பது தெரியவில்லை.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தபடவில்லை என்பதை இதுபோன்ற நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்கள் மூலம் அறிந்துகொள்ளமுடியும். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து நாம் நடத்துகின்ற இந்தப் போராட்டங்களின் மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் காப்பாற்றப்படும்.

Tuesday, March 6, 2018

பார்பி - சரவணன் சந்திரன் நாவல்சரவணன் சந்திரன் எழுத்துக்களை முகநூலில்தான் படிக்கத்தொடங்கினேன். தெளிவான, நேரடியான ஒரு சமூக அரசியல் எள்ளல் இருக்கும். படிப்பதற்கும் ஆர்வமாக இருக்கும். படிக்கத் தூண்டும்.

பார்பி நாவல் படிப்பது ஒரு அனுபவமாக உள்ளது. நீண்டதூர ரயில் பயணத்தில் நீண்டகால நண்பர் ஒருவர் தனது வாழ்க்கையை – அனுபவத்தை - கதையை நம்மிடம் சொல்வது போன்ற நடையில் உள்ளது.  படிக்கும்போது நம்மையும் உள்ளே இழுத்துக்கொள்கிறது. நாமும் சேர்ந்தே பயணிக்கின்றோம். கதையில் நிறைய நண்பர்கள் வந்தபடியும், சென்றபடியும் உள்ளனர்.

நாவலில் இதுதான் கதை என்று எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. நாயகனின் வளர்ச்சி, முன்னேற்றம்; அவனுடைய ஹாக்கி விளையாட்டு, மைதானம், பயிற்சி, விளையாட்டுத் துறையின் ஊழல்; கல்லூரி, விடுதி; நட்பு; பெண் நட்பு, உறவு; எல்லாவற்றையும் விட மொத்த ஊரும் ஹாக்கியில் ஒன்றிணைந்து விளையாடி பழகி, பயிலும் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக சாதியத்திற்கு பலியாவது; கிராமச் சூழலே தனித்துபோவது; சாதிய படுகொலைகள் என பல்வேறு விஷயங்களையும், அதற்கு தொடர்புடைய பல்வெறு சம்பவங்களையும் இணைத்து பேசியபடியே செல்கின்றது.

மனிதன் மனதின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆட்பட்டாலும் அதனுள்ளேயே சிக்கிக்கொள்ளாமல், பலநேரங்களில் அதனை மீறி, தாண்டி சமூகவியல் நோக்கில் அதன் நியாயங்களுக்குட்பட்டு இருக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனுடன் சில காலம் சேர்ந்து பயணித்ததைப் போன்ற நல்ல அனுபவத்தை நாவல் அளிக்கின்றது. 

Tuesday, January 23, 2018

பெத்தவன் - (நெடுங்கதை) - இமையம்
திவ்யாவின் தந்தை மரணமும், கண்ணகி உயிரோடு கொளுத்தப்பட்டதும் எப்படி நடந்திருக்கும் என்பதை உணரவேண்டுமானால் இந்தக் கதையை படிக்கவேண்டும். 
படித்ததிலிருந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மனதை விட்டு அகல மறுக்கின்றனர் முருகேசன், கண்ணகி, இளவரசன் எல்லாம். 
கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் தலித் இளைஞரும், வன்னியர் பெண்ணும் காதலிக்கின்றனர். வாழ்வதற்காக ஊரை விட்டு ஓடும் நான்கு முறையும் பிடிபடுகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காதலை ஏற்காத சாதிய சமூகம் பெண்ணை கொல்ல நினைக்கின்றது. அதுவும் தந்தையிடம் நீ கொல்கிறாயா நாங்கள் கொல்லட்டுமா என அச்சுறுத்துகின்றது. இதில் வேதனையடைந்த தந்தை பெண்ணை அவள் காதலித்தவனோடு சேர்ந்து வாழ யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். 
முருகேசனும் கண்ணகியும் கொலை செய்யப்பட்ட பிறகு, முருகேசனின் பெற்றோர் மற்றும் தம்பியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளேன். வழக்கறிஞர் ரத்தினம், தோழர் சுகுமாறன் உள்ளிட்டோருடன் கிராமத்திற்கும் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் எழாத உணர்வுகள் இந்த பெத்தவன் கதை மனதை உலுக்குகின்றது.
வாக்குமூலம் வழக்கில் இருக்கின்றது. படைப்புதான் வாழ்க்கையில் வருகின்றது. எங்களின் வாக்குமூலங்களைவிட இந்த படைப்புதான் பெரும் அதிர்வை உருவாக்குகின்றது. முருகேசனும் கண்ணகியும் வாழ்வதற்காக எப்படி போராடினார்காளோ அதைவிட அதிகமாக அவர்களின் கொலை வழக்கு பெரும் போராட்டங்களை சந்திக்கின்றது. முருகேசனையும் கண்ணகியையும் உயிரோடு கொளுத்தியது போன்று வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கின்றனர்.

செல்லாத பணம் (நாவல்) - இமையம்
செல்லாத பணம் என்றதும் பண மதிப்பிழப்பு தொடர்பான நாவலாக இருக்கும் என்ற நினைத்தும், ஆனால் இமையம் ஏற்கனவே எழுதியுள்ள நாவல்கள் மனதில் வந்துபோனதில் வேறாகவும் இருக்கலாம் என்று படிக்கத் தொடங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. பொறியியல் படித்த பெண் ரேவதி. பர்மா அகதியான ரவி என்கிற படிக்காத ஆட்டோ டிரவரை விரும்புகின்றார். பெற்றோர் சம்மதிக்காத நிலையில், யாரிடமும் பேசாமல் பிடிவாதம். வேறு திருமண முயற்சிகளை தற்கொலைக்கு முயன்று ரேவதி தடுப்பதால் வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் விருப்பமின்றி ரவிக்கு திருமணம் செய்விக்கின்றனர். 6 வருடத்திற்கு பிறகு உடல் முழுவதும் நூலிழை அளவுக்கு கூட சதையில்லாமல் 80% மேல் தீயில் உடல் எரிந்து வெந்துபோன நிலையில் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது. அதன்பிறகு கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையாக விரிந்து செல்கிறது. அனைவரும் மனித குணங்களின் நுட்பமான உணர்வுகளை இயல்பாக போகிற போக்கில் வெளிப்படுத்துகின்றனர். 6 வருட திருமண வாழ்க்கையில் ரேவதி, கணவன் ரவியிடம் அனுபவிக்கும் சித்திரவதையை தாங்கி பொறுத்துக்கொள்கிறாள். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால் தானே பொறுப்பு எனத் தாங்கிக்கொள்கின்றாள். மகள் அனுபவிக்கும் கொடுமை தெரிந்தும் பெற்றோர்கள் தலையிடாமல் ஒதுங்கியே உள்ளனர். தாயார் மட்டும் பணம், மளிகை பொருள் என உதவி செய்கின்றார். மீறி கேட்கப்போனால் மகளை ரவி் மேலும் கொடுமை செய்வானோ என்று அமைதியாக இருப்பார்கள். இப்படி எல்லோரும் தங்களை ஒதுக்கி வைத்த கோவத்தில்தான் தன்னால் மாறமுடியாமல் ரேவதியை கொடுமை செய்ததாக ரவி கூறுகின்றான். தங்கள் மகள் ரேவதியை ரவிதான் தீ வைத்துக்கொளுத்தினான், அவனை விடக்கூடாது என பெற்றோர்கள் புலம்புவதும், கோவத்தில் திட்டுவதுமாக இருக்கின்றனர். வாக்குமூலத்தில் சமைக்கும்போது தீ பிடித்துவிட்டதாக ரேவதி கூறிவிடுகின்றாள். தற்கொலையா, ரவி கொளுத்தினானா எனவும் தெரியவில்லை. அது கதைக்கு முக்கியமானதாகவும் தெரியவில்லை. ஜிப்மர் மருத்துவமனையில் காத்திருக்கும்போது அங்குள்ள ஒவ்வொருவரும் தங்களின் கதைகளைப் பரிமாறிக்கொள்வதெல்லாம் இமையம் அவர்களின் படைப்பு உத்தியில் மிக முக்கியமானதாகும். கதையில் வரும் அனைவரும் அவரவர் போக்கில், அவரவர் நிலையிலிருந்து கதையை நகர்த்துகின்றனர். கதை முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அனுபவிக்கும் கொடுமையும், வலியும், வேதனையும் ஆழமான உணர்வுகளோடும், இயல்பாக பதிவாகியுள்ளன. முழுவதும் கதைதான் என்றும் கூறமுடியாமல், அனுபவங்களின் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு என்றும் ஏற்கமுடியாமல் கதையோடும், கதை மாந்தர்களோடும் நாமும் பயணிக்கின்றோம். திருமணமாகிச் சென்ற ரேவதியை ஆறு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, 80% வெந்துபோன தீக்காயங்களிலிருந்து காப்பாற்றச்சொல்லி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு எப்படியேனும் காப்பாற்றுங்கள் எனும்போது, மருத்துவர்கள் "இந்தப் பணமெல்லாம் இப்போது செல்லாத பணம்" என்கின்றனர். இதுதான் கதை. உயிரோடு இருக்கையில் நல்ல நிம்மதியான வாழ்கைக்கு பயன்படாத பணம் உயிரைக் காப்பாற்றவும் பயன்படவில்லை.

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்


மீள்பதிவு 2014
---------------------------
நிறைவான 2014 – 1

எனது அப்பா தொ.பா.இராமசாமி. ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். எப்போதும் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிப்பார். நிறைய குறிப்புகள் எடுப்பார்.  நிறைய கவிதைகள், சில சிறுகதைகள், தமிழ் சொற்கள் குறித்த கருத்துகள் என எழுதியுள்ளார். தனது இறுதிக் காலத்திற்குள் எப்படியேனும் அவைகளை புத்தகமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

எனது இரு அண்ணன்கள் (துரையப்பன், அண்ணாதுரை) நிறைய கவிதை எழுதுவார்கள். அவர்களுக்கும் புத்தகமாக வேண்டும் என்ற கனவு உண்டு. இவர்களின் பாதிப்பில் நானும் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். கையெழுத்திலும், அச்சிலுமாக சிற்றிதழ்கள் சில கொண்டுவர முடிந்தது. 

பிறகு, செயல்பாட்டுத் தளம் மாறியது.  இலக்கியத்திலிருந்து சமூக அரசியல் ஈடுபாடுகளின் காரணமாக கண்ணோட்டம் – பார்வை விரிவடைந்து வளர்ந்தது. இத்தணையாண்டுகளுக்குப் பிறகு எனது தந்தை, அண்ணன்களின் விருப்பங்கள் என் மூலமாக நிறைவேறிய.. முக்கியத்துவம் மிகுந்த ஆண்டாக இது அமைந்தது. 

இலக்கியம் குறித்த புத்தகம் அல்ல. சமூக கொடுமைகள் குறித்த புத்தகம். ’’நொறுக்கப்படும் மக்களும்.. மறுக்கப்படும் நீதியும்.” நூல் எழுதி வெளியான ஆண்டு. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது கடந்த 2007 முதல் நிகழ்ந்த வன்கொடுமைகள், அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு ஆய்வு நூல். 

குறிப்பாக இதில் மிக முக்கியமாக 1921 ஆம் ஆண்டு சென்னை மில் ஒன்றில் தலித் மக்கள் மீது நிகழ்த்த சாதிய வன்கொடுமைத் தாக்குதல் தொடங்கி 2014 மரணக்காணம் வன்கொடுமை நிகழ்வு வரையிலான தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றதாக அமைந்தது. என் எழுத்துகளுக்கு உந்து சக்தியாக உள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அணிந்துரை முக்கியமானதாகும். 

சாதிய உணர்வை கடக்க உதவும் நூல் என தமிழ் இந்துவும், சரியான நேரத்தில் வந்துள்ள முக்கியமான நூல் என ஜீனியர் விகடனும் நூலினை அறிமுகம் செய்தது பரவலான கவனம் பெற்றது. நூலினை முழுமையாக படித்து உள்வாங்கி அதனை வெளிப்படுத்தி எழுதிய திரு.நீதிராஜன்(தமிழ் இந்து), திரு.திருமாவேலன்(ஜீ.வி) இருவருக்கும் மிகுந்த நன்றிகள். 

மேலும் நண்பர்கள், தோழர்கள் பலரும் படித்துவிட்டு செயல்பாடுகளுக்கும், பயிற்சிகளுக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து உள்ளம் மகிழச் செய்தனர். 

எதிர்பார்த்த சிலரிடம் இருந்து எவ்வித கருத்தும் வெளிவராத அமைதியும், மெளனமும் பார்த்து ஆச்சரியபட்டதும் நிகழ்ந்தது. 

இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. 
அந்த அளவிற்கு மன நிறைவாகவும், மகிழ்வாகவும் இருந்த நிகழ்வாக அமைந்த ஆண்டு 2014 ஆகும். 

இவைகளுக்கு காரணமான இருவரைக் குறிப்பிட்டுதான் நூல் வெளியீட்டு விழாவில் நன்றி கூறினேன். இப்போதும் அந்த இருவருக்கும் நன்றி கூறுவது கடமை. 

ஒருவர் இந்த நூலினை நான் எழுத வாய்ப்பளித்து, எழுதுவதற்கான கருத்துகளைக் கூறி, அச்சகத்திலிருந்து நூல் வெளிவருகின்ற வரையிலான ஒவ்வொரு மணித்துளியும் நூல் குறித்து கலந்துரையாடி, நூலின் வெளியீட்டாளராகவும் உள்ள நான் பணியாற்றுகின்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குநர் திரு.வே.அ.இரமேசுநாதன். இவர் இந்த வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் இந்த நூல் இல்லை.

இன்னொருவர் எல்லோருக்கும் தெரிந்த பேராசிரியர் கல்யாணி. கடலூர் மாவட்டத்தில் சரியான சாலை வசதி கூட இல்லாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நான் இன்று பலருக்கும் தெரிகின்ற ஒரு அடையாளமாய் திண்டிவனத்தில் இருப்பதற்கு காரணமானவர். அழைத்து வந்ததுடன் வீட்டிலேயே வளர்த்து கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்குமான எல்லா வாய்ப்புகளையும் வழங்கியவர். மனித உரிமை சார்ந்த கண்ணோட்டத்தையும், சமூக செயல்பாடுகளுக்கான கருத்தினையும் எனக்கு அளித்தவர். இன்றைய எனது செயல்பாடுகளுக்குமான மன வலிமையை உருவாக்கியவர். இவரின் கருத்தும், கண்ணோட்டமும் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் இந்த நூல் இல்லை. 

2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டு தற்போது ஏறக்குறைய 800 புத்தகங்கள் விற்பனையாகியுள்ள நிலையில்.. முடிந்த 2014 நிறைவான மகிழ்வான ஆண்டாக அமைந்தது.