Tuesday, December 30, 2008

காதல் கல்யாணமா... குடும்ப அட்டை கிடையாது


விழுப்புரம் அருகே உள்ள அனந்தபுரத்தை அடுத்துள்ள பனைமலை மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவர் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் அன்னியூர் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 01.02.2007 அன்று பனைமலைபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்கிறவரை சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார். இது ஒரு காதல் திருமணமாகும்.


கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப அட்டைக்காக தொடர்ந்து அலைந்துகொண்டிருகிறார்கள். குடிமைப் பொருள் வட்டாட்சியரை 32 முறை நேரில் சந்தித்து இருவரும் அனைத்து ஆதாரங்களையும் தந்தபின்பும் குடும்ப அட்டை தர மறுத்துள்ளார்கள். பெற்றோரின் குடும்ப அட்டையில் உள்ள ரேகாவின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். காதல் திருமணத்தில் பெண்ணின் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்துள்ளார்கள்.


இந்நிலையில்தான் கணவன், மனைவி இருவருக்கும் கலப்புத் திருமண தம்பதிகள் என்பதற்காக அரசு தந்துள்ள பாராட்டு பத்திரம், தங்களின் திருமண பதிவுச் சான்று, அரசின் உதவித் தொகையின் வைப்பு நிதிச்சான்று ஆகியவைகளை, ‘‘தங்களுக்கு குடும்ப தர மறுக்கின்ற நிலையில் அரசின் இந்த அங்கிகாரப்பத்திரங்களும் தேவையில்லை’’ என நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி தந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்து சமாதானப்படுத்தி, 15 நாட்களில் குடும்ப அட்டை தருவதாக வாக்களித்துள்ளார்.
பழங்குடி இருளர்கள் சாதி சான்றுக்கு மட்டுமில்லாமல், குடும்ப அட்டைக்கும் கூட கால காலமாய் போராட வேண்டியுள்ளது.

Tuesday, December 2, 2008

ஈழம் : நடை பயணம்


ஈழப்பிரச்சனை தமிழகத்தில் 1983 போன்று எழுந்து வருகின்றது. மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று பிரதமரை சந்தித்த தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போரை நிறுத்த உறுதியளித்துள்ளதாக செய்தி வருகிறது. என்ன உறுதி என்பதுதான் புரியவில்லை.


இந்நிலையில் திரு.ஆனந்தகுமார் என்ற இளைஞர் தனக்கிருந்த ஆர்வம், உணர்வின் வெளிப்பாடாக, இந்தியா தலையிட்டு தமிழர்கள் மீதான போரை நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை முதல் இராமேசுவரம் வரை 1000 கி.மீ தூரத்திற்கு, படத்தில் உள்ள கைவண்டியை இழுத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 26&ஆம் தேதி சென்னையில் டி.எஸ்.எஸ்.மணி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். தனியருவராக பயணத்தை தொடர்ந்துள்ளார் ஆனந்த முருகன்.


சில நாட்களுக்குப் பின் கூடுவாஞ்சேரியில் இவரின் இந்த பயணத்தைப் பார்த்த அமீது, அரி ஆகிய இருவரும் தாங்களும் இராமேசுவரம் வரை உடன் வருவதாக இப்பயணத்தில் இணைந்துள்ளார்கள்.


நேற்று இரவு திண்டிவனம் வந்த இக்குழுவினரை இரவு தங்க வைத்து. காலையில் திண்டிவனம் நகரில் இரு வரவேற்பு கூட்டங்கள் நடத்தி, குழுவினரை வாழ்த்தி பேசி வழியனுப்பி வைத்தோம். கூட்டத்தில் பேராசியர் கல்யாணி, தோழர் நசீர் அகமது, வழக்கறிஞர் பூபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திண்டிவனத்திற்கு அடுத்து 10 கீ.மீ தூரத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் குழுவினருக்கு அடுத்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான், பேராசியர் கல்யாணி, தோழர்கள் நசீர் அகமது, விஸ்வதாஸ், எழிலரசன் ஆகிய ஐவரும் குழுவினருடன் கூட்டேரிப்பட்டு நடந்து சென்று அங்கு ஏற்பாடு செய்திருந்த தோழர்களிடம் இவர்களை அறிமுகப்படுத்தி வந்தோம்.


தோழர் ஆனந்த முருகன் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின், மாநில இளைஞரணிச் செயலாளராக உள்ளார். கட்சி இவரின் இந்த பயணத்தை வேண்டாம் என்று கூறியுள்ளது. ஆனாலும் இவரின் ஆர்வம் மீறி பயணத்தை தொடர்ந்துகொண்டுள்ளார்.