Wednesday, November 4, 2015

ஆஸி பெர்ணாண்டஸ் : மனிதர்களுடன் பழகுவதில் மிகச்சிறந்த மாமனிதன்..

நேற்று மதியம் முதல் கடுமையான மன அழுத்தமும் – 
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ஒன்றில் விழுப்புரம் மாவட்ட சிறப்பு  நீதிமன்றத்தின் மோசமான செயல்பாடுளால்.. நெருக்கடியான நிம்மதியில்லா நிலை..
இன்று நேரடியாக நீதிமன்றம் சென்று பல்வேறு முயற்சி, நடவடிக்கைகளுக்கு பின்பு ஒரு சிறு நிம்மதியுடன் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினால்..
கொஞ்சம் நம்பமுடியாமல்.. மனதில் உறுதிசெய்யமுடியாத செய்தியாய் தோழர் ஆஸி அவர்களின் மரணச் செய்தி…
மனிதர்களுடோடு பழகுவதில் மிகச்சிறந்த மாமனிதன்..
யப்பா.. என்று வாஞ்சையோடு அழைத்திடும் தோழர்..
வயது மிகக் மிகக் குறைந்தவர்களையும் மரியாதையோடு ஏற்கும் சிறந்த பண்புகளை உடையவர்..
சட்டங்கள் எளிய மனிதர்களுக்கும் முழுமையாய் போய் சேரவேண்டும் என்பதிலும், சட்டத்தின் முழு பலனும் பயனும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதிலும்.. இழப்புகள் வரினும் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கவேண்டும் என்பதிலும் எவ்வித சமரசங்களும் இன்றி செயல்பட்டவர்..
பெரியவர் சிறியவர் என்ற பேதமின்றி அனைவரையும் சமமமாய் கருதியதுடன் அப்படியே நடத்தியவர்..
எல்லோரும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் தீராத பற்றுடையவர்..
அவரோடு இணைந்து செயல்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு அனுபவம் கிட்டும்..
பொதுவிசாரணைகளும், புத்தக வெளியீடுகளும் அவரோடு நெருக்கமாய் செயல்பட்ட நினைவுகளுடன்..
எல்லோரையும் இயங்க வைப்பவர்..
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்…
தான் பின்னால் இருந்தபடியே
புதிதாய் வருகின்ற அனைவரையும் முன்னோக்கி நகர்த்தியவர்..
ஒரு முறை நிகழ்ச்சியொன்றி அவரை தனிப்படமாக எடுக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்.. அதைக் கண்டுகொண்ட அவர் ’’என்ன ஏப்பா எடுக்குற மக்களை எடுப்பா’’ என்று கூறிக்கொண்டவர்..
இன்று முகநூலில் அவரை நினைவுபடுத்துகின்ற அனைவரும் பதிவிடுகின்ற ஒரே ஒரு புகைப்படமே அவரின் எளிமைக்கும், இயல்பான போக்கிற்கும், உறுதிக்கும் உதாரணமாகும்..
மேலும் விரிவாய் பிரிதொரு தருணத்தில்…
அவரை இழந்து துயரில் தவிக்கும் HRF  அமைப்பில் உள்ள நண்பர்களுக்கும், தோழர்களுக்கும்.. அவரது குடும்பத்தினருக்கும் எந்த ஆறுதலும் ஈடு செய்யாது…
துயரங்களைப் பகிர்ந்துகொள்வது ஒன்றே ஆறுதல்..

ஆறுதலுடன்…

Saturday, October 24, 2015

அதிகரிக்கும் அபாயங்கள்


தமிழகத்தை  எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள்
தேர்வில் தேர்ச்சி, சேர்கையில் காலியிடம், கிடைக்காத வேலைககள்

ஆணும், பெண்ணும் சேர்ந்து படிப்பதால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு 
கல்வி நிலையங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தால் சரியாக படிக்கமாட்டார்கள் என்ற ஒரு காரணத்திலும் ஆண், பெண்ணுக்கு தனித்தனியாக பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. சமீப இரு ஆண்டுகளாக இருபாலர் படிக்கும் பள்ளிகளை சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமென மாற்றியும் வந்தனர். விசாரித்தபோது ‘’சில ஆண்டுகளாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் உருவாகும் காதல், அதனால் எழும் சிக்கல்கள், அது மேலும் பிரச்சனையாகாமல் சமாளிப்பது, பள்ளிக்கான அவப்பெயர் போன்ற காரணங்களால் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டும்’’ என்பதான காரணத்தை அறியமுடிந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பயில்கின்ற பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளதாக வெளியிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 2012 இல் 358, 2013 இல் 453, 2014 இல் 887 ஆக உயர்ந்தபடியுள்ளது. இதேபோன்று +2 தேர்வில் 100% தேர்ச்சி பள்ளிகள் 2013 இல் 42, 2014 இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் மார்ச் 2016 இல் 10-ஆம் வகுப்பு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக 26,530 ஆசிரியர்களுக்கு 6 கோடியே 44 லட்சம் 21 ஆயிரத்து அறுநூறு ரூயாய் செலவழித்து பல்வேறு பய்றிசிகள மேற்கொண்டு வருகின்றது.

உயரும் மாணவர் எண்ணிக்கைகள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு புயல்களை கிளப்பி வருகின்ற நிலையில் மாணவர் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 22 கோடியே 9 லட்சமாக இருந்த மாணவர்க் எண்ணிக்கை பத்தாண்டுகளில் மிக மிக அதிகாம உயர்ந்து 2011  மக்கள் தொகை கணக்கெடுப்பில் 31 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 38% உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றது. இப்படி மாணவர் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் உயர்கல்வியில் சேர்க்கையில் காலியிடங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

மாணவர் சேர்க்கை காலியிடங்கள்
பொறியியல் : "தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 546, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் 18 ஆக மொத்தம் 577 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,92,042 இடங்களில், 1,67,082 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுபோக 1,25,160 இடங்கள் காலியாக உள்ளன”’ என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.

மருத்துவம் : தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டின்படி 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,237 இடங்களும், தனியர் மருத்துவக்கல்லூரிக்கான 738 இடங்களும் கலந்தாய்வில் நிரப்பட்டுள்துஅகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 383 இடங்களில் 60 இடங்களில் மாணவர்கள் சேர முன்வராமல் காலியாக உள்ளது.

சட்டம் : பாடத்திட்டம், படிப்புக் கால ஆண்டு, வயது போன்றவைகள் காரணமாக பல்வேறு குழப்பங்களுடன் தாமதமாக விண்ணப்பங்கள் கொடுத்து, கலந்தாய்விற்கு முன்பு நீதி மன்றத் தலையீட்டு சேர்க்கைகள் நடைபெற்றுள்ளது.

பி.எட் : தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி..) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்படி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதுஇந்நிலையில் தற்போதைய 2015-16  கல்வியாண்டில் படிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனால் விண்ணப்பம் அளிக்காமல் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில் 8 ஆயிரம் விண்ணப்பங்கங்கள் அச்சடிக்கப்படு செப்டம்பர் 3 முதல் 11 வரை விநியோகிக்க உள்ளதாகவும், 4-வது கலந்தாய்வு நடத்துவது என்றும், படிப்பு காலம் ஓராண்டா இரண்டு ஆண்டா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

3 லட்சம் வேலை காலிப் பணியிடன்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் அளித்த பேட்டியொன்றில் தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறைகளிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சில துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கான காலியிடங்களை நிரப்பக்கோரிய பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வேலை இல்லாதோர் எண்ணிக்கை :
தமிழகம் முழுவதும் சூன் 30 ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 40.78 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 82.02 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.
இப்படி வேலைக்காக காத்திருக்கின்ற 82 லட்சம் பேரில் பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும், மருத்துவர்கள் 28 ஆயிரம் பேரும், பொறியல் முடித்தவர்கள் 3.17 லட்சம் பேரும் உள்ளனர்.
இந்நிலையில்தான் எந்த கல்வித்தகுதியும் இல்லாதோரும், தங்களுடைய பிறப்புச் சான்று, ரேசன் அட்டை நகல் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் ஆனால் வேலை கிடைக்கும் என உறுதி கூற முடியாது என்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் எதிர்நோக்கியுள்ள தமிழக அரசு இதற்கான எந்தவொரு புதிய திட்டங்களோ அல்லது இதுகுறித்து விவாதிப்பதற்கோ, பேசுவதற்கோ கூட முன்முயற்சி எடுக்குமா எனத் தெரியவில்லை. தமிழக அரசு மட்டுமே தேர்தல் ஜூரம் பிடித்துவிட்ட நிலையில் இனி எந்தவொரு கட்சிகளும் இவைகளை கருத்தில்கொள்ளாது. ஏதேனும் பொது நல அமைப்புகள் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தால் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இவை ஒரு கோரிக்கையாக இடம் பெற வாய்ப்புள்ளது.
அம்பேத்கரிடம் திட்டு வாங்கிய பழமைவாத நீதிக்கட்சியினர்!


1938 டிசம்பர் மாதம்.  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் இருக்கின்றார். அதே டிசம்பர் மாதம் 29-ஆம் நாள் சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் 14-வது மாநில மாநாட்டில் தந்தை பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

சுயமரியாதை மற்றும் சாதி மத, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரத்தை விரும்பாத நீதிக்கட்சியில் இருந்த சில சனாதனிகள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.

1942 ஆம் ஆண்டு முதல் பெரியார் முன்னெடுத்த திராவிடர் இயக்கம், நீதிக்கட்சிக்கான பெயர் மாற்றம், சுயமரியாதைப் பிரச்சாரம் போன்றவைகளை 1944 ஆம் மாநாட்டில் தீர்மானமான நிறைவேற்றுவது என்றும், பெரிய நிலச்சுவான்தார், ஜமீன்தார் போன்றோருக்கு இதில் இடமில்லை என்பதையும் தீர்மானமாக கொண்டுவரவேண்டும் என்றும் பெரியார் பேசுகிறார்.

இதனால் நிலச்சுவான்தார், ஜமீன்தார் போன்றோர் ஒன்று கூடி பெரியாருக்கு எதிரான வேலைகளைச் செய்கின்றனர். உள்ளுக்குள்ளேயே தூண்டிவிடுகின்றனர். 1944 ஆம் ஆண்டு மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்கின்ற நோக்கில் மாநாட்டு நடைபெறுவதை தடைசெய்து வருகின்றனர். பொறுத்தப்பார்த்தப் பெரியார் தன் தலைமையில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கின்றார். பயந்துபோன பலரும் பெரியாரிடம் வந்து வருத்தம் தெரிவிக்கின்றனர். பிறகு மாநாடு நடந்து முடிகின்றது.

அடுத்த கட்டம்தான் முக்கியமானது.


அப்போது டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்திருந்துள்ளார். அவரிடம் பெரியாரைப் பற்றி குறைகூறி எதிர்ப்பாளர்கள் முறையிட்டுள்ளனர். அம்பேத்கர் பொறுமையாக அனைத்தையும் கேட்டுவிட்டு ’’மாநாட்டுத் தீர்மானங்கள் சரிதான். பெரியாரை குறை சொல்லாதீர்கள்’’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 
(முகநூல் பதிவு)

Tuesday, October 13, 2015

நூல் அறிமுகம் - 22500 கி.மீ பயணத்தின் முடிவில் இந்தப் ப்யணம் ஒன்று போதாது..

நூல் அறிமுகம் - 22500 கி.மீ பயணத்தின் முடிவில் இந்தப் ப்யணம் ஒன்று போதாது...
----------------------------------------------------------------------------------------------------------------------------
இளம் வயதில் பல்வேறு எண்ணங்களும், சிந்தனைகளும், அதனைச் சார்ந்த விருப்பங்களும் அவரவர் மனதில் தொடர்ந்து தோன்றிக்கொண்டேயிருக்கும். நமக்கு ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ள ஏதோவொரு காரணத்தின் பெயரால் அவைகளை முடக்கிக்கொண்டு, விருப்பமேயில்லை என்றாலும் வேறு வழியில்லை என சமாதானப்படுத்திக்கொண்டு அமைதியாகிவிடுவோம். தீபன் அப்படியில்லை. தன்னை முடக்கிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை. பொங்கிவிழும் இடம்தேடி உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டேயிருந்துள்ளார்.
கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வு. எழுதினால் பட்டம் பெற முடியும். ஆனாலும் இந்தத் தேர்வு முறைகளால் எந்தப் பயனும் இல்லை என தேர்வில் ஒரு வரி கூட எழுதாமல் தேர்வு அறையிலிருந்து வெளியேறுகின்ற உறுதியான மன நிலை எத்தனைபேருக்கு இருக்கும்? தீபனால் முடிந்தது.
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவை, திருப்பூர் பகுதிகள்தான். படிப்பு முடிந்ததும் குடியிருப்புகளில் பொருட்களை விற்கின்ற மார்கெட்டிங் வேலை. நிறைய அனுபவங்கள். எவ்வித சுவாரசியமும் இல்லாத அந்த வேலையை தொடர்ந்து செய்ய விரும்பாமல் வெளியேறுகின்றார். பிறகு 2007 இல் கோவை ஹலோ பண்பலை வானொலியில் பணி. வினியுடன் காதல். 2009 இல் திருமணம். இந்த வேளையிலும் மனம் முழுதாய் ஓடவில்லை.
வானொலிக்காக நம்மாழ்வார் அவர்களைப் பேட்டிகண்டபோதுதான் வாழ்விற்கான விடையினைக் கண்டறிந்ததாக கூறுகின்றார். அதனை, ‘’சமூகப் பிரச்சனைகளுக்கு எல்லோரும் சொன்ன தீர்வை விடவும், ஐயா சொன்ன தீர்வு சரி என்று பட்டது. விவசாயம் மட்டும்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்வினைத் தரும் என்று அய்யா கூறியதுதான் என்னுடைய நீண்ட நாள் தேடலுக்கு ஆரம்பம் கிடைத்தமாதிரி” என்று கூறியுள்ளார்.
ஐ.டி வேலைக்காக ஹைதராபாத் பிறகு அமெரிக்கா எனச் சென்ற நண்பர் முத்துகுமாருடன் தினசரி இரவு தொலைபேசியில் பேசும்போது வேலையை விட்டு பைக்கில் இந்தியா முழுவதும் பயணம் செல்கின்றேன். நிம்மதியான வாழ்வினைத் தரும் விவசாயத்தை இயற்கை முறையில், சிறந்த வழியில் யார் செய்கின்றார்களோ அதனைக் கண்டறிந்து, அவர்களோடு தங்கியிருந்து அதனைக் கற்று, மீண்டும் ஊர் வந்து இடம் வாங்கி அந்த விவசாய முறையினை செயல்படுத்தவேண்டும் என்று கூறுகின்றார். இவருடைய அலைவரிசையில் இணைந்து போகின்ற முத்துகுமார் நானும் அமெரிக்கா வேலையை விட்டு விட்டு வந்துவிடுகின்றேன். இருவரும் சேர்ந்து போகலாம் என்கிறார்.
2011 சூலை 25 இல் பயணம் கிளம்புகின்றனர். ஏறக்குறைய 22500 கி.மீ தூரம் பைக், மிதிவண்டி, பேருந்து, லாரி, தொடர்வண்டி என பயணம்.. இயற்கை விவசாயத்தை, வாழ்விற்கு நிம்மதி தரும் சிறந்த விவசாய முறையினைத் தேடிப் பயணிக்கின்றனர். அந்த அனுப்வங்கள்தான்.
இதில் குறிப்பாக சொல்லவேண்டியது ஏ.கே.செட்டியார் காலந்தொடங்கி பலரும் பயண அனுபவங்களை எழுதிவருகின்றனர். அது எதுவும் சொந்த வாழ்க்கையினையும், சமூகச் சிக்கல்களையும் கொண்டதாக இருப்பதில்லை. ஆனால் தீபன் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி, மாணவியுடனான நட்பு, பெற்றோர், நண்பர்கள் என அனைத்தையும் அந்த பயணத்தையொட்டிய சம்பவங்ளை அப்படியே பதிவு செய்கின்றார். ஒரு கட்டத்தில் பயணமும், அனுபவமும் முக்கியம் சொந்த வாழ்கையென தனிக்குடும்பமாக அடையாளமின்றி வாழ விருப்பமில்லையென மனைவியுடன் பிரிவது குறித்து கூட முடிவெடுத்து பேசுகின்றார்.
இவரது மனைவி வினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகும் தீபன் மீதான் காதல் குறையாமல், அவரின் பிரிவிற்காக தன்னையும் வருத்திக்கொள்ளாமல் காத்திருத்தல் என்பது கொடுமையானது. அப்படிப்பட்ட மனைவி வினியை பிரியாமல் சேர்ந்து வாழ்வதென்பது சந்தோசமானது.
காஷ்மீர், இராணுவ முகாம்கள், துப்பாக்கி சூடுகள், மரணங்கள். பிறகு சிக்கிம். குஜராத் மோடியின் கொடூர பாதிப்புகளின் வடுக்களை சந்திக்கின்றார். அசாம், மேற்கு வங்கம், நேபாளம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஆந்திரா, கேரளா என பயணக்கின்றார்.
காஷ்மீர், நேபாள், பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் தமிழர்களையும், தமிழ் தெரிந்தவர்களையும் கண்டுள்ளார். தஞ்சை வெண்மணித் தீயில் வெந்து மடியாமல் தப்பித்து ஓடிய தமிழ் குடும்பம், தமிழ் பேசுகின்ற மாவோயிஸ்ட். நேபாளில் மலிந்து போயுள்ள பாலியல் தொழில். இதுபோன்று இவர் பெற்றுள்ள அனுபவங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நாவல்களும், சிறுகதைகளும் எழுதக்கூடிய அளவிற்கு சமூக பரிமாணங்களைக் கொண்டுள்ளன.
மனிதர்களுடனான தன்னுடைய அனுபவத்தில் உழைக்கின்ற மனிதர்கள் மூன்று வகையாக உள்ளதாக அடையாளங்கண்டுள்ளார். அவை...
1. தன் கனவை நோக்கிய உழைப்பு.
2. இன்னொருவரின் கனவுக்கான உழைப்பு.
3. கனவும் வேண்டாம் உழைப்பும் வேண்டாம். 
இவர் இந்த மூன்று நிலைகளிலும் தாவித் தாவி பயனித்துள்ளதாக கூறுகின்றார். இப்படி தாவித் தாவிப் பயணித்தாலும் மனிதத்தை மறக்காமல், சமூவியல் நோக்கோடு சென்றுகொண்டேயிருப்பது என்பது சிறப்பான ஒன்று. அடுத்த பயணம் தொடங்கியுள்ளார். அதனையும் இதனைவிட சிறப்பாக பதிவு செய்ய வாழ்த்துக்களோடு, கோவை ஆணைகட்டி மலைப்பகுதியில் தொடங்கி பாதியோடு நின்று போன விவசாய முறையினை மீண்டும் தொடங்கி வெற்றியுடன் பலருக்கும் அடையாளமாக காட்டிட வாழ்த்துகின்றோம்.


எல் நினோவும் – டெங்கு காய்ச்சலும் : பருநிலை மாற்றத்தின் பயங்கரம்…

எல் நினோவும் – டெங்கு காய்ச்சலும் : பருநிலை மாற்றத்தின் பயங்கரம்…
வரும் ஆண்டில் டெங்கு காய்ச்சல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான அளவில் பரவும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக புளோரிடா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டிரேக் கூமிங்ஸ் என்ற ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளதாவது:
கடந்த இரு பத்தாண்டுகளாக பசிபிக் சமுத்திரத்தில் உருவாகி வரும் எல் நினோ எனப்படும் வெப்பமான பருவநிலை மாற்றத்தினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். இதனால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்படும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச்சேர்ந்த 8 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
எல்நினோ மாற்றத்தினால் கடந்த 1997லிருந்து இந்த எட்டு நாடுகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடுத்த ஆண்டில் அதிகரிக்க உள்ள டெங்கு காய்ச்சலினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களும் மிக அதிகமான அளவில் இருப்பர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் வெப்ப மண்டலத்திலுள்ள இந்நாடுகளில் அதிகரித்து வரும் தட்ப வெப்ப நிலையால் அதிகமான அளவில் பரவும்.

இவ்வாறு அந்த ஆய்வு கூறியுள்ளது.