ராஜீவ் கொலை : அந்த 36 மணி நேரம் நேரம் என்ன நடந்தது?
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ‘’The Hunt - The Rajiv Gandhi Assassination Case என்ற பெயரில், 7 பகுதிகள் கொண்ட தொடர் சோனி லைவ் இல் வெளியாகியுள்ளது. ராஜீவ் இறந்தது தொடங்கி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படுவது, ஒவ்வொருவராக கைது செய்யப்படுவது, கடைசியாக சிவராசன், சுபா தற்கொலை செய்துகொள்வது வரையிலான 60 நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள்தான் 7 பகுதிகளில் உள்ளது.
கொலைக்கு முன்பு, பின்பும் என்ன நடந்திருக்காலம் என்பது குறித்து எதுவும் இல்லை. ஒரே ஒரு இடத்தில் இக்கொலையில் RAW விற்கும் தொடர்பிருக்கலாம் என ஒரு அதிகாரி மறைமுகமாக சொல்வதாக உள்ளது. கொலையில் வெளிநாடு தொடர்புகள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது, நடுவானில் ஆவணங்களை அந்த ஆணையம் தொலைத்தது என எதுவும் இல்லை.
கொலை நடந்த 60 நாட்களும் பத்திரிகைகளில் வெளியான தகவல்களை, நாள் வரிசைப்படி தொகுத்து, திரைக்கதை உருவாக்கியுள்ளனர். நிகழ்ந்த காட்சிகள், ஏன் வசனங்கள் கூட எல்லாமே முற்றிலும் அறிந்தவையாக உள்ளன. கடைசிக் காட்சியில் சிவாரசன் தங்கியுள்ள வீட்டின் முன்பாக ஒரு லாரி செல்வதாக உள்ள காட்சி ஒன்றுதான் புதியதாக உள்ளது.
பெங்களூரில் சிவராசன், சுபா உள்ளிட்டோர் தங்கியுள்ள இடம் அறிந்தபிறகும், அவர்களை உயிரோடு பிடிப்பதற்கான எந்த முயற்சிகளையும் எஸ்.ஐ.டி தலைவர் கார்த்திகேயன் மேற்கொள்ளவில்லை என்பது அப்போதே கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் ஆளானது. இதனை சொல்லியுள்ளார்களா?, எப்படி சொல்லியிருப்பார்கள் என்பது மட்டும்தான் இத்தொடரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனை நன்றாக, ஆழமாக சொல்லியுள்ளனர். சிவராசன், சுபா தங்கியிருந்த வீட்டினை சுற்றி 36 மணி நேரம் பாதுகாப்பாக நின்றுகொண்டு, அவர்கள் தற்கொலை செய்துகொண்ட பின்பு, அதிரடிப்படை உள்ளே செல்கிறது.
இந்த 36 மணி நேரம் என்ன நடந்தது. அதிரப்படையும், விசாரணைக் குழு அதிகாரிகளும் வீட்டின் உள்ளே சென்று அவர்களை உயிரோடு பிடிக்க பலமுறை அனுமதி கேட்கின்றனர். எஸ்.ஐ.டி தலைவர் கார்த்திகேயன், சிபிஐ இயக்குநர் விஜய் கரன் உள்ளிட்டோர் அனுமதி மறுக்கின்றனர். உள்ளே செல்லக்கூடாது என்று தடுக்கின்றனர்.
இப்படி காத்திருந்து, நேரம் கடத்தி, சிவராசன், சுபா உள்ளிட்டோரை தற்கொலை செய்து கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளனர்.
எஸ்.ஐ.டி மற்றும் சி.பி.ஐ க்கு சிவராசன், சுபா உள்ளிட்டோரை உயிரோடு பிடிக்கக்கூடாது என்பதுதான் நோக்கமாக இருந்துள்ளது. சிவராசன் உயிரோடு பிடிப்பட்டிருந்தால், இவ்வழக்கில் சிபிஐ & எஸ்.ஐ.டி மறைத்த, வேறு பல உண்மைகள் வெளிவந்திருக்கும். ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பு இப்படியாக இருந்திருக்காது.
புலிகள் மற்றும் புலிகள் ஆதரவாளர்கள்தான் ராஜீவைக் கொன்றார்கள் என தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதற்கான ஆவணங்களைதான் எஸ்.ஐ.டியும் அதன் தலைவர் கார்த்திகேயனும் தயாரித்தார்கள். அவருக்கு முன்கூட்டியே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கான ஆவணங்கள், சாட்சிகளை உருவாக்கும் ஒரு Desk work பணியைத்தான் எஸ்.ஐ.டி செய்தது.
இந்த உத்திரவினை யார் வழங்கினார்களோ அவர்கள்தான், சிவராசனை உயிரோடு பிடிக்கக்கூடாது, நீங்களும் சுட்டுக்கொல்லக் கூடாது, அவர்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் வரையில் காத்திருங்கள் என்ற உத்திரவினையும் வழங்கியிருப்பார்கள்.
சந்திராசாமி, சந்திரசேகர், நரசிம்மராவ், சுப்பிரமணியசாமி உள்ளிட்டோருக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்புகள் குறித்து அப்போதே பரவலாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் நிறைய வெளிப்படையாக பேசப்பட்டது, எழுதப்பட்டுள்ளது.
சிவராசன் உள்ளிட்டோரை உயிரோடு பிடிப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள சிபிஐ மற்றும் எஸ்.ஐ.டி யின் இந்த அரசியல் காரணங்களை தொடர் பார்ப்போர் புரிந்துகொள்வார்களா? புரியுமா? என்பது தெரியவில்லை.
தாமதப்படுத்துவதையும், அனுமதி மறுப்பதையும் நன்றாகவே அழுத்தமாக காட்டியுள்ளனர். இது ஏன்? என பார்ப்பவர்கள் யாரேனும் யோசித்தால்தான் பதில் கிடைக்கும். அதாவது ராஜீவ் கொலையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் அரசியல் சதிகள் அனைத்தும் முற்றிலும் மூடிமறைக்கப்பட்டு (சிவராசன் தற்கொலை மூலம்), புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள்தான் கொலையாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, அதனைத் தாண்டி ராஜீவ் கொலை வழக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.