Saturday, December 26, 2020

எதிரிக்குக் கூட இப்படியொரு பாதிப்பு வரக்கூடாது..

 எதிரிக்குக் கூட

இப்படியொரு பாதிப்பு வரக்கூடாது..

---------------------------------------------------------------------

14.09.2020 அன்று சென்னைக்கு சென்று, இரவு திரும்பி தூங்கியபிறகு, மறுநாள் 15.09.2020 அன்று காலை கடும் காய்ச்சலுடன்தான் எழுந்தேன். கண் எரிச்சல், தலைவலியும் கூடவே இருந்தது. படுக்கையில் இருந்தபடியே  மருத்துவர் நண்பர் நவீன் Naveen Kumar அவர்களிடம் பேசினேன், ‘’மாத்திரைகள் எழுதி அனுப்புகின்றேன், கவனமாக இருங்கள், சத்தான உணவினை எடுத்துக்கொள்ளுங்கள், சோதனை தேவையில்லை மூன்று நாட்கள் கழித்து, தேவை எனில் எடுக்கலாம் என்றார்.

 

ஒரே நாளில் தலைவலி, கண் எரிச்சல், சளி நின்றது.  மூன்றாம் காய்ச்சல் குறைந்தது,  5-ஆம் நாள் முற்றிலும் நின்றது. ஆனால், உடல் சோர்வும் பலகீனமும் தொடங்கியது. காய்ச்சலோடு இருந்ந நாட்களை விட கொடுமையானதாக இருந்தது. மீண்டும் மருத்துவர் நவீன் மற்றும் திண்டிவனம் கொரோனா சிறப்பு மருத்துவர் விஷ்ணு இருவரிடமும் பேசினேன். இருவருமே, காய்ச்சல் நின்றுவிட்டதால் கவலை இல்லை. சத்தாண உணவு எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுங்கள். ஓய்வுதான் இப்போது முக்கியம் என்றனர். கபசுரகுடிநீர், சுடவைத்த தண்ணீர், எலுமிச்சை இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் இருவருமே கூறினர். தொடர்ந்து எடுப்பதைக் கூறினேன். ’’அதுவே போதும்.. ஓய்வுதான் இதற்கான மருந்து.. நன்றாக ஓய்வு எடுங்கள்.. நன்றாக உணவு எடுங்கள் என்றனர்.

கூடுதலாக மருத்துவர் விஷ்ணு, ‘’மூச்சு விடுவதில் சிரமம், தொந்திரவு அளிக்கும் இருமல் உள்ளதா என்று கேட்டார். இல்லை என்றேன். ‘’ஒரு வாரம் உடல் சோர்வு இருக்கும்.. தேவையெனில் நமது அரசு மருத்துவமனையில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் ஒருதடவை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். மறுநாள் அரசு மருத்துவ மனை சென்று பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பார்த்தேன். இயல்பாக இருந்தது. முதல் 5 நாட்களில் காய்ச்சல் நின்றதுபோன்று, அடுத்த 5 நாட்களில் உடல் சோர்வு / பலகீனம் முற்றிலும் நிற்கவில்லை என்றாலும் குறையத் தொடங்கியது.

0

ஆனால் லேசான இருமல் தொடங்கியது. மீண்டும் மருத்துவர்கள் இருவரிடமும் பேசினேன். எப்போது இருமல் வருகிறது என்றனர். பேசினால் வருகிறது. பேசாமல் இருந்தால் இருமல் இல்லை என்றேன்.

மருத்துவர் விஷ்ணு, மருந்து ஒன்று எழுதி அனுப்பி காலையும், இரவும் உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். மருத்துவர் நவீன், ’’பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள், பாலில் மிளகு தூள், மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவைத்து, தேன் கலந்து மிதமான சூட்டில் குடியுங்கள், ஓய்வு எடுங்கள் என்றார். மூன்று நாட்களில் குறையத் தொடங்கியது.

0

மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்தபோது, புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் எல்லோரும் எதிர்கொண்டோம். ஒரிரு மாதங்களுக்குப் பிறகு, குடும்ப / தனிப்பட்ட தேவைகளை சரி செய்யவும், பொது மற்றும் சமூக பணிகளில் ஏற்றுக்கொண்டவைகளை நிறைவேற்றவும், கொரோனா குறித்த அச்சமிருந்தாலும், போதிய பாதுகாப்பு / முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவைகளுடன் வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டது.

0

வெள்ளிக்கிழமை (02.10.2020) அன்றுதான் உடல் முழுமையாக சரியானதை உணர முடிந்தது. அச்சமின்றி, கவலையில்லாமல் 20 நாட்களை எதிர்கொண்டு, மீண்டு வர மருத்துவர்கள் நவீன் மற்றும் விஷ்ணு இருவரின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் மட்டுமே காரணமாக இருந்தது.  இரு மருத்துவர்களுக்கும்  என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

0

உடல் சோர்வு மற்றும் இருமல் காரணமாக, பேச்சினை குறைக்க பலநாட்கள் செல்பேசியை அணைத்து வைத்திருந்தேன். பலரும் தொடர்புகொண்டும் பேசமுடியாமல் இருந்து. இன்னும் கூட சிலபேருடன் பேச முடியாமல் உள்ளது. சிலநாட்களில் பேசிவிடுகின்றேன்.

0

20 நாட்கள் வீடடங்கு காலம் இன்றோடு முடிகின்றது. உடலும் நலமடைந்தது. இயல்பு வாழ்க்கை/அன்றாட நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றது.

0

உடலை உண்டு இல்லை என்றாக்கிவிடுகின்றது.  எதிரிக்குக் கூட இதுபோன்ற பாதிப்புகள் வந்துவிடக்கூடாது. எவ்வளவுதான் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருந்தாலும் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதை அறியமுடியாமல்போகின்றது.

0

வராமல் இருப்பது நல்லது, பாதுகாப்பானது. வந்துவிட்டால் அச்சப்படத்தேவையிலை. கவலையோ, குழப்பமோ இல்லாமல் எதிர்கொள்ளவேண்டும். உடனடியாக நம்பிக்கையான மருத்துவர்களின் ஆலோசனையும், மருத்துவமும் மிக மிக முக்கியம்.

0

வீட்டில் கவலையும் அச்சமும் இன்றி அணுகினர். இதுவும் மிகவும் அவசியம்.

0

தொடங்கிய பலபணிகள் பாதியோடு நின்றன. மீண்டும் தொடர்ந்து / தொடங்கி முடிக்கவேண்டும்

0

அனைத்திற்கும்

அனைவருக்கும் நன்றிகள்.

(5 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)

 

No comments: