Thursday, August 27, 2015

அத்தியூர் விஜயா விருது

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்த பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா நினைவு விருதினை, மனித உரிமைத் தளத்தில் சமரசமில்லாமல் நேர்மையாக செயல்படுவதைப் பாராட்டி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் நேற்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்வில் எனக்கு வழங்கியது. மேலும் இவ்விருது கடலூர் நண்பர் பாபு அவர்களுக்கும் வழங்கப்பட்டது
(16.08.2015 முக நூல்)

அத்தியூர் விஜயா நினைவு விருது அளிக்கப்பட்டது ஏன்?

(விருது பெறுவோர்களின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து நேற்று விழாவில் துண்டறிக்கையாக வெளியிட்டப்பட்டுள்ளது.
அதிலுள்ள என்னைப் பற்றிய குறிப்புகள்)

கடலூர் மாவட்டத்தில் மங்கலம்பேட்டை அருகே சரியான பேருந்து வசதிகூட இல்லாத சின்னப்பரூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்த இவர். தலைமை ஆசிரியரான இவரது தந்தையின் வாசிப்பு அனுபவம், திராவிட இயக்கப் பின்னணி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இலக்கியம் மற்றும் தமிழ்த் தேசிய அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபடத்தொடங்கினார்.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பெரியாரியக்கப் பேரவை, தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கி செயல்பட்டுள்ளார்.
இலக்கியம் மற்றும் அரசியல் ஆர்வத்தில் கையெழுத்து மற்றும் அச்சிலும் தமிழ்ப்பரணி என்கிற சிற்றிதழ் ஓராண்டு நடத்தியுள்ளார்.
மங்கலம்பேட்டை மேனிலைப் பள்ளியில் பெரியார் படம் வைப்பதை தடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் முறையாக சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் கந்துவட்டி கொடுமையை எதிர்த்த போராட்டம் உட்பட 5 முறை சிறை சென்றுள்ளார். விருத்தாசலம் கல்லூரியில் பயின்ற போது மாணவர் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
மங்கலம்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டபோது ஆலோசனை, ஆதரவு தேடி பேராசிரியர் கல்யாணி அவர்களை சந்தித்தது முதல் தன்னுடைய செயல்பாட்டுத் தளங்களை விரிவுபடுத்திக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பேராசிரியர் கல்யாணி முன்னெடுத்த அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2000 ஆம் திண்டிவனம் ரோசனையில் தொடங்கப்பட்ட தாய்த் தமிழ்ப் பள்ளியை பார்த்துக்கொள்வதற்கு என திண்டிவனம் வந்து, பேராசிரியர் கல்யாணியுடன் அவரது வீட்டிலேயே தங்கி செயல்பட்டார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் முன்னெடுத்த அனைத்துப் பணிகளிலும் 2000 முதல் ஈடுபட்டுள்ளார். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஆலோசனைக் கூட்டம், கோடை காலப் பயிற்சி, உண்டு உறைவிடப்பள்ளி, மாநாடு, வழக்கு விசாரணை, புகார் எழுதுவது போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் உடனிருந்து செயல்பட்டுள்ளார். குறிப்பாக அத்தியூர் விஜயா வழக்கு விசாரணையில் இறுதிவரை உடனிருந்தார்.
சங்கத்தின் சார்பில் புகார்கள், தீர்மானங்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவைகள் எழுதியுள்ளார். இருளர் செய்தி ஆசிரியர் குழுவில் இடம்பெற்று செயல்பட்ட இவர், பழங்குடியினர் கதை, கவிதை, கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் அவர்களுடன் இணைந்து தொகுத்துள்ளார்.
மனித உரிமைகளுக்காகச் செயல்படுகின்ற அரசு சாரா நிறுவனமான மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் 2003 இல் பணியாற்றிய இவர் 2007 தொடங்கி திண்டிவனத்திலுள்ள இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அமைப்பில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகம் சார்பிலும், பேரா.அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் உள்ளிட்டோருடன் இணைந்தும் மனித உரிமைகள் மீறல் சம்பங்களில் உண்மை அறியும் குழுவாக கள ஆய்வு செய்வதுடன் அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.
மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு கட்டுரைகள், செய்திக் குறிப்புகள்-அறிக்கைகள் எழுதியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகள் தலித் முரசு இதழில் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளன. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்தும், வழக்குகள் குறித்தும் ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ தலைப்பில் ஆய்வு நூல் எழுதியுள்ளார். இது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கான பாலின சமத்துவக் கொள்கை மற்றும் குழந்தை உரிமைக் கொள்கை எழுதியுள்ளார்.
‘‘தலைமுறைக் கனவு..’’ என்கிற தலைப்பில் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர் என்கிற கிராம மக்களள் குறித்த சிறு புத்தகம் எழுதியுள்ளார்.
திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயலாளராக உள்ள இவர்,
தாய்த் தமிழ் பள்ளியின் அறங்காவலர் மற்றும் பொருளாளராகவும் உள்ளார்.

(16.08.2015 முக நூல் பதிவு)

மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்

மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்… 
-----------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை சென்னை சென்று திரும்பும்போது பேருந்து நெரிசல் குறித்து அன்று இரவே ஒரு சிறு பதிவு போட்டிருந்தேன்…
அப்போதைய எரிச்சல், கோபமும் இன்னும் தீர்ந்தபாடில்லை. 
நேற்று நிகழ்ச்சி இருந்ததால் எதுவும் எழுதமுடியவில்லை. 
அன்று இரவு 9.20 க்கு தாம்பரத்தில் பேருந்துபிடித்து பெருங்களத்தூருக்கு பேருந்து ஏறினேன். 5 நிமிடம்தானே நின்றுகொண்டே சென்றுவிடலாம் இடமில்லாத நிலையிலும் ஏறினேன். ஆனால் 10.30க்குதான் பெருங்களத்தூர் போகமுடிந்தது. 
மீண்டும் அடுத்த பேருந்து காத்திருந்து, அலைந்து, நடந்து நடந்து 11.40 க்கு அரியலூர் செல்லும் அரசு பேருந்து நிற்பதற்கு கிடைத்த கொஞ்ச இடத்தில் நின்றபடியே தொடங்கியது பேருந்து பயணம். நத்தையாக ஊர்ந்து ஊர்ந்து செங்கல்பட்டு தாண்டி மதுராந்தகம் அருகே மட்டும் ஒரு 30 நிமிடத்து கொஞ்சம் வேகமாகச் சென்றது. மீண்டும் நத்தையாக ஊர்ந்து மேல்மருவத்தூர் முன்பே பல கீ.மீ தூரம் சுத்தமாக வழியில்லை. நான்கு வழிப்பாதையிலும் திருச்சி, மதுரை, சேலம், சிதம்பரம் நோக்கிய பேருந்தே நின்றது. கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்து திண்டிவம் வரும்போது விடியற்காலை மணி 3.00. 
படியில் நின்று கொண்டிருந்த ஒருவரின் கலாட்டா காமெடி, வயதான ஒருவருக்கும் நடத்துனருக்குமான் விவாதம் என பேருந்தில் எவரும் அதுவரை தூங்காமலே பொழுது ஓடியது. 
தனியார் தொலைகாட்சிகாரர்களுக்கு அறிவுகூட தமிழக அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பதை வெளிபடுத்திக்கொண்டே உள்ளனர். சுதந்திரதினம், விடுமுறை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயாரிக்கின்றனர். 
ஆனால் சனி, ஞாயிறு சேர்ந்து வருகின்ற சுதந்திர தின விடுமுறையில் சென்னையிலிருந்து லட்சக்கணக்கில் ஊருக்குச் செல்லும் பயணிகள் கூட்டம், ஆடிவெள்ளி மேல் மருவத்தூர் கூட்டம், ஆடி அமாவாசை மேல்மலையனூர் கூட்டம் என லட்சக் கணக்கில் பயணம் நிகழும் என்பதை முன்கூட்டியே தெரிந்தும், அவைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சரி செய்வதற்கும் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியம் நிச்சயம் ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. அன்று இரவு மட்டும் பெருங்களத்தூரில் குறைந்த பட்சம் 30 ஆயிரம் பேருக்குமேல் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பேருந்து கிடைக்காத அவதியில் யாரேனும் ஒருவர் அவர்களை ஒருங்கிணைத்திருந்தால் கட்டுக்கடங்காத அளவில் எதிர்வினை நடந்திருக்கும். 
கோமா நிலையில் உள்ள தமிழக அரசும், அதிகாரிகளின் அலட்சியம் பெரும்பாலான இடங்களில், நேரங்களில் மக்களை தன்னிச்சையான எதிர்வினைகளுக்கே இட்டுச்செல்லும். 
கோட்டையில் ஜெ. கொடியேற்றுகின்ற சில நிமிடங்களுக்காக ஒட்டுமொத்த தமிழக அரசும் நிர்வாகமும் ஒரு வாரத்திற்கு மேலாக செயல்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் 7 கோடி மக்கள் உள்ளனர் என்பதையே மறந்துபோன கோமா நிலையில்தான அரசு இயந்திரம் உள்ளது. 
அடிபட்டு நினைவிழந்த நிலையில் ஏதேனும் ஒன்று மட்டுமே நினைவில் இருப்பதைப் போன்று ஆள்வோர் அனைவருக்கும் ஜெ. என்பது மட்டுமே நினைவில் உள்ளது. 
மக்களை மறந்துபோன கோமா நிலை அரசுக்கு நல்லது அல்ல. 
பேருந்துக்காக அலைந்த அலைச்சலில், ஜெ.குறித்த வதந்திகள் உண்மையாகக் கூடாத என்று நினைக்கத் தோன்றியது..அப்போதேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்ற நப்பாசை ஏற்பட்டது. 
சீக்கிரமே எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படவேண்டும். 
நாட்டு மக்களின் கோபம் ஆளும் அரசுக்கு நல்லது அல்ல..
மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்… 
கடைசியாக ஒன்று.. 
வெள்ளியன்று இரவு பேருந்தில் நான் சென்னையிலிருந்து திண்டிவனம் அதே நேரத்தில்தான் நண்பர் இசாக் சிங்கபூர் கிளம்பினார். 
நான் திண்டிவனம் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அவர் சிங்கபூர் சென்றடைந்தார்.

(16.08.2015 முகநூல் பதிவு)

சேசசமுத்திரம் கிராமத்தில் நடந்த சாதிய வன்கொடுமைகள் என்ன?

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேச சமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் தங்களுடைய மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தி தேரோட்டம் செய்யவிருந்த நிலையில், சுதந்திர தினத்தன்று தேர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, 5 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகளின் ஒரு பகுதியும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த உணவு, உடை, பாத்திரம், மாணவர்கள் சான்றிதழ், ரொக்கப்பணம், குழந்தைகளின் தோடு, கொலுசு உள்ளிட்ட நகை, புத்தங்கள், சான்றிதழ், அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பாதுகாப்பிற்கு இருந்த 8 போலீசார், 3 கிராம உதவியாளரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
பாதிப்புற்ற தலித் மக்களை நேரில் சந்தித்துப் பேசியபோது கிடைத்த தகவல்கள்:
• சுமார் 80 தலித் குடும்பங்களும், 5000 சாதி இந்துக்களும் வாழ்கின்றனர். இக்கிராமத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வன்னியர் சமூகத்தினர் 3 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் சுப்பிரமணியம் என்பவர் தலித் மக்களிடம் "அனைவரும் மொத்தமாக தனக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தால் தங்கள் அம்மன் கோவிலுக்குத் தேவையான தேரினை செய்து தருவதாக" வாக்களித்துள்ளார். அதன்படி தலித் மக்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். வெற்றிபெற்ற சுப்பிரமணியன் தலித் மக்களிடம் கோவில் பணம் 1 லட்சம் ரூபாயைப் பெற்று, தனது பங்காக சுமார் 1 லட்சம் ரூபாய் போட்டு தேர் செய்து கொடுத்துள்ளார். அதே நேரத்தில் ஊரோடு சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், இந்த ஆண்டு அரசே அனுமதி அளித்து நடைபெறவிருந்த தேரோட்டத்திற்கு தடை கேட்டு சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.
dalit sesa samuthiram• இதுவரை 20க்கும் மேற்பட்ட அமைதிக் கூட்டங்களை நடத்திய வருவாய் மற்றும் காவல் அதிகாரிகளே சட்டம் ஒழுங்கு பிரச்சனையென 144 தடையுத்தரவு பிறப்பித்து தேரோட்டத்திற்கு தடைவிதித்து வந்துள்ளனர். இந்துக்களாக இருந்தும், இந்துக் கடவுளையே வழிபடமுடியாத நாங்கள் புத்தம் மதம் மாறப் போகின்றோம் என்று கடந்த ஆண்டு தேரோட்டம் தடை செய்யப்பட்டதும் தலித் மக்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி அமைதிக் கூட்டம் நடத்திய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் 16 ஆம் தேதி தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஆடல், பாடல் போன்ற கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக நடத்த வேண்டும் என்பதை அமைதிக் கூட்டத்தில் இருதரப்பினரும் ஏற்றுள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டு தேர் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது.
• ஆகஸ்ட் 15 ஆம் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பா.ம.க அன்புமணியின் கூட்டத்திற்கு கிராமத்திலிருந்து பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்றுள்ளார்கள். சமீப ஆண்டுகளாக பா.ம.க பல்வேறு செயல்படுகள் மூலமாக நேரடியான, வெளிப்படையான தலித் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் மாலை 6.00 மணியளவில் கிராமத்திற்கு திரும்பி வந்து (300 பேர் கொண்ட கும்பல்), தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளது. பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். கொஞ்சம் இருட்டியபிறகு இரவு 7 மணியளவில் அவர்களது பகுதியிலிருந்த 2 டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்துள்ளார்கள். அதே வேகத்தில் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து, அங்கிருந்த 2 டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஊரையே இருட்டுக் காடாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்த போலீசார் திருவிழாவிற்காக எடுத்து வரப்பட்டிருந்த இரு ஜெனரேட்டர்களையும் ஓட்டச்சொல்லி ஆன் செய்துள்ளனர். அவர்கள் சுமார் 300 பேரும் கூட்டமாக வந்து ஜெனரேட்டர் இரண்டையும் அடித்து உடைத்து சுத்தமாக இருள் பகுதியாக்கினார்கள். அதன்பிறகு குவாட்டர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி தலித் குடியிருப்புகள் மீதும், தேர் மீதும் வீசி எரிந்துள்ளனர். இதில் குடிசைகள் தீ பற்றி எரிந்தன. தேர் எரியாத நிலையில் பெரிய டயர் ஒன்றில் பெட்ரோல் ஊற்றி தேருக்கு அடியில் அதனை வைத்து தீ வைத்து எரித்துள்ளார்கள். தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்கியுள்ளனர். 300 பேர் கும்பலை 30 போலீசாரால் தடுக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் வந்துள்ளார். அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு லேசான காயம்பட்டுள்ளது. அதன் பிறகே வானத்தை நோக்கி துப்பாக்கியால் போலீசார் சுட்டுள்ளார்கள்.
• தலித்துகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது, கற்கள் மற்றும் பெட்ரோல் எரிகுண்டுகள் கொண்டு தாக்கியது தொடர்பாக கு.எண் 329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(ii), 436 மற்றும் வன்கொடுமை தடுப்புச் அவசரச் சட்டம் 3(ii)(v)(a) பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
• ஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் 8 போலீசாரும், கிராம உதவியாளரும் காயமடைந்தது தொடர்பாக ராஜன்பாபு என்கிற போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கு.எண் 330/2015 என்கிற வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் இவ்வழக்கில் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
• தாக்குதலை முன்நின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத்தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூச்.சின்னதுரை (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எமது பரிந்துரைகள் :
• தொடர்ந்து 4 ஆண்டுகளாக தலித் மக்கள் நடத்துகின்ற வழிபாடு மற்றும் தேர்த் திருவிழாவினை தீண்டாமை பாகுபாட்டை காரணம் காட்டி தடை செய்து வருவதால் இக்கிராமத்தை வன்கொடுமை நிறைந்த கிராமமாக (Atrocity prone village) அறிவிக்க வேண்டும்.
• காயமடைந்த போலீசார் 8 பேருக்கும் தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை முழுமையாக இழந்த 5 குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பாதி எரிந்த 2 குடும்பத்திற்கு தலா 2500 ரூபாயும், 7 குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது பாதிப்பிற்கேற்ற போதுமான நிவாரணமில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித் மக்களுக்கு சட்டத்தின்படி உரிய நிவாரண உதவிகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
• மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி மூன்று மாதத்திற்கோ அல்லது இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையிலோ பாதிப்புற்ற தலித் மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட வேண்டும். வீடுகளை இழந்த அனைவருக்கும் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தீயில் எரிந்துபோன அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மீண்டும் வழங்குவதுடன், உரிய ஆய்வுகள் செய்து எரிந்துபோன சொத்துக்களுக்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
• முதன்மைக் குற்றவாளிகள் அனைவரின் அரசியல் செல்வாக்கினை கணக்கில் கொள்ளாமல் உடனடியாக கைதுசெய்யப்பட்டு, தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிட வேண்டும். பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் மீதும் கலவரத்தைத் தூண்டிவிடுவதாக கிராமத்தைச் சேர்ந்த இருவர் சார்பாக பா.ம.க வின் வழக்கறிஞர் கே.பாலு கொடுத்துள்ள புகார் இப்பகுதிகளில் மேலும் பதட்டத்தை உருவாக்குவதாகவும், தீண்டாமைப் பாகுபாடுகளை மேலும் தொடரச் செய்வதுமாக உள்ளதுடன், இச்சம்பவத்தின் தீவிரத் தன்மையின் கவனத்தை திசை திருப்புவதுமாக உள்ளது.
• அரசு தனது இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக தலித் மக்களின் தேரினை சீர் செய்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேரோட்டம் நடத்தி தீண்டாமை இல்லா கிராமமாக இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும்.
• தற்போது நடைமுறையில் இல்லாத வன்கொடுமை தடுப்பு அவசரச் சட்டம் 2014&இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வழக்கினையும், விசாரணையையும் வலுவிழக்கவே செய்யும். தலித்துகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நீதி கிடைப்பதற்கு பதிலாக, வழக்கினை நீர்த்துப்போகவே செய்யும். எனவே காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக எஸ்.சி/எஸ்.டி சட்டம் 1989&இன் வழக்கினை திருத்தம் செய்திட வேண்டும்.
- இரா.முருகப்பன்
(19.08.2015)
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29007-2015-08-19-14-17-34

சாதிக்கு தீக்கிரையான சேசசமுத்திரம்


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை செல்கின்ற சாலையில் சங்கராபுரம் அருகே உள்ளது சேசசமுத்திரம் கிராமம். 100 தலித் குடும்பங்களும், 5000 சாதி இந்துக்களும் வாழ்கின்றனர். இக்கிராமத்தில்தான் தலித் குடியிருப்புகள் மீது இந்தியா விடுதலைப் பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாள் இரவு ஏழு மணியளவில் தொடங்கிய தாக்குதல் நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றுள்ளது. ஆதிக்கச் சாதியினர் திட்டமிட்டு நடத்திய இத்தாக்குதலில் தலித் மக்களின் வழிபாட்டிற்கான அம்மன் கோவில் தேர், ஐந்து வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பாதியாகவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்துள்ளார்கள். தேர் எரியாத நிலையில் லாரி டயர் ஒன்றில் பெட்ரோலை ஊற்றி தேருக்கு அடியில் தீ வைத்து எரித்துள்ளனர்.
ஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் கிராம உதவியாளரும், எட்டு போலீசாரும் காயமடைந்துள்ளனர். அரசு இவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது. வீடுகளை முழுமையாக இழந்த ஐந்து குடும்பத்திற்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும், பாதி எரிந்த இரண்டு குடும்பத்திற்கும் தலா 2500 ரூபாயும், ஏழு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
15 ஆம் தேதி இரவு கிராமத்தை விட்டு வெளியேறிய பலர் இன்னும் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்ட அருணாசலம், அய்யப்பன் இருவரையும் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது ‘’2012 ஆம் ஆண்டு முதல் தேர் ஓட்ட முயற்சி செய்கின்றோம். ஒவ்வொரு தடவையும் ஊர்க்காரர்கள் ஏதேனும் பிரச்சனை செய்வார்கள். போலீஸும் வரும். அதையே சட்டம் ஒழுங்கு எனக் காரணம் காட்டி 144 போட்டு திருவிழா நடக்காமல் தடை செய்வார்கள். போனவருடம் உயர் நீதிமன்றத்தில் வழக்குபோட்டோம். தேர் திருவிழா நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனாலும் தடுத்துவிட்டார்கள். இந்த வருடமும் ஆடி மாதம் திருவிழா ஆரம்பித்தோம். 14ஆம் தேதி தேரோட்டம் என நோட்டீஸ் அச்சிட்டு விநியோகித்தோம். உடனே 12ஆம் தேதி பஞ்சாயத்து தலைவர் சங்கராபுரம் கோர்ட்ல தேர்த் திருவிழாவிற்கு தடைகேட்டு கேஸ் போட்டார். இதுவரைக்கும் 20க்கும் மேல அமைதிகூட்டம் நடந்திருக்கு. இப்பவும் அதிகாரிங்க நடத்தினாங்க. அதுல 16ஆம் தேதி தோரோட்டம் செய்யலாம், ஆடல், பாடல் போன்ற எதுவும் இல்லாம அமைதியா நடத்திகொள்ளவேண்டும் என்றார்கள். நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம். ஊர்காரர்களும் ஒத்துக்கொண்டார்கள். 30 போலீஸார் பாதுகாப்பிற்கு வந்தார்கள். இரண்டு நாட்களே இருந்த நிலையில் நாங்கள் திருவிழா ஏற்பாடு செய்தோம்.
15ஆம் தேதி மதியம் ஊர்த்தெருவைச் சிலர் வண்டி வச்சிகிட்டு பா.ம.க கொடிகட்டிகிட்டு ஒரே சத்தம் போட்டுகிட்டு கள்ளக்குறிச்சி போனாங்க. அங்க அன்புமணி கூட்டம் முடிச்சி சாயங்காலம் ஐந்து மணி அளவில ஊருக்கு வந்தவங்க எல்லாம், தேர் ஓடக்கூடாது அவ்வளவு திமிராயிடுச்சா என்று சத்தம் போட்டு கோஷம் போட்டுகிட்டே போனாங்க. போவதும் வருவதுமாக சுத்தி சுத்தி வந்தாங்க. இருட்டின பிறகு ஏழு மணி அளவுக்கு, அவுங்க ஊர்த் தெருவுல இருந்த 2 டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்தார்கள். அதே வேகத்தில் எங்கள் காலனிக்குள் புகுந்து இரண்டு டிரான்ஸ்பார்மர்களை உடைத்தார்கள். ஊரே இருட்டில் கிடந்தது.
உடனே போலீஸார், கோவிலிருந்த ஜெனரேட்டர் இரண்டையும் ஓட்டச் சொல்லி ஆன் செய்தார்கள். அவர்கள் சுமார் 300 பேர் இருக்கும். பெரும்பாலோனர் கையில் குவார்ட்டர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி எங்கள் மீதும், எங்கள் குடிசைகள் மீதும், போலீசார் மீதும் தாக்கினார்கள். 30 போலீசாரால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஜென்ரேட்டரையும் அடித்து உடைத்தார்கள். மீண்டும் இருட்டானது. கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் எஸ்.பி வந்தார். அவர்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். எஸ்.பிக்கும் லேசான காயம் பட்டது. அதன்பிறகே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். பகலில் ஊருக்குச் சென்று வந்தாலும் இரவில் தங்குவதில்லை. வெளியூரில் உறவினர்கள் வீடுகளில் தங்குகின்றோம்” என்றார்கள்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித்துகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பாக கு.எண் 329/205 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(ii), 436 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(ii)(v) ஆகும். இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்து போலீசார் மீதான தாக்குதல் தொடர்பாக ராஜன்பாபு என்கிற போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 330/2015 என்கிற வழக்குபதிவு செய்து, மேற்கண்ட வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவிர பிற அனைத்துப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை முன் நின்று நடத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத் தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூச்.சின்னதுரை(தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எரிந்த வீடுகளில் இருந்த ரொக்கப் பணம் ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம், கொஞ்சம் நகைகள், மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள், அரசு அளித்த குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாலை நான்கு மணியளவில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு, தான் சார்ந்துள்ள வன்னியர் சமூக மக்களுடன் பா.ம.க வின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு சென்று இரண்டு புகார் அளித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்யும்படி காவல் துறையினரை வற்புறுத்தியுள்ளார். ஒரு புகாரில், லட்சுமி(40) க/பெ ஆறுமுகம் என்பவர் பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் வீடுகளை தாக்கி, 80 லட்சம் ரூபாய் பொருட்களை சேதப்படுத்திய 300 போலீசார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு புகாரில், ஏழுமலை(45) க/பெ மண்ணாங்கட்டி என்ற பெயரில், கரும்புத் தோட்டத்தை சிந்தனைச் செல்வன் தூண்டுதல் பேரில் தீ வைத்து கொளுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்ற போலீசார், வழக்குப்பதியாமல் அவரை திருப்பி அனுப்பிய நிலையில், வெளியில் வந்த வழக்கறிஞர் கே.பாலு மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்போவதாக பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களைக் கூறியும், பிரச்சனைகளை எழுப்பியும் தேரோட்டத்தை தடை செய்து வருவதால், கிராமத்திலுள்ள தலித்துகள் அனைவரும் புத்த மதம் மாறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இப்போதும் இந்த கோரிக்கையின் தேவை அப்படியே உள்ளதாக கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர். இதில் சுப்பிரமணியம் என்பவர், தலித் மக்களிடம் அணுகி அனைவரும் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் தங்கள் வேண்டுகோள்படி தேரினை செய்துதருவதாக வாக்களித்துள்ளார். அதன்படி மக்கள் வாக்களித்துள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டபின்பு தேர் செய்துகொடுத்த சுப்பிரமணியம் தான் ஊரோடு சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக செயல்படுகின்றார் என்பதுடன், தேரோட்டம் நடத்தக்கூடாது என வழக்கும் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஆகஸ்ட், 18)
சனி கிழமை மாலை தொடங்கியது. இன்றுதான் ஓரளவு முடிவுற்றது. தம்பி ஒருவரின் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வு, இருளர் வாழ்வியல் தொடர்பான தகவல்களும், உதவியும் கேட்டிருந்தார். அதனையொட்டியே இந்த 4 நாட்களும் தேடியெடுத்து தொகுத்தபோது இருளர் மக்களோடு வாழ்ந்தது போன்றே ஆகிவிட்டது. மனதிலும், மூளையிலும் இருளர் பற்றிய சிந்தனைகள் ஒட்டிக்கொண்டு வெளியேற மறுக்கின்றது. அவைகளிலிருந்து விடுப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை….
-----------------------------------------------------------------------------------------
இருளர் சமூகத்திடம் முன்பிருந்த
திருமண முறை.. தகவலுக்காக…


’’திருமணங்கள் பெரும்பாலும் ஆண், பெண் விருப்பப்படியே நடக்கின்றன. நெருங்கிய உறவு முறையான மாமன், அத்தை வாரிசுகளுக்கு இடையிலான காதல் திருமணங்களும் உண்டு.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கும்போது ’‘உங்கள் வீட்டில் கீரைத் தண்டு இருக்கிறதே அதைக் கொடுங்கள், நாங்கள் எடுத்துக்கொண்டு போகின்றோம்’’ என்று சொல்வார்கள். அதற்கு பெண் வீட்டார்கள் ‘’ஒன்னே ஒன்னு வாடாம வதங்காம வச்சிருக்கோம். உங்ககிட்ட வந்தா வதங்கிடும். நாளடைவில் பார்ப்போம். போய் வாங்க’’ என்று சொல்லுவார்கள்.
மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு அழைத்து ஓரிரு நாட்கள் தங்க வைத்து வேட்டையாடுவதில் அவரின் திறமையினை கண்டறிந்த பிறகே பெண் தருவது குறித்து முடிவு செய்வார்கள்.
இவர்களிடையே நடுவீட்டுத் திருமணம், உடன்போக்கு திருமணம், களவுத் திருமணம், விதவைத் திருமணம், குழந்தைத் திருமணம், முறைப்படி பெண் பார்த்து நடக்கும் திருமணம் என பல்வேறு முறையிலான திருமணங்கள் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனாலும் நடுவீட்டுத் திருமணம் மற்றும் களவுத் திருமணம் ஆகிய இரண்டுமே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

Thursday, August 13, 2015

அத்தியூர் விஜயா நினைவு விருது

அத்தியூர் விஜயா நினைவு விருது.. பெறுவதில் பெருமையடைகின்றோம்!
அத்தியூர் விஜயா அனைவருக்கும் நினைவிருக்கும்…
இறுதிவரை உறுதியாக அவரின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
மனித உரிமை தளத்தில் உறுதியுடன் பணியாற்றுகின்றவர்களை பாராட்டி
அத்தியூர் விஜயா நினைவு விருதினை
கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகின்றது
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்….
இரண்டாம் ஆண்டான இப்போது அத்தியூர் விஜயா பெயரிலான இவ்விருதினை
நானும், கடலூர் நண்பர் பாபுவும் பெறவுள்ளோம்..
ஆகஸ்ட் 15 அன்று காலை
விழுப்புரம் சாந்தி நிலையத்தில்
நிகழ்ச்சி நடைபெற உள்ளது…
வாய்ப்பிருப்பின் பங்கேற்க வாருங்கள்


Thursday, August 6, 2015

முன்னுரை : பேரா. அ.மார்க்ஸ்

முன்னுரை

அ.மார்க்ஸ்,
14-03-2014,

குடந்தை


தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் தீண்டாமை அடிப்படையில் வன்கொடுமைகள் நடப்பவை என அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 542. அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு எனில் உண்மை நிலை இன்னும் பலமடங்காக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பதிவான வழக்குகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் வன்கொடுமைகளைக் குறித்துப் புகாரளிக்கவோ அல்லது ஏதேனும் எதிர்ப்புக்காட்டி அதைச் செய்தியாக்கவோ இயலாத நிலையுள்ள கிராமங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை இதுபோன்ற பிரச்சினைகளில் அக்கறை உள்ளோர் அறிவர். இரு வாரங்களுக்கு முன் கூட பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீண்டாமை ஒதுக்கல்களை அவர் விரிவாகச் சொன்னார். ஏதாவது செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தக் கொடுமைகளைப் பட்டியலிட்டு ஏதாவது போராட்டம் நடத்துங்களேன் என்றேன். அதெல்லாம் இங்கு செய்து பார்த்தும் பலனில்லை, மேற்கொண்டு எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லாமல்தான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் அவர்.

வன்கொடுமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தலித் இயக்கங்களும் தீண்டாமைப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிற பிற இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி, இத்தகைய வன்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய சூழல் உருவான பின்னும் நிலைமை இப்படித்தான் உள்ளது. ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யால் கவனப்படுத்தப்படாதவரை உத்தபுரத்தில் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருந்தது யாருக்குத் தெரியும். இன்னும்கூட இந்த கிராமங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்தபாடில்லை.

தமிழகத்தில் இச்சட்டங்களின் (1955 மற்றும் 1988ம் ஆண்டுச் சட்டங்கள்) அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதாக மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளது (New Indian Express, July 3, 2012) குறிப்பிடத் தக்கது. முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்யாமை, சரியான நேரத்தில் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமை, நியமிக்கப்படும் சிறப்பு வழக்குரைஞர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசீலனை செய்யாமை முதலானவற்றை இதன் காரணங்களாகச் சுட்டிக்காட்டி, இவை நீக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இச்சட்டத்துன் கீழ் வேண்டுமென்றே உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வழி இருந்தும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல் துறை அதிகாரியும் கூட இதற்காகத் தமிழகத்தில் தண்டிக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்காகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  நடத்துகிற தேர்வுகளில் இச்சட்டம் குறித்த அறிவைக் கோரும் தேர்வு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2008–2010 ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் தேசிய அளவில் 31 சதமாக இருக்க, தமிழகத்தில் அது வெறும் 17.4 சதமாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகமும் உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது (The Hinde, Dec, 15, 2013).

நிலைமை இப்படியிருக்க இங்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ஆதிக்க சாதிக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்பட்டுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியுடன் ஒரு முறையும், பா.ஜ.கவுடன் ஒருமுறையும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இருமுறையும் இந்த இரு கட்சிகளும் சில மாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையில் இயங்கிய ஆட்சிகளைக் கவிழ்த்தன. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை முதல்வர் மாயாவதி கறாராகப் பயன்படுத்தியமைக்கு எதிராகவே இந்த இரு ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது. சாதி, மத, இன அடிப்படைகளில் இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய நாடுகளில் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் அக் கொடுமைகளால் பாதிக்கப்படுவோரை ஆற்ற்றல்படுத்த வேண்டிய அவசியங்களும் எழுகின்றன. ஏதோ இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு சட்டம் செயல்படுவது போல இங்குள்ள ஆதிக்க சாதிகள் சொல்வது அப்பட்டமான பொய்.

ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் இத்தகைய “புறக்கணிப்புகளுக்கு எதிரான சட்டங்கள்” (Anti – Discrimination Acts) செயல்படுகின்றன. ‘ஒதுக்கல்களுக்கு எதிரான சட்டம், 1991’ (ஆஸ்திரேலியா), Law Agains Racism, 2010 ((பொலிவியா), Race Relations Amendment Act, 2000 ((பிரிட்டன்) முதலியன சில எடுத்துக்காட்டுகள். நிலைமை இப்படி இருக்க தமிழக ஆதிக்க சாதி அமைப்புகள் இச்சட்டம் குறித்த தவறானதும், பொய்யானதுமான பல செய்திகளைப் பரப்பி எப்படியாவது இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளனர்.

நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை “ஒழிக்கப்பட்டு” விட்டது. தீண்டாமை ஒரு குற்றம். எனினும் நமது வழமையான குற்றவியல் சட்டங்களில், நடைமுறையில் உள்ள பல தீண்டாமைச் செயல்கள் குற்றப்பட்டியலின் கீழ் வரா. அப்படியே வந்தாலும் அதற்குரிய கடுமையுடன் அவை முன்வைக்கப் படாமல் மிகச் சாதாரணக் குற்றங்களாகவும், குறைந்த தண்டனைக்குரியவையாகவுமே  அவை அணுகப்பட்டிருக்கும். 1948ம் ஆண்டின் உல்களாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பின் உருவான நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஓரளவு நன்றாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான குற்றவியல் மற்றும் சிவில் உரிமைச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வடிவிலேயே தொடர்கின்றன. அரசியல் சட்டத்திற்குத் தக அவை ஒத்திசையச் (tune) செய்யப்படவில்லை.
எனவே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு உண்மையிலேயே அமுலாக்கப்பட வேண்டுமானால் அதற்குத் தக குற்றவியல் சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் இரு மாற்றங்கள் இதற்குத் தேவையாகின்றன.

அவை.:
1.   குற்றவியல் சட்டங்களில் காணப்படாத புதிய குற்றங்களை வரையறுப்பது. (சமூக விலக்கு செய்தல், சொத்துக்களை அனுபவிக்க இயலாது தடுத்தால், எதிர் வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
2.   இந்தக் குற்றங்களுக்கு தண்டனைகளையும், சில குற்றங்களுக்கான குறைந்தபட்சத் தண்டனைகளாகக் குற்றவியல் சட்டங்கள் விதித்துள்ளதையும் அதிகரிப்பது. (குற்றம் செய்தவர் அரசு ஊழியராயின் அதுபோன்ற குற்றங்களுக்குச் சாதாரணமாக வழங்கபடும் குறைந்த பட்சத் தண்டனையைக் கூட்டுவது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீனை மறுப்பது, அவரது சொத்துக்களை முடக்குவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தகையோரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வது முதலியன சில எடுத்துக்காட்டுகள்).

இந்த அடிப்படையில்தான் 1955ல் ‘சிவில் உரிமைச் சட்டமும்’, பின் அதன் போதாமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து, 1989ல் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்’, 1995ல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலேயுள்ள இவ்விரு கூறுகளையும் தவிர மேலும் மூன்று முக்கிய வரவேற்கத் தக்க கூறுகளைக் கொண்டதாக அமைந்தது.
அவை:
1.   குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாரரும் எந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அவசிய நிபந்தனைகள் ஆக்கப்பட்டன. ஒரு சனநாயக அரசியல் அமைப்பில் இது சாத்தியமில்லை. குற்றவியற் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க இயலும். குற்றம் இழைத்தவர் தலித் அல்லாதவராக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர் தலித்தாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை உருவாக்க இயலாது. ஆனால் இன்று இச்சட்டத்தில் அப்படியான ஒரு நிபந்தனை உருவாக்கப் பட்டது ஒரு மிக முக்கியமான மாற்றம். சாதிக்கொரு தண்டனை என்கிற மனு நீதி கோலோச்சிய நாட்டில் அந்நிலை முதன்முதலாக இப்படித் தலை கீழாக்கப்பட்டது என்பது ஒரு புரட்சி எனலாம்.
2.   பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைத்தல் ஆகியவை இச்சட்டத்தில் விரிவாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், சாட்சிகள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், பயணப்படி முதலியவற்றை அளித்தல், பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல் முதலியன இதில் அடங்கும்.
3.   இவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த உரிய கருவிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வழி வகுக்கிறது.. இந்த வழக்குகளை விரைவாக நடத்தித் தண்டனைகளை வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், வழக்கை நடத்தச் சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்தல்,. வன்கொடுமை நடக்கக் கூடிய பகுதிகளை அடையளம் கண்டு கண்காணிக்கவும், ஆய்வு நடத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் உரிய ‘செல்’களை அமைத்தல் முதலியன இதில் அடங்கும்.

இப்படியான வழிமுறைகளெல்லாம் இருந்தபின்னும் ஏன் உரிய பலன்களை இந்தச் சட்டத்தின் மூலம் தலித் மற்றும் பழங்குடியினர் பெரிய பயன் ஏதும் பெற இயலவில்லை? தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் குறையவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ஆய்வு நூல்.  இச்சட்டத்தின் பயன்பாடு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. கடலூர், விழுப்புரம், ஈரோடு கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் 2012வரை நடை பெற்ற தலித் மக்களின் மீதான வன்கொடுமைகளை இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகள், நேரடியான கள ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ் வன்கொடுமைகள் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் கையாளப்பட்டன என்பதை விரிவான ஆதாரங்களுடன் தொகுத்து ஆய்வு செய்கின்றனர் இதன் ஆசிரியர்களான முருகப்பனும் ஜெசியும். வன்கொடுமை மேற்கொள்ளப்படுவது தொடங்கி புகார் பதிவு செய்யப்படுவது, வழக்கு விசாரிக்கப்படுவது, சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுவது, நீதிமன்றம் இவ்வழக்குகளைக் கையாள்வது என ஒவ்வொரு நிலையையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மட்டத்திலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது, வன்கொடுமைகளை மேற்கொண்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர் என்பவற்றைத் துல்லியமாக நிறுவுகின்றனர்.

மதுரையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம் 2007ம் ஆண்டு இதே போல ஒரு ஆய்வு நுலை வெளியிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு முடிவுகளை எம்.ஏ.பிரிட்டோ தொகுத்திருந்தார். 1996 லிருந்து 2001 வரை நடைபெற்ற கொடுமைகள் அந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த நூலின் முடிவுகளைத் தற்போது நண்பர்கள் முருக்கப்பனும் ஜெசியும் கண்டடைந்துள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில் எத்தகைய முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது விளங்குகிறது. காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றிற்கு, மொத்தத்தில் அரசிற்கு இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்புறுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அளவில் நீதிமன்றங்கள் எவ்வாறு இச்சட்டத்திற்குத் தவறான விளக்கங்களை அளித்து குர்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ராஜேஷ் சுக்லா ஆய்வு செய்துள்ளார் (Economic and Political Weekly, Oct 21, 2006). அதைச்சுருக்கித் தமிழாக்கி 2008ல் ‘சஞ்சாரம்’ எனும் இதழில் வெளியிட்டேன். எனது ‘நெருக்கடி நிலை உலகம்’ நூலிலும் (எதிர் வெளியீடு, 2008) அது உள்ளது.

இவ்வாறு குற்றம் செய்கிற ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள இச் சட்ட வாசகங்கள் சிலவற்றையும், ஒட்டுமொத்தமாகச் சில பிரிவுகளையும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக அக்கறையுள்ளோர் மத்தியில் தற்போது தேசிய அளவில் கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. இது குறித்தும் சென்ற ஆண்டு ‘மக்கள் களம்’ என்னும் தலித் மாத இதழில் விரிவாக எழுதியுள்ளேன். எனது இணையத் தளத்திலும் அது உள்ளது.

முருகப்பனும் ஜெசியும் தொகுத்துள்ள இந்நூலின் முதற் பகுதி மிக விரிவாக  தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகளின் வரலாற்றையும், அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சரளமான நிரடலற்ற மொழியில் சொல்லியுள்ளது மொத்தத்தில் தமிழக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இது அமைந்துள்ளது.. இவ்வகையில் நூலாசிரியர்களையும் இவ் ஆய்வை மேற்கொண்ட ‘இளைஞர்களுக்கான சமூக விழிபுணர்வு மையம், தமிழ்நாடு’ (SASY) மற்றும் ‘நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புது டெல்லி’ (NDMJ) ஆகிய அமைப்புகளையும்கும் இவ் வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கறையுள்ள நாம் எல்லோரும் பாராட்டக்க் கடமைப்பட்டுள்ளோம்.

இறுதியாக ஒன்று. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச்சட்டத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் ஓரிரு பொய் வழக்குகளைப் பெரிதுபடுத்தி இச்சட்டத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையே கொச்சைப்படுத்துடுகின்றன ஆதிக்க சாதி அமைப்புக்கள். இதன் மூலம் இச்சட்டம் உண்மையில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வன்கொடுமை செய்யும் சாதியினர் காப்பாற்றப்படுவதற்கே வழி வகுக்கப்படுகிறது என்கிற உண்மை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறைக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், தமது ஆதரவாளர்கள் மூலமாகவும் செயல்படுத்துகிற சமூக வலைத்தளங்கள் இதில் முன்னிற்கின்றன. இந்நிலை கவலைக்குரியது. இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாறு பொய் வழக்குத் தொடுப்போரை வெளிப்படையாகக் கண்டித்து அவ்வழக்குகளைத் திரும்பப்பெற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கரையுள்ளோர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறின்றி நாம் மௌனம் சாதிப்போமேயானால் அது ஆதிக்க சாதியினரின் பொய்ப் பிரச்சாரத்திற்கே வலு சேர்க்கும்.
                                                                               

அ.மார்க்ஸ்,
14-03-2014,
குடந்தை

Wednesday, August 5, 2015

நூல் வெளியீட்டு உரைகள் - நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்


இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்   அமைப்பு 2007 முதல் 2012 வரை கள ஆய்வு செய்திருந்த 531 வன்கொடுமைச் சம்பவ வழக்குகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற ஆய்வினை மேற்கொண்டு, தொகுக்கப்பட்ட ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ நூல் வெளியீடு 23.03.3014 அன்று சென்னையில் நடத்தப்பட்டது

நீதியரசர் ஆர்.இராமமூர்த்தி அவர்கள் தமது தலைமையுரையில் கூறியதில் சில முக்கியக் கருத்துகள்...
‘’இந்தக் கூட்டதினை ஏற்பாடு செய்து, நடத்திக்கொண்டிருக்கின்ற அனைத்து அமைப்பினருக்கும், பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் வணக்கம். சட்டத்தினை உருவாக்குகின்ற வேலையினை அரசு செய்தாலும், அந்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்தவேண்டியது அதிகாரிகள் கடமையாகும். இப்படி அதிகாரிகள் தமது கடமையினைச் சரிவரச் செய்யவில்லை என்பதை இந்த ஆய்வு நூல் மூலமாக நாம் தெளிவாக அறியமுடிகின்றது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 20 வருடங்களுக்கு முன்பு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இதை நடைமுறைபடுத்த போராட்டங்கள் நடத்திடவேண்டியுள்ளது என்பது வருத்ததிற்குரிய ஒன்றாகும். இந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட சட்டத்தினை நடமுறைபடுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. இதற்கு கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் கட்டளைகளும் காரணமாக இருக்கலாம். எனவே கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு இந்த சட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படவேண்டும். இதனை முழுமையான சட்டமாக்க அனைவரின், அனைத்து கட்சியின் கூட்டு முயற்சிகள் தேவை’’ என்று கூறினார்.

சிறப்பு அழைப்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் தமது சிறப்புரையில் கூறிய முக்கிய சில கருத்துக்கள்...
‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய ஆய்வு நூலாக இருந்தாலும், ஜாதி ஒழிப்பிற்கும் முக்கிய ஆவணமாக இந்நூல் உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தலித் அல்லது பழங்குடியினருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனை என்று அல்லாமல், சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டிய கடமை உள்ளதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் உணர்ந்து, இதனை எல்லா மட்டத்திலும் கொண்டு செல்லவேண்டும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45% தலித் பழங்குடியினர் வருகின்றனர். இந்த 45% மக்களை ஒதுக்கிவைத்த முன்னேற்றங்களை முழுமையான முன்னேற்றங்கள் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் நில உச்சவரம்பு கொண்டுவரப்பட்டபோது அதிலிருந்த குறைபாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ப்பு நாய், மாடு போன்றவற்றின் பெயர்களில் நில உரிமைகளை எழுதி வைத்து சட்டத்தின்பிடியில் இருந்து பண்ணையார்கள் தப்பிக்க முயன்றனர். அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மிகவும் அடிப்படையான ஒன்று தீண்டாமை ஒழிப்பு என்பதாகும். ஜாதிபேதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சட்டப்படி குற்றம் என்று உள்ளது. 1952 இல் இச்சட்டம் இயற்றப்பட்டது. இத்தணையாண்டுகளுக்குப் பின்பு தலித் அல்லாத ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி கூட்டணி வைத்து செயல்படுவது மிகவும் கண்டிப்பிற்கு உரியதாகும். ஆட்சியாளர்கள் யாரும் இதை தடுக்க முன்வரவில்லை. இப்போதுள்ள நிலைமை மிகவும் சோதனையானக் காலம். சாதி மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசன் தமிழகத்தில் வாழமுடியவில்லை. ஜாதி ஒழிப்பிற்காக பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. ஆனாலும் இளவரசன் மரணம் தமிழத்தின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். இளவரசனும், திவ்யாவும் இணைந்த வாழமுடியாத புறச்சூழல் தமிழகத்தில் நிலவுகின்றது. சமூக நீதி இங்கு மறுக்கப்படுகின்றது. எல்லோரும் அவரவர்களின் மனசாட்சிபடி நடந்துகொள்ளவேண்டும். பிறப்பால் வேற்றுமை நடத்தப்படுமானால் இந்நாடு பின்னோக்கிச் செல்லும்.

ஆய்வு நூலினை வெளியிட்டுப் பேசிய தமிழக மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான திருமிகு.வே.வசந்திதேவி அவர்கள் தமது உரையில் கூறியது...
                ‘‘மிகச் சரியான நேரத்தில் வெளியாகியுள்ள மிகப் பொருத்தமான நூல் இது. இதனை வெளியிட்டுள்ள  ஷிகிஷிசீ-ழிஞிவியி அமைப்புகளையும், தொகுத்தவர்களையும், சம்பவங்களைக் கள ஆய்வு செய்து, பாதிபுற்றோருடன் ஒன்றாக நின்றுவருகிற களப்பணியாற்றுகின்றவர்களுக்கும்  முக்கியமாக நான் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களை நாம் அனைவரும் மனதார பாராட்ட வேண்டும். தலித், பழங்குடியினர், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், தலித் கிறித்துவர்கள், மிகக் குறைந்த அளவில் உள்ள குறவர் சமூகம் ஆகிய அனைவரின் மீதான வன்கொடுமைகள் குறித்து மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ள மிகச் சிறந்த் கையேடாக இது திகழ்கின்றது. இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கூறுபவர்களுக்கு பதில் சொல்கின்ற வகையில் அமைந்துள்ள இந்நூல் அவர்களின் கூற்றினை ஒழிக்கும். இச்சட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டிய காவல்துறை சட்டத்தினை மீறுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. நேரடியாக காவல்துறையே வன்கொடுமைகளில் ஈடுபட்ட கதைகள் நம்மிடம் ஏராளம் உண்டு. நான் ஆணையத்தின் தலைவியாக இருந்தபோது இதனை கண்டுள்ளேன்இதனை ஜாதி இந்து ஏவல் துறை என நூலின் தொகுப்பாளர்கள் ஓரிடத்தில் விளக்கமாக பதிவு செய்துள்ளனர்பழங்குடியினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆதிக்க வெறிபிடித்த அவர்களின் வேட்டைப்பொருளாக படைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர். ஜாதி வெறிபிடித்த ஆதிக்கச் சாதியினரின் ஜாதிய மனோபாவத்தைவிட, காவல் துறையின் ஜாதி ஆதிக்க மனோபாவம் மிகவும் கொடூரமானது. இதை சகித்துக்கொள்ளவே முடியாது. இந்த நிலையில் நமக்கான நீதி எப்படி கிடைக்கப்போகின்றது என்பதுபற்றி எத்தனையோ முறை சிந்தித்துப் பேசியாயிற்று. இதற்கு ஒரே தீர்வு போராட்டாம்தான் என எல்லோரும் சொல்லியும் உள்ளனர். ஊடகங்கள் வெளியிட்டு ஒரு சமூக அழுத்தங்களை ஏற்படுகின்ற நிலையில் அரசு வன்கொடுமைகள் குறித்து ஒரு விசாரணை கமிசனை அமைக்கின்றது. இந்தக் கமிஷன் இறுதியாக தனது முடிவினை அரசு செய்தது சரிதான் எனக்கூறி, அரசு செய்த அத்தனை வன்கொடுமைகளையும் மூடிமறைக்கின்ற வேலையைத்தான் செய்கின்றது. சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக எவ்வகையான திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என அரசியல் கட்சிகளிடம் நாம் கேட்கின்ற காலமாக இது உள்ளது. 1921 முதல் 2013 வரை நிகழ்ந்த வன்கொடுமைச் சம்பவங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளதுடன், 513 வழக்குகளில் காவல்துறை மற்றும் நீதித்துறை செய்யத் தவறிய கடமைகளை கடும் முயற்சிகளுடன் தொகுத்துள்ளனர்’’ என்று கூறினார்

நூலினை அறிமுகம் செய்து பேசிய எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான .கீதா அவர்கள் பேசும்போது கூறியது...
‘‘நூலின் முக்கிய அம்சங்களையும், நன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது குறித்தும் பலரும் சிறப்புற கூறிய கருத்துகளில் நானும் உடன்படுகிறேன். மீண்டும் அதனையே கூறத் தேவையில்லை. இதனை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் இதன் கடுமையான உழைப்பு எந்த அளவிற்கு என்பது. குறிப்பாக  ஷிகிஷிசீ, பிஸிதி  அமைப்புகள் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளும், வன்கொடுமைகள் தொடர்பான பொது விசாரணைகளையும் நடத்துகின்றனர். அவை அனைத்திலும் நான் ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகின்றேன். இத்தனையாண்டுகால உழைப்பும், முயற்சியும் இந்த் நூலில் உணரமுடியும். நல்ல மொழி நடையுடனும், சரியாக தலைப்புகள் பிரிக்கப்பட்டும், அவைகளுக்குரிய அடிப்படையான ஆதாரங்களுடனும் மிக மிக சிறப்பாக தொகுத்து எழுத்தப்பட்டுள்ள இந்நூலில் கூடுதலாக இருக்கவேண்டிய இன்னும் சில அம்சங்கள், அது குறித்த ஒரு கண்ணோட்டம், பார்வை வேண்டும் என்பதற்காகவும், அடுத்தப் பதிப்புகளில் வாய்ப்பிருந்தால் இணைக்கலாம் என்பதற்காகவும் என்னுடைய கருத்துக்களாக சிலவற்றை கூறுகின்றேன். 1921 முதல் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து தொகுப்பு மிக சிறப்பான ஒன்று. மிகுந்த ஆய்வுப் உட்படுத்தப்படவேண்டியதுமாகும். குறிப்பாக தொடக்கத்தில் ஆதிக்கச் சாதியினர் நிகழ்த்திய சாதிய வன்கொடுமைகளை கண்டுங்காணாமல், அக்கறையற்றும், அமைதியாக இருந்து காவல் மற்றும் வருவாய்த்துறை. ஆனால் 1980&க்குப் பிறகான சம்பவங்களைக் கண்ணுற்றால் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினரே நேரடியாக வன்கொடுமையினை  நிகழ்த்துகின்றனர். பெருமளவில் ஈடுபடுகின்றனர். இதற்கான சமூகப், பொருளாதார, அரசியல் பின்னணி குறித்தும் தொகுபாளர்கள் கருத்துகளை பதிவு செய்யவேண்டும். அல்லது அந்த கண்ணோட்டத்தில் வன்கொடுமை மீளாய்வு செய்யவேண்டும். மேலும், வாச்சாத்தி போன்ற சில சாதகமான தீர்ப்புகள், சம்பவங்களையும் இணைக்கலாம். இவைகள் படிப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையினை உருவாக்கும். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக தலித் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும்’’ என்று கூறினார்.

ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்கள் கூறியது..
‘‘ரமேஷ்நாதன் அவர்களையும், ஸ்ரீவல்ல பிரசாத் அவர்களையும் நன்றாகப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து விடா முயற்சியுடன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த ஆய்வு நூல் மிக முக்கியமான ஒன்று. வழக்கமாக எல்லோரும் ஆய்வுகளை நூலாக அச்சிடும்போது பெரிய தாளில், படிக்கமுடியாதபடி, பார்த்தாலே அப்புறம் படிக்கலாம் என நினைக்கின்றபடி அச்சடிப்பார்கள். ஆனால் அப்படியில்லாமல் மிகச் சிறப்பான முறையில், படிப்பதற்கு ஆர்வத்தினை தூண்டுகின்ற வகையில் அழகாக அச்சிட்டதற்கும் நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். இன்று அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதனை முழு சட்டமாக்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இந்த சட்டம் கட்டாயம் தேவை. மிகவும் அவசியம் என்பதை நாம் வலியுறுத்திக்கூறவேண்டும். அவ்வாறு நாம் கீழ்மட்ட அளவில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுக்கும்போது முக்கியமான முழக்கங்களை கூறவேண்டும். அந்த முழக்கமாக, போராட்ட ஆயுதமாக கொடிபிடிப்பது போன்று இந்த நூலினை நாம் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.’’ என்று கூறினார்

ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.சுகுமாரன் அவர்கள் கூறியது..
‘‘சட்டம் நடைமுறைபடுத்துவதில்லை என்று  பலரும் பொதுவாகக் கூறுவார்கள். எப்படி சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக, விரிவாக இந்நூல் விளக்கிக் கூறுகின்றது. சட்டத்தினை நடைமுறைபடுத்த போராடுகின்ற பல்வேறு அமைப்புகளை உள்ள தமிழகத்தின் நிலையே இப்படியென்றால் புதுச்சேரியின் நிலையினை சொல்லவே வேண்டாம். புதுச்சேரிக்கு இச்சட்டம் செல்லாது என விவரமில்லாமல் காவல் அதிகாரி கூறுவதிலிருந்துதான் இந்நூலே தொடங்குகின்றது. காவல் துறை சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த நிலையில், நீதிமன்றமும் வன்கொடுமைச் தடுப்புச் சட்ட வழக்குகளில் எப்படி அக்கறையில்லாமல் செயல்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். குறிப்பாக இங்கு மேடையில் உள்ள மூத்த வழக்கறிஞர் .பா.மோகன் போன்றோருக்கு நன்கு தெரியும். மதுரை&மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தில் கோயில் நிலத்தில் குத்தகை பங்கு கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்களை ராமர் என்கிற சாதி இந்து தலைமையிலான குழுவினர் வெட்டி படுகொலை செய்கின்றனர். இவ்வழக்கில் போதிய நடவடிக்கை இல்லாத நிலையில், இதே ஆதிக்க ஜாதி வெறி கும்பல் மேலவளவு தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர். இறுதியில் இந்தக் கொலை வழக்கிலும் ராமர் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. வழக்கறிஞர் ரத்தினம் போன்றோர் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ராமர் உள்ளிட்டோருக்கு தண்டனைப் பெற்றுத் தந்தனர். மேலும், இதே வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வழக்கறிஞர் .பா.மோகனை மாவட்ட ஆட்சியரின் கடிதம் இல்லை என்பதற்காக சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இச்சட்டத்தினை நடமுறைப்படுத்துவதில் நீதிமன்றம் & நீதித்துறை மூலமாக இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் உள்ளன. இவைகளையும் கவனத்திகொண்டு அவசரச் சட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும். குறைபாடுகளைக் கண்டறிய இந்த நூல் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’’

தேசிய ஆதிவாசிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் முனைவர் கா.கிருஷ்ணன் அவர்கள் ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக கூறியது..
‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் என்கிற இந்த நூல் இப்போதைய தமிழகத்தின் சமூக சூழலில் மிகமிக அவசியமான ஒன்று. தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அத்தனை அம்சங்களும் நடைமுறைபடுத்தப்பட்ட விதம் குறித்தும் எந்தவொரு தகவலும் விடுபட்டுப் போகாமல் அனைத்தையும் கவனத்தில் வைத்து சிறப்புற  தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு நூல் தலித் முரசு குழுவினரால் நன்றாக வடிவமைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மிக முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது. பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் மட்டுமல்லாமல், அவர்களின் சமூகப் பின்ணணியும் சுருக்கமாக அளிக்கப்பட்டிருந்தாலும் சரியான வகையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பழங்குடியினரின் முக்கிய பிரச்சனையான கொத்தடிமை குறித்த தகவல்களும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழே அவை கொண்டுவரப்படுவதில்லை என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது’’ என்றார்.
.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுவது குறித்து தொகுக்கப்பட்டுள்ள ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ ஆய்வு நூலின் முக்கிய அம்சங்களும்அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளும்

தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் சட்டமும் அதன் விதிகளும் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் நிகழ்ந்த 531 வன்கொடுமைச் சம்பவங்களில் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதே முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டதுகுறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டமும் அதன் விதிகளும் இந்த 531 வழக்குகளில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், பாதிப்புற்றோர் அளிக்கின்ற புகார்களில் முறையாக வழக்குப் பதியப்படுவதில்லை; குற்றமிழைத்தோருக்கு சட்டத்தை மீறி முன்பிணைகள் அளிக்கப்படுகின்றது; விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகைகளில் வேண்டுமென்றே நீண்ட காலம் தாமதம் செய்து வழக்கினை நீர்த்துப்போகச் செய்வது; நீதிமன்றத்திலும் உரிய காலத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், சுமார் 96% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவது; பாதிப்புற்றோருக்கு உரிய நிவாரணம், தீருதவி, மறுவாழ்வுப் பணிகள் போன்றவை குறித்த எவ்வித திட்டமிடலும் இல்லாதது; சட்டத்தின் நடைமுறைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசி விவாதிக்காமல், டி.எஸ்.பி தள்ளுபடி செய்கின்ற வழக்குகளுக்கு ஒப்புதல் மட்டுமே அளிக்கின்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு; வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் நடத்தப்படவேண்டிய நிலையில், கடந்த 10 வருடத்தில் 2 முறை மட்டுமே (அதுவும் துணை முதல்வர், நிதியமைச்சர் தலைமையில்) நடந்துள்ள முதல்வர் தலைமையிலான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்; வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித்&பழங்குடி மக்களுக்கு நீதியினை வழங்காத சிறப்பு நீதிமன்றங்கள், பெரும்பாலும் குற்றமிழைத்தோருக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு வழக்கறிஞர்கள்; மொத்தம் 22 குற்றப் பிரிவுகளைக் கொண்டுள்ள இச்சட்டத்தில் 16 குற்றப்பிரிவுகள் இதுவரை பயன்படுத்தப்படாத நிலை; வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிப்புற்றோருக்கு ஆதரவான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத மனித உரிமை ஆணையங்கள்; பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்துகள் இறந்துபோனது, சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, தாமிரபரணியில் போலீசார் தாக்குதலில் 17 பேர் இறந்துபோனது மற்றும் கொடியங்குளம் போன்ற வன்கொடுமைச் சம்பங்களில் அரசு அமைக்கின்ற விசாரணைக் கமிஷன்கள் அரசுக்கு ஆதரவாக இறுதி அறிக்கை அளிக்கின்ற போக்கு ஆகியவை குறித்து ஆய்வு நூலில் விரிவாக பல்வேறு ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலில் இறுதியாக, இதுபோன்று சட்டங்கள் முழுமையாக நடைமுறைபடுத்தப்படாத நிலையில் அரசுக்கு சில பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அவைகளில் சில புதிய சட்டத்திருத்த மசோதா உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டாமாக்கப்பட வேண்டும்; அரசு அதிகாரிகளுக்கு சமத்துவக் கண்ணோட்டத்தினை வளர்த்துக்கொள்கிற வகையிலான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்; டெங்கு, போலியோ, எய்ட்ஸ் போன்றவைகளுக்காக செய்யப்படுவது போன்று சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி போன்றவைகளுக்கும் பெருமளவில் பரவலான வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போது தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது என உள்ளது இதனை சாதி ஒழிக்கப்பட்டுள்ளது என திருத்தம் செய்யவேண்டும்; தலித் மற்றும் பழங்குடியின கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை விரிவுபடுத்தவேண்டும்; சாதி மீறிய திருமணம் செய்வோருக்கு உரிய சட்டப்பாதுகாப்புகள், சமூக உதவிகள் அளிக்கப்பட வேண்டும்; கௌரவக் கொலைகள் என்கிற பெயரிலான படுகொலைகள் தடுக்கப்படவேண்டும்; குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டும்; தலித்துகளுக்கு எதிரான அனைத்து சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு மீது நடவடிக்கை வேண்டும்; பழங்குடியினரைப் பாதுகாக்க புதிய அணுகுமுறை வேண்டும்; தலித் மற்றும் பழங்குடியினர் மீதான காவல் நிலைய சித்திரவதை, பொய் வழக்குகள், காவல் நிலைய மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும், நீதி விசாரணை வேண்டும்; பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பாகுபாடுகள் இல்லாத நிலை உருவாக வேண்டும்; புதுச்சேரியிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் சமூக நீதி மற்றும்  சமத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலு முன் வைக்கப்பட்டுள்ளது.