Friday, February 10, 2012

மனித மலத்தை மனிதனையே தின்னவைத்தக் கொடுமை!


மனித மலத்தை மனிதனையே தின்னவைத்தக் கொடுமை!

மாவட்ட காவல் மற்றும் நிர்வாகத் துறைகளின் அலட்சியம்!




விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை, எம்.ஜி.ஆர் நகரில் கல்உடைக்கும் தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இக்குடும்பத்தினர் அனைவரும் அப்பகுதிகளில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர்களில் கல் உடைப்பது, லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். வெள்ளையன்(40), பூபதியம்மாள்(36) தம்பதியினர் சிறுவயதிலிருந்தே அவர்களது பெற்றோர்கள் காலத்திலிருந்தே இப்பகுதிகளில் குவாரிகளில் வேலை செய்துவருகின்றனர்.

கடந்த 31-01-12 அன்று காலை திருவக்கரையைச் சேர்ந்த துரை புளு மெட்டல் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பழனியாண்டி (எ) துரை மேற்படி வெள்ளையனின் மாமியார் சின்னப்பொன்னு வீட்டிற்குச் சென்று அங்கிருந்த வெள்ளையனை அடித்து வெளியில் இழுத்து வந்து தொடர்ந்து அடித்துள்ளார். மேலும், தொலைபேசி மூலம் கார் வரவழைத்து 3 டி.வி, ஒரு டி.வி.டி பிளேயர், ஒரு டி.வி.எஸ். ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளார். மேலும், வெள்ளையனையும் ஒரு வண்டியில் இழுத்துக்கொண்டு அவரது கல்குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்தும் வெள்ளையனை ‘‘சம்மட்டிய ஏண்டா திருடின’’ என்று கூறி கடுமையாக அடித்துள்ளார். அதற்கு வெள்ளையன் ‘‘நான் திருடல. தாம்பரத்துகாரர்தான், தன்னோட சம்மட்டிதான் குவாரில கூலி கொடுக்கல. உடம்பு சரியில்ல அவசரமா ஊருக்கு போகனும் விக்கனும்னு சொன்னான். அதானல எங்க பகுதில இருந்தவங்க வாங்கினாங்க’’ என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த தாம்பரத்துக்காரர் என்பவரையும் வரவழைத்து இருவரையும் கடுமையாக தடியால் அடித்துள்ளார் துரை. இதில் வெள்ளையன் மயக்கமானார். இவரின் மனைவி, மாமியார், மைத்துனர் உள்ளிட்டோர் எவ்வளவோ தடுத்தும் துரை தொடர்ந்து அடித்ததுடன், குவாரியில் இருந்த இரு சிறுவர்களை அழைத்து மலம் கழிக்கச் சொல்லியுள்ளார். அவர்களிருவரும் உட்கார்ந்து மலம் வரவில்லை என சென்றுள்ளனர்.

அதன்பிறகு மேற்படி துரையே அருகில் பள்ளத்தில் இறங்கி மலங்கழித்துவிட்டு, அருகிலுள்ள குட்டையில் கழுவிக்கொண்டு வந்து, ஆட்களை அழைத்து சட்டி கொண்டுவரச்சொல்லியுள்ளார். சட்டி வந்ததும் தாம்பரத்துக்காரர் என்பவரிடம் கொடுத்து மலத்தை சட்டியில் அள்ளிவரச் செய்துள்ளார். மறுத்து தயங்கியவரை கடுமையாக துரை அடித்துள்ளார். அடிதாங்க முடியாமல் அவர் சட்டியில் மலத்தை அள்ளி வந்துள்ளார். அதன்பிறகு மயக்கத்தில் கிடந்த வெள்ளையனையும் தடியால் அடித்து எழுப்பி ‘‘இருவரும் இந்தப் பீயைத் தின்னுங்கடா. எவ்வளவு திமிறு இருந்தா திருடிவீங்க’’ என்று கூறியுள்ளார். அங்கிருந்த பூபதியம்மாள், அவரது தாய்மாமன் மாரிமுத்து உள்ளிட்டோர் ‘‘அவன் திருடிலங்க ஓனர். ஏன் இப்படி பன்றீங்க. அந்த சமிட்டியும்தான் நீங்க எடுத்துகிட்டு வந்துட்டீங்களே. வேணும்னா போலீசுல கூட கொண்டுபோய் விடுங்க’’ கூறியுள்ளார். ஆனாலும் துரை எதையும் காதில் வாங்காமல் இருவரையும் அடித்து மலத்தை திண்ணும்படி சித்திரவதை செய்துள்ளார். அடிக்குப் பயந்து இருவரும் மலத்தை அள்ளி தின்றுள்ளனர். அப்போது துரை ஒரு கையில் செல்போனில் அவர்கள் மலம் திண்ணும் காட்சியினை படம் எடுத்தபடி, ஒரு கையில் தடியை வைத்துக்கொண்டு அடித்துக்கொண்டே இருந்துள்ளார். குவாரியில் இருந்த அனைவரையும் கட்டாயப்படுத்தி வரவழைத்து இச்சம்பவத்தை காணும்படி செய்துள்ளார்.

அதன்பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். கோயிலில்படுத்திருந்த வெள்ளையனை அன்று மாலையிலிருந்தே காணவில்லை. வெளியில் சொன்னாலோ, புகார் கொடுத்தாலோ மீண்டும் மலம் திண்ண செய்துவிடுவாரோ என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளனர் வெள்ளையன் குடும்பத்தினர். 3 நாட்களாகியும் வெள்ளையன் காணாத நிலையில், 03.02.12 அன்று அப்பகுதியின் சி.பி.ஐ.(எம்) கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் ரவிச்சந்திரனிடம் மேற்படி மாரிமுத்து நடந்ததைக் கூறியுள்ளார். அவர்மூலம் புகார் எழுதிக்கொண்டு மறுநாள் 04.02.12 அன்று காலை பூபதியம்மாள் வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் துரையை வரவழைத்துள்ளனர். அவர் போலீசாரிடம் ‘‘தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்’’ என்று கூறியுள்ளார். அவரது செல்போனை வாங்கிப்பார்த்த போலீசார் இரு செல்போனையும் அவர்களே வைத்துக்கொண்டு துரையை அனுப்பியுள்ளனர். அதன்பிறகு பூபதியம்மாள் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் அளித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
மனம் வெறுத்து கொடுமை நடந்த இடத்தைவிட்டு எங்கே செல்கிறோம் எனத் தெரியாமல் மனம்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த வெள்ளையன் 8&ஆம் தேதி மாலை விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்தபோது உறவினர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு போலீசர் அவசர அவசரமாக குற்றமிழைத்த பழனியாண்டியை கைது செய்யாமல், நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்கள் என்ற நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.

அதே நேரத்தில் காணாமல் போயுள்ள தாம்பரத்துக்காரர் என்கிற வீரப்பனை இதுவரை போலீசார் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, மனித மலத்தை மனிதனையே திண்ணச்செய்த இந்த மாபெரும் கொடுமையினைச் செய்த துரை என்கிற பழனியாண்டியை காவல் நிலையம் வரவழைத்து உடனடியாக விடுவித்த வானூர் காவல் நிலைய காவலதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் சட்டத்தின் மீதிருக்கின்ற நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்கின்ற செயலாகும். பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவும், குற்றமிழைத்தவருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட இக்காவல் நிலைய காவலதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரனைக்கு உத்திரவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேற்படி துரை இதே போன்று குவாரியில் தொடர்ந்து பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை தொழிலாளர்களிடம் பேசியதிலிருந்து அறியமுடிந்தது. தொழிலாளர்களுக்குள் ஏற்படும் குடும்பச் சண்டைகளில் கூட மேற்படி துரை தலையிட்டு கட்டப்பஞ்சாயது செய்து, அபராதம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளார். எதிர்ப்பவர்களை கரன்ட் வைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் குவாரிகளில் பணிபுரியும் பெண்களிடம் முறைகேடாகவும் நடந்துள்ளார். இதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் பரவலாக கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்ற இதுபோன்ற கல்குவாரிகள், செங்கற்சூளைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஏழை, எளிய மக்களின் கொடுமைகள் சொல்லமுடியாத நிலையில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற கொத்தடிமைத் தொழிலில் உள்ளவர்கள் மீது நிகழ்கின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் எளிதில் சமூகத்தின் கவனத்தைப் பெறுவதில்லை. அதிகாரிகளும் உரிய நடவடிக்களை மேற்கொள்வதில்லை. எனவே, தமிழக அரசு இதுபோன்று கொத்தடிமைத் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவோரின் வாழ்நிலை, பணியிடம் போன்றவைகளை ஆய்வு செய்து, தொழிளார்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, பணிக்கேற்ற ஊதியம், பணி நேரம், குடியிருப்பு போன்றவைகளை அரசு முறைபடுத்தி சீரமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும்.