Friday, June 19, 2020

பிறந்த நாள் வாழ்த்தும் பதிவும்

வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்  முக நூல் பதிவு 

(15.06.2020 பிறந்த நாள் முன்னிட்டு)

2003 ஆம் ஆண்டு, மதுரை நாகமலை-புதுக்கோட்டையில் உள்ள "PILLAR" ஹவுசில் “தலித் மனித உரிமை மற்றும் கண்காணிப்பு" என்ற திட்டத்திற்காக, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமான வழிகளைக் கையாளுதல் எனும் நோக்கத்தில் "மக்கள் கண்காணிப்பகம்-தமிழ்நாடு" அமைப்பு ஐந்து நாள் பயிற்சி ஒன்றை நடத்தியது. அப்போது சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நானும் அதில் கலந்து கொண்டேன். சுமார் 50 பேர் கலந்து கொண்ட அந்த பயிற்சியில், என்னைப் போலவே மற்றொரு பயிற்சி பெறுநராகக் கலந்து கொண்டார் அண்ணன் முருகப்பன்.

அந்த பயிற்சியில், ஐந்து பேர் கொண்ட பத்து குழுக்களை பிரித்திருந்தார்கள். அதில் நானும் அவரும் ஒரே குழுவில் இடம் பெறவில்லை. அதனால் நாங்கள் இருவரும் நெருங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு எளிதாக அமையவில்லை. அவருக்கு ஊர் திண்டிவனம். எனக்கு திருநெல்வேலி. எளிதில் பற்றிக்கொள்ளும் பொது ஒற்றுமை என்று எதுவுமில்லை. ஆனாலும் அப்போது எப்படி அறிமுகமாகிக் கொண்டோம் என்று சரியாக நினைவில் இல்லை.

அந்த பயிற்சிக்குப் பின்னர், 2004ஆம் ஆண்டு, மக்கள் கண்காணிப்பகத்தில் நான் மனித உரிமை மீறல்கள் தொடர்பான, கள ஆய்வு செய்யும் பணியில் சேர்ந்தேன். 2003ஆம் ஆண்டிலேயே அவர் அங்கு பணிக்கு சேர்ந்திருந்தார். அதன் காரணமாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நேரில் மட்டுமில்லாமல், செல்போன் வாயிலாகவும் தொடர்ந்து இணைப்பில் இருந்து வந்தோம்.

2004 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் சுனாமி தாக்கியபோது, சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கும் அதிகமாக நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்தோம். அப்போது இரண்டு நாள் முருகப்பன் அண்ணன் வீட்டில் போய் தங்கி இருந்தேன். அவரது மூலமாகத்தான் எனக்கு பேராசிரியர் “கல்யாணி” யின் அறிமுகம் கிடைத்தது.

2005ஆம் ஆண்டில் நாங்கள் இருவரும், பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் இருந்து விலகி, வேறு வேறு பணி தளங்களுக்குச் சென்றோம். அதன்பிறகு முன்பு போல அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாமல் போனது. இருந்த போதிலும், அதன்பிறகும் இன்று வரையிலும் எங்களது நட்பு தொடர்ந்து வருகிறது.

நான் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளைப் படித்து, அதற்குத் தேவையான கூடுதல் செய்திகளைத் தருவார். அவர் புதிதாக வாங்கும் புத்தகங்களில் பெரும்பாலும் எனக்கும் சேர்த்து கூடுதலாக ஒரு புத்தகம் வாங்கி அதனை அனுப்புவார். மதுரைக்கும் அல்லது மதுரையைச் சுற்றியும் உள்ள ஊர்களுக்கு வரும்போது என்னைச் சந்திக்காமல் செல்ல மாட்டார்.

சிறிது காலம் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றிய போது, மனித உரிமைகள் மீறல் சார்ந்த செய்திகளுக்கும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான செய்திகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் இவர் 5 முறை சிறை சென்றுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் நடக்கும் பொழுது, எவ்விதமான பிரதிபலனும் எதிர்பாராமல், தனது நண்பர்களுடன் உண்மை அறியும் குழு அமைத்து அந்தப் பகுதிக்குச் சென்று களஆய்வு செய்து, பொது அறிக்கை ஒன்றை தயாரித்து அரசுக்கான பரிந்துரைகளையும் வெளியிடுபவர். அவ்வாறு, 2018 பிப்ரவரி மாதத்தில், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சந்தையூர் கிராமத்தில், தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது தொடர்பாக மேற்கொண்ட, கள ஆய்வில், உடன் வந்த நண்பர்கள் குழுவுடன் என்னையும் இணைத்துக் கொண்டவர்.

பழங்குடி இருளர் மக்களுடன், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இருளர் மக்களின் வாழ்வினை புத்தகமாகவும் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்தை ஆய்வு செய்து, 2014ம் ஆண்டில் “நொறுக்கப்படும் மக்களும், மறுக்கப்படும் நீதியும்" என்ற சிறப்பான புத்தகம் ஒன்றை ஜெசி என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். பின்னர் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இருளர்களின் இதயம் வி.ஆர். ஜெகந்நாதன் என்ற நூலையும் எழுதியுள்ளார். பரந்த வாசிப்பாளரான இவர், மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை, தலித் முரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறார்.

பட்டியலின மக்களில் பலரும் அவ்வாறு பெயர் வைப்பதைத் தவிர்த்து வரும் நிலையில், காதலித்து திருமணம் செய்த தனது துணைவியார் தமிழரசி அவர்களின் ஒப்புதலோடு, அவர்களது மூத்த மகனுக்கு "அம்பேத்கர்" என்று பெயர் வைத்தவர்.

பிறப்பால் பட்டியல் இனத்தைச் சாராத முருகப்பன் அண்ணன், ஜாதி/மத மறுப்பாளர். அதன்படி தனது குழந்தைகளையும் வளர்த்து வருபவர். இதுதான் எங்களது பொது இணைப்பு போல.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்பு குழுவை, சட்டப்படி மாநில அரசு ஆண்டுக்கு இருமுறை கூட்ட வேண்டும் என்று 2012ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடர்வதற்கு காரணமாக இருந்தவர். அந்த வழக்கு காரணமாக, நீண்ட காலமாக கூட்டப்படாமல் இருந்த அந்த கூட்டமானது இரண்டு மாதங்களுக்குள் கூட்டப்பட்டது.

திண்டிவனம் "ரோசனை"பகுதியில் இயங்கிவரும் தாய்த்தமிழ் பள்ளி தொடர்ந்து இயங்குவதில் பெரும் பங்கு வகித்து வருபவர். தற்போது கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என தொடர்ந்து பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தது மட்டுமல்லாமல், மனுதாரராக இருந்து, தேர்வு கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்.

சுனாமி, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தனது நண்பர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர்.

செல்போன் வந்த பிறகு தொலைபேசி எண், முகவரி போன்றவைகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. ஆனால் எனக்கு மனப்பாடமாக நினைவில் இருக்கும் செல்போன் எண்கள் மொத்தம் 15 மட்டுமே. அதுபோல 10க்கும் குறைவான முகவரிகளே நியாபகத்தில் உள்ளது. அதில் முருகப்பன் அண்ணனின் தொடர்பு எண்ணும், முகவரியும் உள்ளது.

பழங்குடியினர், பட்டியலின மக்கள், கல்வி, மனித உரிமைகள் போன்ற பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்துவருபவரும்,
என் வளர்ச்சியில் பங்கெடுப்பதுடன்,
அதில் பெரிதும் மகிழ்பவர்களில் ஒருவருமான
முருகப்பன் அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...




No comments: