Wednesday, March 9, 2022

கோகுல்ராஜ் ஆணவக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம் மாவட்டம், ஓமலூர்

சாதி மீறி காதலித்த

தலித் மாணவன் கோகுல்ராஜ்

சாதி ஆணவப் படுகொலை

உண்மை அறியும் குழு அறிக்கை
                                                சூலை,01, 2015

சேலம் மாவட்டம், ஓமலூரில் வசிக்கும்  தலித் சமூகத்தைச் சேர்ந்த வெங்கடசாலம் மகன் கோகுல்ராஜ் (22) என்பவர், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த தனது காதலியான சுவாதியுடன் கடந்த 23.06.2015 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள,  திருச்சேங்கோடு மலைக் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தீரன் சின்னமலை பேரவை என்கிற அமைப்பைச் சேர்ந்த நிறுவனர் யுவராஜ் தனது அடியாட்களுடன் சேர்ந்து, அங்கிருந்த கோகுல்ராஜை கடத்தி சென்றுள்ளார். அடுத்த நாள் 24.06.2015 அன்று திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழமால் தடுப்பதற்கான ஆலோசணைகளும் அவற்றை பரிந்துறைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் (SASY) சார்பில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது.

திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்ட இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் (SASY) மாவட்ட மனித உரிமை காப்பாளர்கள்  1.க.பழனிசாமி (ஈரோடு மாவட்டம்),   2. இரா.பாபு (கடலூர் மாவட்டம்)  ஆகியோர் நேற்று ஜூன் (30.06.2015) சேலம் மாவட்டத்தில் நேரு அரங்கில் நீதி விசாரணை கேட்டு மூன்று நாட்களாக தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவரது அண்ணன் கலைச்செல்வன் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து விரிவாக பேசினர்.

 பின்னனி

தமிழகத்தின் வடமேற்கில் உள்ள சேலம் மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் உள்ளது ஓமலூர். இப்பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த வெங்கடசாலம் குடும்பத்தினர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா (45) குடும்பத்தை பராமரித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் 1.கலைச்செல்வன் (24) ME படித்துள்ளார்.  2.கோகுல்ராஜ் (22) BE.ECE முடித்துள்ளார். இவர்தான் தற்போது ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ள கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு KSR பொறியல் கல்லூரியில் இறுதியாண்டு BE-ECE படித்து முடித்துள்ளார்.

இதே நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், வசந்தபுரம் பகுதியைச் வசிக்கும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் சுவாதியும் அதே கல்லூரியில் இறுதியாண்டு தற்போது படித்து முடித்துள்ளார். 

கோகுல்ராஜ் - சுவாதி இருவரும் நெருக்கமாக பழகிவருவதை கல்லூரியில்  சக மாணவர்கள் பெரும்பாலோனர் அறிந்துள்ளனர்.  குறிப்பாக சுவாதியின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள குமராபாளையம் கிராமத்திலுள்ள கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும், கோகுல்ராஜூம்  நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். சுவாதி தனது சமூகத்தைச் சேர்ந்தவர், தனது ஊருக்கு பக்கத்து ஊர், நண்பனின் காதலி என்ற அளவில் கார்த்திக் பேசியுள்ளார். 

சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களிடம்  விசாரித்தில்  

குழுவினர் அறிந்தது.

ஜீன் மாதம் 23-ம் தேதி காலையில் கல்லூரியில் கொஞ்சம் வேலை இருப்பதாகவும், கல்லூரிக்குச் சென்று மாலை திரும்பிவிடுவதாகவும் தாயாரிடம் கூறிவிட்டு கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ் மாலை வீடு திரும்பாத நிலையில், அவரது தாயார், இன்னொரு மகன் கலைச்செல்வனிடம் கூறியுள்ளார். அவரும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு இருட்டிய பிறகும் தம்பி வீடு திரும்பவில்லையே என கோகுராஜீன் நண்பர்களான ராஜவேல் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.   அவர்களும் காலையில் கல்லூரியில் பார்த்தாகவும் பிறகு தாங்கள் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அதன் பிறகு கார்த்திக்கை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். முதலில் தயங்கிய கார்த்திக் பிறகு சுவாதியைப் பற்றி கூறிவிட்டு, அவரிடம் கேட்டுவிட்டு பேசுவதாகக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கார்த்திக் தொடர்புகொண்டு, கோகுல்ராஜ் -சுவாதி இருவரும் திருச்சேங்கோடு மலையிலுள்ள அர்த்தநாதிஸ்வரர் கோவிலுக்கு சென்றதாகவும், அங்கு ஏதோ பிரச்சணை ஏற்பட்டதாகவும் சுவாதி சொல்வதாக கூறியுள்ளார். இதனை சுவாதியின் அம்மாவுடைய கைபேசி எண் மூலம் சுவாதியிடம் பேசியதாகக் கூறி, அந்த எண்ணை கலைச்செல்வத்திடம் கொடுத்துள்ளார்.

மறுநாள் 24.06.2015 அன்று காலை சுமார் 08.30 மணியளவில் கலைச்செல்வன் அந்த  செல்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது சுவாதி எடுத்து பேசியுள்ளார். அவரை விசாரித்தபோது இருவரும் திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு சென்றதாகவும், கோவிலில் திடீரென நான்கு பேர் தங்கள் அருகே வந்து,  தாங்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், உங்களை விசாரிக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும்,  பிறகு யுவராஜ் கூப்பிடுகிறார் வா என்று கோகுல்ராஜை மட்டும் அழைத்துச் சென்றதாகவும்,  பின்னால் ஓடிச்சென்று பார்த்த போது ஒரு காரில் கோகுல்ராஜ் ஏற்றப்பட்டதாகவும், அந்தக் காரில் ‘‘தீரன் சின்னமலை பேரவை’’ என்று எழுதியிருந்தாகவும், காரில் சிவப்பு பச்சை வண்ணத்தில் கொடி இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் மேற்படி நபர்கள் தங்கள் இருவரது செல்பேசியையும் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள் என்றும் சுவாதி கலைச்செல்வனிடம் செல்பேசியில் கூறியுள்ளார்.

இவ்வாறு பேசிமுடித்த சுவாதியை பார்க்க வேண்டும் எனவும் திருச்செங்கோடு வரும்படியும் அழைத்துள்ளார் கலைசெல்வன். சுவாதியைப் பார்க்கச் செல்வதற்கு முன்பு கோகுல்ராஜ் கடத்தப்பட்டது குறித்து சுமார் காலை 9.00 மணியளவில் ஓமலூர் காவல் நிலையத்தில் கலைச்செல்வன் ஒரு புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் இச்சம்பம் ஓமலூர் எல்லையில் நடைபெறவில்லை என்று கூறி புகாரைப் பெற மறுத்து,  திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு போகச் சொல்வியுள்ளனர்.

சிறிது நேரத்தில் கார்த்திக் கலைச்செல்வனை தொடர்புகொண்டு தானும், சுவாதியும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். உடனே தனது தாயார் மற்றும் உறவினர்கள் சிலரை இரு காரில் அனுப்பிவிட்டு, புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் அருண்மொழியுடன் இரு சக்கர வாகனத்தில் திருச்செங்கோடு பேருந்து நிலையம் சென்ற கலைச்செல்வன்  சுவாதியிடம் கோவிலில் நடந்தது குறித்து நேரிலும் கேட்டு அறிந்துள்ளார். சுவாதியும் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பிறகு அனைவரும் கும்பலாக திருச்செங்கோடு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர். அப்போது சுமார் 11.00 மணி இருக்கும்.

புகாரைப் பெற்ற ஆய்வாளர் கார்த்திக் மற்றும் சுவாதி இருவரையும் தனித்தனியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்துள்ளார். அதன்பிறகு ஆய்வாளர் மேற்படி தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் என்பவரை கைபேசியில் தொடர்பு கொண்டு,  போலீஸ் என்று கூறிக்கொண்டு விசாரணை செய்ய நீங்கள் யார்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. அந்தப்பெண் என் முன்புதான் உட்கார்ந்திருக்கின்றார். அவர் எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்று கூறியதுடன், கோகுல்ராஜ் எங்கே, அவரை அழைத்துக்கொண்டு, இரண்டு பேரின் மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு உடனடியாக இங்கு காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளார். அதன்பிறகு ஆய்வாளர் ‘‘யுவாராஜ் வருவார். அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள் நான் சாப்பிட்டு வந்துவிடுகின்றேன்’’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.               

இவர்கள் காவல் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். சுமார் 3,30 மணியளவில் கோகுல்ராஜின் தாயாருடைய தொலைபேசிக்கு ரயில்வே போலீஸார் பேசியுள்ளனர். கோகுல்ராஜீன் கல்லூரி அடையாள அட்டையிலிருந்து இந்த எண்ணைப் பார்த்துப் பேசுவதாக கூறியுள்ளனர். அப்போது செல்பேசியை கோகுல்ராஜின் மாமா வாங்கி பேசியுள்ளார். அவரிடம் ரயில்வே போலீசார் கோகுல்ராஜ் தலை தனியாக துண்டிக்கப்பட்டு உடல் ரயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாகவும் கூறியுள்ளனர். உடனே அனைவரும் அங்கு சென்று பார்த்த போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பிணமாக கிடந்துள்ளார்.

அதன்பிறகு அவ்விடத்திற்கு வந்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்காக முதலில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும், பிறகு அவர்களது சொந்த மாவட்டமான சேலம் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை  மருத்துவமனைக்கும் கொண்டு செல்கின்றனர்.

இதற்கிடையே, சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும், யுவராஜ் உள்ளிட்டோரை கைது செய்யவேண்டும், குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கோகுல்ராஜ் தாயார், உறவினர்கள், ஆதரவாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டம் தொடங்கினர். போலீசார் இவர்களைக் கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவிக்கின்றனர். ஆனால் இவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியேற மறுத்து அதே மண்டபத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

இச்சூழலில் இம்மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யவேண்டும் மற்றும் நிபுணவத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதன செய்யவேண்டும், அவற்றை வீடியோ பதிவு செய்திட வேண்டும் எனக்கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் சந்தியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தீபன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவினை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம், மூன்று பேர் அடங்கிய மருத்துவர் குழு பிரேதப் பரிசோதனை செய்து, அறிக்கையினை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்திரவிட்டது. அதன்படி மூவர் அடங்கிய மருத்துவக் குழு 27.06.2025 அன்று மாலை 3.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அறிக்கையை 29.06.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில் போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்தனர். மண்டபத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கோகுல்ராஜ் தாயாரிடம் சித்திரா அவர்களிடம் அரசு அதிகாரிகள் நிவாரணத் தொகையாக            ரூ. 5,62,500 ரூபாய் வழங்கியுள்ளனர்.

 மாவீரன் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் குறித்து

திரட்டிய  தகவல்களும், சேகரித்த ஆவண குறிப்புகளும்....

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மஞ்சகல்பட்டி அஞ்சல், கல்பாறைக்காடு கிராமத்திலுள்ள கொங்குவேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புரமணி என்பவரின் இரு மகன்களில் ஒருவராகும் மேற்படி யுவராஜ். மற்றொரு மகன் பெயர் தங்கதுரை என்பதாகும். யுவராஜ் தற்போது அவரது மாமனார் வீடான மாவுளிபாளை அஞ்சல், ஆவாரம்பாளையம், மேட்டுக்காடு கிராமத்தில் இவர் மனைவி சுவிதா மற்றும் இரு குழந்தைகளோடு வசித்துவருகிறார். இவர் பல்வேறு அரசியல் இயக்கங்களில் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அந்த அரசியல் இயக்கங்கலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது சட்ட மன்ற உறுப்பினராக உள்ள திரு.தனியரசு அவர்களின் கொங்கு மக்கள் தேசியக் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு கடந்த ஒராண்டுக்கு முன்பு இவர் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன் நிறுவனராக செயல்பட்டு வருகிறார்.

இப்பேரவையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் https://www.facebook.com/profile.php?id=100006636436382&sk=friends

(மாவீரன் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை) மற்றும் https://www.facebook.com/uvaraj.subramani.96?fref=ts

என்கிற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

 

குறிப்பாக

 • சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது.
 • 2015 ஜனவரி மாதம் அவரது பேரவையில் உள்ள ஜெகதீஸ் என்பரின் குடும்ப பாகப்பிரிவினை குறித்து பஞ்சாயத்து செய்தது.
 • பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மோர்பாளையத்தில் நிலப்பிரச்சணை தொடர்பாக பஞ்சாயத்து செய்தது அதே மாதம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்திலுள்ள பொன்குறிச்சி கிராமத்தில் இரு தரப்பினருக்குமான நிலப்பிரச்சனை குறித்து பஞ்சாயத்து செய்தது. 
 • பிறகு சேலம் மாநகர் பகுதியில் ஒரு நிலப்பிரச்சணை குறித்து பஞ்சாயத்து செய்ததும் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதுபோன்று இரு தனிநபர்களுக்குள் எழுகின்ற பல்வேறு பிரச்சனைகளில் இவர் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பல்வேறு தோப்பு, பண்ணை போன்ற இடங்களில் வைத்து பேசி, பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் முகநூல் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார். இவர் பேசி தீர்ப்பது என்பது கட்டப்பஞ்சாயத்து என்பதும், அதன் மூலம் இரு தரப்பிலும் பணத்தை மிரட்டு பெறுவது என்பதும் நாம் அறிந்ததுதான்தன்.

இந்நிலையில் மேற்கண்ட முகநூல் பதிவுகள் அனைத்தும் தற்போது அவரது முகநூல் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் மீதான மேலும் சில குற்ற வழக்குகள் :

 • மேலும் ஆயிள்பட்டி பகுதியில் குடியிருக்கும் வழக்கறிஞர் ஒருவரை அவ்விடத்திலிருந்து காலி செய்யும்படி பஞ்சாயத்து செய்து மிரட்டிய போது ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து யுவராஜை விரட்டியதில், தனது Fortunate காரை அங்கேயே விட்டுவிட்டு ஒடியுள்ளார். இது தொடர்பாக ஆயிள்பட்டி காவல் நிலைய போலீசார் அந்தக் காரினை கைப்பற்றி  கு.எண்:180/2012 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று இறுதியில் நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆகியுள்ளது.
 • தமிழகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பரபரப்பாக பேசப்பட்ட சுருதி ஈமு கோழி மோசடி தொடர்பாக யுவராஜ் மீது ஈரோடு பொருளாதார குற்ற பிரிவில் கு.எண் 17/2012 வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது இவ்வழக்கு கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 • காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹேமலாதா - பாலாஜி தம்பதியினரை கடத்திக் வைத்துகொண்டு, ஹேமலாதா வீட்டில் ரூபாய் மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பான யுவராஜ் மீது பெருந்துறை காவல் நிலையத்தில் கு.எண்:303/2013 நாள் 28.04.2013 u/s 342,364(A) IPC வழக்கு நிலுவையில் உள்ளது.
 • கடந்த 17.09.2013 அன்று ஈமு பார்மஸ் நிறுவனத்தில் பங்குதாராக இருந்த தமிழ்நேசன் என்பவரை கடத்தி சென்று ரூபாய் இரண்டு கோடி கேட்டு அவரது மனைவி நித்யாவை மிரட்டியது தொடர்பாக யுவராஜ் மீது பெருந்துறை காவல் நிலையத்தில் கு.எண்: 645/2013 U/S 364 (A) IPC வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,

 • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள கவுண்டர் சமூக இளைஞர் ஒருவர், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரையும் பிரித்து வைப்பதாக இளைஞர் வீட்டில் ரூ. ஒரு லட்சம் பணம் வாங்கிய யுவராஜ், தொடர்ந்து அவர்களை பணம் தரும்படி மிரட்டியும், பல்வேறு தொல்லைகளைத் தந்துள்ளார். இதனால் அப்பெற்றோர்கள் யுவாராஜ் இடம், ‘‘நீங்கள் எதுவும் செய்யவேண்டாம், எங்க பையன் எங்கேயாவது நிம்மதியா, உயிரோட இருந்தால் போதும்’’ என்று கூறி, யுவாரஜிடம் இருந்து தப்பித்துள்ளனர்.

இதுபோன்ற காதல் தொடர்பாக மட்டுமல்லாமல், பல்வேறு வகையில் யுவாராஜ் இடம் சென்று பல்வேறு இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி பிறகு எதுவும் வேண்டாம், அமைதியாக இருந்தால் போதும் என தப்பித்த பல்வேறு நபர்கள் உள்ளனர்.

கோகுல்ராஜீன் நண்பர் கார்த்திக் அவர்களிடம் குழுவினர் கைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியபோது அவர் கூறியதவது.

கோகுல்ராஜ் காணவில்லை என்ற செய்தியை என் நண்பர்கள் என்னிடம் விசாரித்தார்கள். அதன் பின் கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன் என்னிடம் விசாரித்தபோது நான் சுவாதியிடம் பேசிவிட்டு தகவல் தருகிறேன் என்று கூறினேன். சுவாதியிடம் பேச அவரது அம்மா எண்ணில் அழைத்தேன். உடனே இணைப்பு கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தேன். அதற்குள் சுவாதி அவரது அம்மா எண்ணில் இருந்து என்னை தொடர்புக்கொண்டு அர்த்தநாதிஸ்வரர் கோவிலில் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறினார். பிறகு நான் கோகுல்ராஜீன் அண்ணண் கலைச்செல்வனை தொடர்புக்கொண்டு நடந்த சம்பவத்தை கூறி திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு வரும் படி அழைத்தேன். அங்கு நானும், சுவாதியும் காத்திருந்தோம். கோகுல்ராஜ் அண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வந்ததும் அனைவரும் சென்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

கோகுல்ராஜ் மரணம் குறித்து என்னை திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் நான்கு நாள் விசாரணை செய்தார். ‘‘உன்னால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சணை என்றும், என்னை மேலும் மேலும் அசிங்கப்படுத்தினால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன்’’ என்று சுவாதி எனக்கு மெசேஜ் அனுப்பினார். இதையும் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் கூறி காண்பித்தேன் என்று குழுவிடம் விவரித்தார்.

காவல் துறையால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் :

 • கோகுல்ராஜ் தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் 24.06.2015 அன்று கு.எண்: 289/2015 U/S 363 IPC யில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 • ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் 24.06.2015 அன்று ரயில் நிலைய மேலாளர் கதிரேசன் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கு.எண்: 90/2015 U/S 174 CrPC -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 • திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கை மாறுதல் செய்து குற்ற எண்:  289/2015 U/S 363 IPC @ in To 363 IPC r/w 3(2)(v) SC/ST POA Act. 1989.

எமது குழுவினர் திருச்செங்கோடு DSP விஷ்ணுபிரியா அவர்களை கைபேசியல் தொடர்பு கொண்டு பேசிய போது அவர், ‘‘கேட்கும் தகவல் எல்லாம் கொடுக்க தற்போது நேரமில்லை.. நான் ஐ-கோர்ட்டிலிருந்து இப்போதுதான் வந்தேன் நிறைய வேலை இருக்கு பிறகு அழைக்கிறேன்’’ என்று கூறிவிட்டார்.

குழுவினர் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் நேரடியாக சென்று உதவி ஆய்வாளர் சந்திரலேகா அவர்களை சந்தித்து விரிவாகப் பேசியபோது,  அவர் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. அதற்காக சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். தனிப்பட்ட காயங்களை மட்டும் வைத்து கைது செய்ய முடியாது. இது மிக சீரியஸான விஷயம்.. சரியான ஆவணம் வேண்டும் என்றார்.

மேலும் அவரிடம் குழுவினர், கோவிலில் கோகுல்ராஜ் கடத்தப்படுவது தொடர்பான சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது குறித்து கேட்டபோது, அதற்கு அவர், அதில் நான்கு பேர் கூட்டிக்கிட்டு போறதுதான் உள்ளது.  ஆனா அவங்க செய்தார்கள் என்று கூற முடியாது. தேடிகிறோம். இவ்வழக்கு இன்னும் கொலை வழக்காக மாற்றப்படவில்லை என்றார்.

எமது பார்வைகள் : 

 • கோகுல்ராஜ் கொலை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கோகுல்ராஜின் தலையில்லா உடல் கிடந்த ரயில்வே தண்டவாளத்தின் அருகே இரத்தம் கொட்டிய சுவடுகள் ஏதும் தெரியப்படவில்லை. எங்கோ கொலை செய்து தலையை துண்டித்து பிறகு தனித்தனியாக ரயில்வே தண்டவாளத்தில் போடப்பட்டுள்ளது.
 • சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சாதியின் பெயரில் ஆணவக் கொலைகளும், இது போன்ற சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் காதலர்களை கடத்தி சென்று பணம் கேட்பது அல்லது கொலை செய்வதை ஒரு தொழிலாகவே தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் செய்துவந்துள்ளார் என்பது பலரிடம் நேரில், தொலைபேசியில் பேசியது மற்றும் யுவராஜீன் முகநூல் பதிவுகள் ஆகியைகள் மூலம்  அறிய முடிகிறது.
 • கோகுல்ராஜ் மரணமும் கூட இவர் தலைமையில்தான் நடந்துள்ளது என்பதற்கு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது கார்  ஆகியவை அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. மேலும் சுவாதியின் வாக்குமூலங்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன
 • மேலும் வழக்கு விசாரணையை திசை திருப்புவது, இழுத்தடித்து காலங்கடத்துவது போன்ற நோக்கத்தில் யுவராஜின் கூட்டாளிகள் சமூக வலைதளங்களில் கோகுல்ராஜ் பேசுவது போன்ற வீடியோ பதிவு, தற்கொலை கடிதம் போன்றவைகளை போலியாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.
 • கோகுல்ராஜின் ஆணவக் கொலை குறித்து, இதற்கு பின்னால் உண்மை குற்றவாளிகள் மறைந்திருப்பது நன்கு அறிய முடிகிறது. சிசிடிவி-யில் பதிவாகியுள்ள பதிவின் படி 40 வயது தக்க கண்ணாடி அணிந்துள்ள ஒரு பெண்ணையும் மாணவர் போல் காட்சியளிக்கும் அதில் உள்ள ஒருவரையும் உரிய விசாரணையை மேற்கொண்டால் பின்னனியில் உள்ளவர்கள் எளிதில் பிடிப்படுவார்கள்.
 • கோகுல்ராஜை கைபேசியில் கடந்த ஒரு மாதங்களாக தொடர்பு கொண்டவர்கள், பேசியவர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் கொலையின் பின்னணியில் உள்ளவர்களும், உண்மைக் குற்றவாளிகளும் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள்.

எமது பரிந்துரைகள்

 • வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழகம் முழுவதும் சாதி கலவரம் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து உரிய கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கி சட்டத்தை முறையாக அமுல்படுத்திடவேண்டும். சட்டத்திலும், விதிகளிலும் கண்டுள்ள இதர பிரிவுகளையும் உடனடி நடவடிக்கையாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
 • காதல் மற்றும் காதல் திருமணங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வூட்டும் அதே நேரத்தில் காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகரிக்கக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப்படுதல் அவசியம். சாதி அடிப்படையிலான அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தணையாளர்கள் ஆகியோர் முன்முயற்சி மேற்கொள்ளவேண்டும். மேலும், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் உருவாக்குவதில் இவர்கள் முன் நிற்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் செயற்கரிய செயல் செய்வோருக்கு வீர பரிசுகள் வழங்குவதை போல சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் செயல்படுவோருக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
 • சாதி ஆதிக்கத்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் கோகுல்ராஜ் குடும்பத்திற்கு உடனடியாக தமிழக அரசு ரூ.25,00,000/- நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், அவரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும் கோகுல்ராஜீன் சகோதரர் கலைச்செல்வனுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
 • கோகுல்ராஜ் குடும்பத்திற்கு அங்குள்ள ஆதிக்க சாதி சங்கங்கள் மூலமாகவும், இதுவரை கைது செய்யப்படாமல் உள்ள கொலையில் ஈடுபட்ட யுவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூலம் எவ்வித இடர்பாடுகளும் ஏற்பாடாத வகையில் உரிய பாதுகாப்பினை மாவட்ட காவல் நிர்வாகம் வழங்குவதை தமிழக அரசு உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
 • இக்கொலையின் பின்னனி குறித்தும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
 • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆள் கடத்தல், கொலை மற்றும் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் யுவராஜ் நிறுவனராக உள்ள மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை உடனடியாக தடைசெய்யப்படவேண்டும். 
 • மேற்படி யுவராஜ் அவர்களின் முறைகேடான செயல்பாடுகளால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட பலர் காவல் நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையிலும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு, வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். மேலும், முறைகேடான வகையில் கட்டப் பஞ்சாயத்து மூலம் பெறப்பட்டு யுவராஜ் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். 
 • கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்மைக் குற்றவாளியாக உள்ள யுவராஜ் தலைமறைவு என்ற பெயரில் போலீசார் இதுவரை கைது செய்யாமல் உள்ளனர். ஆனால் யுவராஜின் மேற்கண்ட       முகநூல் பக்கங்களில் தொடர்ந்து வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துகளை பதிவிடுவதுடன்,  சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கின்ற வகையிலும், சாதி ஆதிக்கத்தோடும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனை போலீசார் தொடர்ந்து கண்காணித்து, அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து உடனடியாக கைது செய்யவேண்டும். மேலும், சமூக ஒழுங்கினை சீர்குலைக்கின்ற அவரின் முக நூல் பதிவுகள் சைபர் குற்றப் பிரிவுகள்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

-------