Thursday, August 27, 2015

சாதிக்கு தீக்கிரையான சேசசமுத்திரம்


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை செல்கின்ற சாலையில் சங்கராபுரம் அருகே உள்ளது சேசசமுத்திரம் கிராமம். 100 தலித் குடும்பங்களும், 5000 சாதி இந்துக்களும் வாழ்கின்றனர். இக்கிராமத்தில்தான் தலித் குடியிருப்புகள் மீது இந்தியா விடுதலைப் பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாள் இரவு ஏழு மணியளவில் தொடங்கிய தாக்குதல் நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றுள்ளது. ஆதிக்கச் சாதியினர் திட்டமிட்டு நடத்திய இத்தாக்குதலில் தலித் மக்களின் வழிபாட்டிற்கான அம்மன் கோவில் தேர், ஐந்து வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பாதியாகவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்துள்ளார்கள். தேர் எரியாத நிலையில் லாரி டயர் ஒன்றில் பெட்ரோலை ஊற்றி தேருக்கு அடியில் தீ வைத்து எரித்துள்ளனர்.
ஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் கிராம உதவியாளரும், எட்டு போலீசாரும் காயமடைந்துள்ளனர். அரசு இவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது. வீடுகளை முழுமையாக இழந்த ஐந்து குடும்பத்திற்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும், பாதி எரிந்த இரண்டு குடும்பத்திற்கும் தலா 2500 ரூபாயும், ஏழு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
15 ஆம் தேதி இரவு கிராமத்தை விட்டு வெளியேறிய பலர் இன்னும் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்ட அருணாசலம், அய்யப்பன் இருவரையும் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது ‘’2012 ஆம் ஆண்டு முதல் தேர் ஓட்ட முயற்சி செய்கின்றோம். ஒவ்வொரு தடவையும் ஊர்க்காரர்கள் ஏதேனும் பிரச்சனை செய்வார்கள். போலீஸும் வரும். அதையே சட்டம் ஒழுங்கு எனக் காரணம் காட்டி 144 போட்டு திருவிழா நடக்காமல் தடை செய்வார்கள். போனவருடம் உயர் நீதிமன்றத்தில் வழக்குபோட்டோம். தேர் திருவிழா நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனாலும் தடுத்துவிட்டார்கள். இந்த வருடமும் ஆடி மாதம் திருவிழா ஆரம்பித்தோம். 14ஆம் தேதி தேரோட்டம் என நோட்டீஸ் அச்சிட்டு விநியோகித்தோம். உடனே 12ஆம் தேதி பஞ்சாயத்து தலைவர் சங்கராபுரம் கோர்ட்ல தேர்த் திருவிழாவிற்கு தடைகேட்டு கேஸ் போட்டார். இதுவரைக்கும் 20க்கும் மேல அமைதிகூட்டம் நடந்திருக்கு. இப்பவும் அதிகாரிங்க நடத்தினாங்க. அதுல 16ஆம் தேதி தோரோட்டம் செய்யலாம், ஆடல், பாடல் போன்ற எதுவும் இல்லாம அமைதியா நடத்திகொள்ளவேண்டும் என்றார்கள். நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம். ஊர்காரர்களும் ஒத்துக்கொண்டார்கள். 30 போலீஸார் பாதுகாப்பிற்கு வந்தார்கள். இரண்டு நாட்களே இருந்த நிலையில் நாங்கள் திருவிழா ஏற்பாடு செய்தோம்.
15ஆம் தேதி மதியம் ஊர்த்தெருவைச் சிலர் வண்டி வச்சிகிட்டு பா.ம.க கொடிகட்டிகிட்டு ஒரே சத்தம் போட்டுகிட்டு கள்ளக்குறிச்சி போனாங்க. அங்க அன்புமணி கூட்டம் முடிச்சி சாயங்காலம் ஐந்து மணி அளவில ஊருக்கு வந்தவங்க எல்லாம், தேர் ஓடக்கூடாது அவ்வளவு திமிராயிடுச்சா என்று சத்தம் போட்டு கோஷம் போட்டுகிட்டே போனாங்க. போவதும் வருவதுமாக சுத்தி சுத்தி வந்தாங்க. இருட்டின பிறகு ஏழு மணி அளவுக்கு, அவுங்க ஊர்த் தெருவுல இருந்த 2 டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்தார்கள். அதே வேகத்தில் எங்கள் காலனிக்குள் புகுந்து இரண்டு டிரான்ஸ்பார்மர்களை உடைத்தார்கள். ஊரே இருட்டில் கிடந்தது.
உடனே போலீஸார், கோவிலிருந்த ஜெனரேட்டர் இரண்டையும் ஓட்டச் சொல்லி ஆன் செய்தார்கள். அவர்கள் சுமார் 300 பேர் இருக்கும். பெரும்பாலோனர் கையில் குவார்ட்டர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி எங்கள் மீதும், எங்கள் குடிசைகள் மீதும், போலீசார் மீதும் தாக்கினார்கள். 30 போலீசாரால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஜென்ரேட்டரையும் அடித்து உடைத்தார்கள். மீண்டும் இருட்டானது. கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் எஸ்.பி வந்தார். அவர்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். எஸ்.பிக்கும் லேசான காயம் பட்டது. அதன்பிறகே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். பகலில் ஊருக்குச் சென்று வந்தாலும் இரவில் தங்குவதில்லை. வெளியூரில் உறவினர்கள் வீடுகளில் தங்குகின்றோம்” என்றார்கள்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித்துகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பாக கு.எண் 329/205 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(ii), 436 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(ii)(v) ஆகும். இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்து போலீசார் மீதான தாக்குதல் தொடர்பாக ராஜன்பாபு என்கிற போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 330/2015 என்கிற வழக்குபதிவு செய்து, மேற்கண்ட வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவிர பிற அனைத்துப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை முன் நின்று நடத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத் தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூச்.சின்னதுரை(தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எரிந்த வீடுகளில் இருந்த ரொக்கப் பணம் ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம், கொஞ்சம் நகைகள், மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள், அரசு அளித்த குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாலை நான்கு மணியளவில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு, தான் சார்ந்துள்ள வன்னியர் சமூக மக்களுடன் பா.ம.க வின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு சென்று இரண்டு புகார் அளித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்யும்படி காவல் துறையினரை வற்புறுத்தியுள்ளார். ஒரு புகாரில், லட்சுமி(40) க/பெ ஆறுமுகம் என்பவர் பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் வீடுகளை தாக்கி, 80 லட்சம் ரூபாய் பொருட்களை சேதப்படுத்திய 300 போலீசார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு புகாரில், ஏழுமலை(45) க/பெ மண்ணாங்கட்டி என்ற பெயரில், கரும்புத் தோட்டத்தை சிந்தனைச் செல்வன் தூண்டுதல் பேரில் தீ வைத்து கொளுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்ற போலீசார், வழக்குப்பதியாமல் அவரை திருப்பி அனுப்பிய நிலையில், வெளியில் வந்த வழக்கறிஞர் கே.பாலு மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்போவதாக பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களைக் கூறியும், பிரச்சனைகளை எழுப்பியும் தேரோட்டத்தை தடை செய்து வருவதால், கிராமத்திலுள்ள தலித்துகள் அனைவரும் புத்த மதம் மாறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இப்போதும் இந்த கோரிக்கையின் தேவை அப்படியே உள்ளதாக கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர். இதில் சுப்பிரமணியம் என்பவர், தலித் மக்களிடம் அணுகி அனைவரும் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் தங்கள் வேண்டுகோள்படி தேரினை செய்துதருவதாக வாக்களித்துள்ளார். அதன்படி மக்கள் வாக்களித்துள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டபின்பு தேர் செய்துகொடுத்த சுப்பிரமணியம் தான் ஊரோடு சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக செயல்படுகின்றார் என்பதுடன், தேரோட்டம் நடத்தக்கூடாது என வழக்கும் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஆகஸ்ட், 18)

No comments: