Sunday, August 10, 2014

அறிவு என்பது மொழியில் இல்லை!

தினமணி 06 August 2014 
கனடா நாட்டில் பழங்குடி மாணவ - மாணவிகளிடம் அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகளைத் தெரிந்து கொள்ள ஒரு விண்ணப்பம் கொடுத்தார்கள். இருபத்தைந்து கேள்விகள் கொண்ட விண்ணப்பத்தில் ஒரு கேள்வி.
உங்கள் வீட்டில் எத்தனைப் புத்தகங்கள் இருக்கின்றன? (புத்தகங்கள் என்றால் பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், பாடப் புத்தகங்கள் இல்லை)
1 - 10? 11 - 20? 21 - 50? 100 - 500?
இந்தக் கேள்வி கனடாவிற்கோ, பழங்குடி மக்களுக்கோ மட்டும் இல்லை. உலகத்தில் படிக்கும் எல்லா மாணவ - மாணவிகளுக்கும் பொதுவானது. அதுவும் குறிப்பாகத் தமிழர்களுக்கானது.
சரஸ்வதி கல்வி கடவுளாக இருக்கிறார். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையன்று, வழிபடப்படுகிறார். படிப்பு என்றால் கல்வி. நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண் பெற்று வேலைக்குச் சென்று அதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்று கடவுளிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.
கல்வி - படிப்பு சமூகத்திற்கு அவசியம். எந்த நாட்டு மக்கள் நூறு சதவீதம் படித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் சிறந்த குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். கல்வி மன மாசுகளைப் போக்குகிறது. எனவேதான் ஒüவையார், "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்றார்.
அது பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டும் சொன்னார் என்பதில்லை. நாட்டில் வாழும் பெண்கள், ஆண்கள் எல்லோரையும் பார்த்துதான் சொன்னார். கற்பதற்கு நிறைய இருக்கிறது. காலம் முழுவதும் கற்றாலும், அது முடிக்க முடியாது. அதுதான் கல்வி.
கல்வி என்பது மொழி வழியே கற்கப்படுகிறது. மொழியை எழுதும் எழுத்து என்பது கோடுகளால் ஆனது. மொழியும் அதனை எழுதும் எழுத்தும் மனித அறிவால் கண்டறியப்பட்டது. எனவே அறிவு என்பது மொழியில் இல்லை. ஆனால், மொழி வழியாக அறிவு - மனித ஞானம் சொல்லப்படுகிறது.
எனவேதான், உலகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மனிதர்கள் தங்களின் அறிவு, தேவை, வசதி, சுற்றுப்புறச் சூழல், ஆன்மிக உணர்வு, நம்பிக்கை, நம்பிக்கையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சொற்களை உருவாக்கிக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
அறிவதுதான் அறிவு. அது மனிதர்களுக்கு இல்லாதது இல்லை. அறியப்படாமல் இருந்தது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். அதாவது இருப்பதைக் கொண்டு அறிந்து கொள்வது. அதனைக் கொண்டு காரியங்கள் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்கிறார்கள். எழுதிப் புரிய வைக்கிறார்கள்.
அதனால்தான் விவேகானந்தர், "ஏற்கனவே உள்ள அறிவால் அறிந்து கொண்டு செயற்படுவது' என்றார். அறியப்படவில்லை என்பதால் இல்லையென்றாகி விடாது. அறியப்படாத வரையில் அது இல்லை. அவ்வளவுதான்.
தன் அறிவைக் கொண்டு தன்னையும், சக மனிதர்களையும், சுற்றுப்புற சூழலையும் மனிதன் அறிந்து கொள்கிறான். மனிதனைப் போலவே மற்ற ஜீவராசிகளும் அறிந்து கொள்கின்றன. என்றாலும் அவை மனிதனுக்கு இணையாக முடியாது.
ஏனெனில், மனிதன் தான் அறிந்திருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொல்லவும் எழுதவும் அறிந்திருப்பது போல - தான் அறியாதது எவை என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறான். அதுதான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தான் அறிந்ததையும், அறியாததையும் தானே கண்டுபிடித்த மொழியிலும், எழுத்திலும் எழுதி வைத்திருக்கிறான். அவைதான் மனித அறிவு என்பதன் உச்சம்.
எழுதப்பட்டது என்பதால் எப்பொழுதும் படித்தறிய முடிகிறது. அதுவே படிப்பு என்பதற்கு ஆதாரம். ஆனால் படிப்பு - கல்வி என்பது ஒரு மொழிக்குள் இருப்பதில்லை.
உலகத்திலேயே அதிகமான மக்கள் வாழும் நாடு சீனா. பல ஆயிரம் ஆண்டுகளாக கலை, இலக்கியம், தத்துவம், தொழில், வணிகம், சட்டம், நீதி ஆகியவற்றில் முன்னே இருக்கும் நாடு. அங்கு பலவிதமான மொழிகள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தன.
ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் அதிகார பரவுதலுக்கும், அறிவு வளர்ச்சிக்கு பல மொழிகள் இருப்பது தடையாக இருக்கிறது என்று கருதினார்கள். எனவே, சீன மொழிகளில் ஒன்றான மாண்ட்ரீனை பொது மொழியாக்கினார்கள். சிக்கலான எழுத்து முறையை சீர்படுத்தினார்கள்.
கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மாண்ட்ரீனுக்கு முதலிடம் கொடுத்தார்கள். அதனால், உலகத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழியென அது பெயர் வாங்கிவிட்டது. ஆனால், சீன மொழி ஓர் உள்நாட்டு மொழிதான். அதற்கு சர்வதேச அதிகாரம் இல்லை.
ஸ்பானீஷ் மொழியை உலகத்தில் 40.50 கோடி மக்கள் பேசுகிறார்கள். உலக மக்கள் அதிகமாகப் பேசும் மொழிகளில் இரண்டாவது இடம் அதற்குக் கிடைத்திருக்கிறது. அது ஒரு கலாசார மொழி என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது.
முதல் ஐரோப்பிய நாவலான டான்குவின்செட் 1605-ஆம் ஆண்டில் மீகையில் டி செர்வாண்டீஸ் எழுதியதென சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அது தென்னமெரிக்கா நாடுகளில் எல்லைத் தாண்டி செல்லவில்லை.
ஆங்கிலம் சர்வதேச மொழியாகி விட்டது. இங்கிலாந்து என்ற சிறிய நாட்டின் மொழி, நூற்றுஐம்பது ஆண்டுகளில் மகத்தான சக்தி பெற்ற மொழியாகி விட்டது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், சிங்கப்பூர் உள்பட ஐம்பது நாடுகளின் ஆட்சி மொழியாக அது இருக்கிறது. தொழில், வணிகம், அரசியல், மருத்துவம், விஞ்ஞானம், சட்டம், நீதி, சமூகவியல், தொல்லியல், மொழி, இலக்கியம் - என்று பல துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் மொழியாக மாறி வந்திருக்கிறது.
அதோடு ஆங்கிலம் பிற மொழி சொற்கள் நிறைந்த மொழி. பிரெஞ்சு மொழிபோல் தூய்மை பாராட்டுவதில்லை. உலகத்தில் இருக்கும் பல்வேறு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்திருக்கின்றன. அப்படி ஆங்கிலம் கடன் வாங்கி இருக்கும் சொற்கள் எண்பத்து மூன்று சதவீதம் என்று கணக்கெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன.
நூறு தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் கடன் பெற்றிருக்கிறது என்று கிரிகிரி ஜேம்ஸ் என்ற பேராசிரியர் எழுதியிருக்கிறார். கட்டுமரம், சுருட்டு, பந்தல், காவடி என்று அவர் அவற்றை அடையாளம் கண்டு உள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் ஒரே கூட்டமாக இருந்து ஒரு மொழியைப் பேசிக் கொண்டு பின்னர் புலம் பெயர்ந்து, தனித்தனி கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் முதலில் பேசிய தாய் மொழியில் இருந்த சில சொற்கள் எல்லா மொழிகளிலும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால், எந்த முதல் மொழி என்பதும், எப்பொழுது அது மற்றொரு மொழிச் சொல்லை கடன் வாங்கியது என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரு மொழியில் இருந்தும், ஒரே எழுத்து வடிவத்தில் இருந்தும்தான் ஏழாயிரம் மொழிகள் கண்டறியப்பட்டனவென்றும், இருபது வகையான எழுத்து வகைகள் உருவாக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள்.
மொழி என்பது பேசுவதற்கானது, அவ்வளவுதான். அதிகமான மக்கள் பேசுவதுதான் பெரிய மொழியென்றோ, குறைவான மக்கள் பேசுவது சிறிய மொழியென்றோ கிடையாது. மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கானது. சொல்லவும், கேட்கவும் பயன்படக் கூடியது. ஆனால், அதிகாரம் செலுத்தக்கூடியது. எனவே அதிகாரத்தைப் பற்றிக் கொண்டவர்கள், தங்களின் அதிகாரத்தின் அடையாளமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
மொழி என்பது ஒரு ஆயுதம். மனிதர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆயுதங்களிலேயே மிகவும் கூர்மையான ஆயுதம். அது சுடும். "நாவினால் சுட்டவடு ஆறாது' என்று திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருக்கிறார். மொழி சில நேரத்தில் மனத்தை நெகிழ வைக்கும். உருகாத மனத்தையும் உருக்கும். கண்களில் கண்ணீர் வரவழைக்கும். அதுதான் மொழியின் சக்தி.
மனிதர்கள் தங்களின் மேலான அறிவை, ஆற்றலை அறிவித்துக் கொள்ள, மற்றவர்களை பயமுறுத்த கண்டு பிடித்த மொழியை, எழுத்துக்களைக் கொண்டுதான் பேசியும், எழுதியும் இணைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
புத்தகங்கள் மனித அறிவால் மனிதர்களுக்காகவே எழுதப்பட்டவை. மொழி சார்ந்து இருப்பவை. எழுத்தும் ஒன்று கிடையாது. ஆனால் எல்லோருக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. கல்வி - படிப்பு என்பது அதற்கு அவசியமாகிறது. கல்வியின் நோக்கம் - கற்பது என்பது அறிவதுதான், அதாவது படிப்பது. அது ஒரு மனிதனை அவனுக்கே தெரியவைக்கிறது.
புத்தகம் என்பது காகிதம், மை கிடையாது. அது உயிர்ப்புடன் இருக்கிறது. படிக்கும்போது ஒவ்வொரு எழுத்தும் உயிர் பெறுகிறது. அதனோடு உரையாடுவது உயிர்த்தன்மையை மெய்ப்பிக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜான் கூடன்பர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தது, அறிவு பரப்புவதில் பெரும் பாய்ச்சலாக இருந்தது. எனவே புத்தகங்கள் வாங்குவதும் படிப்பதும், வீடுகள், கல்லூரிகளில், பொது இடங்களில் நூலகங்கள் அமைப்பதும் அறிவுக் கோயில்களாகக் கருதப்பட்டு வந்தன.
மனிதர்கள் செய்கின்ற அறிவு பூர்வமான ஒவ்வொரு காரியமும், தன்னுடைய அன்பை சமூகம் முழுவதற்கும் அர்ப்பணிப்பதாகவே இருந்து வருகிறது. அறிவு, ஞானம் என்பது மறைத்து வைப்பதோ - ஒளித்து வைப்பதோ கிடையாது.
எனவேதான் புத்தகங்கள் வாங்கிப் படித்தார்கள். தாங்கள் படித்தால் மட்டும் போதாது என்று புத்தகங்களைச் சொத்துபோல பாவித்து அடுத்தத் தலைமுறைக்கு விட்டு சென்றார்கள்.
அறுபதாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி வந்த அண்ணாதுரை, மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
வீடு கட்டுகிறீர்கள். நல்லதுதான். சமையல் அறை, பூஜை அறை, படுக்கையறை வைக்கிறீர்கள். பாராட்டுகள். ஆனால் புத்தக அறை வைத்துக் கட்டுகிறீர்களா? என்று கேட்டார். நவீன கட்டட கலைத்திறனில் படிப்பு அறை என்பது இல்லாமல் போய்விட்டது.
படிப்பு என்பது தனிமை நாடுவது. அதற்கோர் இடம் வேண்டும். ஆனால் வீடு என்பதில் தனிமைக்கென இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்த இடத்தை சப்தம் போடும் தொலைக் காட்சி எடுத்துக் கொண்டு விட்டது. இருந்தாலும் புத்தகங்களைப் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். சேமித்து வைக்கிறார்கள்.
எனவே, படிப்பது, புத்தகங்களை வாங்கி வைப்பது என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எல்லா காலத்தை விடவும், கம்பியூட்டர், ஐ-பேடு வந்ததும் இன்னும் கூடியிருக்கிறது. மனிதர்களையும் புத்தகங்களையும் எதனாலும் பிரித்துவிட முடியாது!