வே.அ.இரமேசுநாதன் நேர்காணல்
1.
உங்களைப்
பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம்.
தலித்துகள்,
பழங்குடியினர் மற்றும் பிற ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமை மற்றும் மாண்புகளை
மேம்படுத்துவதற்கான சமூகச் செயல்பாடுகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு
வருகின்றேன். குறிப்பாக சாதிய வன்கொடுமை மற்றும் தீண்டாமைப் பாகுபாடுகளால்
பாதிக்கப்படும் தலித், பழங்குடியின மக்கள் நீதியினைப் பெறுவதற்கான பணிகளில் அதிகம்
கவனம் செலுத்தி வருகின்றேன். சமத்துவம், மாண்பு மற்றும் நீதியை உறுதி செய்யவதற்கான
செயல்பாடுகளைக் கொண்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.
தற்போது,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்- SASY, எனும் தலித் மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குனராக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக புதுடெல்லியில், நீதிக்கான
தேசிய தலித் இயக்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தேன். மேலும், SCs & STs வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை
வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்புக்கான தேசிய அமைப்பாளராகவும் செயல்பட்டுள்ளேன்.
(NCSPA); ஆசிய தலித் உரிமைகள் மன்றம்-ADRF இன் உறுப்பினராகவும் உள்ளேன். தெற்காசிய
தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தைத் தொடங்குவதற்கான பங்களிப்பையும் செலுத்தியுள்ளேன்.
முக்கியமாக SC/ST (வன்கொடுமைகள்
தடுப்பு) சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
பள்ளிக் கல்வியில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் கண்டறிந்து, அவைகளைக்
களைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய தேசிய அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதனடிப்படையில்,
பள்ளிக் கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதற்காக ”பாகுபாடுகள் இல்லாத பள்ளி
வளாகங்கள்” (Zero Discrimination in School Education) என பிரச்சாரத்தை தொடங்கி ஊக்குவித்தேன்.
அரசு சாரா தலித்
நிறுவனங்கள் (Dalit NGOs) மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்
மற்றும் நிறுவன ஆதரவு மற்றும் கூட்டமைப்புகளை மூலம் தலித் அமைப்புகள், தலித்
பெண்கள் அமைப்புகள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் ஒருங்கிணைவதை ஊக்குவித்து
வலுப்படுதியுள்ளேன். குறிப்பாக 1999 இல் திருமிகு மோகனாம்மாள் தலையிலான ‘’தென்னிந்திய
அரவாணிகள் நல வாழ்வு மற்றும் உரிமைக்கான மையம்” தொடங்கி, திருநங்கைகளின் உரிமை சார்ந்த
செயல்பாடுகளைச் செய்தோம்.
நீதிக்கான தேசிய
தலித் இயக்கம் (NDMJ-NCDHR) இன் பொதுச் செயலாளர் என்ற நிலையில், கும்பல்
வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களுக்கு நீதி
வழங்குவதற்காக பல பொதுநல வழக்குகள் மற்றும் மனுக்களை டெல்லி உயர்நீதி மன்றம்
மற்றும் உச்ச நீதி மன்றங்களில் தாக்கல் செய்துள்ளேன்.
M.A., Political Science,
Bachelor of Law (LLB) படித்துள்ளேன்.
மேலும், 2006 ஆம்
ஆண்டு ”International University for
Complementary Medicine, Soviet Russian”
எனது சமூகப் பணிகளைப் பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் (Honored Doctorate)
வழங்கியது.
2.
உங்கள்
குடும்ப பின்னணி குறித்துச் சொல்லுங்கள்..
அப்பா அருமைநாதன்.
அம்மா ஜெபமாலைமேரி. சொந்த ஊர், செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்கின்ற வழியில்
உள்ள ஆலம்பூண்டி கிராமம். அதே ஊரில் இருந்த ஆர்.சி.பள்ளியில் எனது தந்தை ஆசிரியராக
பணியாற்றினர். எனது பெற்றோருக்கு நாங்கள்
4 ஆண்கள் 7 பெண்கள் என மொத்தம் 11 குழந்தைகள்.
19-09-1962
அன்று ஐந்தாவது குழந்தையாகவும், நான்காவது
மகனாவும் நான் பிறந்தேன். +2 விற்குப்
பிறகு பொறியியல் படிக்கவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. பி.இ. சேர பெரிய
அண்ணன் டாக்டர் வி.ஏ.திரேஸ்நாதனுடன் சென்னை சென்றோம் ஆனால், இடம் கிடைக்கவில்லை.
அடுத்து பாலிடெக்னிக் சேர நினைத்தேன். அதிலும் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு
பெற்றோர் விருப்பப்படி சாமியார் படிப்பிற்கு சம்மதம் சொன்னேன். ஆனால் கடவுள் அழைப்பு
கிடைக்கவில்லை என்னை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அதன்பிறகுதான் ஊரில்
நண்பர்களோடு சேர்ந்து பொது வேலைகளிலும், சமூகச் செயல்பாட்டுப் பணிகளிலும் ஈடுபடத்
தொடங்கினேன். பெங்களூரில் உள்ள ஐக்கியா அமைப்பின் திரு குமாராசாமி மற்றும் சக்தி
அமைப்பின் நிறுவனர் ஜெசிந்தா குமாரசாமி ஆகியோரிடம் ஓராண்டுக்கான சமூக ஒருங்கிணைப்பு பயிற்சி
பெற்றேன். அப்பயிற்சியில்தான் சமூக விழிப்புணர்வு, பாலின சமத்துவம், தலித்
கண்ணோட்டம் மற்றும் சமூகத்தைப் பற்றிய முழு புரிதலும் பெற்றேன். கள அனுபவம்
மற்றும் பயிற்சிகளுக்காக கல்வராயன் மலை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆண்டுக்
கணக்கில் தங்கி செயல்பட்டுள்ளேன். அதன்பிறகு
செங்கல்பட்டில் இருந்த RDS – LRSA அமைப்பில் 8 வருடம் வேலை செய்தேன்.
இதன்
தொடர்ச்சியாகத்தான் 1998 முதல் SASY அமைப்பினை இயக்குநராக இருந்து செயல்பட்டுவருகின்றேன்.
மனைவி பெயர் சாந்தி. மகள் அருமை சமர்ப்பணா. மகன் அருமைரட்சகன், பேத்தி சமந்தா ராணி.
3.
தலித்
சமூக மேம்பாடு முன்னேற்றம் பாதுகாப்பு பணியில் தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது
எப்படி? என்ன செய்துள்ளீர்கள், செய்து வருகின்றீர்கள்.
கிராமத்தில் படித்து
வளர்ந்த சூழலில் பாகுபாடுகளை நேரடியாகக் கண்டுள்ளேன். எல்லோர் மீதும் அன்பும்
அக்கறையும் காட்டி, சமத்துவமாக நடத்திய எனது பெற்றோரின் செயல்பாடுகள் என்னையும்
அப்படியே நகர்த்தியது. அதன் தொடர்ச்சிதான் தலித், பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள்
மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான செயல்பாடுகளாக எனது பணிகள் அமைந்தது.
இந்தியாவின் மொத்த மக்கள்
தொகையில் 16.6% உள்ள தலித் மற்றும் 8.6% உள்ள பழங்குடியினரைப் பாதுகாக்கும் SCs &
STs வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2016 இல் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக தேசிய
அளவிலான கூட்டமைப்பு வழிநடத்தினேன். மாநில மற்றும் தேசிய அளவில் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் நீதித்துறையுடன் ஈடுபட்டு
2016 இல் திருத்தங்களைச் சட்டமாக்க வழிவகுத்தோம். அதன் விளைவாக தற்போதுள்ள
திருத்தச் சட்டம் உருவாகியுள்ளது.
”தமிழகத்தில் குறவர்
சமூகத்தினர் மீது நிகழ்த்தப்படும் காவல்துறை அத்துமீறல்கள்” குறித்து ஆய்வு
செய்வதற்காக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் குழு அமைத்தது. அதில் உறுப்பினராக நான்
நியமிக்கப்பட்டேன். இந்த ஆய்வின் சிறப்பு அறிக்கையினை ஆணையம் குடியரசுத் தலைவரிடம்
சமர்ப்பித்துள்ளது.
பாகுபாடுகள் இல்லாத பள்ளிக்
கல்வியை நோக்கிய பிரச்சாரம் என்ற அமைப்பினையும் முன்னெடுத்துள்ளேன். பள்ளிகளில் குழந்தைகள்
பிறப்பு, அடையாளம், சமூக, பொருளாதார நிலைகள் குறித்து, சக மாணவர்களாலும்,
ஆசிரியர்களாலும் பல்வேறு வகையில் பாகுபாடுகளுக்கும், வன்கொடுமைகளுக்கும்
ஆளாகின்றார்கள். குழந்தைகளுக்கு எதிரான இவ்வன்கொடுமைகளை
எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய அளவில் ஒரு பிரச்சார அமைப்பை முன்னெடுத்தோம். இந்தியாவில் பாகுபாடுகள் இல்லாத பள்ளிக் கல்வி
சூழலை உறுதி செய்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆசியா தலித் உரிமைகள்
மன்றம் - ADRF இன் மையக் குழு உறுப்பினராக உள்ளேன். டெல்லியில் இருந்தபோது, இது
தெற்காசியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாடல் மற்றும் கூட்டாட்சியை
ஊக்குவிப்பதன் மூலம் தெற்காசியாவில் நீதி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான
சாதியப் பிரச்சினை மற்றும் விவாதங்களைச் சுற்றியுள்ள உரையாடல்களுக்கு வழிவகுத்தது.
தலித் மனித உரிமைகள்
கண்காணிப்பு மற்றும் சட்டத் தலையீட்டை மேம்படுத்தும் பணிகளில் SASY தொடர்ந்து
செயல்பட்டு வருகின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நேரடியாக தொடங்கிய இந்த தலித்
மனித உரிமைப் செயல்பாடுகளின் மூலமாக இதுவரை, பத்தாயிரத்திற்கும் அதிகமான
வன்கொடுமைச் சம்பவங்களில் நேரடியாக தலையீடு செய்து, நீதி கிடைப்பதற்கான
செயல்பாடுகளின் மூலமாக உதவி வருகின்றோம்.
குழந்தைகள் தலைமையிலான
"காலநிலை நீதிக்கான குழந்தைகள் இயக்கம்" (CMCJ) என்ற தேசிய அமைப்பை
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் தலைமைத்துவமும் ஈடுபாடும்
ஊக்குவிக்கப்பட்டது.
சுனாமி, மழை,
வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரின்போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு
ஆகியவற்றில் தலித்துகளும் பழங்குடியினரும் ஒதுக்குதலுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக தேசிய அளவிலான பொது விசாரணையை
நடத்தி, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
2004 இல் சுனாமியின்
போது கடுமையாக பாதிக்கப்பட்ட தலித், பழங்குடியினருக்காக பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன்
803 நிரந்தரக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மாநில, தேசிய, தெற்காசிய
அளவில் சாதி அடிப்படையிலான வன்கொடுமை மற்றும் பாகுபாடு குறித்து பல்வேறு பொது
விசாரணைகள், மக்கள் ஆணையங்கள், வட்ட மேசை மாநாடு போன்றவைகளை நடத்தியுள்ளோம். இதன்
மூலமாக நடுவர் குழுவின் பரிந்துரைகள், அறிக்கைகள், தலையீடுகள், உரையாடல் மற்றும்
வழக்குகளின் ஆவணப்படுத்தல் ஆகியவற்றை நடந்துள்ளது.
இன்னொன்றையும்
முக்கியமாகச் சொல்லவேண்டும். இதனையாண்டுகால அனுபவங்கள் மற்றும் செயல்பாடுகளின்
மூலமாக அமைப்புகளின் மேம்பாடு செயல்பாட்டில் கவனமும் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். குறிப்பாக
ஆராய்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான பகுப்பாய்வு; சட்ட நிபுணத்துவம்; பெண்கள்
மற்றும் குழந்தைகள் உட்பட விளிம்புநிலை சமூகங்கள் மத்தியில் தலைமைத்துவம்
வளர்த்தெடுத்தல், அவர்கள் தலைமையிலான அமைப்புகளை உருவாக்குதல்; மனித வள மேம்பாடு மற்றும்
அனுபவ கற்றல் பயிற்சி; மனித வளங்கள், நிர்வாகம், தகவல் தொடர்பு, பொது உறவுகள்,
நிதி மேலாண்மை மற்றும் நிறுவனங்களின் சட்ட இணக்கம் உள்ளிட்ட நிறுவன மேலாண்மை
மற்றும் நிர்வாகம்; பல திட்டங்களை செயல்படுத்துதல் , அதற்கான திட்டமிடல்,
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு; கூட்டமைப்பு மேலாண்மை; இணந்த செயல்பாடு, நிர்வாகம்
மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவைகளை முக்கியமானதாகப் பார்க்கின்றேன்.
மேலும் பல்வேறு
புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து, திருத்தி வெளியிடப்பட்டுள்ளன. 2015
இல் இந்தியாவில் நீதியைப் பெறுவதில் தலித்துகளின் சமவாய்ப்பு குறித்த கண்காணிப்பு
அறிக்கை; 2016- 2017 UPR அறிக்கை; 2017 இல் "பள்ளிகளில் பாகுபாடு மற்றும் வன்கொடுமை
நடைமுறைகள் பற்றிய ஆய்வு" குறித்த ஆய்வு அறிக்கையை ஒருங்கிணைத்து
திருத்தியது; ஜாதியின் நிழலில் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி; தலித் மற்றும்
ஆதிவாசி கைதிகள் மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
எதிரான பாகுபாடு பற்றிய ஆய்வு 2018; "நீதிக்கான தேடல் - வன்கொடுமைகள் தடுப்பு
சட்டம் 2009-2019 அமலாக்கம் குறித்த நிலை அறிக்கை"; தலித் மற்றும் பழங்குடியினர்
குழந்தைகளின் நிலை மற்றும் உரிமைகள் குறித்த 2021 இல் UNCRC கமிட்டிக்கு அனுப்பப்பட்ட
சமூக அமைப்புகளின் மாற்று அறிக்கை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவைகளை
ஒருங்கிணைத்து, திருத்தங்கள் செய்து வெளியிட்டுள்ளேன்.
இந்தியாவில் நிலவும்
சாதியம், தலித், பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள், வன்கொடுமைகள், பாகுபாடுகள்,
ஜனநாயகம், கொள்கை உருவாக்கம், அறிக்கை தயாரித்தால், ஆய்வு, நிலை அறிதல், பொதுச் சமூக
பங்கேற்பு, அரசின் கடமை, செயல்பாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின்
பங்கேற்பு, பங்களிப்பு, இந்தியாவில் மனித உரிமை, தலித் உரிமை உள்ளிட்ட பல்வேறு
தலைப்புகளில் பல்வேறு உலக நாடுகளில் நடைபெற்றுள்ள சர்வதேச அளவிலான மாநாட்டு,
கருத்தரங்கு, விவாத அரங்கு உள்ளிட்டவைகளில் பங்கேற்று 30 க்கும் மேற்பட்ட உரை
மற்றும் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.
2017 மற்றும் 2022 இல்
UN மனித உரிமைகள் கவுன்சில் UPR III & IV மாநாட்டிற்கு இந்தியாவில் தலித்,
பழங்குடியினர், குழந்தைகள் நிலை குறித்த சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை ஒருங்கிணைத்துள்ளேன்.
4.
உங்கள்
நிறுவனம் நீங்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகளில் குழந்தைகளுக்காக செய்து வரும்
பணிகள் என்னென்ன?
கிராமங்களில்
நிலவும் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு
தீர்வு காணும் நோக்கிலான தலித் பெண்கள் ஒருங்கிணைப்பில் இணைந்த கைகள் மகளிர்
கூட்டமைப்பு செயல்பட்டுவருகின்றது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட தலித் பெண்கள்
இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 25 கிராமங்களிலும், கடந்த ஓராண்டாக கோவை மாவட்டத்தில்
20 கிராமங்களிலும் என மொத்தம் 45 குழந்தைகள் வள ஆதார மையங்கள் நடத்துகின்றோம் (Children
Resource Centre). தினமும் மாலை நேரத்தில் கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்தில்
ஒன்று கூடுகின்றனர். ஏறக்குறைய 3000
த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இம்மையங்களில் தினமும் கல்வி தொடர்பான செயல்பாடுகளை
மேற்கொள்கின்றனர்.
பாடத்திட்டத்திற்கும்
அப்பாற்பட்டு குழந்தை உரிமைகள், தலித் உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய
கண்ணோட்டங்கள் குறித்தும் பேசுகின்றோம். கற்றுக்கொள்கின்றனர்.
கிராமத்தில் நிலவும்
சிக்கல்கள், தேவைகள் குறித்தும், அதனை எப்படி சரி செய்வது என்றும் குழந்தைகளிடமே
கருத்துகள் கேட்டு, அதனை செயல்படுத்துகின்றோம். பேருந்து பிரச்சனை, பள்ளிகளில்
நிலவும் சாதிய பாகுபாடு, ஊரில் சரியான பாதை இல்லாதது, குடியிருப்பிற்கு சுத்தமாக
வழி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அடையாளங்காணப்பட்டு, மேலே சொன்ன
பெண்கள் கூட்டமைப்புடன் இணைந்து, அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தட்பவெப்ப நீதிக்கான
குழந்தைகள் இயக்கம் (Claimat Justice for Children Movement-CMCJ) உள்ளது.
புவிவெப்பமாதலால் ஏற்படும் பிரச்சனைகள், அதனைத் தவிர்ப்பது, சுத்தமான மற்றும்
பாதுகாப்பான குடிநீரை அணுகுதல் மற்றும் கிராமங்களில் மரம் நடுவதை ஊக்குவிப்பது, திடக்கழிவு
மேலாண்ம போன்ற போன்றவை தொடர்பாக மனுக்கள் தயாரித்து CMCJ குழந்தைகளே, கிராம சமை,
ஊராட்சித் தலைவர், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளிப்பது என செயல்படுகின்றனர்.
குழந்தைகளின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு
நாம் வழிகாட்டுகின்றோம். சமூகங்களை
மேம்படுத்துதல், பேரிடர் அபாயக் குறைப்பு, அடையாளம் கலைக்குழு, விளையாட்டு,
நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் குழந்தைகளின் பங்கேற்பு, குழந்தை வள ஆதார
மையங்களில் புகார் பெட்டி போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை மையப்படுத்தி SASY செய்துவருகின்றது.
பெரியப்பட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகள், மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலம் என
பதக்கங்களையும் வாங்கியுள்ளனர். சரியான வாய்ப்புகளை நாம் உருவாக்கிக்கொடுத்தால்,
குழந்தைகள் அவர்களாக வளருவார்கள் என்பதற்கு இவைகள் எல்லாம் உதாரணம்.
எல்லாவற்றிற்கும்
மேலாக கடந்த மாதம் சென்னையில் குழந்தைகள் பொதுவிசாரணை நடத்தினோம். பல்வேறு மாவட்டங்களில்
இருந்து 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் குழுக்குள், தங்களது பிரச்சனைகளை கலை
வடிவங்களில் வெளிப்படுத்தினர். பாடலாகவும், வீதி நாடகங்களாகவும் செய்து காட்டினர்.
குழந்தைகள் அனுபவித்து பல்வேறு நுணுக்கமான பிரச்சனைகள் வெளிப்பட்டன. நாம்
குழந்தைகள் குறித்து இன்னும் அதிகம் அக்கறையோடு செயல்படவேண்டும் என்று தோன்றியது.
5.
என்னென்ன
பிரச்சனைகளை தலித் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.
இந்தியச் சமூகம் ஒரு
சாதியச் சமூகமாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து வடிவங்களிலும்
குழந்தைகள் மிகவும் நுணுக்கமான வகையில் பாதிக்கப்பிற்கு ஆளாகியே வருகின்றனர். சில
குழந்தைகள் அந்தப் பாதிப்புகளை உணர்ந்து பிரச்சனையாக அணுகி தீர்வு காண
முயல்வார்கள். பெரும்பாலான குழந்தைகள் அவைகள் தனக்கான பாதிப்புகள், பிரச்சனைகள் என
உணராமலே வளர்வார்கள். இரண்டு வகையான இதுபோன்ற குழந்தைகளின் பிரச்சனைகளை
பெரியவர்களாகிய நாம் உணர்வது மிகவும் சவாலான ஒன்று.
தலித்
குடியிருப்பிலிருந்து வருகின்ற குழந்தைகள் எனத் தெரிந்தாலே ’இங்கிருந்து
வருகின்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு’ பொதுச் சமூகம்
அக்குழந்தைகளை அணுகுகின்ற விதம் வேறுபாடானதாக இருக்கும்.
இன்று அரசுப்
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் 95% தலித் குழந்தைகள்தான். அரசுப் பள்ளிகளில்
கல்வியின் தரம் மிகமோசமாக உள்ளது என்பதற்கான ஏசர் அறிக்கைகள் உள்ளது. இப்படி
பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை தங்களுக்குத் தேவையான, விருப்பமான கல்வியை
தலித் குழந்தைகள் பெற முடிவதில்லை.
தலித்துகள்,
குறவர்கள், இருளர் குழந்தைகள் என்பதற்காகவே போலீசார் போடும் பொய் வழக்குகளில் பாதிக்கப்படும்
குழந்தைகள் ஏராளம் உள்ளனர்.
நல்ல உடை உடுத்திச்
சென்றால், இரு சக்கர வாகனத்தில் சென்றால், நன்றாகப் படித்தால் கூட
“உங்களுக்கெல்லாம் இதெல்லாம் வேணுமா” என தலித் அல்லாத இளைஞர்களால் தாக்குதலுக்கு
ஆளாகின்றனர்.
கடந்த வாரம் கடலூர்
மாவட்டத்தில் ஒரு உணவுக் கடையில் நூடுல்ஸ் சாப்பிட்டதற்காக ’’நீயெல்லாம் இங்க
வந்து நூடுல்ஸ்.. சாப்பிட அளவுக்கு திமிர் ஏறிடுச்சா” என்று தாக்கியுள்ளனர்.
தற்போதைய கொரோனா
பேரிடர் போன்ற பல்வேறு சூழல்களில் உணவு, உடை, குடியிருப்பு, கல்வி போன்ற அனைத்து
நிலையிலும் தலித், பழங்குடியினர் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா ஊரடங்கு
காலத்தில் ஊட்டச் சத்து குறைபாடுகளால் அதிகம் தலித், பழங்குடியினர் குழந்தைகள்
பாதிக்கப்பட்டதும், நீதிமன்றமே தலையிட்டு உலர்பொருட்களாக உணவுப்பொருட்களை
வழங்கவேண்டும் என்று உத்திரவிட்டது.
இந்திய அளவிலான
புள்ளிவிவரம் ஒன்று தலித் குழந்தைகளின் நிலையினை வெளிப்படுத்துவாக உள்ளது. இது
மத்திய அரசின் புள்ளிவிவரம்தான். பிறக்கும் 1000 குழந்தைகளில் 1 வயதுக்குள்
இறப்பது தலித்துகளில் 83, தலித் அல்லாதோரில் 61. இதுவே 5 வயதுக்குள் தலிதுகளில்
39, தலித் அல்லாதோரில் 22 குழந்தைகள் இறந்துபோகின்றன. தலித் குழந்தைகளில் 75%
நோஞ்சானாக உள்ளது. இதுவே தலித் அல்லாதோரில் 49% உள்ளது.
6. தலித்
குழந்தைகள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து மத்திய – மாநில
அரசுகளில் செயல்பாடுகளின் குறித்த தங்கள் கருத்து என்ன?
குழந்தைகள்
நலன் மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகளின் பல்வேறு சிறப்புச் சட்டங்கள்,
கொள்கைகள், திட்டங்கள், நிறுவனங்கள் உள்ளது. அவைகளில் எல்லாம் குழந்தைகள் நலன் மேம்பாடு தொடர்பாக மிகவும் சிறப்பான விதிகள்
உள்ளன. ஆனால் நடைமுறையில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளது. உலக நாடுகள்
மத்தியில் எங்களிடம், ’’எல்லாம் உள்ளது”
என நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதுவும் அக்குழந்தைகளுக்கு
கிடக்கவில்லை என்பதுதான் உண்மை.
குறிப்பாக
இலவசக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம்,
குழந்தைத் திருமணம் தடைச்சட்டம், போக்சோ சட்டம், குழந்தை கடத்தல் தடுப்பு, இளம் சிறார்
நீதி போன்ற சட்டங்கள்; குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள்,
உடன்படிக்கைள், ஆணையங்கள் போன்ற பல உள்ளன. ஆனால் இவை எதுவும் உருவாக்கப்பட்டதன்
நோக்கத்தை சென்றடையவில்லை. விதிகள் பின்பற்றப்படவில்லை. எல்லாம் அரசு திட்டங்களின்
ஸ்லோகனில் முழக்கங்களாக மட்டுமே உள்ளது.
அரசின்
கடமைகள் ஒருபக்கம் இப்படி என்றால். பொதுமக்கள் மற்றும் பொதுச் சமூகத்திடம் குழந்தைகளை
எப்படி நடத்துவது என்ற விழிப்புணர்வோ, பார்வையோ இல்லை. குழந்தைகள் குறித்த போதிய
புரிதல் இல்லை. சமூகப் பகுப்பாய்வுக் கல்வியும் இல்லை.
"நாட்டின்
எதிர்காலம்.. எதிர்காலமே இவர்கள் கைகளில்தான்" எனச் சொல்லி சொல்லி,
எதிர்காலத்திற்கான இயந்திரங்களை தயாரிப்பது போன்று குழந்தைகளை
உருவாக்குகின்றார்கள். இதனால் குழந்தைகளின் தற்கால சந்தோஷம், மகிழ்ச்சி,
கொண்டாட்டம் எல்லாம் காணாமல் போகின்றது. அதுவும் பெண் குழந்தைகள் நிலையை சொல்லவே
வேண்டாம். வீட்டின் கண்கள் நாட்டின் பெருமை என்று பேசி அழகுப்பொருளாக்கிவிட்டோம்.
மேலும்
சாதி மற்றும் மதங்களின் பெயரிலான ஆதிக்கமும் பாகுபாடுகளும் ஆழமாக வேரூன்றி உள்ள
நிலையில் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட குழுந்தைகள் எவர் கவனத்திற்கும் உள்ளாகாத
நிலை உள்ளது. இன்று அரசுப் பள்ளிகளில் தலித் குழந்தைகள்தான் பெரும்பாலோனர்
பயில்கின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லை. தனியார்
பள்ளிகள குழந்தைகளை தேர்ச்சி பெறும் இயந்திரங்களாக நடத்துகின்றனர். முழுமையான
கல்வி வளர்ச்சியை அரசே நிராகரிக்கின்றது. வளர்ந்த நாடுகளில் அரசே நடத்துகின்ற பொது
பள்ளிகள்தான் உள்ளன.
கொள்கை,
சட்டம், அவைகளை செயல்படுத்த நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகிய மூன்றும் சிறப்பான
கட்டமைப்பு. இவை மூன்றும் தனித்தனியாகவும் இயங்கவும். சேர்ந்தும் இயங்கனும்.
அப்படி இயங்கினால் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சி, மேம்பாடு, அறிவுத்திறன்
ஆகியவை வளரும். இது ஒரு சுழற்சி. சேர்ந்தும் இயங்குனும். தனித்தும் இயங்குனும்.
இது நடபத்தில்லை. பெரும் இடைவெளி உள்ளது.
ஒரு மாநில அரசு, தனக்கென குழந்தைகள் உரிமைக்கான கொள்கை உருவாக்கியது என்ற
அடிப்படையில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது. வரவேற்கிறோம். ஆனால், அந்த
அறிக்கையில் தலித் மற்றும் பழங்குடியினக் குழந்தைகளுக்கான எந்தத் தகவலும் இல்லை. நாட்டின்
மொத்த மக்கள் தொகையில் 19% உள்ளை குழந்தைகள் உரிமைகள் கவனத்திற்கு வரவில்லை என்பது
கவலைக்குறியதே. மாநில அரசு உருவாக்க உள்ள கல்விக் கொள்கையிலாவது தலித் – பழங்குடியினக்
குழந்தைகளின் கல்வி நலன் கவனம் பெறவேண்டும்.
நீதிமன்றம்,
ஆணையங்கள் தன்னிச்சையாக இயங்குகின்ற அமைப்பு. ஆனால் தன்னிச்சையாகவும்
இயங்கவில்லை. குழந்தைகளின் வளர்ச்சி, உரிமைகளிலும் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக
குழந்தைகள் உரிமை ஆணையம் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 25% ஒதுக்கீடு குறித்து
மட்டுமே கவனம் செலுத்துகிறது. குழந்தைகளின் பாதிப்புகள் உரிமைகள் குறித்து
கவலைபடுதில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சனையை எடுத்துகிட்டு போனா மனித
உரிமை ஆணையத்திற்கு போங்க என்கிறார். தலித் குழந்தைங்க என்றால் எஸ்.சி. கமிஷனுக்கு
போங்கன்னு சொல்றாங்க. இதுவா இந்த ஆணையத்தின் வேலைகள்.
இவ்வளவு
குறைபாடுகள் ஒரு பக்கம் இருக்கு. குழந்தைகளை எப்படி பார்க்கணும், அணுகணும்,
சந்தோசமா வச்சிருக்கணும் என்பது போன்ற புரிதல் இங்கு பெற்றோர்களுக்கோ, பொதுமக்களுக்கோ,
ஆசிரியர்களுக்கோ இல்லை. உடல், மனவளர்ச்சி குறித்தும் புரிதல் இல்லை. அனைத்து
மட்டத்திலும் குழந்தைகள் குறித்த பார்வை மாற வேண்டும். குழந்தைகள் களிமண். எப்படி
வேண்டுமானாலும் வளைத்து உருவாக்கலாம் என்பதெல்லாம், அவர்களின் நிகழ்காலத்தை
அவர்களுக்கு மறுப்பதாகும். நமது விருப்பத்திற்கு உருவாக்குவதில்லை.
மேலும்
நமது நாட்டில் குழந்தைகள் பங்கேற்பு என்பதே எங்கும் இல்லை. கல்வி நிலையம்,
குடும்பம் உள்ளிட்ட எந்த இடத்திலும் குழந்தைகள் பங்கேற்பு இருப்பதில்லை.
குழந்தைகளுக்கான கல்வி, வளர்ச்சி, கொள்கை, சட்டம் ஆகியவைகளில் குறைந்த பட்சமாவது
ஈடுபடுத்தனும். கருத்து கேட்கணும்.
நான்
டெல்லியில் இருந்த போது நடத்திய ஒரு பொதுவிசாரணையில் குழந்தைகளை நடுவர்களாக
பங்கேற்கச் செய்தோம். யாரும் எதிர்பாராத வகையில் கல்வி அதிகாரிகளிடமே குழந்தைகள்
பல்வேறு கேள்விகளை, எழுப்பினர். பெ.ஆ.க. என்ன செய்தது, ஆணையம் என்ன செய்தது
என்று கேள்வியும் எழுப்பினர். குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என ஒதுக்கி
வைக்கப்படும் சூழல் சரியானது இல்லை.
குழந்தைகள்
எந்த நிலையிலும் பங்கேற்கவும் கருத்து சொல்லவும் அவர்களால் இயலும், அவர்களுக்கு
அதுக்கு உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
குழந்தைகளின்
அறிவு வளம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. இளைஞர்கள் மனித வளம் இங்கு சரியாக
ஆக்கம் பூர்வமாக பயன்படுதப்படவில்லை. சாதி, மத ரீதியாக ஒருங்கிணைத்து
எதிர்மறையாகத்தான் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
7. குழந்தைகள் நீதிக்காக குறிப்பாக SC/ST குழந்தைகள் நீதிக்காக SC/ST வன்கொடுமை
சட்டத்தை உங்கள் அமைப்பு பயன்படுத்தி நீதி பெற்றிருக்கின்றதா? எந்தெந்த சம்பவங்களில்
நீதி பெற்றுள்ளது?
வன்கொடுமையால்
பாதிக்கப்பட்ட தலித் பழங்குடியினருக்கு விரைவான நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான்
வன்கொடுமை தடுப்புச் சட்டமே உருவானது. இச்சட்டத்தில் தாமதமான நீதி கிடைப்பது
என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. இந்நிலையில் இச்சட்டத்தில் குழந்தைகளுக்கான
நீதி என்பது பூஜ்ஜியம்தான். ஒரு போர் ஏற்பட்டால் அதில் குழந்தைகளும்
பெண்களும்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதைவிடக் குறைந்தது இல்லை, நமது
நாட்டில் நிகழும் சாதிய வன்கொடுமைகளில் தலித் குழந்தைகள் பாதிப்படைவது. இது கவனிக்கப்படுவதே
இல்லை.
2007 முதல்
இதுவரை தலித் மற்றும் பழங்குடியினர் மீது நடைபெற்றுள்ள வன்கொடுமைச் சம்பங்களில் சுமார்
10000 த்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகளை எங்களது SASY அமைப்பு சார்பில் நேரடியாக கள ஆய்வு
செய்து, தொடர் கண்காணிப்புப் பணியினைச் செய்து வருகின்றோம்.
வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பினை உருவாக்கி, திருத்தம் கொண்டுவருவதற்கான
பணிகளை மேற்கொண்டோம். அப்போது நான் NDMJ – NCDHR நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தின்
பொதுச் செயலாளராக டெல்லியிலிருந்து செயல்பட்டேன். எனக்கு முன்பாக நண்பர் ஸ்ரீவல்லபிரச்சாத்
இப்பொறுப்பிலிருந்து இப்பணிகளைச் செய்தார். 2015 மற்றும் 2016 திருத்தச் சட்டம் நிறைவேறியது.
பெரும் நிம்மதி கிடைத்தது.
மேலும்,
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழுள்ள மிக முக்கியமான பிரிவான, பாதிக்கப்பட்டோர் விரும்பும் வழக்கறிஞரை
சிறப்பு வழக்கறிஞராக நியமித்துக்கொள்ளும் உரிமையினை தமிழகத்தில் நடைமுறைபடுத்துவதற்கான
தொடர் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் எடுத்த முயற்சியின் விளைவாக வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள 107 வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பல வழக்குகளில் தண்டனையும் கிடைத்துள்ளது. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வேலை,
ஓய்வூதியம், குடியிருப்பு, நிலம் போன்றவைகள் கிடைத்துள்ளது.
இவ்வழக்குகளில்
நீதி பெறுவது என்பது சாதாரணமாக இயல்பாக நிகழக்கூடிய ஒன்றாக இருப்பதில்லை. ஆண்டுகணக்கில்
காத்திருப்பது, அலைவது, செலவழிப்பது என நீதிக்கான போராட்டமே பெரும் வன்கொடுமையாக தலித்
மக்கள் மீது நிகழ்கின்றது.
பாலியல்
வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட 5 வழக்குகளில் குற்றமிழைத்தோருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
பல்வேறு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தண்டனை
கிடைத்த ஒரு வழக்கில் தற்போது அப்பெண்ணுக்கு திருமணமாகி குழந்தையுடன் உள்ளார்.
இந்நிலையில், தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்த வழக்கு தற்போது விசாரணைக்கு வரவுள்ளது.
இதனால், தண்டனை பெற்றவரின் குடும்பத்தினர் உறவினர்கள் பெண் வீட்டிற்குச் சென்று மிரட்டி,
’’எனக்கு திருமணமாகிவிட்டது… அவரை மன்னித்துவிடலாம்.. சமாதானமாகிவிட்டோம்” என நீதிமன்றத்தில்
வாக்குமூலம் அளிக்க அழைத்தனர். இத்தகவல் அறிந்து காவல் துறைக்கு புகார் அளித்து, மிரட்டலைத்
தடுத்து நிறுத்தினோம்.
பள்ளி,
கல்லூரி செல்லும் தலித் மாணவிகளை காதலிப்பதாகக் கூறி, பழகிவிட்டு பிறகு திருமணம் செய்துகொள்ள அந்த மறுக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் நம்மை அணுகும்போது
சட்ட ரீதியான உதவிகளைச் செய்து, ஆலோசனை வழங்குகின்றோம். அத்தலையீடுகளின் விளைவாக வழக்கு
பதிவாகின்றது. ஆனால், அதன்பிறகு எப்படியோ அப்பெண்ணை சமாதானமாக்கி, திருமணம் செய்துகொண்டு,
அந்த நேரத்தில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துகொள்ளும் அந்த ஆணும், அவனது குடும்பமும்
பிறகு அப்பெண்ணை கைவிட்டு விடுகின்றனர். இதன்பிறகு சட்ட ரீதியாக இதுபோன்ற வழக்குகளை எடுத்துச் செல்வது பெரும் சவாலான ஒன்றாக
உள்ளது. நீதி என்பதும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே உள்ளது.
சமீபத்தில்
குழந்தைகள் மீதான பாகுபாடுகள், சிக்கல்கள், வன்கொடுமைகள் தொடர்பான ஒரு பொதுவிசாரணையை
சென்னையில் நடத்தினோம். இதில் வழக்குகளின் ஆவணங்கள் அடிப்படையில் எப்போதும் நடத்துகின்ற
வடிவில் நடத்தவில்லை. குழந்தைகள் அனுபவிக்கும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தங்கள்
மொழியில் கலைவடிவில் வெளிப்படுத்தினர். 10 குழுவும் பல்வேறு சிக்கல்களை தெரிவித்தனர்.
பேருந்து, பள்ளி போன்ற இடங்களிலும், காவல் துறையாலும் எதிர்கொள்ளும் அவலங்களை வெளிப்படுத்தினர்.
பள்ளி வகுப்பறையிலும், கழிவறையிலும் குழந்தைகளை ஆசிரியர்கள் மலம் அள்ள வைத்தக் கொடுமைகளைச்
செய்துகாட்டினர்.
குழந்தைகளின்
பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறிய இதுபோன்றவைகளை குழந்தைகள் மத்தியில்
நிறைய நடத்தவேண்டும். இவைகளை அந்தந்த துறைக்கும், அதிகாரிகளுக்கும் அரசு காட்சிப்படுத்தவேண்டும்.
குழந்தைகளிடம் எப்படி நடந்தகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவேண்டும்.
8. தலித் மக்கள், தலித் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குறித்து
தாங்கள் தங்கள் அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள எதிர்காலப் பணிகள்
என்ன?
இப்போது
கடலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களில் குழந்தைகள் வள ஆதார மையம் என்ற பெயரில் 25 மையங்கள்
நடத்துகின்றோம். சுமார் 2000 குழந்தைகள் மாலை நேரத்தில் இம்மையத்தில் ஒன்று கூடுவார்கள்.
குழந்தைகளின் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் இம்மையம் உதவியாகவும்,
வழிகாட்டியாகவும் உள்ளது. இதற்கடுத்தபடியாக குழந்தைகளின் தனித்திறன்கள் கண்டறியப்பட்டு,
ஊக்குவிக்கப்படுகிறது. அத்திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றது.
2005 முதல் இம்மையங்கள் நடந்து வருகின்றன. இம்மையங்களில் படித்த நூற்றுக்கணகான மாணவர்கள்
கல்வியின் மீதான ஆர்வத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் ஆகியுள்ளனர். திரைத்துறையில் பாடகராகவும் ஒருவர் வளர்ந்துள்ளார்.
இல்லம்தேடிக் கல்வித்தித் திட்டத்தில் பணியாற்றுகின்றனர். பலர் தற்காப்புக் கலை, வில்வித்தை
உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவிலானன் விருதுகளையும்
பரிசுகளையும் பெற்றுள்ளனர். குழந்தையாக இம்மையத்தில் படித்த பலர், பட்டப்படிப்பு முடித்து
அவர்களே இப்போது இம்மையங்களின் ஆசிரியராக பொறுப்பேற்று வழிநடத்துகின்றனர்.
இன்னொரு
பக்கம், இணைந்த கைகள் பெண்கள் கூட்டமைப்புடன் இணைந்த உறவின் காரணமாக குழந்தைகள் சமூகக் கல்வியையும் கற்கின்றனர். சமூக
அறிவினைப் பெறுகின்றனர். அவரவர் கிராமத்திற்கான பிரச்சனைகளையும் தேவைகளையும் அடையாளம்
காண்கின்றனர். அவைகளை கூட்டமைப்புடன் இணைந்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச்
செல்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமாக
குழந்தைகள் இளம் வயதிலேயே Self Extreem என்கிற தன்னாளுமை திறன் பெறுகின்றனர்.
மேலும் கூடுதலாக
என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்க்கவேண்டும். அதற்கு, இந்த ஆளுமைத் திறனை நாம்
எப்படி பார்ப்பது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சாதிய அமைப்பினால் ஏற்பட்ட
பாதிப்புகள். அது Superiority Complex அல்லது inferiority complex ஆக இருக்கலாம்.
பாலின ரீதியான பாதிப்புகளாகவும் இருக்கலாம். இதிலிருந்து, இவைகள் மூலமாக பிரச்சனைகளைப்
புரிந்துகொண்டு நல்ல ஆளுமைத் திறனுள்ள குழந்தைகளாக வளர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இதுமட்டுமல்லாமல்,
மாநில அளவிலான குழந்தை உரிமைக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவருவது. அனைத்து பள்ளிகளிலும்
உள்ள அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது. குழந்தைகள், மாணவிகள் மீதான பாலியல்
கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பார்க்கின்றோம். இவ்வன்கொடுமைகள் பலவற்றினை அப்பள்ளி
ஆசிரியர்களே, தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் நிகழ்த்துவதையும் பார்க்கின்றோம். சாதி,
மதம், பிறப்பிடம், வாழிடம், பொருளாதார, நிறம், பாலினம் போன்றவைகள் அடிப்படையிலான பாகுபாடுகளையும்
முற்றிலும் நிறுத்தவேண்டும்.
எல்லோரும்
சமம்தானே டீச்சர்னு, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாடம் நடத்தும் அளவில் நமது கல்வி
உள்ளது.
பாகுபாடுகளை
எல்லாம் ஒழிக்கவேண்டும் என கொள்கை அளவில் அறிவிப்பது ஒன்று, ஆனால் அவை நடைமுறையில்
என்னவாகின்றது என்பதையும் பார்க்கவேண்டும். முற்றிலும் ஒழிகின்ற வகையிலான கட்டமைப்புகள்,
கண்ணோட்டம், பயிற்சி, செயல்பாடுகள் உருவாக்கவேண்டும்.
இந்த அளவிற்கு கல்வி அமைப்புகளில் கவனம் செலுத்தி செய்யவேண்டும்.
பள்ளிக்
கல்விக்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்த உயர்கல்விக்கான
தகவல்கள் கிராம்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதில்
கவனம் செலுத்தவேண்டும். உயர்கல்வி வழிகாட்டுதல்
அவசியம் தேவைப்படுகிறது.
வே.அ.இரமேஷ்நாதன்
செயல் இயக்குநர், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், SASY.
Executive Director, Social Awareness Society for youth-SASY,
மாநில அமைப்பாளர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை
வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு-NCSPA,
National Convener for National Coalition for
Strengthening SCs STs Prevention of Atrocities Act – (NCSPA),
State Convenor for National Coalition on SCP/TSP Legislation.
முன்னாள் பொதுச் செயலாளர், நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (NDMJ-NCDHR).
(சூன், 2022 இல் குழந்தை உரிமை முன்னணி இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல்)
--------------------