Tuesday, June 23, 2020

திண்ணைப் பள்ளியும் - இணையக் கல்வியும்

திண்ணைப் பள்ளியும் -
இணையக் கல்வியும்
---------------------------------------
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணையவழிக் கல்வி பெரும் வணிகமாக / சூதாட்டமாக வடிவெடுத்துள்ளது. இதனை தடை செய்யவேண்டும் என்ற குரலும் வலுவாக ஒலிக்கின்றது. அதிலும் சரியாக பேச்சுகூட வராத மழலையர்களுக்கெல்லாம இணையம் வழியாக கல்வி கொடுப்பது என்பது, ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இணைய வழிக் கல்வி வேண்டாம் என்று சொன்னால், பள்ளி திறக்கும்போது தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காதோ என்று நினைக்கும் பெற்றோர்களின் தயக்கத்தை, பயன்படுத்திக்கொண்டு பணம் பிடுங்குகின்றனர். பெற்றோர்களும் வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு தங்கள் இயலாமையை வெளிக்காட்டாமல் அழுதுகொண்டே பணத்தை அள்ளிக்கொடுக்கின்றனர்.


0

இணைய வழிக் கல்வி தொடர்பாக தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினோம். 30 பேர் பங்கேற்றோம். பெரும்பாலோனார், இணைய வழிக் கல்வி தேவையில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைகள் அந்தக் கல்வியைப் பெறும் குடும்ப சூழலில் இல்லை. குழந்தைகளுக்கு அது தேவையும் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பல மாதங்கள் கல்வியோடு தொடர்பில்லாம இருப்பதும் நல்லதில்லை என்ற கருத்தும் வெளிப்பட்டது. குறைந்த பட்சம் 8 அல்லது 8-ஆம் வகுப்பு வரை இணைய வழிக் கல்வி உட்பட எதுவுமே தேவையில்லை. விடுமுறையாக கருதிக் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும். 8 ஆம் வகுப்பிற்கு மேல், குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் இணைய வழிக் கல்வி இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையில் கற்பித்தல் பணி செய்வது என்பது குறித்து பேசலாம் என கருத்து வந்தது. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள், இணைய வழிக் கல்விக்கான செல்பேசி, கணிணி, மடிக்கணிணி, இணையம் இணைப்பு, அதற்கான செலவினம் என எதுவும் சாத்தியமில்லாத மாணவர்கள் சதவிகிதம் அதிகம் எனவே, இணைய வழிக் கல்வி தேவையில்லை என்றும் வேறு எப்படி கல்வி கொடுப்பது என மாற்று குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ’’திண்ணைப் பள்ளி” என்ற வார்த்தை வெளிப்பட்டது.


0

திண்ணைப் பள்ளி என்ற கருத்தின் அடிப்படையில், நாம் சில முயற்சிகளை எடுக்கலாம். ஒரு தெருவில் அல்லது ஒரு பகுதியில் அல்லது ஒரு குடியிருப்பில் 8 ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் விரும்பினால் யாராவது ஒரு வீட்டில் ஒருங்கிணைப்பது. அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியர் அல்லது ஒரு தன்னார்வலர் அல்லது கல்வியில் அக்கறையுள்ள ஒருவர் மூலமாக ஒரு வீட்டில் கற்பித்தல் பணி செய்வது. அதுவும், பாடப்புத்தகம் இல்லாமல் பொதுக்கல்வியை வழங்குவது. அதுவும், தமிழ் ஆங்கிலம் நன்றாக தவறில்லாமல் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பது. கணிதம், அறிவியலின் அடிப்படைகளை சொல்லி புரிய வைப்பது என்ற அளவில் இருந்தால் போதும். பாடங்களை பள்ளி திறந்தபிறகு மாணவர்கள் படித்துக்கொள்ளட்டும் என்று பேசினோம்.
0

இந்நிலையில், உங்கள் நூலகம், ஏப்ரல்-மே இதழில், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதியுள்ள ”திண்ணையில் பாடமெடுத்த அண்ணாவிகள்” என்ற கட்டுரையை இன்று பார்த்தேன். திண்ணைப் பள்ளிகள் குறித்த சில தகவல்களை தெரிந்துகொள்வது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாகவும், தேவையானதாகவும் இருக்கும் என்பதால், அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தொகுத்துள்ளேன்.


0

ஒரு செய்தியை இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேணிடியுள்ளது. இந்தத் திண்ணைப் பள்ளிகளில் நடக்கும் கற்பித்தலில் வட்டார ரீதியாக வேறுபாடுகள் இருந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரி, ஒரே பாடங்களைக் கற்பிக்கவில்லை.

0


0
யாழ்ப்பாணம் குடநாட்டில் நிலாக்காலங்களில் பனையோலையை நார்நாராகக் கிழித்து மாடுகளுக்குக் கொடுபர்கள். இதைச் செய்கின்ற வயதான மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு பாரத, ராமாயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பார். சில சமயம் நீதி நூல் பாடல்களைச் சொல்லி விளக்கமும் கூறுவார். இதை நிலாப்பள்ளி படிப்பு என்பார்கள். சி.வை.தாமோதரன் பிள்ளை இப்படியான நிலாப்பள்ளியில் படித்திருக்கிறார்.


வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வையாபுரிப் பிள்ளை தாமிரபரணித் தமிழறிஞர்கள் சிலர் திருநெல்வேலி தெற்கு புதுத்தெருவில் இருந்த கணபதியா பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் வாழ்ந்த தமிழறிஞர்களில் பலரும் இது போன்ற திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தாம். ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை (திருச்சி ஓதுவார் திண்ணைப் பள்ளிக்கூடம்) மறைமலை அடிகள் (காடம்பாடி தி.ப) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (மகிபாலன் பட்டி தி.ப) பி.ஸ்ரீ (தென்திருப்பேரை தி.ப) என இப்படியான தமிழறிஞர்களின் பட்டியல் நீளமானது.

#தொன்மமாகிவிட்டது
திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய செய்திகள் எல்லாம் இன்று தொன்மமாகிவிட்டன. இது பற்றிய செய்திகள் பெரிய அளவில் சேகரிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் முறையும், நெறிமுறையும் தமிழகத்தின் ஒரே மாதிரியான போக்கில் இருக்கவில்லை. இது வட்டார ரீதியான வேறுபாடு இருந்தது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி போன்ற மொழிகளைக் கற்பித்த திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இது போல தமிழின் பாடத்திட்டமும் கணக்கு கற்பித்தலிலும் வேறுபாடு இருந்தது.

திண்ணைப் பள்ளிக்கூடம் தொடர்பான சொற்கள் முழுதும் வழக்கில் இல்லை. இவை அழிந்து விட்டன. இவற்றில் சில பழம் அகராதிகளில் கூட இடம்பெறவில்லை இவை எல்லாவற்றிற்கும் மாற்றுச் சொற்கள் வந்து விட்டன. தமிழகக் கல்வி குறித்த பழம் தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. கல்வி உயர்வானது, கற்றவன் சமூகத்தில் மதிப்புடையவன் என்பன போன்ற அறச் சார்புடைய சில சிறு குறிப்புகள் பழம் பாடல்களில் வருகின்றன. முந்தைய காலங்களில் இயங்கிய கல்வி நிலையம், மாணவர்களின் பாடத் திட்டம் ஆசிரியர் தகுதி, பெண்கள் கற்கும் நிலை என்பன போன்ற பல விஷயங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. 17, 18, 19, நூற்றாண்டு கதைப் பாடல்களில் ஆசிரியரின் தகுதி, கற்பித்த பாடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. இவை கிராமங்களில் கற்பித்தமுறை தொடர்பானவை கல்வெட்டுகளில் காணப்டாதவை.


திருவிதாங்கூரில் அரசு பள்ளிகள் அறிமுகமாவதற்கு முன் இருந்த திண்ணைப் பள்ளிக் கூடங்கள் பற்றி திருவிதாங்கர் சர்ச் வரலாற்றை எழுதிய சி.எம்.ஆகர் என்பவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். "1903 இல் திருவிதாங்கூரில் 1300 திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவற்றில் 50,000 மாணவர்கள் படித்தனர். ஒரு பள்ளிக்கு ஒரே ஆசிரியராக இருந்தார். பெண்கள் இந்தப் பள்ளிகளில் படிக்கவில்லை. திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர்கள் செல்வந்தர் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்கிறார். திருவிதாங்கூரில் 1860 லேயே பள்ளிகள் வந்த பின்பும் 40 ஆண்டுகள் கழித்தும் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன. இது போன்றே தமிழகத்தின் நிலையும், சென்னையில் பல்கலைக்கழகம், ராஜதானி கல்லூரி, தாம்பரம் கல்லூரி, பிஷப் ஹியூபர் கல்லூரி, பாளை தூய சேவியர் கல்லூரி, வளனார் கல்லூரி எல்லாம் தொடங்கப்பட்ட பின்பு 60 - 70 ஆண்டுகள் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன.


#திண்ணையில்_#பள்ளிகள்
பள்ளி என்பது சமண சமயம் தொடர்பான சொல். மடங்களைக் குறிக்கவும் பின் கல்விக் கூடங்களைக் குறிக்கவும் பயன்பட்டது. ஆசிரியரின் வீட்டுத் திண்ணையே பள்ளியாகச் செயல்பட்டது. இது தமிழகத்தில் பரவலான ஆரம்பகால நிலை. இது பற்றிய குறிப்புகள் உ.வே.சா. போன்ற பழைய தமிழறிஞர்களின் அனுபவக் கட்டுரைகளில் உள்ளன. பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்த ஊரில் உள்ள மாணவர்களே இங்குக் கற்றனர். மாணவர்கள் வீட்டிற்குச் சென்று திரும்பும் அளவு தூரத்தில்தான் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது.


திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ் கணக்கு இரண்டு மட்டும் கற்பிக்கப்பட்டன. தொடக்ககாலத்தில் நீதி நூற்கள் வழி ஒழுக்கத்தைக் கற்பிப்பதே கல்வி என நம்பப்பட்டது. கணக்கு என்பது வாய்ப்பாடுகளை மனனம் செய்வதுதான். அவை கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம் குழிமாற்று நெல்லிலக்கம் என்பவை. முக்கியமாக பெருக்கல் வகுத்தல் கூட்டல் வாய்ப்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டன. மரபுவழியான தொழில் நுட்பம் கல்வியாக அங்கீகரிக்கப் படவில்லை. இவை தந்தை / மாமா வழியே அறியப்பட்டன.


திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடத்தை ஒப்புவிப்பதை முறை சொல்லுதல் என்றனர். இதற்கு முறண்டு என்றும் பேச்சுவழக்குச் சொல்லும் உண்டு. திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்பது இதன் பொருள். முறண்டு பிடித்தல் என்னும் சொல் வழக்காறு இதிலிருந்து வந்திருக்கலாம்.


திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்பட்ட இன்னொரு விஷயம் ஓலையில் எழுதவும் படிக்கவும் பயிற்சி கொடுத்தது. பனை ஓலையை வடிவமைப்பது எழுதுவது, பாதுகாப்பது எனப்பல விஷயங்களை திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரே கற்பித்திருக்கிறார்.

#திண்ணைப் பள்ளிக் கூடம் தொடர்பான சில சொற்கள் இப்போது வழக்கில் இல்லை.
அண்ணாந்தாள் - மாணவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை.
ஏற்றாள் அல்லது வேற்றாள் - பள்ளிக் கூடத்துக்கு முதலில் வரும் மாணவன். கட்டை மாட்டல் - மாணவனுக்குரிய தண்டனை
குதிரை ஏற்றம் - மாணவனுக்குரிய தண்டனை.
கோதண்டம் இடுதல் - மாணவனுக்குரிய தண்டனை சட்டம்.
சட்டாம்பிள்ளை - மாணவர் தலைவன்.
சுவடி தூக்கு - ஓலைச் சுவடிகளை ஒரு பலகையில் வைத்து முதுகின் முன் தொங்கவிட்டு தூக்கிச் செல்வது.
துவக்கல் - புதிய ஏட்டை படிக்கத் தொடங்கும் முதல் நிகழ்வு.
படியோலை - மூல ஓலையிலிருந்து பிரதி செய்யும் ஓலை.
மானம்பூ - ஆசிரியருக்கு நவராத்திரியில் வரும் உபரி வருமானம்.
முறங்கு சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.
முறை சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.
முரண்டு – உருப்போடுதல், திரும்பத் திரும்பச் சொல்லுதல்.
வாவுநாள் - விடுமுறை நாள்
வாவுக்காசு - ஆசிரியரின் சம்பளம்.

No comments: