Monday, December 31, 2007

மரணம் - கொலை - இறப்பு (?)



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியம் பாலப்பட்டு கிராமம், குப்பன் என்பவரின் மகனும், இறந்த பொம்மியின் கணவருமான பரமசிவம் என்பவரின் வாக்குமூலம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாலப்பட்டு கிராமத்தில் வசித்துவரும் குப்பன் மகன் பரமசிவம் ஆகிய நான் அளிக்கின்ற வாக்குமூலம் யாதெனில் :

நான் மேற்படி பாலப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கும், கன்னியம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் & மங்கவர்த்தாள் தம்பதியரின் மகள் பொம்மிக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு சோதிப்பிரகாசம் (தற்போது வயது 18), மும்மூர்த்தி (15), கிருஷ்ணவேணி (13), ஆண்டாள் (8), ஆஞ்சநேயன்(5), வெங்கடாஜலபதி
(2 மாத கைக்குழந்தை) ஆகிய குழந்தைகள் உள்ளன. நான் எங்கள் ஊரான பாலப்பட்டு மற்றும் பேரணி ஆகிய ஊர்களின் கிராம உதவியாளராக பணியாற்றுகிறேன். நாங்கள் தாழ்த்தபட்ட பறையர் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆகும்.

என் மனைவி பொம்மிக்கு பிரசவத்திற்கான வலி எடுத்து கடந்த 18.10.07 அன்று இரவு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தேன். மறுநாள் 19.10.07 அன்று காலை 7.00 மணியளவில் என் மனைவிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு வெங்கடாஜலபதி என்று மருத்துவமனையிலேயே பெயர் வைத்தோம். சுகப்பிரசவம் என்பதால் காலை சுமார் 10.30 மணியளவில் என் மனைவியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். அப்போது நான், இது 6&வது குழந்தை என்பதால், இனிமேல் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவிக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், வியாழக்கிழமை 25.10.07 அன்று காலை வருமாறு சொல்லி டிஸ்சார்ஜ் செய்தார்கள். நாங்களும் அன்றே எங்கள் ஊரான பாலப்பட்டிற்கு சென்றோம்.

அதன்பின்பு, மருத்துவர்கள் சொன்னபடி 25.10.07 வியாழன் அன்று காலை 9.00 மணிக்கு மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைக்காக என் மனைவி பொம்மியை, பிறந்த 6 நாட்களான கைக்குழந்தையுடன் சேர்த்தேன். என் உடன் எனது மாமியாரும், மனைவியின் தாயாருமான மங்கவர்த்தாள் வந்திருந்தார். மேலும் எங்கள் ஊரிலிருந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்த மலர் க/பெ ஜெயமூர்த்தி, அவருக்கு உதவியாக வந்திருந்த அவரது உறவினர் அல்லி க/பெ சோமு என்பவரும் உடனிருந்தார்கள். காலை 9 மணிக்கு சென்ற நிலையில், முதலில் என் மனைவிக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்து 10.30 மணிக்கு படுக்கைக்கு கொண்டு வந்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு ஒரு வாரம் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று கூறி, உள் நோயாளியாக வைத்து சிகிச்சை தந்து கொண்டிருந்தார்கள்.

அறுவை சிகிச்சை செய்த மூன்றாவது நாளான 29.10.07 அன்று அதிகாலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட என் மனைவி அவதிப்பட்டப்படியே இருந்தார். நான் உடனடியாக போய் கம்பவுன்டரை எழுப்பி, வயிற்று வலியால் என் மனைவி கடும் அவதிப்படுவதைக் கூறி, உடனடியாக வந்து கவனிக்கும்படி வேண்டினேன். அவர் எழுந்து சென்று, நர்ஸை அழைத்து வந்தார். நர்ஸ் வந்து, வலியால் கத்திக்கொண்டிருந்த என் மனைவியை பார்த்துவிட்டு உடனடியாக அவசர அவசரமாக வெளியில் சென்றார். அப்போது என் மனைவி வலியால் கத்திக்கொண்டிருந்த சத்தம் குறைந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் மேற்படி நர்ஸ் மருத்துவருடன் வந்தார். பின்பு மேற்படி மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் மூவரும் என் மனைவியை சோதனை செய்தனர்.

சில நிமிடங்கள் என் மனைவியை பரிசோதித்தவர்கள், எதுவும் செய்யாமல், சொல்லாமல் அமைதியாக வெளியில் சென்றார்கள். நான் அவர்களிடம் என் மனைவிக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களை தொடர்ந்து, சென்று அழுது, புலம்பி, மன்றாடிக்கேட்டேன். அப்போது மேற்படி மருத்துவர் என் மனைவி இறந்து விட்டதாக சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன செய்வது எனத்தெரியாமல் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு அப்போதுதான் பிறந்து 10 நாட்களே ஆன கைகுழந்தையின் நினைவு வந்தது. அங்கு சென்று பார்த்தபோது இறந்துபோய் கிடந்த என் மனைவியின் உடலருகில் அவளின் தாயார் கீழே விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தாயை இழந்த கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அதற்கு பால் வாங்க வெளியில் சென்றேன், அப்போது நெற்குணத்தைச் சேர்ந்தவர் பால் வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு பால் கொடுத்ததும் மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் மூவரும் சேர்ந்து என் மனைவியின் உடலை, மருத்துவமனையின் ஆம்புலன்சில் ஏற்றி, என்னையும், அடிபட்டு கீழே கிடந்த எனது மாமியாரையும் கட்டாயபடுத்தி ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். அப்போது வண்டியில், என் மனைவி இறக்கும் போது உடனிருந்த நர்ஸ் இல்லாமல் வேறு ஒரு நர்ஸ், மேற்படி கம்பவுன்டர் ஆகியோர் இருந்தனர். மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த மலர் என்பவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்த மேற்படி அல்லி என்பவர், பிறந்து 10 நாட்களான கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருந்தார். நேராக ஆம்புலன்ஸ் எங்கள் உருக்குச் சென்றது. விடிவதற்குள் எங்கள் ஊருக்குச் சென்று, மக்கள் யாரும் எழுந்து வெளிவருவதற்குள் அவசர அவசரமாக மேற்படி கம்பவுன்டரும், ஆம்புலன்ஸ் டிரைவரும் என் மனைவியின் உடலை இறக்கிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஊரார்களுடன் சேர்ந்து அன்று மாலை என் மனைவியின் உடலை அடக்கம் செய்வதாக இருந்தோம். இந்நிலையில் தகவலறிந்து வந்த எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும், எங்களது உறவினர்களுமான குணா, பிச்சைமுத்து போன்றோர் மூலம், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் என் மனைவி இறந்தார் என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும் என்பதறிந்தேன். அதன்பின்பு உடனடியாக மேற்படி என் உறவினர்களுடன் புகார் கொடுப்பது தொடர்பாக, எங்கள் ஊர் எல்லைக்குட்டபட்ட பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தோம். அதற்கு பெரியதச்சூர் போலீசார் சம்பவம் நடந்த இடம் மயிலம் என்பதால், மயிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்றார்கள். அதன்பின்பு மேற்படி என் உறவினர்களுடன் மயிலம் கிளம்பிச் சென்று காவல் நிலையத்தில் புகார் தந்தேன். அப்போது மாலை சுமார் 4.30 மணி இருக்கும். என் புகாரைப் பெற்ற போலீசார், என் மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக இரவு 9.00 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மறுநாள் காலை பிரேத பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொளுமாறு என்னிடம் கையெழுத்து கேட்டார்கள். அப்போது மேற்படி என் உறவினர்களும், நண்பர்களும் வழக்கு விபரம் பற்றி போலீசாரிடம் கேட்டனர். அப்போது மயிலம் போலீசார் சி.ஆர்.பி.சி 174 என்கிற சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்போவதாக கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத என் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்ததால் அதற்குரிய பிரிவில் வழக்கு போடவேண்டும் என்று போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இத்தகவல் அறிந்த திண்டிவனம் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனைக்கு வந்து, எனக்கு ஆதரவாக மருத்துவர்களிடமும், போலீசாரிடமும் பேசினார்கள். போலீசார் சரியான பதில் சொல்லாத காரணத்தால், உரிய வழக்கு பதிவு செய்யும்வரை உடலை வாங்கவேண்டாம் எனக்கூறி போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் தாசில்தார் உட்பட சில அதிகாரிகள் வந்தார்கள். அதன்பின்பு உரிய வழக்கு பதிவு செய்வதாக போலீசாரும், தாசில்தாரும் உறுதியளித்தனர்.

அதன் பின்பு நாங்கள் மருத்துவமனையில் இருந்த என் மனைவியின் உடலைப் பெற்றுக்கொண்டு மதியம் 2.00 மணியளவில் ஊருக்கு வந்து அடக்கம் செய்தோம். பின்பு மாலை மேற்படி என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மயிலம் காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை நகல் பெற்றுவந்தேன்.

அதன் பின்பு என் மனைவிக்கு தவறான சிகிச்சையளித்து, அவள் சாவுக்கு காரணமான மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மேற்படி மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் உள்ளிட்டோர் மீது போலீசாரோ அல்லது அரசு அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையோ அல்லது விசாரனையோ கூட செயாமலிருந்தனர். இது தொடர்பாகவும், 6 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் என் மனைவியின் மரணத்திற்கு உரிய நட்ட ஈடும் கேட்டும், கடந்த 06.11.07 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டு, புகாரும் அளித்தேன்.

அதன் பின்பு, மேற்படி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், என் மனைவியின் மரணம் தொடர்பாக புலனாய்வு செய்யக்கோரியும் உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருக்கும் கடந்த 22.11.07 அன்று புகார் அனுப்பியுள்ளேன். இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


விழுப்புரம் மாவட்டம், கன்னியம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவியும், இறந்த பொம்மியின் தாயாருமான மங்கவர்த்தாள் வாக்குமூலம் :

நான் கன்னியம் கிராமத்தில் என் குடும்பத்துடன், விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு 3 ஆண், 3 பெண் குழந்தைகள். இதில் மகள் பொம்மியைத்தான், விழுப்புரம் மாவட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகனும், என்னுடைய தம்பியுமான பரமசிவம் என்பவருக்கு திருமணம் செய்து தந்தோம். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. சுமார் 2 மாதத்திற்கு முன்பு 6&வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குடும்ப கட்டுபாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தால் உதவிக்கு ஆள் வேண்டும் என்பதால், நான் சென்றேன். என் மகளை அழைத்துக்கொண்டு, மருமகனுடன், மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று 25.10.07 அன்று சேர்த்தோம். அன்றே குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். உடனடியாக என் மகளை படுக்கையில் சேர்த்து, ஒருவாரம் தங்கியிருக்கவேண்டும் என்றார்கள். அன்றே மேற்படி பாலப்பட்டு கிராமத்திலிருந்து மலர் என்பவரும் குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைகாக, அவரது உறவினர் அல்லி என்பவருடன் மேற்படி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.

ஆபரேசன் செய்ததில் இருந்து என் மகள் பொம்மி அடிக்கடி இருமிக்கொண்டிருந்தாள். மேலும் அவ்வப்போது வயிறும் வலிக்கிறது என்று கூறினாள். நான் இது குறித்து நர்ஸ் இடம் சொல்வேன். அதற்கு நர்ஸ் ‘‘அதான் மாத்திரை கொடுத்து, ஊசி போடுறோம் இல்ல, அப்புறம் என்ன, எல்லாம் சரியா போயிடும்’’ என்று கூறுவார்கள்.

தினமும் காலையில் ஒரு ஊசி போட்டு, மாத்திரை தருவார்கள். அவ்வளவுதான், பிறகு மாலைதான் வந்து பார்ப்பார்கள். அப்போதும் ஊசியும், மாத்திரையும் தருவார்கள். அதன் பிறகு இடையில் ஏதேனும், போய் சொன்னால், நான் மேலே சொன்னபடி சொல்வார்கள். இல்லையென்றால் வருகிறேன் போ என்று சொல்லி அனுப்புவார்கள், ஆனால் வரமாட்டார்கள். இரவில் மருத்துவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை. இந்நிலையில், ஆபரேசன் நடந்த 3&வது நாள் 29.10.07 விடிகாலை என் மகள் மிகவும் அதிகமாக வயிறு வலிக்கிறது என்றாள். பாத்ரூம் போகவேண்டும் என்று கூறினாள். நான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பாத்ரூம் அருகில் விட்டேன். பாத்ரூம் சென்றவள் பாத்ரூம் வரவில்லை என்று கூறி வெளியில் வந்தவள், நடக்கமுடியாமல் உட்கார்ந்தாள். பாத்ரூம் பக்கதில் ஏம்மா உட்காருகிறாய், இங்கே வா என்று நான் அவளை படுக்கைக்கு கூப்பிட்டேன். அதற்கு அவள் என்னால் நடக்க முடியவில்லை, வயிறு வலிக்கிறது என்று கூறி, வயிறை வலிக்கிறது என்று கூறி வயிற்றைப் பிடித்துக்கொண்டு உர்கார்ந்துகொண்டாள்.

அதன் பிறகு நான், மேற்படி அல்லியை துணைக்கு அழைத்தேன். கைக்குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு வந்த அல்லியும், நானும் சேர்ந்து பொம்மியை தூக்க முயற்சி செய்தோம். எங்களால் முடியவில்லை. அதன்பிறகு வெளியில் இருந்த என் தம்பி பரமசிவத்தை அழைத்து நடந்த சம்பவத்தைச் சொல்லி, பொம்மியை தூக்க வேண்டும் என்று கூறினேன். பிறகு என் தம்பி பரமசிவம் பொம்மியின் காலை பிடித்தும், நானும் அல்லியும் கைகளை பிடித்துக்கொண்டும் தூக்கி வந்து படுக்கையருகில் கீழே உட்காரவைத்தோம். அதன் பிறகும் பொம்மி வயிறு வலிக்கிறது என கத்திக்கொண்டே, வயிறை பிடித்துக்கொண்டே புரண்டு புரண்டு படுத்தாள்.

என் தம்பி பரசிவம் நர்ஸை அழைத்துவந்தான். வந்த நர்ஸ் என் மகளை தொட்டுக்கூடப் பார்க்காமல், உற்றுப் பார்த்துவிட்டு சென்றார். அப்போது கீழே படுத்து வயிறு வலிக்கிறது என புரண்டு புரண்டு படுத்த அவள், திடீரென வேகமாக சுருண்டு படுதாள். அதன்பிறகு அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை. நான் அங்கே அடித்துக்கொண்டு அழுது புலம்பினேன். அப்போது, இரண்டு நர்ஸ், கம்பவுன்டர், டாக்டர் என நான்கு பேரும் வந்தார்கள். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் மகளின் கையையும், காலையும் பிடித்து தூக்கி படுகையில் வைத்து, நெஞ்சை அழுத்திப் பார்த்தார்கள். அப்போது என்மகளின் மூக்கில் இருந்து லேசாக நுறை வந்தது. பின்பு அவர்கள் நான்கு பேரும் எதுவும் சொல்லாமல் வெளியில் சென்றார்கள். என் மகன் விடாமல் அவர்களை பின்தொடர்ந்து சென்று வற்புறுத்தி கேட்டபின்புதான், மேற்படி மருத்துவர்கள், என் மகள் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அழுது புலம்பினோம்.

ஆபரேசனுக்கு பிறகு வயிற்று வலியாலும், இருமலாலும் அவதிப்பட்ட என் மகளை பாண்டிச்சேரி அழைத்துச் செல்கிறோம் என்று கேட்டும், மேற்படி மருத்துவர்கள் சரியாகி விடும், இங்கேயே இருக்கட்டும் என்று கூறி பாண்டிக்கு அனுப்ப மறுத்தார்கள். பாண்டிக்கு அனுப்பியிருந்தாள் எனமகளை காப்பாற்றியிருப்போம். இறந்த என் மகளை மேற்படி டாக்டர்கள் சேர்ந்து, மருத்துவமனை வண்டியிலேயே ஏற்றி பாலப்பட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்கள். என்னையும் வண்டியில் ஏற்ற கட்டாயப்படுத்தினார்கள். இதற்கிடையில் தாயை இழந்து அழுதுகொண்டிருந்த கைக்குழந்தைக்கு பால் வாங்கிவரும்படி நெற்குனத்தை சேர்ந்தவரை அல்லி அனுப்பியிருதார். அவர் இன்னும் வரவில்லை, குழந்தை பாலுக்கு அழுகிறது எனச்சொல்லியும், டாக்டர்கள் சீக்கிரம் சீக்கிரம் என அவசரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே பால் வந்ததும், மேற்படி அல்லி பாலை குழந்தைக்கு புகட்டினார். மருத்துவர்களும், நர்சும் பையை எடுத்துவரும்படி என்னை அனுப்பினார்கள். நான் என் மகள் பொம்மியின் படுக்கையருகே சென்று, பைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். என் மகள் இறந்துபோன துக்கம், கவலை, அதிர்ச்சி, கைக்குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது போன்று எனக்குள் இருந்த குழப்பத்திலும், விடியாத சுமார் மணி 4.00 என்பதால் இருந்த இருட்டிலும் வழி தெரியாமல் கதவுகளின்மீது மோதி அடிப்பட்டு கீழே விழுந்தேன்.

அப்போது மருத்துவர்கள் அல்லியை சீக்கிரம் பால் கொடுத்துட்டு வண்டிக்கு வாங்க இவ்வளவு நேரமா பால் கொடுப்பாங்க என்று கூறியது என் காதில் விழுந்தது. பின்பு நான் தடவி எழுந்து, இருட்டிலேயே பையையும் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வண்டி அருகில் சென்றேன். அப்போது அங்கிருந்த ஒரு நர்ஸ் என்னை வண்டியில் ஏறுங்கள் என்றார்கள். நான் ஏறும்போது கால் தடுக்கி பின்பக்கமாக அப்படியே தரையில் கீழே விழுந்தேன். அதற்குள் குழந்தையுடன் அல்லியும், இறந்துபோன என் மகளை தள்ளுவண்டியில் வைத்தும் ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆம்புலன்ஸ் விடிவதற்குள் பாலபட்டு சென்றது. நர்ஸ்ம், கம்பவுன்டரும் சேர்ந்து தெருமுனையிலேயே எங்களை இறக்கிவிட்டு, பொம்மியின் பிணத்தையும் இறக்கி வைத்துவிட்டு வேகமாக சென்று விட்டனர்.

அதன்பிற்குதான் என் தம்பி கேஸ் கொடுத்திருக்கான். டாக்டர்கள் ஏதோ தப்பான ஆபரேசன் செய்துதான் என் மகளை கொன்னுட்டாங்க. இல்லன்னா நாங்க பாண்டிக்கு அழைச்சிகிட்டு போறோம்னு சொன்னதுக்கு எதுக்கு வேணாம்னு மறுதாங்கனும். அந்த மயிலம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இதே மாதிரிதான் நடக்குது. இப்ப கூட பாதிரிப்புலியூரை சேர்ந்த ஒரு பொண்ணுக்கு ஆபரேசன் பண்ணும் போது, கர்ப்பப் பையையும் சேர்த்த் தச்சி, சீரியசாகி, பாண்டிக்கு அனுப்பி, அங்க இப்ப அந்தம்மாவுக்கு 2 ஆபரேசன் செஞ்சிருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க.


சம்பவத்தின் சாட்சியும், விழுப்புரம் மாவட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும், மறைந்த சோமு என்பவரின் மனைவியுமான அல்லி வாக்குமூலம்.

நான் மேற்படி பாலப்பட்டு கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 25.10.07 அன்று என் அக்கா மகள் மலருக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்வதற்காக மயிலம் ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு சென்றோம். அங்கு எங்கள் ஊரைச் சேர்ந்த பொம்மியும் அவரது கணவர், தாயருடன் வந்திருந்தார்.

ஆபரேசன் செய்ததில் இருந்தே மேற்படி மொம்மி அடிக்கடி இருமிக்கொண்டிருந்தார். மேலும் அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்றும் கூறினாள். 29.10.07 திங்கள் அன்று விடியற்காலை 3.30 மணியளவில், என்னிடம் வந்த பொம்மியின் அம்மா, வயிறு வலிக்கிறது என்று கூறி பாத்ரூம் போன பொம்மி அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள், எழுந்து நடக்க முடியலையாம் படுக்கையில் தூக்கி வைக்க வேண்டும் உடனே வா என்று என்னை கூப்பிட்டார். பின்பு நானும், பொம்மியின் அம்மாவும் சேர்ந்து தூக்க முயன்றோம் முடியவில்லை. அதனால் பொம்மியின் கணவர் பரமசிவத்தை அழைத்து வந்து பொம்மியை அவள் படுக்கை அருகே தூக்கி வந்து கீழே உட்காரவைத்தோம். அதற்குள் வயிறை பிடித்துக்கொண்டு வயிறு வலிக்கின்றது என்று சுருன்டு சுருன்டு அழுது புலம்பினாள் பொம்மி. நர்ஸ் வந்து பார்த்து, டாக்டரை அழைத்து வரச்சென்றார். டாக்டர் வருவதற்குள் பொம்மி சத்தமில்லாமல் அமைதியாக இருந்தாள். வந்து பார்த்த டாக்டர் பொம்மி இறந்துவிட்டதாகக் கூறினார்.

அப்போது பொம்மியின் கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. பொம்மியின் அம்மாவும், வீட்டுக்காரரும் பொம்மி இறந்த அதிர்ச்சியில் இருந்தனர், அதனால் குழந்தையை நான் கையில் எடுத்துக்கொண்டு, நெற்குணத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, அழுகின்ற குழந்தைக்கு பால் வாங்கிவரச்சொல்லி, குழந்தைக்கு புகட்டிக்கொண்டிருந்தேன். அப்போது டாக்டர்களும், நர்சும் சீக்கிரம் சீக்கிரம் என என்னை அவசரப்படுத்தி, பொம்மியின் உடல் ஏற்றப்பட்டிருந்த மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். பின்பு, பொம்மியின் அம்மா, வீட்டுக்காரர் இருவரையும் ஏற்றிக்கொண்டு, விடிவதற்குள் இருட்டிலேயே எங்களை பாலப்பட்டில் இறக்கிவிட்டு சென்றார்கள்.

கண்டறிந்தைவகள் :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்த, கிராம உதவியாளராக பணியாற்றுகின்ற பரமசிவம் & பொம்மி தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். 6&வது குழந்தையாக ஆண் குழந்தை கடந்த 19.10.07 அன்று மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்துள்ளது என்பதையும், 25.10.07 அன்று மேற்படி பொம்மிக்கு, மேற்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுபாடு அறுவைசிகிச்சை நடந்துள்ளது என்பதையும், மேற்படி பாலப்பட்டு கிராமத்திலிருந்து அதே நாளில் மலர் க/பெ ஜெயமூர்த்தி என்பவர், தனது உறவினர் அல்லி க/பெ சோமு என்பவர் உதவியுடன் அறுவைசிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்து அறிய முடிந்தது.

 அறுவை சிகிச்சை நடந்த பின்பு, மேற்படி பொம்மியின் உடல் மிகவும் பலகீனம் அடைந்துள்ளது என்பதையும், தொடர்ந்து இருமலும், வயிற்று வலியும் இருந்துள்ளது என்பதையும், அதற்காக பணியில் இருக்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோரிடம் போய் சொல்லும் போது ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருக்கு சரியாகிப்போகிவிடும் என்று கூறி திருப்பியனுப்பி விடுகிறார்கள் என்பதையும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதையும் கண்டறிய முடிந்தது.

 மேற்படி பொம்மிக்கு வயிறு வலி இருப்பதையும், நாளுக்கு நாள் உடல் பலகீனம் அடைந்து வருவதையும் பொம்மியின் தாயாரும், கணவரும் நர்ஸ் இடம் சொன்னபின்பும், கவனம் செலுத்தி மருத்துவம் பார்க்கப்படவில்லை என்பதையும், அதன் காரணமாக புதுவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக எழுதித் தரும்படி கேட்டும், மருத்துவர்கள் மறுத்துள்ளார்கள் என்பதையும் வாக்குமூலங்களின் அடிப்படையில் கண்டறிய முடிந்தது.

 கடந்த 29.10.07 அன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மேற்படி பொம்மி பாத்ரூம் சென்று, வயிற்று வலி காரணமாக படுக்கைக்கு திரும்ப முடியாமல், வயிற்றை பிடித்துக்கொண்டு பாத்ரூம் அருகிலேயே உட்கார்ந்துள்ளார் என்பதையும், மேற்படி பொம்மியின் தாயார், கணவர், சாட்சி அல்லி ஆகியோர் சேர்ந்து பொம்மியை தூக்கிவந்து அவர் படுக்கை அருகில் உட்கார வைத்துள்ளனர் என்பதையும், அதன் பின்பு பொம்மி கடுமையான வயிற்று வலி காரணமாக புரண்டு, புரண்டு படுத்துள்ளார் என்பதையும், சில நிமிடங்களில் சத்தமில்லாமல் அடங்கி அமைதியாகிவிட்டார் என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்து அறியமுடிந்தது.

 பொம்மி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டபோது அந்தப்பகுதியில் பணியில் இருக்கவேண்டிய நர்ஸ் இல்லை என்பதையும், எப்போதுமே இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய நர்ஸ் இருப்பதில்லை என்பதையும், வலியால் அவதிப்படுகிறார் என்று கூறியபின்பும், நர்ஸோ, மருத்துவர்களோ உடனடியாக வந்து பார்க்கவில்லை என்பதையும், பொம்மி இறந்து பின்புதான் மருத்துவர், 2 நர்ஸ், கம்பவுன்டர் ஆகிய நான்கு பேரும் வந்து பார்த்து, கீழே கிடந்த பொம்மியை, மேற்படி நால்வரும் சேர்ந்து, கையை காலை பிடித்து, தூக்கி படுக்கையில் வைத்து, பொம்மி இறந்ததை உறுதிபடுத்தியுள்ளனர் என்பதையும் கண்டறிய முடிந்தது.

 அதன்பின்பு அவசர அவசரமாக அதே நேரத்தில், பொம்மியின் உடலை மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றி, ஒரு நர்ஸ், கம்பவுன்டர் ஆகியோருடன், கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி பொம்மியின் தாயாரையும், கணவரையும் இழுத்து ஆம்புலன்சில் போட்டுக்கொண்டும், மேற்படி அல்லி என்பவர் பிறந்து சில நாட்களே ஆன பொம்மியின் கைக்குழந்தையை தூக்கிகொண்டும் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது என்பதையும், மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் கொல்லியங்குணத்தைச் சேர்ந்த இளைஞர் ஆம்புலன்ஸை ஓட்டியுள்ளார் என்பதையும் கண்டறிய முடிந்தது.

 ஆம்புலன்ஸ் நேராக பாலப்பட்டு கிராமத்திற்கு சென்று, மேற்படி பொம்மியின் உடலை அவரது வீட்டருகில் கொண்டு செல்லாமல், தெருமுனையில் இறக்கி வைத்துவிட்டார்கள் என்பதையும் கண்டறிந்துள்ளோம்.

 மாலை சுமார் 4 மணியளவில் மேற்படி பரமசிவத்தின் உறவினர்களான குணா, பிச்சைமுகமது உள்ளிட்டோர்கள் உதவியுடன், மேற்படி பரமசிவம் மயிலம் காவல்நிலையம் சென்று, தவறான சிகிச்சையளித்து தனது மனைவியின் இறப்புக்கு காரணமான மருத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தந்துள்ளார்.

 மயிலம் காவல் துறையினர், பொம்மியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அன்று இரவு 9.00 மணியளவில் கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக சி.ஆர்.பி.சி 174 என்கிற சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்கு பதிய திட்டமிட்டுள்ளனர்.

 மறுநாள் 30.10.07 அன்று, தகவலறிந்து மருத்துவமனை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் மீது இ.த.ச பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யவேண்டும் என மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள். திண்டிவனம் வட்டாட்சியரும், பொறுப்பிலிருந்த செஞ்சி டி.எஸ்.பியும் மருத்துவமனை சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவர்கள் மீது இ.த.ச பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும், இறந்த பொம்மியின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத்தருவதாகவும் சொல்லியுள்ளனர்.

 அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டு, உடலைப் பெற்றுக்கொண்டு, பாலப்பட்டு கிராமத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

 மயிலம் காவல்துறையினர் கா.நி.கு.எண் 599/07 பிரிவு 304(வீவீ) இ.த.ச பிரிவுகளின்படி, மேற்படி பரமசிவம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 06.11.07 அன்று மேற்படி பரமசிவம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தனது குடும்பச்சூழலை சொல்லி, நிவாரணமும், வழக்கின்மீது நடவடிக்கையும் கேட்டு எழுத்துமூலமாக புகார் மனு தந்துள்ளார்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புகாரின் மீது நடவடிக்கை கோரி, மேற்படி பரசிவம் மீண்டும் 22.11.07 அன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

 மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், நர்சுகள், உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பதையும், உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் இரவில் தங்கவேண்டிய பணி நர்சுகள் யாரும் எப்போதும் தங்குவதில்லை என்பதையும், அதனால்தான் பொம்மி போன்ற மரணங்கள் நிகழ்கின்றன என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்தும் அறிய முடிந்தது.

 மேலும், உள்நோயாளிகள் பிரிவில் இரவில் பணி மருத்துவர்களோ, பணி நர்சுகளோ தங்குவதில்லை என்பதையும், உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு திடீரென்று ஏற்படும் உடற்கோளாறுகளை தகவல் சொன்னாலும் உடனடியாக சீரியசாக நினைத்துப் பார்ப்பதில்லை என்பதையும் கண்டறியமுடிந்தது.

 சமீபத்தில் மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பாதிராப்புலியூர் என்கிற கிராமத்தில் இருந்து சென்ற பெண் ஒருவருக்கு குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சை செய்யும்போது, கர்ப்பபையும் சேர்த்து தைத்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அப்பெண்ணை புதுவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு, அங்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் பலரிடம் பேசியதிலிருந்து அறிய முடிந்தது.

 பொம்மியின் மரணம் குறித்து போடப்பட்டுள்ள கு.எண் 599/07, பிரிவு 304(வீவீ) இ.த.ச என்கிற வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மயிலம் போலீசாரிடம் கேட்டபோது, ‘‘பொம்மி கீழே விழுந்து, தலையில் அடிப்பட்டதில் இறந்துபோனதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட சொல்கிறது. கெமிக்கல் ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். இறுதி அறிக்கை வந்தால்தான் தெரியும்’’ என்று கூறினார்.

 இச்சம்பவம் தொடர்பாக திண்டிவனம் வட்டாட்சியர் திரு.சுப்பிரமணி அவர்கள் நம்மிடம், ‘‘இது ஐ.பி.சி வழக்கு. போலீஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். வயிற்று வலி காரணமாக பாத்ரூம் சென்று வந்த பொம்மி சிலநிமிடங்களில் இறந்துள்ளார். பாத்ரூமிலிருந்து விழுந்து அடிபட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பும்போது, வழியில் இறந்து போனதாகவும் மருத்துவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். இதற்கு மேல் இதில் ஜெ.டி &தான் விசாரிக்கவேண்டும். எங்களைப்பொறுத்த அளவில் நிவாரணத்திற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளோம். அவர் அரசுக்குச் சொல்லவேண்டும்’‘ என்று கூறிமுடித்தார்.

 நடந்த சம்பவம் தொடர்பாக மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் திரு.தங்கதுரை அவர்கள் நம்மிடம், ‘‘பாத்ரூம் போன பொம்மி. வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு மயக்கமாகிவிட்டார். நாங்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவ மனைக்கு அனுப்பும்போது வழியில் பொம்மி இறந்துள்ளார். பொம்மிக்கு தலையில் காயம் பட்டுள்ளது.’’ என்று கூறினார்.

பரிந்துரைகள் :

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த பின்பு, ஒருவாரம் கழித்து குடும்பகட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யும் வரை, மேற்படி பொம்மியின் உடல்நிலை எந்தவித குறைபாடும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்துள்ளது. குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைக்கு பின்புதான் வயிற்று வலி, தொடர் இருமல் போன்றவைகள் இருந்துள்ளது. அதன்பின்புதான் உடல் பலகீனமாகி பொம்மி இறந்துள்ளார். எனவே பொம்மியின் மரணத்துக்கு காரணமான மருத்துவ அலுவலர் திரு.தங்கதுரை, மற்றும் அப்போது பணியில் இருந்த நர்ஸ், கம்பவுன்டர் உள்ளிட்டோர் பெயர்களை, மயிலம் காவல் நிலைய கு.எண் 599/07 வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தவறான அறுவைசிகிச்சை மற்றும் உரிய முறையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் மற்றும் நர்சுகளின் அலட்சியம் காரணமாகவே பொம்மி இறந்துள்ளார். இதற்கு காரணமான மருத்துவர்கள், நர்சுகள், கம்பவுன்டர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோரை உடனடியாக பணி நீக்கம் செய்தும், அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

 மருத்துவர்களின் தவறான அறுவைசிகிச்சையாலும், அலட்சியத்தாலும் 29.10.07 அன்று அதிகாலை 3.30 மணியளவில் பொம்மி உயிரிழக்க நேரிட்டுள்ளது. ஆனால் ஆரம்ப சுகாததார நிலைய மருத்துவர்கள், பொம்மியை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். போகும் வழியில் இறந்ததாகவும் இப்போது கூறுகின்றனர். ஆனால் அன்று பொம்மியின் தாயார், கணவர், சாட்சி அல்லி ஆகியோரிடம் பொம்மி இறந்துபோனதாகத்தான் மேற்படி மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.அபாய கட்டத்தில் இருந்த பொம்மிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை, மேலும், மேல் சிகிச்சைக்காக அனுப்புவதற்கான கடிதம் எதுவும் நோயாளிகளின் உறவினர்களிடம் தரப்படவில்லை. போகும் வழியில் இறந்திருந்தால், நேராக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கோ அல்லது மீண்டும் மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ பொம்மியின் உடலை கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்பதுதான் நடைமுறை. பொம்மிக்கு அவ்வாறு செய்யப்படாமல், நேராக யாருக்கும் தெரியாமல் ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெரிய போராட்டத்திற்கு பின்புதான் காவல்துறையினரும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இவ்வாறு உள்ள நிலையில், உள்ளூர் காவல் துறையினர் இவ்வழக்கை விசாரித்தால், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நீதியும், நியாயமும் கிடைக்காமல் போவதுடன், பொம்மி மரணம் குறித்த உண்மைச் சம்பவங்கள் வெளிவராமல் போகும் வாய்ப்புள்ளது. எனவே, பொம்மி மரணம் தொடர்பான இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக செல்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதும், அறுவை சிகிச்சைகளிலும் மருத்துவர்கள் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். எனவே, மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை நடைபெற்றுள்ள குடும்ப கட்டுபாடு அறுவைசிகிச்சைகள் தொடர்பாக முழுமையான ஒரு விசாரனை நடத்தப்படவேண்டும்.

 மேற்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனே நிரப்பப்படவேண்டும்.

 கர்ப்பினி பெண்கள், குழந்தை பிறந்த பின்பும், குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் பெண்களின் உடல் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம சபா கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர் பெண் ஆசா ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிப்பார். அவ்வாறு மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசா தன்னார்வலர், நிலையத்தை கண்காணித்துள்ளாரா என்பது கண்டறியப்படவேண்டும். இதுவரை ‘‘ஆசா’’ தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் உடனடியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு ஆசாக்களை செயல்பட வைப்பதன் மூலம் பொம்மி போன்ற மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்கலாம்.

 மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த பொம்மியின் 6 குழந்தைகளும் தாயில்லாமல் ஆதவற்ற நிலையில் உள்ளது. எனவே அக்குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும்.

Thursday, December 20, 2007

சக்கிலியனா நீ?... கிடையாது போ!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ள நம்பியூர் பேரூராட்சியில் பிளியம்பாளையம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் த/பெ பழனி. இவர் 2-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஹரிணிக்கு தசராபாளையம் கருப்பராயன் கோயிலில் 21.11.07 அன்று காதனி விழா நடத்தி, அன்றே வரவேற்பும், விருந்தும் நடத்த நம்பியூர்&காந்திபுரம் கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை பதிவு செய்துள்ளார். மேற்படி மாரியப்பன் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்த, மேற்படி மண்டப நிர்வாகி அய்யாசாமி, சக்கிலியர்களுக்கு இந்த மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த இடம் தரமுடியாது எனக்கூறி மறுத்து, பதிவை ரத்து செய்துள்ளார். அதன்பின்பு நம்பியூர் காவல் ஆய்வாளர் தலையிட்டதின் பேரில் மீண்டும் மண்டபத்தை வாடகைக்கு தந்துள்ளார் நிர்வாகி அய்யாசாமி. ஆனால் சாதி இந்துக்கள் தொடர்ந்து மேற்படி மாரியப்பனை அந்த மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளனர். கோபி நகர மன்ற முன்னாள் தலைவர் வலசு முத்துசாமி என்பவர் ‘‘மீறி மண்டபத்தில் நடத்தினால் குழந்தையை கொலை செய்துவிடுவதாக’’ மாரியப்பனை மிரட்டியுள்ளார்.

அதன்பின்பு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 21.11.07 அன்று நம்பியூர் பகுதியில் அரசு அதிகாரிகள் 144தடையுத்தரவை அமுல்படுத்தி, நிகழ்ச்சியை தடைசெய்ததோடு, வெளியூரிலிருந்து வந்த மாரியப்பனின் உறவினர்களை காவல் துறையினர் மிரட்டி திருப்பி அனுப்பியதுடன், மாரியப்பன், அவரது மனைவி விஜியா உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.

மேற்படி விஜியா கொடுத்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் மண்டப நிர்வாகி அய்யாசாமி உள்ளிட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்ட அமுலாகக்கத்தை ரத்து செய்யக்கோரியும் மண்டப நிர்வாகிகளும், சாதி இந்துக்களும், தி.மு.க., அ.தி.மு.க., காங்.ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மற்றும் தலித் அல்லாத பிற சாதியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்படி விஜியா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், மண்டபத்தில் தலித் மக்கள் நிகழ்ச்சி நடத்த அனுமகோரியும், பல்வேறு தலித் மக்கள் அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்தவிருந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் 20.12.07 இன்று அதிகாலை 4.00 மணியளவில் தலித் விடுதலைக் கட்சி மாநிலத் தலைவர் செங்கோட்டையன் என்பவரை கோவையில் அவரது வீட்டிலிருந்து பிடித்துச் சென்றுள்ளனர். அவரை எங்கு வைத்துள்ளனர் என்பதை போலீசார் சொல்லாமல் மறைத்து வருகின்றனர். மேலும் இன்று அதிகாலையிலிருந்தே போலீசார் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தலித்துகளை ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து வருகின்றனர். தற்போது 600&க்கும் மேற்பட்ட தலித்துகளை கோபி நகராட்சி திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். இதில் 100&க்கும் மேற்பட்ட பெண்கள். சுமார் 60 குழந்தைகளும் உள்ளனர். தலித் மக்களை கைது அடைத்து வைத்துள்ள போலீசார் அவர்களுக்கு உணவு அளிக்காமல் உள்ளனர். குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், பழம் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதோடு, அச்சுறுத்தியும் வருகின்றனர்.

அதிகாலை 4.00 மணிக்கு கைது செய்யப்பட்ட மேற்படி தலித் விடுதலைக் கட்சி தலைவர் செங்கோட்டையன் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை சொல்ல மறுத்து வருகின்றனர். மேலும் நம்பியூர் மாரியப்பன், தங்கவேல், விடுதலை செல்வம், பாலா செல்வம் உள்ளிட்டர்வகளை மக்களுடன் மண்டபத்தில் வைக்காமல், நம்பியூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். உறவினர்கள் சென்று பார்க்கவும் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,

• கைது செய்யப்படிருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை அவர்களது இருப்பிடத்தில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

• தொடர்ந்து சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற காவல் துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.


• தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனையம் போன்றவை தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, அண்மைக் காலமாக வன்கொடுமை அதிகம் நிகழும் ஈரோடு மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து, நம்பியூர் பகுதியில் தீண்டாமையை கடைபிடித்து வரும் சாதி இந்துக்களின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 16 &ன் கீழ் கூட்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

• அருந்ததியர் சமூகத்தினருக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கின்ற, சாதி ஆதிக்கத்துடன் திகழ்கின்ற மேற்படி நம்பியூர் & காந்திபுரம் கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண்டபத்தின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Saturday, December 15, 2007

பத்திரிகைச் செய்தி

பத்திரிகைச் செய்தி

05.12.07

திண்டிவனத்தில் 04.12.07 அன்று மாலை மனித உரிமை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும், வழக்கறிஞர்களும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 56 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ‘‘திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கம்’’ என்ற பெயரில் மனித உரிமை இயக்கம் தொடங்கி செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த மனித உரிமை இயக்கத்திற்கு தலைவராக வழக்கறிஞர் அ.ராஜகணபதி, செயலாளராக இரா.முருகப்பன், பொருளாளராக கோ.லட்சுமி, துணைத் தலைவராக ச.செந்தாமரைக்கண்ணன், துணைச் செயலாளர்களாக து.சாரதா, ஆ.வெங்கடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக ஆசிரியர் மு.கந்தசாமி, பேராசிரியர் பிரபா.கல்விமணி, தி.அ.நசீர் அகமது, ஆசிரியர் நவா.ஏழுமலை, வழக்கறிஞர் மு.பூபால், வழக்கறிஞர் ஜெ.கலா, வே.மீனா, க.தனம், து.பாலு, வை.கருணாநிதி, சீ.ரேணுகா, ஆசிரியர். ரெஜினா, க.முனியம்மாள், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பின்பு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டது.

• திண்டிவனம் பூதேரியில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்ட கலாவின் வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றம் செய்யப்படவேண்டுமென்றும், குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும் என்றும், தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திண்டிவனம் நகர காவலதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடவேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட கலா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கியும், சாட்சிகளுக்கு பாதுக்காப்பு வழங்கப்படவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

• காந்திசிலை ஆட்டோ சங்கத்தலைவர் மோ.கணேசனை நிர்வாணமாக்கி, அடித்து, சித்தரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ரோசனை காவலர் மச்சப்பாண்டி என்பவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

• ஆதனப்பட்டு கிராமத்தில் பழங்குடி இருளர்களை கட்டிவைத்து சித்தரவதை செய்தவர்களை உடனே கைது செய்து, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத்தொகை வழங்கப்படவேண்டும்.

• கீழ்மாவிலங்கை நடத்துனர் ஏழுமலை கிரையம் வாங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும், ஏழுமலையை தாக்கிய ம.தி.மு.க பிரமுகர் தங்கமணி, மிரட்டிய தி.மு.க பிரமுகர் எம்.டி.முத்து ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

• குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தி.மு.க பிரமுகர் முரளிதரன், எம்.டி.முத்து, ம.தி.மு.க பிரமுகர் தங்கமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சித்தலைமைகு புகார் அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டது.


• மேற்கண்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி , உலக மனித உரிமை தினமான வரும் டிசம்பர் 10 &ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திண்டிவனம் வட்ட மனித உரிமைகள் இயக்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கபட்டது.

Thursday, December 13, 2007

உண்மையறியும் குழு அறிக்கை

திண்டிவனம் - பூதேரி கலா மீது
மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம்

உண்மையறியும் குழு அறிக்கை

334, நேரு வீதி, பூந்தோட்டத் தெரு, திண்டிவனம் - 604 001.
தொடர்புக்கு : 99429 93463, 94426 22970.


திண்டிவனம் பூதேரியில் உள்ள ஒத்தைவாடை தெருவில் கலா(27)-லட்சுமணன் தம்பதியினர் தங்களுடையய 3 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். லட்சுமணன் மூட்டை தூக்குதல், லாரிக்கு கிளினராக செல்லுதல் போன்ற வேலைகளுக்கு செல்வார். கலா வீட்டு வேலைகளுக்குச் செல்வார். அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் பரத் என்பவர், மேற்படி கலாவை பலசந்தர்ப்பங்களில் பாலியல் தொந்தரவு செய்து, உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். உடன்படாத கலா பரத்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26.09.07 அன்று இரவு 8.00 மணியளவில் மேற்படி கலா, திண்டிவனத்திலிருந்து பூதேரி செல்லும்போது, வழியில் உள்ள அகல்குளம் அருகே மேற்படி பரத், கலாவை கையை பிடித்து, வாயைப் பொத்தி மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். கலா அவரிடம் போராடி, சண்டையிட்டு, தள்ளிவிட்டு ஓடி வந்துள்ளார். அந்த ஊரில் ஆதரவாக யாரும் இல்லாத நிலையிலும், இரவு என்பதாலும், மறுநாள் 27.09.07 காலை, கலா தான் உறுப்பினராக உள்ள பவ்டா சுய உதவிக்குழு தலைவியும், திண்டிவனம் போலீஸ்லைன் பின்புறம் குடியிருப்பவருமான லட்சுமி க/பெ கோவிந்தன் என்பவரிடம் கூறியுள்ளார். அதன்பின்பு, மேற்படி லட்சுமி, தனது சுய உதவி குழுவில் உள்ள மீனா, தனது கணவரின் நண்பர் கனகசபை ஆகியோரை அழைத்துக்கொண்டு பூதேரி பரத்தின் வீட்டிற்குச் சென்று, பரத்தின் தந்தை நடராஜனிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால் பரத்தின் தந்தையோ, ‘‘என் மகன் அப்படித்தான் இருப்பான். தேவிடியாளுங்க நீங்க என்னா இப்பதான் பெரிசா கேக்க வந்தீட்டிங்க’’ என்று அவமானப்படுத்திப் பேசி, அடிப்பதாகவும் மிரட்டியுள்ளார். அதனால் பயந்துபோன அவர்கள் கலாவின் வீட்டிற்கு சென்று, காவல் நிலையம் செல்லலாமா அல்லது வழக்கறிஞரிடம் செல்லலாமா என்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, அவர்களது உறவினர்களான ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் கலாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். நடராஜன் கலாவின் முடியைப் பிடித்து அடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு கூடவே சென்ற சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் நடராஜனுடன் சேர்ந்து கலாவை அடித்து உதைத்துள்ளனர். அதைத் தடுப்பதற்கு முயற்சித்த மேற்படி லட்சுமியை அடித்து, மீனாவை கீழே பிடித்துத் தள்ளி, கனகசபையை மிரட்டியுள்ளார் மேற்படி பரத்.

அப்போது மேற்படி நடராஜன் ‘‘இவள மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்துடா’’ என்று கூறியுள்ளார். அப்போது கலா கத்தாமல் இருப்பதற்காக ஆண்டாள் என்பவர் கலாவின் வாயைப் பொத்தியுள்ளர். கண்ணம்மா என்பவர் கலாவின் கைகளை பிடித்துக்கொண்டுள்ளார். நடராஜன் கலாவின் முடியைப் பிடித்துகொண்டுள்ளார். அப்போது பரத் கலாவின் மீது மண்ணெண்யை ஊற்றிய பின்பு சங்கீதா தீக்குச்சி எடுத்து கொளுத்தியுள்ளார். தீப்பிடித்து எரிந்த நிலையில் கலா அங்கும் இங்கும் கத்திக்கொண்டே ஓடியுள்ளார். கொளுத்தியதும் நடராஜனும், அவருடன் வந்த மற்றவர்களும் அங்கிருந்து ஓடியிருக்கின்றனர். மேற்படி லட்சுமி, மீனா ஆகியோர் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி அணைத்து, கலாவை திண்டிவனம் அரசு மருத்து மனையில் சேர்த்துள்ளனர்.


மேற்கண்ட இச்செய்தியை அறிந்த உண்மையறியும் குழுவினர், கொளுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ள கலா, சாட்சிகளான லட்சுமி, கனகசபை, ஒத்தைவாடை தெருவில் உள்ள கலாவின் வீடு, தெருவில் உள்ள பொதுமக்கள், மருத்துவர்கள், கொளுத்திய நடராஜன், காவலதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தும், நேர்காணல் செய்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி கிடைத்த தகவல்களை அனைத்தையும் ஆய்வு செய்ததில் கீழ்கண்ட உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது :

கண்டறிந்த உண்மைகள்
• நடந்த சம்பவம் குறித்து, கலாவின் பக்கத்து வீட்டில் உள்ளவர், அத்தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரித்த வகையில், 27.09.07 அன்று சம்பவம் நடக்கும்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, உறவினர்களான ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோர் கலாவின் வீட்டிற்கு வந்துள்ளனர் என்பதையும், கலாவிடம் சண்டையிட்டு உள்ளனர் என்பதையும், மேற்படி சாட்சிகளான லட்சுமி, கனகசபை ஆகியோர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி நடராஜனும், அவருடன் வந்தவர்களும்தான் கலாவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளனர் என்பதையும் கண்டறிய முடிந்தது.

• மேற்படி பக்கத்து வீட்டில் உள்ளவர், அத்தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோர், கலா எரிந்த நிலையில் தோட்டத்திலிருந்து கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைய முற்பட்டார் என்றும், அப்போது கலாவின் வீட்டுக் கூரையில் சில இடங்களில் தீபிடித்தது என்றும், பிடுங்கப்பட்ட தீப்பிடித்த கூரைகள் தோட்டத்தில் போடப்பட்டிருப்பதையும் கூறினார்கள், தொடர்ந்து அவர்களிடம், கலாவை யார் கொளுத்தியது என்பது குறித்து கேட்டபோது சொல்லத்தயங்கினார்கள், ஆனால் அதே நேரத்தில் கலா தானாகவே கொளுத்திக்கொண்டதாகவும் ஒருவரும் சொல்லவில்லை. மேலும், மேற்படி மேற்படி கண்ணம்மாள் என்பவர் தானாகவே முன்வந்து, கலா தானாகவே கொளுத்திக்கொண்டதாக கூறினார். கண்ணம்மாவிடம் அவர் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டபோது அடுத்த தெருவில் உள்ளது என்று கூறினார். ஆனால் பிறகு விசாரித்தபோது கலாவின் வீட்டருகில்தான் கண்ணம்மாள் வீடும் உள்ளது என்பதையும், குழுவிடம் கண்ணம்மாள் அதை மறைத்து, அடுத்த தெருவில் உள்ளதாக மாற்றிச் சொல்லியுள்ளார் என்பதையும் கண்டறிய முடிந்தது.

• மேற்படி நடராஜனின் மகள் சங்கீதாவும், அவரது கணவர் ஏ.ராஜேஷ் இருவரும் கலாவின் வீட்டருகில் குடியிருந்து வந்துள்ளனர் என்பதையும், கலாவை கொளுத்திய சில நாட்களில் அந்த வீட்டை காலி செய்துள்ளனர் என்பதை, தற்போது அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரித்ததில் இருந்து கண்டறிய முடிந்தது.

• கலாவை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதும், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் மேற்படி ஏ.ராஜேஷ் உடனிருந்து கொண்டு, தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லும்படி கலாவிடமும், லட்சுமியிடமும் கூறிக்கொண்டிருந்துள்ளார் என்பதையும், திண்டிவனம் அரசு மருத்துமனையிலிருந்து, புதுவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துசென்ற முழு செலவையும் மேற்படி நடராஜன் தரப்பினரே செய்துள்ளனர் என்பதையும் லட்சுமி, கலா ஆகியோரின் வாக்குமூலத்திலிருந்து அறிய முடிந்தது.

• மேற்படி ஏ.ராஜேஷ், நடராஜனின் தம்பி செல்வம், ராஜேஷின் தாயாரும் சங்கீதாவின் மாமியாருமான சந்திரா, சங்கீதா, பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி, செல்வத்தின் அக்கா மகனான ரா.ராஜேஷ் ஆகியோர் அடிக்கடி மேற்படி சாட்சியான லட்சுமியின் வீட்டிற்குச் சென்று, மருத்துவ சிகிச்சையில் இருந்த கலாவிடம் மாற்றி சொல்லச்சொல்லும்படியும் வற்புறுத்தியும், மிரட்டியும் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேற்படி செல்வம், திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவரான கவிதாவின் கணவரும், நகர தி.மு.க பிரமுகரான முரளிதரன் அவர்கள் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு லட்சுமியை அழைத்துச்சென்று, மேற்படி முரளிதரன், ரா.ராஜேஷ், நடராஜனின் மற்றொரு தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்ட சுமார் 20 பேரை வைத்து கலாவை மாற்றி சொல்லச்சொல்லும்படி லட்சுமியை மிரட்டியுள்ளனர் என்பதையும் லட்சுமியின் வாக்குமூலத்தில் இருந்து அறிய முடிந்தது.

• சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து 29.09.07, 03.10.07 ஆகிய இரண்டு நாட்களும் திண்டிவனம் எஸ்.ஐ, ஒரு காவலருடன் சென்று கலாவை விசாரித்துள்ளார். ஆனால் வழக்கு எதுவும் பதியவில்லை என்பதையும் கண்டறியப்பட்டது. மேலும் 03.10.07 அன்று மாலை 7.00 மணியளவில் ஒரு காரில் எஸ்.ஐ சந்திரசேகர், மற்றொரு காவலர், மேற்படி ராஜேஷ் த/பெ ராஜீ, மேற்படி முனியாண்டியுடன், மேற்படி லட்சுமியை மிரட்டி, ஏற்றிக்கொண்டும், மற்றொரு காரில் மேற்படி செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மானூர் வழக்கறிஞர் ஒருவரும் என புதுவை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் என்பதையும், போலீசார் அப்போதும் கலாவிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர் என்பதையும், அப்போது போலீசார் கலாவிடம் எதுவும் எழுதப்படாத வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்பதையும் லட்சுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டறிய முடிந்தது.


• நடந்த சம்பவம் தொடர்பாக 05.10.07 அன்று கலாவின் அப்பா தேவராஜ், அம்மா சின்னபொன்னு ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நடவடிக்கை கோரி புகார் மனு கொடுத்துள்ளனர்.

• அதனைத் தொடர்ந்து 07.10.07 அன்று, கலாவின் அப்பா அவரது ஊரான வந்தவாசி அருகே உள்ள எச்சூரில் இருந்து ஜெய்சங்கர் என்கிற வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு, திண்டிவனம் காவல் நிலையம் சென்று வழக்கு போடாமலிருப்பது குறித்து விசாரித்துள்ளார். நடந்த சம்பவத்திற்கு நேரடி சாட்சி என வழக்கறிஞர் மூலம் அழைத்து செல்லப்பட்ட லட்சுமியை ஆய்வாளர் விசாரிக்க மறுத்து, வெளியில் ச்சீ.. ஓடு என்று அவமானபடுத்தி அனுப்பியுள்ளார். உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மேற்படி வழக்கறிஞர் ஜெய்சங்கர் இருவரும் தனியாக பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் புதுவை அரசு மருத்துவமனைக்கு சென்று கலாவிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மீண்டும் திண்டிவனம் காவல் நிலையம் வந்துள்ளார். அதன் பின்புதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கூட முக்கிய குற்றவாளியான பரத்தை தவிர்த்துவிட்டும், இ.த.ச.பிரிவு 324 &ல் மட்டும், சொத்து தகராறு என்றும் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதை லட்சுமியின் வாக்குமூலம், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றின் மூலம் கண்டறிய முடிந்தது.

• அதன்பின்பு 12.10.07 அன்று புதுவை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சொந்த ஊரான எச்சூருக்கு சென்ற கலா, மீண்டும் 15.10.07 அன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். தற்போது மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், 22.10.07 அன்று கலா உயரதிகாரிகள் அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளார். நடந்த சம்பவங்களை குறிப்பிட்டும், தான் மிரட்டப்பட்டது குறித்தும், தன்னை போலீசார் சாட்சியாக சேர்க்காதது குறித்தும் மேற்படி லட்சுமியும் விரிவான புகார் ஒன்றை 16.11.07 அன்று உயரதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார் என்பதையும் அறிந்தோம்.

• இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தைரியம் பெற்ற, மேற்படி நடராஜனின் மகளும், கலாவை தீக்குச்சி வைத்து கொளுத்தியவரும், மேற்படி பரத்தின் சகோதரியுமான சங்கீதா, அவரது தோழி சந்திரலேகா ஆகிய இருவரும், மேற்படி சாட்சியான லட்சுமியை அவரது வீட்டில் வைத்து மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, புகார் மனு ஏற்புச் சான்று (வரிசை எண் 269/07, நாள் : 12.11.07) மட்டும் வழங்கியுள்ளனர். அதன் பின்பு மேற்படி நடராஜனின் ஆதரவாளர்களால் கலாவின் கணவர் லட்சுமணன் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக லட்சுமணன் கொடுத்த புகாருக்கு போலீசார் புகார் மனு ஏற்புச்சான்று மட்டும் வழங்கியுள்ளனர் (வரிசை எண் 276/07 நாள் : 22.11.07) என்பதையும் கண்டறிய முடிந்தது.

• நடந்த சம்பவம் குறித்து மேற்படி நடராஜன் அவர்களிடம் கேட்டபோது, தன் மகன் அப்படி செய்யவில்லை என்றும், படிக்கின்ற அவன் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டான் என்றும், தான் அவனை அப்படி வளர்க்கவில்லை என்றும், சம்பவத்தன்று கலா வீட்டிற்கு சென்றேன் என்றும், ஆனால் தான் கொளுத்தவில்லை என்றும் கூறினார்.

• கலா மேற்படி நடராஜன் குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டது குறித்தும், மிரட்டப்பட்டது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் மீதும், தாக்கப்பட்டது தொடர்பாக லட்சுமணன் கொடுத்த புகாரின் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, திண்டிவனம் காவல் நிலைய எஸ்.ஐ சந்திரசேகர் அவர்களிடம் 23.11.07 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, விசாரித்து கொண்டிருப்பதாகவும், ஆள் அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.


கொளுத்தப்பட்டதில் மிகவும் பாதிக்கப்பட்டு, 3 சிறு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வறிய சூழலில் வாழ்ந்து வரும் கலாவிற்கு நீதியும், நியாயமும் கிடைக்க தாங்கள் ஆவனசெய்து, தக்க நடவடிக்கை எடுக்க கீழ்கண்ட கோரிக்கைகளை தங்கள் மேலான கவனத்திற்று பரிந்துரைக்கின்றோம்.

பரிந்துரைகள்
நடராஜன், பரத் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்!• கலாவை பாலியல் தொந்தரவு செய்து, பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த மேற்படி பரத் த/பெ நடராஜன், இது குறித்து நியாயம் கேட்டதற்காக, கலாவை உயிரோடு எரித்து, கொலை செய்ய முயற்சித்த மேற்படி நடராஜன், பரத், சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோர் மீது, திண்டிவனம் காவல் நிலைய குற்றஎண் 935/07 நாள் ; 07.10.07 பிரிவு 324 இதச என்ற வழக்கைத் திருத்தி, உரிய வழக்கு பதிவு செய்து, மேற்படி பரத்தை குற்றவாளியாக சேர்த்து, உடனடியாக அனைவரையும் கைது செய்யவேண்டு.

சி.பி.சி.ஐ.டி புலன் விசாரனைக்கு உத்திரவிடு!
• திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர், தொடக்கத்திலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், பின்னர் காலம் தாழ்த்தி, சாதாரண இந்திய தண்டனை சட்டம் 324 பிரிவில் வழக்கு பதிவு செய்திருப்பதும், சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளை சம்பவத்தை மாற்றி சொல்லச்சொல்லும் படி வற்புறுத்தியிருப்பதாலும், இதுவரை குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும், இவ்வழக்கில் மேற்படி உதவி ஆய்வாளர் குற்றவாளிகளுக்கு சாதாகமாகவே செயல்பட்டு வருகிறார் என்பதையே காட்டுகிறது என்பதாலும், மேலும் இதுவரை கலா உள்நோயாளியாக இருந்து வரும் நிலையிலும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் புலன்விசாரனை செய்ய உத்திரவேண்டும்.

கலாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கு!
• கலா மருத்துவமனையில் இருப்பதால் குடும்பம் வருமானம் ஏதுமின்றி 3 பெண் குழந்தைகளும் வறிய நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே கலாவின் குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரண உதவிகள் அளிக்கவேண்டும். மேலும் கலாவின் குழந்தைகளை அரசு இல்லத்தில் தங்க வைத்து படிப்பதற்கான உதவிகளை செய்ய வேண்டும்.

திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரனை கைதுசெய்!
• கலாவை எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட செய்தி கிடைத்தும், மூன்று நாள் தாமதமாக சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்றும், பிறகு 03.10.07 அன்று மீண்டும் வாக்குமூலம் பெற்றும் வழக்கு பதிவு செய்யாமல், 07.10.07 அன்று புதுவை அரசு மருத்துமனைக்கு செல்லாமல், கலாவிடம் வாக்குமூலம் பெறாமல், மருத்துவமனைக்குசென்று வாக்குமூலம் பெற்றதாக, போலியான வாக்குமூல ஆவணம் தயாரித்து, முதன்மைக்குற்றவாளியை காப்பாற்றும் நோக்குடன் வழக்கு பதிவு செய்துள்ள திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மீது, சட்டப்படி உரிய கிரிமினல் வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாட்சிகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடு!
• முக்கிய சாட்சியான லட்சுமியை, திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவரான கவிதாவின் கணவரும், நகர தி.மு.க பிரமுகருமான முரளிதரன் அவர்கள் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு அழைத்துச்சென்று மிரட்டிய, மேற்படி முரளிதரன், ரா.ராஜேஷ், நடராஜனின் மற்றொரு தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்டோர் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கு எடுக்கப்படவேண்டும். மேலும், திண்டிவனம் காவல் நிலையத்தில் 12.11.07 அன்று லட்சுமியும், 22.11.07 அன்று லட்சுமணனும் கொடுத்த புகாரின் மீதும் உரிய வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலாவிற்கு சென்னையில் உயர்மருத்துவ சிகிச்சை வழங்கு!
• உடம்பில் தீக்காயத்துடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற கலாவிற்கு, அரசு தனது பொறுப்பில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மாவட்ட காவல் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டிக்கிறோம்!
• மேற்படி சம்பவம் தொடர்பாக 05.10.07 அன்று கலாவின் பெற்றோர் நேரிலும், 22.10.07 நாளிட்டு கலாவும், 16.11.07 நாளிட்டு லட்சுமியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். 13.11.07 அன்று தினமலர் நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு பின்பும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பெண்கள் மீதான கடுமையான குற்றச்செயல்களில் கூட இதுபோன்று மெத்தனமாக இருப்பது என்பது, காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது.

முக்கிய சாட்சியான லட்சுமியை பாராட்டுவோம்!
• குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் துறையும், நடராஜனின் ஆட்களும் மிரட்டி வரும் நிலையிலும், சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியான லட்சுமி, கலாவுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வரும் லட்சுமி பாராட்டப்பட வேண்டிய பெண்மணி ஆவார்.


உண்மையறியும் குழுவினர்

1. பேராசியர் பிரபா.கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்
2. ஆசிரியர் மு.கந்தசாமி, நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு
3. வழக்கறிஞர்அ.ராஜகணபதி, விடுதலைச் சிறுத்தைகள்
4. வழக்கறிஞர் லூச,மனித உரிமை இயக்கம்
5. பி.வி.ரமேஷ,மனித உரிமைகள் கழகம்
6. இரா.முருகப்பன்,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்

Wednesday, December 12, 2007

பெண்ணாகப் பிறந்தால்....


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், போலீஸ்லைன் பின்புறம் வசிக்கின்ற கோவிந்தன் என்பவரின் மனைவி லட்சுமியாகிய நான் அளிக்கின்ற வாக்குமூலம் யாதெனில் :

நான் மேற்கண்ட முகவரியில் என் கணவர் கோவிந்தன், பிள்ளைகள் கோபி(17), வனஜா (14), தினேஷ் (4) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறேன். மேலும் நான் பவ்டாவின் கிடங்கல் பிள்ளையார்கோயில் தெரு 10-வது குழு என்கிற மகளிர் சுய உதவிக்குழுவின் பிரதிநிதியாகவும் இருந்து வருகிறேன்.

2). திண்டிவனம் நகராட்சியின் 23-வது வார்டு, பூதேரி ஒத்தைவாடை தெருவில் கலா (27) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது சொந்த ஊர் வந்தவாசி அருகே உள்ள எச்சூர் ஆகும். இங்கு அவருக்கு உறவினர்கள், ஆதரவாளர்கள் யாரும் இல்லாத நிலையிலும், அவருடைய கணவர் லட்சுமணன் மூட்டை தூக்குதல், லாரியில் கிளினரக இருப்பது போன்ற வேலைகள் செய்து வருகிறார். 9, 7, 5 வயதில் 3 பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி கலா எங்களுடைய சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். அதனால் அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். அப்போது அவருடைய குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல்லி வேதனைபடுவார். நான் ஆறுதல் சொல்லுவேன்.

3). இந்நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் கலா, என்னிடம் வந்து அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் பரத் என்பவன் 2 முறை தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி வருத்தப்பட்டார். கடந்த 27.09.07 அன்று காலை 7 மணிக்கு என்வீட்டிற்கு வந்தார் கலா. முதல் நாளிரவு (26.07.07) 8 மணியளவில் திண்டிவனத்திலிருந்து பூதேரி போகும்போது வழியில் உள்ள அகல் குளத்தருகில் மேற்படி பரத் கலாவின் கையை பிடித்து இழுத்து, வாயைப் பொத்தி, அருகில் உள்ள மறைவான பகுதிக்கு இழுத்து சென்று, ‘‘இப்பவே என்கூட நீ படுக்கனும், இல்லன்னா இங்கேயே காலி பண்ணிடுவேன்’’ என்று மிரட்டியுள்ளான். ஆனால் கலா அவனிடம் சண்டைபோட்டு, அவனை தள்ளிவிட்டு ஒடியிருக்கிறார். அப்போது இரவென்பதால் மறுநாள் காலையில் கலா என்னிடம் நடந்தவைகளை கூறினார்.

அதன்பின்பு கலாவுடன் நான், சுய உதவிக்குழுவில் உள்ள மீனா க/பெ கண்ணன், கட்டளையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கனகசபை த/பெ குப்புசாமி ஆகியோர் பூதேரி சென்று மேற்படி நடராஜனை அவரது வீட்டில் நேரில் பார்த்து அவரது மகன் பரத் கலாவிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து நியாயம் கேட்டோம். ஆனால் அவர் மகனைக் கண்டிக்காமல், ‘‘என் மகன் அப்படித்தான் இருப்பான். தேவிடியாளுங்க நீங்க என்னா இப்பதான் பெரிசா கேக்க வந்தீட்டிங்க’’ என்று எங்களை பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்திப் பேசினார். மேலும் எங்களை அடிப்பதாகவும் மிரட்டினார்கள். அதனால் பயந்துகொண்டு நாங்கள் கலாவின் வீட்டிற்குச் சென்று, வெளியில் நின்றுகொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா அல்லது வக்கீலிடம் போகலாமா என்று பேசிக்கொண்டிருந்தோம். பின்பு வக்கீலிடம் போகலாம் என்றும், பணம் ஏதும் இருந்தால் எடுத்து வருமாறு கலாவிடம் சொன்னேன். கலா பணம் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றார். அப்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, அவர்களது உறவினர்கள் ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் கலாவின் வீட்டிற்கு வந்தனர். பரத் தன்னுடைய கையில் ஒரு வெள்ளை நிறமுள்ள மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தான்.

4). நடராஜன் கலாவின் வீட்டிற்குள் நுழைந்து கலாவின் முடியைக் பிடித்து அடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றார். அங்கு கூடவே சென்ற சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் நடராஜனுடன் சேர்ந்து கலாவை அடித்து உதைத்துக்கொண்டிருந்தனர். கலா ‘‘என்னை விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள்’’ என்று கதறினாள். நாங்கள் தடுப்பதற்கு முயற்சித்த போது மேற்படி பரத் என்னை அடித்துவிட்டு, மீனாவை கீழே பிடித்து தள்ளினான். அப்போது மேற்படி நடராஜன் ‘‘இவள மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்துடா’’ என்று கூறிய சத்தம் கேட்டது. அப்போது கலா கத்தாமல் இருப்பதற்காக ஆண்டாள் என்பவர் கலாவின் வாயைப் பொத்தினார். கண்ணம்மா என்பவர் கலாவின் கைகளை பிடித்துக்கொண்டார். நடராஜன் முடியைப் பிடித்துகொண்டார். அப்போது பரத் கலாவின் மீது மண்ணெண்யை ஊற்றினான். சங்கீதா தீக்குச்சி எடுத்து கொளுத்தினார்.

5). தீப்பிடித்து எரிந்த நிலையில் கலா கத்திகொண்டே ஓடி வந்தார். மேற்படி நடராஜனும், அவருடன் வந்தவர்களும் ஓடி விட்டனர். தீப்பிடித்து கத்திக்கொண்டிருந்த கலாவின் மேல் தண்ணீரை ஊற்றி அணைத்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். என்னுடன் மீனா, கனகசபை, சந்திரலேகா க/பெ முத்து ஆகியோர் மருத்துவமனை வந்தனர். அங்கு செய்திகேள்விபட்டு மேற்படி சங்கீதாவின் கணவர் ராஜேஷ் த/பெ ஏழுமலை வந்து என்னிடமும், கலாவிடமும் தானாகக் கொளுத்திக் கொண்டதாக சொல்லச் சொன்னார். கலா மருத்துவர்களிடம் 5 பேர் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகக் கூறினார். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கலாவை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஆம்புலன்ஸ் செல்லும்போது திண்டிவனம் மேம்பாலம் அருகே இராமதாஸ் கிளினிக் அருகில் வைத்து மேற்படி நடராஜன் தம்பி செல்வம் என்பவர் ராஜேஷ் இடம் செலவுக்கென்று ரூ 2000/-கொடுத்தார். மேற்படி ராஜேஷ், முத்து, 2 வார்டு பாய் கூடவே வந்தார்கள். ஆம்புலன்சில் போகும்போது வழியில் ராஜேஷ் என்னிடமும், கலாவிடமும் ‘‘கொளுத்தியது தப்புதான். அதுக்கு என்னா செய்யனுமோ செய்றோம். கேஸ் மட்டும் வேண்டாம் தானாகவே கொளுத்திக்கொண்டதாகச் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சேரும்போதும் கலா மருத்துவர்களிடம் தன்னை 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகக் கூறினார். மேற்படி செல்வம் அன்று மாலையே மருத்துவ மனைக்கு வந்துவிட்டார். அன்று இரவு சுமார் 12 மணியளவில் கலாவின் கணவர் லட்சுமணன், தந்தை தேவராஜ், தாயார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

6). நான் 28-ஆம் தேதி மாலையும், 29&ஆம் தேதி காலையும் திண்டிவனம் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு எரித்து, 3 நாட்களாகியும் இதுவரை போலீசார் விசாரிக்க வரவில்லை என்பதைக் கூறினேன். ஆனாலும் போலீசார் 29&ஆம் தேதி மதியம் வரை வரவில்லை. எனவே அன்று சுமார் 12.30 மணியளிவில் நான் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சுமார் 2.00 மணியளவில் வந்தேன். அப்போது எஸ்.ஐ, மற்றும் ஒரு போலீசார் ஆகிய இருவரும் வெளியில் கிளம்பிச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிலர், ‘‘நீ பொம்பள தனியா வந்தா கேஸ் எடுக்க மாட்டாங்க, போய் தெரிஞ்சவங்க யாரையாவது அழைச்சிகிட்டு வாங்க’’ என்றார்கள். அதனால் நான் எங்கள் வார்டு கவுன்சிலர் கவிதா அவர்களின் கணவர் முரளி அவர்களை சந்தித்து, நடந்தைவகைகளைக் கூறி உதவி கேட்டேன். அவர் உடனடியாக மேற்படி செல்வத்தை வரவழைத்தார். நான் பக்கத்து அறையில் இருந்தேன். அங்கு வந்த செல்வம், கொளுத்தியது உண்மை என்றும், அந்தப் பெண் குடும்பத்திற்கு ஏதேனும் செய்து, பணம் கொடுத்து சரி செய்து விடுவதாகவும் கூறினார். அவர் போன்பின்பு முரளி என்னை அழைத்து ‘‘அவங்க எனக்கு நீண்ட நாள் பழக்கம். அதனால் நான் இந்த வழக்குல உனக்கு எதுவும் உதவி செய்ய முடியாது’’ என்று கூறிவிட்டார்.

7). பின்பு நான் என்னுடைய வீட்டிற்குச் சென்றேன். இதனையடுத்து மேற்படி சங்கீதா மாமியார் சந்திரா, மேற்படி ராஜேஷ், செல்வம், பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் என் வீட்டிற்கு வந்து ஆஸ்பத்திரிக்கு போலீஸ் வந்து விசாரித்தார்களா என்று என்னிடம் கேட்டனர். நான் இருக்கும் வரை போலீஸ் வரவில்லை என்று அவர்களிடம் கூறினேன். உடனே அவர்கள், ‘‘போலீசுகிட்ட அந்தப் பொண்ணு உண்மையைச் சொல்லிரப்போவுது.... நீ போய் மாற்றிச் சொல்லச்சொல்லு’’ என்று வற்புறுத்தினார்கள். நான் குளித்துவிட்டு அன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டுச்சென்றேன். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதும், கலாவின் அம்மா என்னிடம், அன்று பிற்பகல் போலீஸ் வந்து விசாரித்ததாகவும், அப்போது கலா அவர்களிடம், மேற்படி 5 நபர்கள் அவளை தீ வைத்து கொளுத்தியதை சொன்னதாகவும், கூறினார். மேலும் போலீசார், இரண்டு பேப்பரில் எழுதி டாக்டரிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதில் ஒன்றை டாக்டரிடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறினார். பின்பு இது தொடர்பாக கலாவிடமும் விசாரித்தேன். அன்று இரவு சுமார் 11 மணியளவில் மேற்படி சந்திரா, செல்வம் ஆகியோர் என்னை செல்பேசியில் தொடர்புகொண்டு விசாரித்தனர். நான் மேற்படி போலீஸ் விசாரித்ததை அவர்களிடம் கூறினேன். அதற்கு மேற்படி செல்வம், ‘‘நான் சொல்லவேண்டாம் என்றுதானே சொல்லிட்டு வந்தேன்.... அது மீறி இப்படி சொல்லிட்டுதே’’ என்று வருத்தப்பட்டார்.

8). பின்பு அடுத்த நாள் 30.09.07 ஞாயிறு மதியம் நான் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அன்று மேற்படி பிற்பகல் செல்வம், அவரது அக்கா மகன் ராஜேஷ் த/பெ ராஜீ, மேற்படி சந்திரா ஆகியோர் என் வீட்டுக்கு வந்து என்னிடம், கலாவை தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லும்படி என்னிடம் வற்புறுத்தி கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அவள் ஏற்கனவே போலீசிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டாள். இனிமேல் என்னால் அப்படி எல்லாம் கலாவிடம் சொல்ல முடியாது’’ என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன்.

அன்று பிற்பகல் 3 மணி அளவில் மேற்படி செல்வம் என் வீட்டிற்கு வந்து, கவுன்சிலர் முரளி கூப்பிடுவதாகக் கூறி என்னை மேற்படி முரளி என்பவர் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஓட்டலுடன் இணைந்துள்ள அவருடைய ஆபிசுக்குள் நான் சென்றேன். அங்கு மேற்படி முரளி, ராஜேஷ் த/பெ ராஜீ, நடராஜன் தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்டு சுமார் 20 பேர் அங்கிருந்தார்கள். மேற்படி முரளி என்னைப் பார்த்து, ‘‘5% தான் எறிஞ்சிருக்கு... அதற்கு கலாவுக்கு பத்தாயிரமோ பதினைந்தாயிரமோ தருகிறோம்... வாங்கிகிட்டு விட்டுட்டு போங்க உனக்கும் தனியா பத்தாயிரம் தருகிறோம்ஞ் சின்ன வீடுஞ்.. விளக்கு விழுந்திட்டுதுன்னு சொல்லச்சொல்லு’’ என்று கூறினார். இதற்கு நான் உடன்படவில்லை. உடனே டயர் குமாரும், அருள் மற்றும் ஜப்பார் ஆகிய மூவரும் என்னைப் பார்த்து, ‘‘இவ்வளவு பேரு சொல்கிறோம்... நீ கேட்க மாட்டேன்கிற.. எங்க உதவி இல்லாம இங்க இருந்துருவியா... உன் மேல பொய் கேசு போட்டு உள்ள தள்ளிடுவோம்’’ என்று மிரட்டினார்கள். அங்கிருந்த மேற்படி ராஜேஷ் எழுந்து, ‘‘ ஓத்தா.. இவ்வளவு பேர் சொல்றாங்க.. கேட்கமாட்டேங்கற.. இங்கியே ஒழிச்சிடுவேன்..’’ என்று தன் நாக்கை கடித்துக்கொண்டு என்னை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வந்தார். நான் மேற்படி முரளியைப் பார்த்து, ‘‘வார்டு கவுன்சிலர் கூப்பிடுகிறார் என்று நம்பிதானே நான் இங்கு வந்தேன்.. இங்கு அடியாட்களை வைத்து மிரட்டலாமா?’’ என்று கேட்டேன். உடனே அவர் ‘‘விடுமா..விடுமா..’’ என்று என்னை சமாதானப்படுத்தினார். வீட்டிற்குச் செல்ல வெளியே வந்த என்னை மேற்படி முரளி, செல்வம், டயர் குமார் ஆகியோர், மீண்டும் அழைத்து ‘‘உடனே ஆஸ்பத்திரிக்குச் சென்று, கலாவிடம் விளக்கு மேலே விழுந்திட்டதா போலீசுகிட்ட சொல்லச்சொல்லு .. நீ சொன்னா கேட்கும்..’’ என்று வற்புறுத்தினார்கள். ஆனால் நான் சாவுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.

9). மறுநாள் 1-ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நான் மீண்டும் கலாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றேன். அன்றும் மேற்படி ராஜேஷ், செல்வம், சந்திரா ஆகியோர் என்னிடம் வழக்கு வேண்டாம் தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லச் சொன்னார்கள். அதற்கு நான் உடன்படவில்லை. அன்று இரவு அங்கு தங்கியிருந்துவிட்டு மறுநாள் 02.10.07 செவ்வாய் அன்று மாலை நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போது மீண்டும், மீண்டும் செல்வம் உள்ளிட்ட நடராசனின் உறவினர்கள் என்னிடம், கலாவை மாற்றிச்சொல்லுமாறு வற்புறுத்தினார்கள்.

10). அதன்பின்பு 03.10.07 புதன் கிழமை இரவு 7 மணியளவில் மேற்படி செல்வம் மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் என்னை திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பாண்டி சென்று கலாவை பார்க்கவேண்டும் என்று கூறி என்னை காரில் ஏற்றினார்கள். அந்த காரில் எஸ்.ஐ சந்திரசேகர், இன்னொரு போலீஸ், செல்வத்தின் அக்கா மகன் ராஜேஷ், பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் உடன் வந்தனர். மற்றொரு காரில் செல்வம், மானூரைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆகியோர் வந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்பு, எஸ்.ஐ என்னிடம் ‘‘கலாவை அதுவாகவே எண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டதாக சொல்லச் சொல்லும்படி’’ என்னை முதலில் கலா இருக்கும் அறைக்குள் அனுப்பினார்கள். உள்ளே சென்ற நான், கலாவிடம், ‘‘என்னை வற்புறுத்தி கூட்டிக்கொண்டு வந்துள்ளார்கள். நீ பயப்படாமல் உண்மையைச் சொல்..’’ என்று அவள் காதருகே சொல்லிவிட்டு வந்தேன். பின்பு போலீசார் கலாவை தனியாக விசாரித்தனர். நாங்கள் கதவுக்கு வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். போலீசார் வெள்ளைத்தாளில் கலாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். வெளியில் வந்த எஸ்.ஐ இடம் மேற்படி ராஜேஷ் ‘‘என்ன சார் சொல்லிச்சு’’ என்று கேட்டார். அதற்கு எஸ்.ஐ தலையில் அடித்துக்கொண்டு ‘‘என்னய்யா இது பெரிய தொல்லையா இருக்கு. எத்தன தடவ கேட்டாலும். அது கரக்டா நடந்தத சொல்லுது. பெரிய தலைவலியா இருக்கு’’ என்று கூறினார். அப்போது ராஜேஷ் என்னைப் பார்த்து ‘‘எல்லாம் இது கொடுக்கற தைரியம்தான். உன் பேர்ல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளனும்’’ என்று கத்தி மிரட்டினார். அதன் பிறகு எல்லோரும் கிளம்பும் போது செல்வம், என்னைப் பார்த்து, அவரும், வழக்கறிஞரும் வந்த காரில் ஏறச்சொன்னார். அப்போது எஸ்.ஐ தலையிட்டு ‘‘வேண்டாம். அழைச்சிகிட்டு வந்த மாதிரியே கொண்டுபோய் விடணும். எங்க காரிலேயெ வரட்டும்’’ என்று கூறி என்னை வந்த காரிலேயே ஏறச்சொன்னார். இரவு 12 மணிக்கு நாங்கள் திண்டிவனம் வந்து நான் என் வீட்டிற்கு சென்றேன்.

11). மறுநாள் 04.10.07 வியாழன் அன்று காலை கலாவின் அப்பா தேவராஜ் தொலைபேசி செய்து, எச்சூர் வக்கீல் ஜெய்சங்கர் என்பவர் மூலம் மனு எழுதி எடுத்து வருவதாகவும், எஸ்.பி யிடம் தருவதற்கு இடம் தெரியாததால் உதவி செய்ய வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். எச்சூரில் இருந்து திண்டிவனம் வந்த அவருடன் எனக்கு தெரிந்த சரவணன், புருஷோத்தமன் ஆகியோரை துணைக்கு விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் அனுப்பிவைத்தேன். எஸ்.பி இல்லாததால் மனு தரமுடியவில்லை என்று திரும்பி வந்தவர்கள் கூறினார்கள்.

12). அதன்பின்பு மறுநாள் 05.10.07 வெள்ளி கிழமை அன்று காலை கலாவின் அப்பா தேவராஜ், கலா அம்மா இருவரும் பாண்டியில் இருந்து நேராக விழுப்புரம் சென்று எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டதாக எனக்கு தொலைபேசி செய்தனர். அன்று காலை எச்சூர் வக்கீல் ஜெயசங்கர் என் வீட்டுக்கு வந்து, வழக்கு போட காவல்நிலையம் போகவேண்டும் வாருங்கள் என்று கூறி என்னை அவர் வந்த காரிலேயே காவல் நிலையம் அழைத்துச் சென்றார். நான் காவல் நிலையத்தின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் வெளியில் வந்த அவர் ‘‘அவர்கள் பணம் கொடுத்து போலீசாரை சரிசெய்து விட்டனர். தனியாக கோர்ட்டில் பிரைவேட் கேஸ் போடவேண்டும்’’ என்று கூறினார். அதன் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பிரைவேட் கேஸ் போடவேண்டும் என மனு எழுதி என்னிடமும், மீனாவிடமும் கையெழுத்து வாங்கினார். நாளை வருவதாகக் கூறி எச்சூர் சென்றார்.

மறுநாள் 06.10.07 சனிக்கிழமை அன்று வழக்கறிஞர் வரவில்லை. தொலைபேசி செய்து கேட்கும் போதுதான் ஏற்கனவே வாங்கிய ரூ.3500/& மேல், பிரைவேட் கேஸ் போட தனியாக ரூ.2000கேட்கிறார் என்பது தெரிந்தது. அதை நான் தருகிறேன் வாருங்கள் என்று கூறினேன். அதன் பின்பு வருவதாகக் கூறினார்.

13). மறுநாள் 07.10.07 அன்று காலை வழக்கறிஞர் ஜெய்சங்கர், கலா அப்பா தேவராஜ் உடன் திண்டிவனம் வந்து என்னையும், மீனாவையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார். ஆய்வாளர் அறைக்கு செல்லும்போது, ஆய்வாளர் என்னிடம் பெயர் கேட்டார். நான் லட்சுமி என்று சொன்னதும், ‘‘ச்சீ... இங்க நிக்காத வெளியில் ஓடு..போ...போ..’’ என்று கேவலப்படுத்தி அவமானமாகப் பேசினார். பெண் என்றும் பாராமல் ஆய்வாளர் என்னை இப்படி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி மிரட்டியதில் பயந்து போன நான் வெளியில் வந்து விட்டேன். அதன் பிறகு ஆய்வாளர் மீனாவை அழைத்து உதவி ஆய்வாளரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். மீனாவை விசாரித்த எஸ்.ஐ வழக்கறிஞரிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கூறி மீனாவை வெளியில் அனுப்பிவிட்டார்கள். நானும் மீனாவும் வெளியில் நின்றுகொண்டிருந்தோம். காய்ச்சலுடன் இருந்த என் குழந்தையை நான் தூக்கிச்சென்றிருந்தேன். வழக்கறிஞரும் நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததால் நான் என் குழந்தையை அருகில் உள்ள சாந்தி கிளினிக்கில் காட்டிவிட்டு வந்தேன்.

அப்போது மீனா இப்போதுதான் வழக்கறிஞர் பாண்டிக்கு பஸ் ஏறிபோறார் என்றார். அப்போது பிற்பகல் மணி 3.00 இருக்கும். அதன் பின்பு நான் என் வீட்டிற்கு செல்லாமல் மீனாவின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தேன். அன்று மாலை என்னைத்தேடி வந்த என் மகள் வனஜா, என் நாத்தனார் மகள் சத்தியா ஆகிய இருவரும், மேம்பாலம் அருகில் உள்ள ஒரு கடையில் பூதேரியைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா, ராஜேஷ், செல்வம் உள்பட சுமார் 20 பேர் உட்கார்ந்து கொண்டு எழுதிக்கொண்டு, கையெழுத்து போட்டுக்கொண்டிருப்பதகாக் கூறினார்கள். அவர்கள் அனைவரும் எங்களிடம் வந்து ஏதேனும் தகராறு செய்வார்கள் என்று பயந்த நாங்கள் இருவரும் காவேரிப்பாக்கத்தில் உள்ள எங்களூக்குத் தெரிந்த சி.எ.மீனா என்பவர் வீட்டுக்கு சென்றோம்.

14). வழக்கறிஞர் வந்து, போலீசார் கேஸ் போடுவதாக இருந்தால் கலாவின் அம்மா விபரமாக சொல்வார்கள் என்பதால், எனக்கு தெரிந்த புருசோத்தமன் என்பவரை கலாவின் அம்மாவை அழைத்துவருமாறு காலையில் பாண்டிக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் பிற்பகல் 3.00 மணியளவில் இப்போதுதான் கிளம்புகிறோம் என்று தொலைபேசியில் கூறினார். உடனே நான் இப்போதுதான் வழக்கறிஞர் கிளம்பி அங்கு வருகிறார் அதனால் அங்கேயே இருங்கள் என்று கூறினேன். அதன் பின்பு மாலை சுமார் 6.30 மணியளவில் வழக்கறிஞர் திண்டிவனம் காவல் நிலையத்திலிருந்து எங்களுக்கு தொலை பேசி செய்து எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்தார். அங்கு மேற்படி புருசோத்தமன் அவர்கள் என்னிடம், ‘‘மருத்துவமனை வந்த வழக்கறிஞர், கலாவிடம் டைப் அடித்த பேப்பரிலும், டைப் அடிக்காத வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கினார். வழக்கறிஞருடன் போலீசார் யாரும் வரவில்லை’’ என்று கூறினார்.

அதன் பின்பு நான் வழக்கறிஞரைப் பார்த்தேன் வழக்குப் போடுவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த வழக்கறிஞர் எப்.ஐ.ஆர் போட்டுவிட்டதாக கூறினார். மீனா எப்.ஐ.ஆரில் உள்ளதை படித்துக் காட்டினார். உடனே நான், ‘‘என்ன சார் இது. சொத்து தகராறுன்னு பொய் கேஸ் போட்டிருக்காங்க. காரணமே பரத்துதான். அவன் பேரே இல்லையே என்றேன்’’. அதற்கு வழக்கறிஞர் ‘‘போலீஸ்னா அப்படிதான். நம்ம தனியா கோர்ட்டுல கேஸ் போட்டு கைது பண்ண வைக்கனும்’’ என்றார்.

மேலும் அவரே, ‘‘இன்னொரு விஷயம். நீங்கதான் கலாவை மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கச் சொன்னதா உங்க பேர்ல, அவங்க புகார் கொடுத்திருக்காங்க. போலீஸ் அதில் வழக்கு போட்டு நைட்டே உன்ன கைதுபண்ணி உள்ள வைக்கப்போறாங்க. எல்லாம் எழுதி ரெடியா வச்சிருக்காங்க’’ என்று கூறினார். பயந்து போன நான் ‘‘இப்ப என்னா சார் செய்யுறது’’ என்றேன். உடனே அவர், ‘‘ஒரு 5000/- பணம் கொடுங்க. நாளைக்கே நான் உங்களுக்கு பெயில் போடறேன். இன்னிக்கு நைட் மட்டும் எங்கியாவது தலைமறைவா இருங்க’’ என்றார். இப்போதே 5000/- பணம் கொடுத்தால்தான் உடனடியாக பெயில் எடுக்க முடியுமென்று மீண்டும் கூறினார். அதன் பிறகு எனக்கு தெரிந்த வழக்கறிஞர் சத்யா என்பவர் மூலம் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்பதையும், புகார் மட்டும் நடராஜன் தரப்பினர் தந்துள்ளனர் என்பதையும் தெரிந்துகொண்டேன். அதன் பின்பு நான் மேற்படி வழக்கறிஞரிடம் ‘‘இப்போது என்னிடம் பணம் இல்லை’’ என்றேன். அதற்கு ‘‘நீ எப்படியாவது எதாவது செஞ்சிக்கோ எனகென்ன’’ என்று வழக்கறிஞர் கூறினார். அதன் பிறகு நான் வீட்டிற்கு சென்று விட்டேன்.

15). பின்பு 12.10.07 வெள்ளி கிழமை அன்று கலாவைப் பார்ப்பதற்காக பாண்டி மருத்துவமனைக்குச் சென்றேன். கலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கிளம்பிக்கொண்டிருந்தார். ஏன் எனக்கேட்டதற்கு, ‘‘இந்த ரூமின் குளிர் ஒத்துக்கொள்ளவில்லை மேலும் தினமும் குளிக்கச்சொல்கிறார்கள் என்னால் முடியவில்லை அதனாலதான் கிளம்புகிறேன்’’ என்றார். பிறகு அவர்களுடன் திண்டிவனம் வந்து அவர்களை எச்சூர் செல்ல, வந்தவாசி பேருந்தில் ஏற்றிவிட்டு நான் எனது வீட்டிற்கு சென்று விட்டேன்.

16). பின்பு கலா காயங்கள் சரியாகாத நிலையில் எச்சூரில் இருந்து திரும்பி வந்து கடந்த 15.10.07 திங்கள் கிழமை அன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து இன்று வரை சிகிச்சைப் பெற்று வருகிறார். கலா எரிக்கப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் சரியாக போடப்படாத நிலையிலும், குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலும் 22.10.07 அன்று திண்டிவனம் காவல் ஆய்வாளர், அதிகாரிகள், உயர்நீதி மன்றம் உள்ளிட்டவற்றுக்கு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலா புகார் மனு அனுப்பினார்.

17). இதன்பின்பு திண்டிவனம் சட்டப் பணிகள் குழுவின் சார்பில் வழக்கறிஞர் அ.ராஜகணபதி அவர்கள் கடந்த 09.11.07 வெள்ளி கிழமை அன்று மாலை என் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து என்னை விசாரித்தார். நான் மேலே சொல்லியுள்ள எனக்குத் தெரிந்த அனைத்து சம்பவங்களையும் கூறினேன். அதன் பிறகு உண்மை அறியும் குழு சார்பில் திண்டிவனம் பேராசியர் பா.கல்யாணி (எ) பிரபா.கல்விமணி, நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு ஆசிரியர் மு.கந்தசாமி, திண்டிவனம் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மையம் இரா.முருகப்பன், விழுப்புரம் மனித உரிமைகள் கழகம் பி.வி.இரமேஷ், மனித உரிமைகள் இயக்கம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். நான் எனக்கு தெரிந்த உண்மைகளைக் கூறினேன்.

18). இந்நிலையில் கடந்த 12.11.07 அன்று காலை சுமார் 10 மணியளவில் நான் என் வீட்டில் இருந்தபோது மேற்படி சங்கீதா க/பெ ராஜேஷ், சந்திரலேகா க/பெ முத்து ஆகியோர் என் வீட்டிற்கு வந்தனர். சங்கீதா, ‘‘இந்த பிரச்சனை முடியட்டும் உன்ன தூக்கறனா இல்லையா பார்’’ என்று மிரட்டிச் சென்றார். இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தந்தேன். வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் புகார் மனு ஏற்புச் சான்று (வரிசை எண் 269/07 நாள் : 12.11.07 ) மட்டும் தந்தனர்.

19). கலா உயிருடன் மேற்படி நடராஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினார்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு நேரடி சாட்சியான என்னையும், மீனாவையும் போலீசார் விசாரித்தனர். ஆனால் நடந்த சம்பவத்திற்கு நேரடி சாட்சியான எங்களை வழக்கில் போலீசார் சாட்சியாக கொண்டுவரவில்லை. கலாவின் உயிருக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். இந்த நிலையில்தான் மேற்கண்ட இலவச் சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர், உண்மையறியும் குழுவினர் ஆகியோர் என்னை சந்ததித்த பின்பு நான் தைரியம் பெற்று நடந்த சம்பவங்கள் குறித்து எனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த புகாரை அனுப்புகிறேன். சிகிச்சையில் இருக்கும் கலாவிற்கும், நேரடி சாட்சிகாளான எங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளித்தும், இதுவரை திண்டிவனம் போலீசார் குற்றவாளிக்கு சாதகமாக செயல் படுவதால் இந்த வழக்கை மாவட்ட அளவிலான உயர் போலீஸ் அதிகாரி மூலம் புலன் விசாரனை செய்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், பாதிக்கப்பட்ட கலாவிற்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்கவேண்டும்.
(மேலே உள்ள படம் எரிக்கப்பட்ட நிலையில் கலா)

Wednesday, September 26, 2007

அனலாகும் மண் - அகதியாகும் மக்கள்

கடலூர் மாவட்டம் தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 13 கிராமங்களையும் காலி செய்து 1270 ஏக்கர் நிலப்பரப்பில், கடலூர் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி, 1320 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. 6004 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப் பட உள்ள இந்த அனல்மின் நிலையத்திற்கான 70% நிதியை இந்திய நிதி நிறுவனங்களின் உதவியால் திரட்டுவது என அறிவித்துள்ளார்கள். இதற்காக முந்திரி தோப்புகள் அடங்கிய 400 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தனியார் நிலத்தைக் கையகப்படுத்வதற்கான வேலயை தொடங்கியது நிர்வாகம்.

அதற்கான முதல் கட்டமாக மக்களின் கருத்து கேட்புக் கூட்டத்தினை 07-09-07 அன்று பிற்பகல் 3-30 மணிக்கு, கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள வள்ளி விலாஸ் வி.சி. சுப மகாலில், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, மாசு கட்டுபாட்டு வாரிய பொறியாளர் ராமசுப்பு மற்றும் அதிகாரிகள் நடத்தினார்கள். கூட்டத்திற்கு தியாகவல்லி பஞ்சாயத்ட்தைச் சேர்ந்த லெனின் நகர்,. பெரியார் நகர், அம்பேத்கர் நகர், நந்தன் நகர், வள்ளலார் நகர் ஆகிய கிராமங்களில் இருந்து 5 லாரிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அது மட்டுமில்லாமல் நொச்சிக்காடு, சித்திரப்பேட்டை, தியாக வல்லி, நடுத்திட்டு போன்ற கிராமங்களில் இருந்தும் 100 கணக்கான மக்கள் மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் ஆட்சியர், அனல் மின் நிலயத்தின் பயன் குறித்து பேசி படம் ஒன்றப் போடுவதற்கு முயற்சித்தார். அப்போ தியாகவல்லியச் சேர்ந்த சாமிகச்சிராயர் என்ற இளைஞர் ஒருவர் எழுந்து ‘‘முதலில் ம க்களின் கருத்தைக் கேளுங்கள், பிறகு படம் போடுங்கள்’’ என்றார். அதற்கு ஆட்சியர் அந்த இளைஞரைப் பார்த்து ‘‘நீங்கள் ஒன்றும் பேசவேண்டாம், உட்காருங்கள்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதனால் கோபமடைந்த மக்கள் ஆட்சியரிடம் முதலில் எங்கள் கருத்தைக் கேளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சியர் மக்களிடம் மீன்டும் மீன்டும் தனது கருத்களை கூறுவதற்கு முயன்றார். இதனால் மக்கள் ஆட்சியர் அவர்களை நெருங்கி நேரிடையாக இத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதைக் கூறினார்கள். அப்போது பெண்களும் ஆட்சியரிடம் நேரில் சென்று தங்களுடய கோரிக்கையை முறையிட்டனர். பல பெண்கள் ஆட்சியர் மற்றும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் ஆகியோரின் கால்களில் விழுந்து கெஞ்சி, ‘‘இந்த திட்டத்தைக் கொண்டு வராதீர்கள், எங்களை ஊரை விட்டு காலி செய்யாதீர்கள்’’ அழுது புலம்பினார்கள். ஒரு சிலமக்கள் மேடையில் ஏறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.அதனால் ஆட்சியரால் பேசமுடியாமல்போனது.ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ‘‘இத்திட்டம் வேண்டாம்’’ என்று முழக்கமிட்டனர்.

அப்போது உள்ளே நுழைந்த அதிரடிப்படை ஆண் போலீசார்,ஆட்சியரிடம் முறையிட்டுக் கொண்டிருந்த பெண்களை கையை பிடித்து கீழே தள்ளினார்கள். அத்துடன் அப்பெண்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் பெண்கள் அலறியடித்து பயந்து கீழே விழுந்து எழுந்து மண்டபதை விட்டு கோபத்துடன் வெளியேறி சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் செய்தனர். அதிரடிப்படை ஆண்போலீசார் பெண்களை அடிப்பதைப்பார்த்த இளைஞர்கள்சிலர் ஆவேசப்பட்டு நாற்காலிகளை தூக்கி வீசினார்கள். அதிரடிப்படை போலீசார் உள்ளே நுழைவதைப் பார்ததுமே அதிகாரிகள் கூட்டதை நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியரை அழைதுக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.

போலீசார் அடித்ததால் மண்டபத்தை விட்டு வெளியேறிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மேலும் மேலும் அதிரடிப்படைப் போலீசாரை வரவழைத்த படியே இருந்தனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ராவாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதன் பிறகு ஆர்.டி.ஓ பிருந்தாதேவி அவர்கள் வந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு என மண்டபத்தின் உள்ளே அழைத்துச் சென்று, மைக் தயார் செய்து மக்கள் ஒவ்வொருவரையும் பேசச்சொல்லி அதைப் பதிவு செய்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பின்புதான், ஆட்சியரால் நடத்த முடியாமல்போன கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஆர்.டி.ஓ நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வந்து மக்கள் அக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.

‘‘இத்திட்டத்திற்காக காலம் காலமாக நாங்கள் வாழ்ந்து, அனுபவித்த இடத்திலிருந்து, எங்களை கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எங்களை உயிரோடு கொலை செய்வதற்கு சமமான செயலாகும்’’ என மக்கள் அழுது புலம்பினார்கள். மேலும் மக்கள் ‘‘இதன் காரணமாக எங்கள் பகுதி நிலம், நீர், காற்று, கடல் வளம் மாசுபடுத்தப்பட்டு, இயற்க பேரழிவுகளுக்கு ஆளாக நேரிடும். இதுமட்டுமில்லாமல் எங்களின் வாழ்வாதரங்கள் முழுவம் பாதிக்கப்படும். இதனால்தான் இத்திட்டம் வேண்டாம் என்கிறோம்’’ என்று கூறினார்கள்.

இது தொடர்பாக மக்கள் கீழ்கண்ட கோரிக்ககளை முன்வைத்து போராடத்தொடங்கியுள்ளனர்.

1. மக்களின் வாழிடங்களையும், விளை நிலங்களையும், மீன் பிடி தொழிலையும் முழுமையாக பாதிக்கின்ற இந்த அனல் மின் நிலயம் அமக்கும் திட்டத்தினை அரசு கைவிடவேண்டும்.

2.மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற பெண்களை கையப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதுடன், அப்பெண்கள் மீது தடியடி செய்து அடித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.இத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிவதற்காக அறிஞர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கவேண்டும்.

4.போலீசார் அடித்ததால் ஆவேசப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெறவேண்டும்.

5. இப் பகுதியில் நிலத்தை வாங்கவோ, விற்கவோ பதிவு அலுவலகத்தில் இருக்கின்ற தடையை நீக்கவேண்டும்.

Thursday, September 13, 2007

ஜனநாயகம் (?)

கீழுள்ள
எழுத்துக்களெல்லாம் வார்த்தைகளல்ல
திருமதி. ராணி அவர்களின் வாழ்க்கை.



கீழ்க்கூடலூர் ஊராட்சி. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஈச்சேரி மற்றும் கீழ்க்கூடலூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. தலித் பெண்களுக்கான இந்த ஊராட்சிக்கு ஈச்சேரியைச் சேர்ந்த ராணி தலைவியாக இருக்கிறார். அவர் நமக்கு அளித்த வாக்குமூலம்.

நான் மேற்கண்ட ஊரில் என் கணவர் செல்வராஜ், மற்றும் மகன்கள் சீனுவாசன்(27), பிரபு (25) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமயாசிரியராக பணியாற்றி வருகிறார். நான் கடந்த முறை ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தேன். இந்த முறை எங்கள் பஞ்சாயத்தினை தலித் பெண்களுக்கு என ஒதுக்கியதால் நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தற்போது தலைவராக இருந்து வருகிறேன்.

எங்கள் கிராமத்திற்கு தினகரன் என்கிற நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் 10 வருடங்களும், ஆறுமுகம் என்கிற வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் 5 வருடங்களும் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்கள். எங்கள் ஈச்சேரி கிராமத்தில் மொத்தம் 20 தலித் குடும்பங்களே உள்ளன. 150 க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் உள்ளன. ஒரு சில வேறு சாதி குடும்பங்களும் உள்ளன. முதன் முறையாக கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலித் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில் நான் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றேன். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றுளார். இந்த செல்வத்தின் மகன் கஜேந்திரன, கடந்த 2003-ஆம் வருடம் ஊர்ப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக சாதி இந்துக்கள் அடித்தனர். இதற்காக அப்போது புகார் கொடுக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற்றால்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று தேர்தலின் போது சாதி இந்துக்கள் மிரட்டினர். ஆனால் நாங்கள் வழக்கை வாபஸ் பெறாமல் தேர்தல் வேலைகள் செய்தோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

இந்நிலையில்தான், கடந்த பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமலிருந்த தலித் குடியிருப்பிற்கும், சுடுகாட்டிற்கும் செல்கின்ற பாதையை அடைத்துக்கொண்டு, வழியை மறைத்துக் கொண்டு, போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்த முட்களை 01-09-07 அன்று காலை முதல் ஜே.சி.பி இயந்திரம் வைத்து பிடுங்க ஏற்பாடு செய்தேன். உறுப்பினர் செல்வம் உடனிருந்து உதவினார். தெருவில் ஒரு மின் கம்பத்தில் ஒட்டி வளர்ந்திருந்த முட்களை, மின் கம்பத்தில் ஏறுவதற்கு வசதியாக பிடுங்கினார்கள். அப்போது, அந்த மின் கம்பத்திற்கு அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கின்ற ராஜீ என்பவர், தன் வீட்டிற்கு வருகின்ற கேபிளை தடுக்கின்ற முட்களை வெட்டுமாறு செல்வத்திடம் கூறியுள்ளார். அதற்கு செல்வம், ‘‘அது பட்டா இடத்தில் உள்ளது. அதை நாங்கள் எப்படி வெட்டுவது’’ என்று கூறியுளார். அதற்கு ராஜீ ‘‘அது என் பங்காளி இடம்தான். நான் சொல்லிக்கொள்கிறேன். ஒன்றும் சொல்லமாட்டார்.’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். அதனால் அந்த ஒரு முள்ள மட்டும் வெட்டியுள்ளனர்.

அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த வன்னியரான மோகன் என்பவர் வந்து, ‘‘என்னுடய இடத்த நீங்க எப்படிடா சரி பண்ணலாம். பற நாய்களுக்கு தலவரானதும் ரொம்பதான் திமிர் ஏறிப்போச்சு’’ என்று மிரட்டிப் பேசியதுடன் இல்லாமல், தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தை அடித்து அவரது சட்டயை கிழித்து அங்கிருந்து விரட்டினார். அவர் பயத்தில் ஓடி வந்து என்னிடத்தில் நடந்ததைக் கூறினார். நான் உடனடியாக ஊர்ப்பெரியவர்களிடம் முறையிடுவதற்காக சென்றேன். ஆனால் மேற்படி மோகன் வழியிலேயே நின்றுகொண்டு, என்னை பெண் என்றும் பாராமல் மிகவும் இழிவுபடுத்தியும், அசிங்கமாகவும், மீண்டும் சொல்லக் கூட முடியாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார். அவருக்கு பதில் சொன்னால் பிரச்சனையாகும் என்பதால் ஊர் நாட்டாமை முனுசாமியிடம் முறையிட்டேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கும் அவன் கட்டுப்படவில்ல. நீங்க என்னா செய்யுனுமோ, செய்யுங்க’’ என்று கூறினார். வீட்டிற்கு திரும்பிய என்ன மேற்படி மோகன் மற்றும் அவருடைய உறவினார்களான நாகேந்திரன், கன்னியப்பன், ராமலிங்கம், ரவிக்குமார் ஆகியோர் வழிமறித்து அடித்து, இழுத்து, புடவயை உருவினார்கள். அப்போது மோகன், ‘‘நீ என்னாடி பரத்தேவிடியா நாயி, பெரிய மயிராட்டம் பேசுற’’ என்று கூறி, என்னுடைய தோளில் கை வைத்து ஜாக்கெடடைட கிழித்தார்.

அவமானம் தாங்க முடியாமல் நான் அங்கிருந்து என் வீட்டிற்கு வந்து பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஒலக்கூர் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தேன். புகாரைப் பெற்ற காவல் துறையினர் மனு ஏற்பு சான்று கூட வழங்கவில்லை. மேலும் நானும், உறுப்பினர் செல்வமும் உள்நோயாளியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றோம். மறுநாள் 2-ஆம் தேதி மாலை நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.

சிகிச்சையிலிருந்த செல்வம் 3-ஆம் தேதி காலை சாப்பிடுவதற்காக வெளியில் வந்த போது, ஒலக்கூர் காவல் துறையினர் பிடித்துச் சென்று கைது செய்தனர். மாலை வரை இவரைக் கைது செய்த செய்தியைக் கூட அவரது வீட்டிற்கு சொல்லாமல் மறைத்தனர். இத்தகவல் தெரியாத இவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சையில் இருந்தவரைக் காணோம் என்று தேடி அலைந்தனர்.

இந்நிலையில்தான், வன்கொடுமைக்கு ஆளாகி, பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவியான நான் மற்றும் என் கணவரும், தலைமயாசிரியருமான செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எங்கள் 7 பேர் மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளது தெரியவந்தது. ஒரு ஊராட்சி மன்றத் தலைவராகிய நான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த உண்மயான புகாரில் இரண்டு நாட்களாக வழக்கு பதிவு செய்யாத போலீசார், சாதி இந்துக்கள் கொடுத்த பொய்ப்புகாரில் உடனே வழக்கு பதிவு செய்து தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தைக் கைது செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர்.

Tuesday, September 4, 2007

''கொலைகள் அதிகரிக்கக் காரணம்...."

சமூக பொறுப்பற்ற தன்மைதான்’’

0 ரா.முருகப்பன்

தமிழகத்தில் தற்போது ‘நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் காவல்துறையினர் பெரும் பரபரப்பை உருவாகி மக்களை பீதியூட்டி வருகின்றனர். இதன் இறுதியில் யாரையோ மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொலை செய்யப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில்தான் கடந்த 21.07.07 அன்று சென்னையில் போலிமோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்த & போலிமோதல் படுகொலை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ், பொ.ரத்தினம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், பிரபஞ்சன், சரஸ்வதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.


பேராசிரியர் அ.மார்க்ஸ் :‘‘இன்று உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்டவிரோதமான கொலைப் படகளை நடத்துகின்றன. சட்டம் ஒழுங்கை நிலநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்டவிரோதக் கொலைகளைச் செய்கிறது.

போராட்டப் பகுதிகளின் பாகாப்பைக் காரணம்காட்டி, குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும், அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் மாறிவிட்டன. நெருக்கடி நிலையில் மக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறிய்தையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது. 1996 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984&95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவம் இதுநடள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக்கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துகளையும் போலீசார் சூறையாடினர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெரும்தொகைகள் பறிக்கப்பட்டன.’’


பிரபஞ்சன் : ‘‘ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்வது குற்றம் என்றால், அது அரசாங்கம் செய்தாலும் குற்றம்தான், இன்று ஊடகங்களில் கொலைசெய்யப்படுவதை ஆதிரிப்பதாக காட்சிகள் அமக்கப்படுகிறது. ‘வேட்டையாடு விளையாடு’ என்றொரு படம். வேட்டையாடு என்றால் சுட்டுவிடு என்று அர்த்தம். இப்படத்தின் ஒரு பாடலில் ஏறக்குறய 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

திருச்சி அருகே நடந்த உண்மை சம்பவம் ஒன்று. சந்தேக வழக்கில் செருப்பு தைக்கும் தொழிலாளியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தன் கணவனக் காண காவல் நிலையம் சென்ற மனைவி காவல் ஆய்வாளரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். இந்தப் பாதிப்பினால் சுயநினைவு திரும்பாமல் 4 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதன்பின்புதான் கருவுற்றிருப்பது தெரிகிறது. குழந்தை பிறந்து, 5 ஆண்டுகள் கழித்து பத்திரிக்கயாளர்கள் அந்தத் தொழிலாளியிடமும், மனவியிடமும், ‘‘‘நீங்கள் இந்தக் குழந்தயை மனப்பூர்வமாக ஏற்று வளர்க்கிறீர்களா?’’ என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘‘யாரோ ஒருவர் செய்த பாவத்துக்கு இந்தக் குழந்ததை என்னங்க செய்யும். குழநதை குழந்தைதானே.’’ என்று பதில் சொல்லியுள்ளனர். இத்தகைய போலீசார்களைத்தான் ‘மக்களின் நண்பர்கள்’ என்று சொல்கிறது அரசாங்கம். நண்பர்கள் என்றால் மனிதர்களாக இருக்கவேண்டும். போலீசார்கள் மனிதர்களாக ஆகாத வரை அவர்களை நண்பர்களாக ஏற்க இயலாது.’’

கோ.சுகுமாறன் : ‘‘இந்தியா முழுவம் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரனை என்ற பெயரில் அவர்களுடய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது. ஆனால் இன்று குஜராத்திலும், மும்பயிலும் ‘தாதா’க்களை கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு ‘தாதா’ குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு ‘தாதா’ குழுவில் உள்ளவர்களை சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்குகளை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 27 பேர் ‘போலிமோதல்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.


இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடந்து முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரிக்ககளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்துகள் உருவாக்கப்படுகிறது. இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்கொண்டிருக்கின்றது.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைது செய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்படுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்வதுதில்லை. நீதித்துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.’’


பேராசிரியர் சரஸ்வதி : ‘‘இத்தனையாண்டு கால சுதந்திரம் நமக்கு எதை தந்திருக்கிறது என்று சொன்னால், அனவரும் மறுப்பில்லாமல் ஒரே குரலில் சொல்வீர்கள், போலீசார் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுட்டுக்கொல்வதற்கு உரிய ஜனநாயக்த்ட்தை தந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு தொல்லை தருபவர்களாக இருப்பதாக நினைப்பவர்களை சுட்டுக் கொலை செய்வதுதான் - இன்றைக்கு போலீசாரின் பணியாக இருக்கின்றது. போலீசாரின் இந்த ‘போலி மோதல்’ என்கிற படுகொலையின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு ‘சிவில் சொசைட்டி’ என்கிற இந்தக் குடிமைச் சமுதாயத்தின் மெத்தனப்போக்குதான் காரணம்.’’


சுரேஷ் : ‘‘இதே சூலை மாதம் 11 ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு, மும்பயில் ரமாபாய் குடியிருப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சிலையருகில் கூடுகிறார்கள். அங்கு வந்த மும்பை போலீசார் கண்மூடித்தனமாக சுட்டு 10 தலித்துகள் கொலைசெய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அரசாங்கம் அந்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இத்துடன் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அந்த வழக்கு விசாரனக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.

போலி மோதலுக்கு எந்தச் சட்டத்திலும் இல்லை ஆனாலும் காவல்துறை மோதல் கொலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் தன்னைப் பாதுக்காப்பதற்காக கொலை செய்யலாம் என ஒரு பிரிவு உள்ளது. அப்படி செய்தாலும் கூட அது சரியா? தவறா? என்பதை நீதிமன்றம்தான் சொல்லவேண்டும். தற்போது போலீசாரிடிமிருந்த விசாரனைத் திறமைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே விசாரனை சித்திரவதைதான். விசாரனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை ஒழித்துவிடுகின்றனர்.போலீசாரின் இந்த மோதல் படுகொலைகள் அதிகமாகி வருவதற்கு முக்கியக் காரணம், சட்டத்தின் ஆட்சியைப் போலீசார் நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக, தாங்கள் செய்கிற தவறுகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி தப்பித்ட்துக்கொள்ள நினைக்கிறார்கள்.’‘

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : ‘‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளில் தொடர்புடைய காவல் துறையினர் அனைவர் மீதும் - உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். போலி மோதல் கொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு, வெகுமதி போன்றவற்றை உடனே திரும்பப் பெறவேண்டும். போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். போலி மோதல் கொலையை தடுக்க, அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து மனித உரிமகளை காத்திட வேண்டும்.’’

நன்றி : தலித்முரசு ஆகஸ்ட் 2007

Friday, August 31, 2007

வாழ்தல் என்பது விபத்து :

ஈழக்கலைஞர் சி.ஜெய்சங்கர்-நேர்காணல்.

சந்திப்பு இரா.முருகப்பன்

(சென்ற இதழில் வெளியான பேட்டியின் தொடர்ச்சி - முக்கிய கேள்விகள் மட்டும்.)


இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?

எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?

நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.


முழுப் பேட்டியும் படிக்க http://keetru.com/dalithmurasu/

நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007

Tuesday, August 28, 2007

"பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்" - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர

சந்திப்பு : இரா.முருகப்பன்

கூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள்? அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

காலங்காலமாக பாரம்பரியமாக எம்மிடையே இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஒரு அடிமை மனோபாவத்தை கற்றுத்தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதாலும் இன்றைய நெருக்கடியான சூழலைக் கடந்துப் போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியாகவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாகச் செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தின் மூலமாக&கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் 'மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.

உலக மயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால்ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக்கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக்கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.

பாரம்பரியக் கூத்து மரபு என்பதை கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?


பாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல் இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி அதன் வடிவத்தை தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்கு கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவலமுடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும். கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.

கூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும் கூட இப்பணிக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் வருதல், பறை அறைதல், திருமணம் நடத்தல், வாழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பதும் மரபாகும். கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் ''சிறுதெய்வக்'' கோயில் சடங்குகளாக பத்தாசி முறையிலமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து தனிமனிதனையோ அல்லது அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமுடையதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.

மேலும் கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகை சுவைமிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.

தர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டுவிடவும் முடியாது. ஏனெனில் இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக அதிகாரத்தை நிலைநிறுத்தயிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக சனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டைப் போல!

இந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக்கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உணர்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது உலமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப்போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப்போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிபடுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

அதை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நாங்கள் ஒவ்வோரு கிராமமாக சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நம்பிக்கையுடன் நிறையபேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்கவேண்டியுள்ளது. மேலும் கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால் இன்று பாரம்பரியக்கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, ''வீரமைந்தன்'' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.

தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரிய கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாய் உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது. அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம் அடையும் போதுதான் முழுமையானதாகும்.

பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணரவைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிபடுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.

இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்கு புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

இவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்தச் செயல்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.

சடங்குகள் தற்போது சமற்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி?

கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மயப்பட்ட நம்பிக்கையுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளத்தில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால் எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விடயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாக பார்க்கின்ற பார்வையன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.

இந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாக புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூட நம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்போக்குதனமானதாக, நாகரீகமற்றைவையாக பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில், பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த உலகமயமாகல் ஆக்கிரமிப்பு பண்பாட்டு சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படி பிரயோகிக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மையப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாக கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கைமுறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கின்றோம்.

அதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண்ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சாவால் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டுவரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்த் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளாத நிலை, அவர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப்போக்குகள் மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விடயம் என்வென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்படு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.

இதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால், மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.

எனது சொந்த இடமான யாழ்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்டபின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை 'உயர்சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிறசாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிறசாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை ஒரு தீண்டாமைக்கு உட்படுத்திக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்தால்தான் என்பதினை தெளிவாகக் காணலாம்.

கூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், ஒரு சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகின்றது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாக பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழா சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மையப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பல சாவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விடயங்கள் நிராகரிக்கப்படு, கைவிடப்பட்டு தவிர்க்கப்படவேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.

இந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கானச் சாத்தியப்பாடுகளை ஆக்கிக்கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக அதற்கான சாதனமாக ஆக்கிக்கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரணவியல் ஊடகங்களின் ஆக்கிரமிக்குப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலமயமாக்கல் ஆக்கிரமிப்புப் பண்பாட்டு சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் சமத்துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக்கொள்ள ஒரு சமூக செயற்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறோம்.

இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?

எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?


நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.

-நிறைவு-


நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007