Monday, December 28, 2020

மொழி கற்றுக்கொள்வது

 மொழி கற்றுக்கொள்வது

என். சொக்கன்

--------------------------------------------

ஆங்கிலத்தில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 1000 சொற்களின் பட்டியல் இணையத்தில் ஆங்காங்கே கிடைக்கிறது. இந்த ஆயிரம் சொற்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பதில் எனக்குச் சில கேள்விகள் இருந்தாலும், இதுபோல் பொதுவான சொற்களைத் தொகுத்துப் படித்துத் தெரிந்துகொள்வதால் அந்த மொழியைப் புதிதாகக் கற்கிறவர்களுக்கு நல்ல நன்மை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எடுத்துக்காட்டாக, நான் பள்ளிக்கூடத்தில் படித்த ஆங்கிலம் எனக்கு மிகக் குறைவான மொழியறிவையே அளித்தது. மிஞ்சிப்போனால் நூறு, நூற்றைம்பது சொற்களை அரைகுறையாக உள்வாங்கிக்கொண்டிருப்பேன். ஒருவேளை, நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றிருந்தால், அல்லது, சுற்றி ஆங்கிலம் பேசுகிறவர்கள் மிகுந்த சூழலில் வளர்ந்திருந்தால் இது ஆயிரம் சொற்களாக விரிந்திருக்கக்கூடும்.
ஏனெனில், ஒரு மொழியை மொழியாகப் படிப்பதைவிட, கணக்கு, அறிவியல், வரலாறு போன்ற பாடங்களில், அன்றாடப் பேச்சில் அது எப்படிப் பயன்படுகிறது என்பதுடன் சேர்த்துப் படிக்கும்போதுதான் சொற்களும் சரி, இலக்கண விதிமுறைகளும் சரி, மனத்தில் நன்கு பதிகின்றன. அந்த வாய்ப்பு எனக்குப் பள்ளியில் கிடைக்கவே இல்லை.
கல்லூரியில் ஆங்கில வழியில்தான் படித்தேன். ஆனால், பள்ளிக் கல்வியில் சரியான ஆங்கில அடித்தளம் இல்லாததால் மிகவும் தடுமாறினேன். நல்ல ஆங்கில மொழியறிவு இருந்த பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதைத் தமிழில் உள்வாங்கிக்கொண்டேன், அதன்பிறகு எல்லாம் சரியாகப் புரிந்தது. ஆனால், பாடங்கள்தான் மனத்தில் ஏறின, (ஆங்கில) மொழி ஏறவில்லை.
நல்லவேளையாக, சிட்னி ஷெல்டனும் ஹெரால்ட் ராபின்ஸும் எனக்குக் கை கொடுத்தார்கள். பின்னர் ஜான் கிரிஷம் இவர்களுடன் சேர்ந்துகொண்டார். ஜெஃப்ரே ஆர்ச்சரை மிகப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். உண்மையில் இவர்கள்தான் என்னுடைய ஆங்கில ஆசிரியர்கள்.
இதேபோல், செய்தித்தாள் படித்து ஆங்கிலம் கற்றவர்கள் பலரை நான் அறிவேன். வேலையில் சேர்ந்தபிறகு மற்றவர்களைக் கவனித்துப் பேச்சு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு நன்கு பேசத் தொடங்கியவர்களை அறிவேன். எல்லாம் ஒரே இடத்துக்குதான் வருகின்றன: மொழிக் கற்றலுக்கு, அந்த மொழியைப் படிப்படியாகக் கற்றுத்தரும் புத்தகங்களைவிட, பிறரை/பொதுவான நூல்களைக் கவனித்துப் 'போலச்செய்தல்' (Mimicing) நன்கு உதவும். அதனால்தான், எழுத வருகிறவர்களை நிறையப் படிக்கச்சொல்கிறார்கள், பேச முனைகிறவர்களை நிறையக் கேட்கச்சொல்கிறார்கள்.
த. நா. குமாரசாமி எப்படி வங்காள மொழியைக் கற்றுக்கொண்டார் என்பதுபற்றி நண்பர் ஶ்ரீனிவாச கோபாலன் ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதில், த. நா. குமாரசாமி பயன்படுத்திய ஓர் உத்தியைப் படித்து வியந்துபோனேன்.
அடிப்படையிலேயே த. நா. குமாரசாமிக்கு வங்காள மொழி கற்கும் ஆவல் இருக்கிறது. ஆகவே, தானே முயன்று பல சொற்களை, அவற்றின் பொருளைக் கற்றுக்கொள்கிறார்.
அந்த நேரத்தில், பக்கிம் சந்திரருடைய புகழ் பெற்ற ‘ஆனந்த மடம்’ நாவலை ஒருவர் தமிழாக்கம் செய்கிறார். அதைத் த. நா. குமாரசாமி சிரமப்பட்டுத் தேடிப் படிக்கிறார்.
அடுத்து, கொல்கத்தாவிலிருந்து ‘ஆனந்த மடம்’ நாவலின் மூலப் பதிப்பை (வங்க மொழிப் பதிப்பை) வரவழைக்கிறார், ஒருபக்கம் தமிழ் மொழிபெயர்ப்பு, இன்னொருபக்கம் வங்க மொழிப் புத்தகம் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக இரு மொழிகளிலும் படித்துப் புரிந்துகொள்கிறார். வங்க மொழி அமைப்பு அவருக்குக் கொஞ்சங்கொஞ்சமாகப் புரியத்தொடங்குகிறது. அம்மொழியின்மீது மேலும் ஆர்வம் பெருகுகிறது, தொடர்ந்து படிக்கிறார், வங்க மொழியிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளராக உயர்கிறார். எப்பேர்ப்பட்ட திறமை, எப்பேர்ப்பட்ட உழைப்பு

No comments: