Tuesday, April 8, 2008

ஒகேனக்கல்

தமிழகத்தில் காவிரி நுழையும் பில்லிகுண்டுவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. நீர் பரந்து விரிந்து வரும் கரையான வனநீர்பரப்பு பகுதி தமிழக & கர்நாடக மாநிலங்களுக்கு சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு பகுதியின் கரைகளுக்கும் இடையிலான 50 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்பரப்பு 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரை அகலமுள்ளதாகும். இதற்கிடையில்தான் காவிரி நீரின் பெரிய நீர்வீழ்ச்சியான, பிரச்சனைக்குறிய சிறுமலை உள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு படேல் தலைமையிலான கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர்த்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கேள்வி எழுப்பியது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரகம் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, குடிநீருக்காக அவரவர் பங்கிற்கான காவிரி நீரை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என அறிவித்து, இது தொடர்பாக 21.09.1998 அன்று ஒரு ஆணையும் வெளியிட்டது. இதையடுத்து கர்நாடகம் பெங்களூர் குடிநீர் திட்டத்தை மேற்கொண்டது.



இந்நிலையில் தமிழக அரசு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கொண்டுவந்ததது. ஜப்பான் நிதியுதவியுடன் 1998-99 ஆம் ஆண்டிலேய இத்திட்டத்தை தொடங்க முயற்சித்தது தமிழக அரசு. ஆனால் அப்போதைய மத்திய பா.ஜ.க அரசு பொக்ரானில் அணுவெடி சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.



மீண்டும், தற்போதைய தி.மு.க அரசு, ஜப்பான் நாட்டின் 1330 கோடி நிதி உதவியுடன் இந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திற்காக கடந்த 26.03.08 அன்று அடிக்கல் நாட்டியது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 18 ஒன்றியங்கள், 17 பேருராட்சிகள், 3 நகராட்சிகள் ஆகியவைகளும், இப்பகுதிகளில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் பயனடைய உள்ளார்கள். இந்நிலையில்தான் கர்நாடகத்தில் உள்ள கன்னட சலுவாலி அமைப்பு, கன்னட ரக்ஷனவேதிகே, ஒகேனக்கல் உரிமை மீட்புக்குழு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கல் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியதோடு, ‘‘ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தமானது’’ என்றும் பேசினர். வருகிற மே மாதம் கர்நாடக மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்குள்ள மாநில மற்றும் தேசியக் கட்சிகள் ஓட்டு வங்கியை குறிவைத்து இத்திட்டத்தை எதித்து களத்தில் குதித்தன. அதில் முதலில் கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைபடங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முதலில் தாக்கபட்டன. பின்பு தமிழ் மக்களும், தமிழர்களின் சொத்துகளும், தமிழ்த் தினசரியான தினத்தந்தி அலுவலுகமும், தமிழகப் பேருந்துகளும் கடும் தாக்குதலுக்கு ஆளாகின.



இந்நிலையில்தான் கடந்த மாதம் 27&ஆம் தேதி, நிதிநிலை கூட்டத்தொடரில் நடந்துகொண்டிருந்த தமிழக சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார். தமிழகத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் தமிழக அரசின் இத்தீர்மானத்தை ஆதரித்தன.



கடந்த 2005 ஆண்டு இதே போன்று பிரச்சனை எழுந்துபோது அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக, கர்நாடக அதிகாரிகள் அனைவரும் ஒன்றினைந்து, எல்லை வரைபடத்தை வைத்துக்கொண்டு, ஒகேனக்கல் இடைத்திட்டுப் பகுதி, சிற்றருவி போன்றவை தமிழகத்திற்கு சொந்தாமானவை என்று உறுதிபடத் தெரிவித்தார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, கர்நாடகத்தில் முதல்வர் வாய்ப்பை இழந்த எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜீனே கார்கே, முன்னாள் அமைச்சர் நஞ்ச கவுடே போன்றோர் ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி பித்தலாட்ட அரசியல் நடத்தி வருகிறார்கள்.



தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்கட்சிகளான அ.தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்டவைகளும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஓரணியில் நின்றன. அனைத்து கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின, நடத்தி வருகின்றன.



தமிழக அரசு கடந்த 01.04.08 அன்று சட்டசபையில், ‘‘இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்பாறும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க மைய அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்’’ என்று மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் தமிழகத்திலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் தன்னெழுச்சியாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றினார்கள். கர்நாடகத்தில் முதலில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தமிழ்த் திரையுலகினர் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து, இத்திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது.



இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் மே 10,16, 22 ஆகிய தேதிகளில் கட்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிராவின் ஆளுனருமான எஸ்.எம் கிருஷ்ணா, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை ஒத்தி வைக்கும்படி மத்திய அரசை கேட்கப்போவதாக அறிவித்ததுடன், டெல்லி சென்று பிரதமரையும், சோனியாவையும் நேரில் சந்தித்துப் பேசினார். பின்பு தி.மு.க வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமர், சோனியா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.



இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது தமிழக அரசு. ஆனால் கடந்த 05.04.08 அன்று ‘‘கர்நாடகத்தில் தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறப்போகிற ஆட்சியா வந்துவிடப்போகிறது.பயிர் வாழத்தான் தண்ணீர் இல்லை என்றார்கள், உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்? நியாயம் வெல்லும். கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் கலந்துபேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்’’ என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.



காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில், தமிழகத்திற்கு உரிமையுள்ள 14 டி.எம்.சி நீரை எடுப்பதற்கு மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு திடீரென கர்நாடக சாதகமான முடிவேடுத்ததில் தேர்தலைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் உண்மை.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் வாழ்வாதாரத் திட்டமான இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.