Wednesday, December 12, 2007

பெண்ணாகப் பிறந்தால்....


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், போலீஸ்லைன் பின்புறம் வசிக்கின்ற கோவிந்தன் என்பவரின் மனைவி லட்சுமியாகிய நான் அளிக்கின்ற வாக்குமூலம் யாதெனில் :

நான் மேற்கண்ட முகவரியில் என் கணவர் கோவிந்தன், பிள்ளைகள் கோபி(17), வனஜா (14), தினேஷ் (4) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறேன். மேலும் நான் பவ்டாவின் கிடங்கல் பிள்ளையார்கோயில் தெரு 10-வது குழு என்கிற மகளிர் சுய உதவிக்குழுவின் பிரதிநிதியாகவும் இருந்து வருகிறேன்.

2). திண்டிவனம் நகராட்சியின் 23-வது வார்டு, பூதேரி ஒத்தைவாடை தெருவில் கலா (27) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது சொந்த ஊர் வந்தவாசி அருகே உள்ள எச்சூர் ஆகும். இங்கு அவருக்கு உறவினர்கள், ஆதரவாளர்கள் யாரும் இல்லாத நிலையிலும், அவருடைய கணவர் லட்சுமணன் மூட்டை தூக்குதல், லாரியில் கிளினரக இருப்பது போன்ற வேலைகள் செய்து வருகிறார். 9, 7, 5 வயதில் 3 பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி கலா எங்களுடைய சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். அதனால் அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். அப்போது அவருடைய குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல்லி வேதனைபடுவார். நான் ஆறுதல் சொல்லுவேன்.

3). இந்நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் கலா, என்னிடம் வந்து அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் பரத் என்பவன் 2 முறை தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி வருத்தப்பட்டார். கடந்த 27.09.07 அன்று காலை 7 மணிக்கு என்வீட்டிற்கு வந்தார் கலா. முதல் நாளிரவு (26.07.07) 8 மணியளவில் திண்டிவனத்திலிருந்து பூதேரி போகும்போது வழியில் உள்ள அகல் குளத்தருகில் மேற்படி பரத் கலாவின் கையை பிடித்து இழுத்து, வாயைப் பொத்தி, அருகில் உள்ள மறைவான பகுதிக்கு இழுத்து சென்று, ‘‘இப்பவே என்கூட நீ படுக்கனும், இல்லன்னா இங்கேயே காலி பண்ணிடுவேன்’’ என்று மிரட்டியுள்ளான். ஆனால் கலா அவனிடம் சண்டைபோட்டு, அவனை தள்ளிவிட்டு ஒடியிருக்கிறார். அப்போது இரவென்பதால் மறுநாள் காலையில் கலா என்னிடம் நடந்தவைகளை கூறினார்.

அதன்பின்பு கலாவுடன் நான், சுய உதவிக்குழுவில் உள்ள மீனா க/பெ கண்ணன், கட்டளையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கனகசபை த/பெ குப்புசாமி ஆகியோர் பூதேரி சென்று மேற்படி நடராஜனை அவரது வீட்டில் நேரில் பார்த்து அவரது மகன் பரத் கலாவிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து நியாயம் கேட்டோம். ஆனால் அவர் மகனைக் கண்டிக்காமல், ‘‘என் மகன் அப்படித்தான் இருப்பான். தேவிடியாளுங்க நீங்க என்னா இப்பதான் பெரிசா கேக்க வந்தீட்டிங்க’’ என்று எங்களை பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்திப் பேசினார். மேலும் எங்களை அடிப்பதாகவும் மிரட்டினார்கள். அதனால் பயந்துகொண்டு நாங்கள் கலாவின் வீட்டிற்குச் சென்று, வெளியில் நின்றுகொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா அல்லது வக்கீலிடம் போகலாமா என்று பேசிக்கொண்டிருந்தோம். பின்பு வக்கீலிடம் போகலாம் என்றும், பணம் ஏதும் இருந்தால் எடுத்து வருமாறு கலாவிடம் சொன்னேன். கலா பணம் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றார். அப்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, அவர்களது உறவினர்கள் ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் கலாவின் வீட்டிற்கு வந்தனர். பரத் தன்னுடைய கையில் ஒரு வெள்ளை நிறமுள்ள மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தான்.

4). நடராஜன் கலாவின் வீட்டிற்குள் நுழைந்து கலாவின் முடியைக் பிடித்து அடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றார். அங்கு கூடவே சென்ற சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் நடராஜனுடன் சேர்ந்து கலாவை அடித்து உதைத்துக்கொண்டிருந்தனர். கலா ‘‘என்னை விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள்’’ என்று கதறினாள். நாங்கள் தடுப்பதற்கு முயற்சித்த போது மேற்படி பரத் என்னை அடித்துவிட்டு, மீனாவை கீழே பிடித்து தள்ளினான். அப்போது மேற்படி நடராஜன் ‘‘இவள மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்துடா’’ என்று கூறிய சத்தம் கேட்டது. அப்போது கலா கத்தாமல் இருப்பதற்காக ஆண்டாள் என்பவர் கலாவின் வாயைப் பொத்தினார். கண்ணம்மா என்பவர் கலாவின் கைகளை பிடித்துக்கொண்டார். நடராஜன் முடியைப் பிடித்துகொண்டார். அப்போது பரத் கலாவின் மீது மண்ணெண்யை ஊற்றினான். சங்கீதா தீக்குச்சி எடுத்து கொளுத்தினார்.

5). தீப்பிடித்து எரிந்த நிலையில் கலா கத்திகொண்டே ஓடி வந்தார். மேற்படி நடராஜனும், அவருடன் வந்தவர்களும் ஓடி விட்டனர். தீப்பிடித்து கத்திக்கொண்டிருந்த கலாவின் மேல் தண்ணீரை ஊற்றி அணைத்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். என்னுடன் மீனா, கனகசபை, சந்திரலேகா க/பெ முத்து ஆகியோர் மருத்துவமனை வந்தனர். அங்கு செய்திகேள்விபட்டு மேற்படி சங்கீதாவின் கணவர் ராஜேஷ் த/பெ ஏழுமலை வந்து என்னிடமும், கலாவிடமும் தானாகக் கொளுத்திக் கொண்டதாக சொல்லச் சொன்னார். கலா மருத்துவர்களிடம் 5 பேர் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகக் கூறினார். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கலாவை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஆம்புலன்ஸ் செல்லும்போது திண்டிவனம் மேம்பாலம் அருகே இராமதாஸ் கிளினிக் அருகில் வைத்து மேற்படி நடராஜன் தம்பி செல்வம் என்பவர் ராஜேஷ் இடம் செலவுக்கென்று ரூ 2000/-கொடுத்தார். மேற்படி ராஜேஷ், முத்து, 2 வார்டு பாய் கூடவே வந்தார்கள். ஆம்புலன்சில் போகும்போது வழியில் ராஜேஷ் என்னிடமும், கலாவிடமும் ‘‘கொளுத்தியது தப்புதான். அதுக்கு என்னா செய்யனுமோ செய்றோம். கேஸ் மட்டும் வேண்டாம் தானாகவே கொளுத்திக்கொண்டதாகச் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சேரும்போதும் கலா மருத்துவர்களிடம் தன்னை 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகக் கூறினார். மேற்படி செல்வம் அன்று மாலையே மருத்துவ மனைக்கு வந்துவிட்டார். அன்று இரவு சுமார் 12 மணியளவில் கலாவின் கணவர் லட்சுமணன், தந்தை தேவராஜ், தாயார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

6). நான் 28-ஆம் தேதி மாலையும், 29&ஆம் தேதி காலையும் திண்டிவனம் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு எரித்து, 3 நாட்களாகியும் இதுவரை போலீசார் விசாரிக்க வரவில்லை என்பதைக் கூறினேன். ஆனாலும் போலீசார் 29&ஆம் தேதி மதியம் வரை வரவில்லை. எனவே அன்று சுமார் 12.30 மணியளிவில் நான் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சுமார் 2.00 மணியளவில் வந்தேன். அப்போது எஸ்.ஐ, மற்றும் ஒரு போலீசார் ஆகிய இருவரும் வெளியில் கிளம்பிச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிலர், ‘‘நீ பொம்பள தனியா வந்தா கேஸ் எடுக்க மாட்டாங்க, போய் தெரிஞ்சவங்க யாரையாவது அழைச்சிகிட்டு வாங்க’’ என்றார்கள். அதனால் நான் எங்கள் வார்டு கவுன்சிலர் கவிதா அவர்களின் கணவர் முரளி அவர்களை சந்தித்து, நடந்தைவகைகளைக் கூறி உதவி கேட்டேன். அவர் உடனடியாக மேற்படி செல்வத்தை வரவழைத்தார். நான் பக்கத்து அறையில் இருந்தேன். அங்கு வந்த செல்வம், கொளுத்தியது உண்மை என்றும், அந்தப் பெண் குடும்பத்திற்கு ஏதேனும் செய்து, பணம் கொடுத்து சரி செய்து விடுவதாகவும் கூறினார். அவர் போன்பின்பு முரளி என்னை அழைத்து ‘‘அவங்க எனக்கு நீண்ட நாள் பழக்கம். அதனால் நான் இந்த வழக்குல உனக்கு எதுவும் உதவி செய்ய முடியாது’’ என்று கூறிவிட்டார்.

7). பின்பு நான் என்னுடைய வீட்டிற்குச் சென்றேன். இதனையடுத்து மேற்படி சங்கீதா மாமியார் சந்திரா, மேற்படி ராஜேஷ், செல்வம், பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் என் வீட்டிற்கு வந்து ஆஸ்பத்திரிக்கு போலீஸ் வந்து விசாரித்தார்களா என்று என்னிடம் கேட்டனர். நான் இருக்கும் வரை போலீஸ் வரவில்லை என்று அவர்களிடம் கூறினேன். உடனே அவர்கள், ‘‘போலீசுகிட்ட அந்தப் பொண்ணு உண்மையைச் சொல்லிரப்போவுது.... நீ போய் மாற்றிச் சொல்லச்சொல்லு’’ என்று வற்புறுத்தினார்கள். நான் குளித்துவிட்டு அன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டுச்சென்றேன். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதும், கலாவின் அம்மா என்னிடம், அன்று பிற்பகல் போலீஸ் வந்து விசாரித்ததாகவும், அப்போது கலா அவர்களிடம், மேற்படி 5 நபர்கள் அவளை தீ வைத்து கொளுத்தியதை சொன்னதாகவும், கூறினார். மேலும் போலீசார், இரண்டு பேப்பரில் எழுதி டாக்டரிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதில் ஒன்றை டாக்டரிடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறினார். பின்பு இது தொடர்பாக கலாவிடமும் விசாரித்தேன். அன்று இரவு சுமார் 11 மணியளவில் மேற்படி சந்திரா, செல்வம் ஆகியோர் என்னை செல்பேசியில் தொடர்புகொண்டு விசாரித்தனர். நான் மேற்படி போலீஸ் விசாரித்ததை அவர்களிடம் கூறினேன். அதற்கு மேற்படி செல்வம், ‘‘நான் சொல்லவேண்டாம் என்றுதானே சொல்லிட்டு வந்தேன்.... அது மீறி இப்படி சொல்லிட்டுதே’’ என்று வருத்தப்பட்டார்.

8). பின்பு அடுத்த நாள் 30.09.07 ஞாயிறு மதியம் நான் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அன்று மேற்படி பிற்பகல் செல்வம், அவரது அக்கா மகன் ராஜேஷ் த/பெ ராஜீ, மேற்படி சந்திரா ஆகியோர் என் வீட்டுக்கு வந்து என்னிடம், கலாவை தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லும்படி என்னிடம் வற்புறுத்தி கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அவள் ஏற்கனவே போலீசிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டாள். இனிமேல் என்னால் அப்படி எல்லாம் கலாவிடம் சொல்ல முடியாது’’ என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன்.

அன்று பிற்பகல் 3 மணி அளவில் மேற்படி செல்வம் என் வீட்டிற்கு வந்து, கவுன்சிலர் முரளி கூப்பிடுவதாகக் கூறி என்னை மேற்படி முரளி என்பவர் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஓட்டலுடன் இணைந்துள்ள அவருடைய ஆபிசுக்குள் நான் சென்றேன். அங்கு மேற்படி முரளி, ராஜேஷ் த/பெ ராஜீ, நடராஜன் தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்டு சுமார் 20 பேர் அங்கிருந்தார்கள். மேற்படி முரளி என்னைப் பார்த்து, ‘‘5% தான் எறிஞ்சிருக்கு... அதற்கு கலாவுக்கு பத்தாயிரமோ பதினைந்தாயிரமோ தருகிறோம்... வாங்கிகிட்டு விட்டுட்டு போங்க உனக்கும் தனியா பத்தாயிரம் தருகிறோம்ஞ் சின்ன வீடுஞ்.. விளக்கு விழுந்திட்டுதுன்னு சொல்லச்சொல்லு’’ என்று கூறினார். இதற்கு நான் உடன்படவில்லை. உடனே டயர் குமாரும், அருள் மற்றும் ஜப்பார் ஆகிய மூவரும் என்னைப் பார்த்து, ‘‘இவ்வளவு பேரு சொல்கிறோம்... நீ கேட்க மாட்டேன்கிற.. எங்க உதவி இல்லாம இங்க இருந்துருவியா... உன் மேல பொய் கேசு போட்டு உள்ள தள்ளிடுவோம்’’ என்று மிரட்டினார்கள். அங்கிருந்த மேற்படி ராஜேஷ் எழுந்து, ‘‘ ஓத்தா.. இவ்வளவு பேர் சொல்றாங்க.. கேட்கமாட்டேங்கற.. இங்கியே ஒழிச்சிடுவேன்..’’ என்று தன் நாக்கை கடித்துக்கொண்டு என்னை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வந்தார். நான் மேற்படி முரளியைப் பார்த்து, ‘‘வார்டு கவுன்சிலர் கூப்பிடுகிறார் என்று நம்பிதானே நான் இங்கு வந்தேன்.. இங்கு அடியாட்களை வைத்து மிரட்டலாமா?’’ என்று கேட்டேன். உடனே அவர் ‘‘விடுமா..விடுமா..’’ என்று என்னை சமாதானப்படுத்தினார். வீட்டிற்குச் செல்ல வெளியே வந்த என்னை மேற்படி முரளி, செல்வம், டயர் குமார் ஆகியோர், மீண்டும் அழைத்து ‘‘உடனே ஆஸ்பத்திரிக்குச் சென்று, கலாவிடம் விளக்கு மேலே விழுந்திட்டதா போலீசுகிட்ட சொல்லச்சொல்லு .. நீ சொன்னா கேட்கும்..’’ என்று வற்புறுத்தினார்கள். ஆனால் நான் சாவுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.

9). மறுநாள் 1-ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நான் மீண்டும் கலாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றேன். அன்றும் மேற்படி ராஜேஷ், செல்வம், சந்திரா ஆகியோர் என்னிடம் வழக்கு வேண்டாம் தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லச் சொன்னார்கள். அதற்கு நான் உடன்படவில்லை. அன்று இரவு அங்கு தங்கியிருந்துவிட்டு மறுநாள் 02.10.07 செவ்வாய் அன்று மாலை நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போது மீண்டும், மீண்டும் செல்வம் உள்ளிட்ட நடராசனின் உறவினர்கள் என்னிடம், கலாவை மாற்றிச்சொல்லுமாறு வற்புறுத்தினார்கள்.

10). அதன்பின்பு 03.10.07 புதன் கிழமை இரவு 7 மணியளவில் மேற்படி செல்வம் மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் என்னை திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பாண்டி சென்று கலாவை பார்க்கவேண்டும் என்று கூறி என்னை காரில் ஏற்றினார்கள். அந்த காரில் எஸ்.ஐ சந்திரசேகர், இன்னொரு போலீஸ், செல்வத்தின் அக்கா மகன் ராஜேஷ், பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் உடன் வந்தனர். மற்றொரு காரில் செல்வம், மானூரைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆகியோர் வந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்பு, எஸ்.ஐ என்னிடம் ‘‘கலாவை அதுவாகவே எண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டதாக சொல்லச் சொல்லும்படி’’ என்னை முதலில் கலா இருக்கும் அறைக்குள் அனுப்பினார்கள். உள்ளே சென்ற நான், கலாவிடம், ‘‘என்னை வற்புறுத்தி கூட்டிக்கொண்டு வந்துள்ளார்கள். நீ பயப்படாமல் உண்மையைச் சொல்..’’ என்று அவள் காதருகே சொல்லிவிட்டு வந்தேன். பின்பு போலீசார் கலாவை தனியாக விசாரித்தனர். நாங்கள் கதவுக்கு வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். போலீசார் வெள்ளைத்தாளில் கலாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். வெளியில் வந்த எஸ்.ஐ இடம் மேற்படி ராஜேஷ் ‘‘என்ன சார் சொல்லிச்சு’’ என்று கேட்டார். அதற்கு எஸ்.ஐ தலையில் அடித்துக்கொண்டு ‘‘என்னய்யா இது பெரிய தொல்லையா இருக்கு. எத்தன தடவ கேட்டாலும். அது கரக்டா நடந்தத சொல்லுது. பெரிய தலைவலியா இருக்கு’’ என்று கூறினார். அப்போது ராஜேஷ் என்னைப் பார்த்து ‘‘எல்லாம் இது கொடுக்கற தைரியம்தான். உன் பேர்ல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளனும்’’ என்று கத்தி மிரட்டினார். அதன் பிறகு எல்லோரும் கிளம்பும் போது செல்வம், என்னைப் பார்த்து, அவரும், வழக்கறிஞரும் வந்த காரில் ஏறச்சொன்னார். அப்போது எஸ்.ஐ தலையிட்டு ‘‘வேண்டாம். அழைச்சிகிட்டு வந்த மாதிரியே கொண்டுபோய் விடணும். எங்க காரிலேயெ வரட்டும்’’ என்று கூறி என்னை வந்த காரிலேயே ஏறச்சொன்னார். இரவு 12 மணிக்கு நாங்கள் திண்டிவனம் வந்து நான் என் வீட்டிற்கு சென்றேன்.

11). மறுநாள் 04.10.07 வியாழன் அன்று காலை கலாவின் அப்பா தேவராஜ் தொலைபேசி செய்து, எச்சூர் வக்கீல் ஜெய்சங்கர் என்பவர் மூலம் மனு எழுதி எடுத்து வருவதாகவும், எஸ்.பி யிடம் தருவதற்கு இடம் தெரியாததால் உதவி செய்ய வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். எச்சூரில் இருந்து திண்டிவனம் வந்த அவருடன் எனக்கு தெரிந்த சரவணன், புருஷோத்தமன் ஆகியோரை துணைக்கு விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் அனுப்பிவைத்தேன். எஸ்.பி இல்லாததால் மனு தரமுடியவில்லை என்று திரும்பி வந்தவர்கள் கூறினார்கள்.

12). அதன்பின்பு மறுநாள் 05.10.07 வெள்ளி கிழமை அன்று காலை கலாவின் அப்பா தேவராஜ், கலா அம்மா இருவரும் பாண்டியில் இருந்து நேராக விழுப்புரம் சென்று எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டதாக எனக்கு தொலைபேசி செய்தனர். அன்று காலை எச்சூர் வக்கீல் ஜெயசங்கர் என் வீட்டுக்கு வந்து, வழக்கு போட காவல்நிலையம் போகவேண்டும் வாருங்கள் என்று கூறி என்னை அவர் வந்த காரிலேயே காவல் நிலையம் அழைத்துச் சென்றார். நான் காவல் நிலையத்தின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் வெளியில் வந்த அவர் ‘‘அவர்கள் பணம் கொடுத்து போலீசாரை சரிசெய்து விட்டனர். தனியாக கோர்ட்டில் பிரைவேட் கேஸ் போடவேண்டும்’’ என்று கூறினார். அதன் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பிரைவேட் கேஸ் போடவேண்டும் என மனு எழுதி என்னிடமும், மீனாவிடமும் கையெழுத்து வாங்கினார். நாளை வருவதாகக் கூறி எச்சூர் சென்றார்.

மறுநாள் 06.10.07 சனிக்கிழமை அன்று வழக்கறிஞர் வரவில்லை. தொலைபேசி செய்து கேட்கும் போதுதான் ஏற்கனவே வாங்கிய ரூ.3500/& மேல், பிரைவேட் கேஸ் போட தனியாக ரூ.2000கேட்கிறார் என்பது தெரிந்தது. அதை நான் தருகிறேன் வாருங்கள் என்று கூறினேன். அதன் பின்பு வருவதாகக் கூறினார்.

13). மறுநாள் 07.10.07 அன்று காலை வழக்கறிஞர் ஜெய்சங்கர், கலா அப்பா தேவராஜ் உடன் திண்டிவனம் வந்து என்னையும், மீனாவையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார். ஆய்வாளர் அறைக்கு செல்லும்போது, ஆய்வாளர் என்னிடம் பெயர் கேட்டார். நான் லட்சுமி என்று சொன்னதும், ‘‘ச்சீ... இங்க நிக்காத வெளியில் ஓடு..போ...போ..’’ என்று கேவலப்படுத்தி அவமானமாகப் பேசினார். பெண் என்றும் பாராமல் ஆய்வாளர் என்னை இப்படி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி மிரட்டியதில் பயந்து போன நான் வெளியில் வந்து விட்டேன். அதன் பிறகு ஆய்வாளர் மீனாவை அழைத்து உதவி ஆய்வாளரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். மீனாவை விசாரித்த எஸ்.ஐ வழக்கறிஞரிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கூறி மீனாவை வெளியில் அனுப்பிவிட்டார்கள். நானும் மீனாவும் வெளியில் நின்றுகொண்டிருந்தோம். காய்ச்சலுடன் இருந்த என் குழந்தையை நான் தூக்கிச்சென்றிருந்தேன். வழக்கறிஞரும் நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததால் நான் என் குழந்தையை அருகில் உள்ள சாந்தி கிளினிக்கில் காட்டிவிட்டு வந்தேன்.

அப்போது மீனா இப்போதுதான் வழக்கறிஞர் பாண்டிக்கு பஸ் ஏறிபோறார் என்றார். அப்போது பிற்பகல் மணி 3.00 இருக்கும். அதன் பின்பு நான் என் வீட்டிற்கு செல்லாமல் மீனாவின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தேன். அன்று மாலை என்னைத்தேடி வந்த என் மகள் வனஜா, என் நாத்தனார் மகள் சத்தியா ஆகிய இருவரும், மேம்பாலம் அருகில் உள்ள ஒரு கடையில் பூதேரியைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா, ராஜேஷ், செல்வம் உள்பட சுமார் 20 பேர் உட்கார்ந்து கொண்டு எழுதிக்கொண்டு, கையெழுத்து போட்டுக்கொண்டிருப்பதகாக் கூறினார்கள். அவர்கள் அனைவரும் எங்களிடம் வந்து ஏதேனும் தகராறு செய்வார்கள் என்று பயந்த நாங்கள் இருவரும் காவேரிப்பாக்கத்தில் உள்ள எங்களூக்குத் தெரிந்த சி.எ.மீனா என்பவர் வீட்டுக்கு சென்றோம்.

14). வழக்கறிஞர் வந்து, போலீசார் கேஸ் போடுவதாக இருந்தால் கலாவின் அம்மா விபரமாக சொல்வார்கள் என்பதால், எனக்கு தெரிந்த புருசோத்தமன் என்பவரை கலாவின் அம்மாவை அழைத்துவருமாறு காலையில் பாண்டிக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் பிற்பகல் 3.00 மணியளவில் இப்போதுதான் கிளம்புகிறோம் என்று தொலைபேசியில் கூறினார். உடனே நான் இப்போதுதான் வழக்கறிஞர் கிளம்பி அங்கு வருகிறார் அதனால் அங்கேயே இருங்கள் என்று கூறினேன். அதன் பின்பு மாலை சுமார் 6.30 மணியளவில் வழக்கறிஞர் திண்டிவனம் காவல் நிலையத்திலிருந்து எங்களுக்கு தொலை பேசி செய்து எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்தார். அங்கு மேற்படி புருசோத்தமன் அவர்கள் என்னிடம், ‘‘மருத்துவமனை வந்த வழக்கறிஞர், கலாவிடம் டைப் அடித்த பேப்பரிலும், டைப் அடிக்காத வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கினார். வழக்கறிஞருடன் போலீசார் யாரும் வரவில்லை’’ என்று கூறினார்.

அதன் பின்பு நான் வழக்கறிஞரைப் பார்த்தேன் வழக்குப் போடுவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த வழக்கறிஞர் எப்.ஐ.ஆர் போட்டுவிட்டதாக கூறினார். மீனா எப்.ஐ.ஆரில் உள்ளதை படித்துக் காட்டினார். உடனே நான், ‘‘என்ன சார் இது. சொத்து தகராறுன்னு பொய் கேஸ் போட்டிருக்காங்க. காரணமே பரத்துதான். அவன் பேரே இல்லையே என்றேன்’’. அதற்கு வழக்கறிஞர் ‘‘போலீஸ்னா அப்படிதான். நம்ம தனியா கோர்ட்டுல கேஸ் போட்டு கைது பண்ண வைக்கனும்’’ என்றார்.

மேலும் அவரே, ‘‘இன்னொரு விஷயம். நீங்கதான் கலாவை மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கச் சொன்னதா உங்க பேர்ல, அவங்க புகார் கொடுத்திருக்காங்க. போலீஸ் அதில் வழக்கு போட்டு நைட்டே உன்ன கைதுபண்ணி உள்ள வைக்கப்போறாங்க. எல்லாம் எழுதி ரெடியா வச்சிருக்காங்க’’ என்று கூறினார். பயந்து போன நான் ‘‘இப்ப என்னா சார் செய்யுறது’’ என்றேன். உடனே அவர், ‘‘ஒரு 5000/- பணம் கொடுங்க. நாளைக்கே நான் உங்களுக்கு பெயில் போடறேன். இன்னிக்கு நைட் மட்டும் எங்கியாவது தலைமறைவா இருங்க’’ என்றார். இப்போதே 5000/- பணம் கொடுத்தால்தான் உடனடியாக பெயில் எடுக்க முடியுமென்று மீண்டும் கூறினார். அதன் பிறகு எனக்கு தெரிந்த வழக்கறிஞர் சத்யா என்பவர் மூலம் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்பதையும், புகார் மட்டும் நடராஜன் தரப்பினர் தந்துள்ளனர் என்பதையும் தெரிந்துகொண்டேன். அதன் பின்பு நான் மேற்படி வழக்கறிஞரிடம் ‘‘இப்போது என்னிடம் பணம் இல்லை’’ என்றேன். அதற்கு ‘‘நீ எப்படியாவது எதாவது செஞ்சிக்கோ எனகென்ன’’ என்று வழக்கறிஞர் கூறினார். அதன் பிறகு நான் வீட்டிற்கு சென்று விட்டேன்.

15). பின்பு 12.10.07 வெள்ளி கிழமை அன்று கலாவைப் பார்ப்பதற்காக பாண்டி மருத்துவமனைக்குச் சென்றேன். கலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கிளம்பிக்கொண்டிருந்தார். ஏன் எனக்கேட்டதற்கு, ‘‘இந்த ரூமின் குளிர் ஒத்துக்கொள்ளவில்லை மேலும் தினமும் குளிக்கச்சொல்கிறார்கள் என்னால் முடியவில்லை அதனாலதான் கிளம்புகிறேன்’’ என்றார். பிறகு அவர்களுடன் திண்டிவனம் வந்து அவர்களை எச்சூர் செல்ல, வந்தவாசி பேருந்தில் ஏற்றிவிட்டு நான் எனது வீட்டிற்கு சென்று விட்டேன்.

16). பின்பு கலா காயங்கள் சரியாகாத நிலையில் எச்சூரில் இருந்து திரும்பி வந்து கடந்த 15.10.07 திங்கள் கிழமை அன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து இன்று வரை சிகிச்சைப் பெற்று வருகிறார். கலா எரிக்கப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் சரியாக போடப்படாத நிலையிலும், குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலும் 22.10.07 அன்று திண்டிவனம் காவல் ஆய்வாளர், அதிகாரிகள், உயர்நீதி மன்றம் உள்ளிட்டவற்றுக்கு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலா புகார் மனு அனுப்பினார்.

17). இதன்பின்பு திண்டிவனம் சட்டப் பணிகள் குழுவின் சார்பில் வழக்கறிஞர் அ.ராஜகணபதி அவர்கள் கடந்த 09.11.07 வெள்ளி கிழமை அன்று மாலை என் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து என்னை விசாரித்தார். நான் மேலே சொல்லியுள்ள எனக்குத் தெரிந்த அனைத்து சம்பவங்களையும் கூறினேன். அதன் பிறகு உண்மை அறியும் குழு சார்பில் திண்டிவனம் பேராசியர் பா.கல்யாணி (எ) பிரபா.கல்விமணி, நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு ஆசிரியர் மு.கந்தசாமி, திண்டிவனம் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மையம் இரா.முருகப்பன், விழுப்புரம் மனித உரிமைகள் கழகம் பி.வி.இரமேஷ், மனித உரிமைகள் இயக்கம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். நான் எனக்கு தெரிந்த உண்மைகளைக் கூறினேன்.

18). இந்நிலையில் கடந்த 12.11.07 அன்று காலை சுமார் 10 மணியளவில் நான் என் வீட்டில் இருந்தபோது மேற்படி சங்கீதா க/பெ ராஜேஷ், சந்திரலேகா க/பெ முத்து ஆகியோர் என் வீட்டிற்கு வந்தனர். சங்கீதா, ‘‘இந்த பிரச்சனை முடியட்டும் உன்ன தூக்கறனா இல்லையா பார்’’ என்று மிரட்டிச் சென்றார். இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தந்தேன். வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் புகார் மனு ஏற்புச் சான்று (வரிசை எண் 269/07 நாள் : 12.11.07 ) மட்டும் தந்தனர்.

19). கலா உயிருடன் மேற்படி நடராஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினார்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு நேரடி சாட்சியான என்னையும், மீனாவையும் போலீசார் விசாரித்தனர். ஆனால் நடந்த சம்பவத்திற்கு நேரடி சாட்சியான எங்களை வழக்கில் போலீசார் சாட்சியாக கொண்டுவரவில்லை. கலாவின் உயிருக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். இந்த நிலையில்தான் மேற்கண்ட இலவச் சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர், உண்மையறியும் குழுவினர் ஆகியோர் என்னை சந்ததித்த பின்பு நான் தைரியம் பெற்று நடந்த சம்பவங்கள் குறித்து எனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த புகாரை அனுப்புகிறேன். சிகிச்சையில் இருக்கும் கலாவிற்கும், நேரடி சாட்சிகாளான எங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளித்தும், இதுவரை திண்டிவனம் போலீசார் குற்றவாளிக்கு சாதகமாக செயல் படுவதால் இந்த வழக்கை மாவட்ட அளவிலான உயர் போலீஸ் அதிகாரி மூலம் புலன் விசாரனை செய்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், பாதிக்கப்பட்ட கலாவிற்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்கவேண்டும்.
(மேலே உள்ள படம் எரிக்கப்பட்ட நிலையில் கலா)

8 comments:

மாசிலா said...

பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இரா.முருகப்பன்.

ஒரு நல்ல சமூக சேவை.

............................

என்னத்த சொல்லி, என்னத்த செய்யறது? எளிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலிகார போலீசுகாரவங்க மற்றபடி வசதி படைத்த பொறுக்கி குடும்பங்கள், இடையில் சந்துல சிந்து பாட முயற்சிக்கிற வக்கீலுங்க, குண்டர் கும்பலுங்க ... எல்லாமே சாதாரண மக்கள் வாழ்க்கையோட விளையாடுறதையே ஒரு பொழுது போக்கா வெச்சி நடந்துனு வர்ராங்க.

கலா அவர்கள் மிகுந்த தைரியத்துடன் அனைவற்றையும் சமாளித்து வெகு விரைவில் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார் என வாழ்த்துகிறேன்.

இணையத்தில் இவ்விடயங்களை வலைக்கு ஏற்றியது அயோக்கியர்களுக்கு ஒரு சரியான சவுக்கடி. வலைப்பூவின் ஒரு ஆக்கபூர்வமான செயல்.

உலகத்து அனைத்து தமிழ் வலைஞர்கர்களும் இதை படித்து தத்தமது கண்டனங்களை தெரிவிப்பார் என நம்புவோம்.

சட்டத்துக்கு புரம்பான காரியங்கள், தனி மனித உரிமை மிரல்கள் செய்த, உயிருக்கு ஆபத்து விளைவித்த, கொலை மிரட்டல்கள் விட்ட, வீண் அச்சுறுத்தல்கள், பெண்ணெனினும் அவர்களிடம் ஆபாசமாக பேசி நடந்துகொண்ட, பொய் சொல்லச்சொன்ன போலீசு, வக்கீல் ... போன்ற அயோக்கியர்கள் அனைவர்களுக்கும் எதிர்ப்பாக எனது வன்மையான கண்டனங்களை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

பதிவுக்கு மீண்டும் நன்றி.

துளசி கோபால் said...

அடப்பாவிகளா......
என்னய்யா இப்படி அநியாயமா இருக்கு(-:

காவல்துறை இப்படியாக் கெட்டுக்கிடக்கு(-::

லக்ஷ்மி said...

படிக்கவே குலை நடுங்குகிறது. மனிதர்களுக்கு நடுவிலிருப்பதைவிடவும் வனவிலங்குக்ளுக்கு நடுவில் வாழ்வதே மேலானதாக இருக்கும் போலும்.

இரா.முருகப்பன் said...

திரு.மாசிலா அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
இத்துடன் இவை முடியவில்லை.
தங்களைப் போன்றோரின் ஆதரவுகள்தான் தொடர்ந்து செயல்பட நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது.
நன்றி!
மீண்டும் பேசுவோம்.
இரா.முருகப்பன்.

தருமி said...

காசும் அதிகாரமும் மட்டுமல்ல சாதிப் பற்றும், தாழ்த்தப்பட்டவர்கள் மீது மற்ற "உயர்ந்த" சாதியினருக்கு இருக்கும் வெறுப்பும் இந்த நிலைதொடர காரணமாயிருகிறது. மக்களின் மனது மாறுவதாக இல்லை. அரசு இயந்திரங்களும் எப்போதும் இந்த எளிய மக்களுக்கு எதிராகத்தான் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றன.

வேறு துறை எப்படியோ, இந்தக் காவல்துறையிலாவது தாழ்த்தப்பட்டோரின் இருப்பு அதிகமானாலொழிய அவர்களுக்கு எந்த நியாயமும் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.

Thekkikattan|தெகா said...

உங்களின் இந்தப் பதிவுக்கு எனது இடுகையில் ஒரு சுட்டி இணைத்துள்ளேன்... தங்களின் இந்தப் பதிவு எல்லோராலும் படிக்கப் பட வேண்டுமென்ற எண்ணத்தில்.

அந்த இடுகைக்கான சுட்டி இதோ:

http://thekkikattan.blogspot.com/2007/12/i.html

புரட்சி தமிழன் said...

முருகப்பன் அவர்களுக்கு பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த விஷயத்தில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பணக்காரன் போலீசிடமும் வக்கீல்களிடமும் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது எனில் மற்ற பெறிய பணமுதலை மற்றும் அரசியல் வாதிகளை நினைக்கும் போது குளை நடுங்குகிறது.
இவை மனித உரிமை ஆனையம் இப்படி எதுவும் ஒருஅமைபின் உதவியை நாடமுடியாதா?

இரா.முருகப்பன் said...

நண்பருக்கு வணக்கம்.

ஆதரவுக்கு நன்றி.

அனைத்து மனித உரிமை ஆணையங்களுக்கும், எரிந்த நிலையில் உள்ள கலாவின் 9 புகைப்படங்கள் இணைத்து புகார் அனுப்பப்பட்டது.

தமிழக மகளிர் ஆனணயம் மட்டும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரருக்கு(எஸ்.பி), ''அதிக பட்ச தண்டனை அளிக்கின்ற கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என" நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இது தொடர்பாக மேற்கொண்டு மாவட்ட போலீசோ அல்லது ஆணையமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நன்றி!

மீண்டும் பேசுவோம்.