Saturday, December 26, 2020

அ.மார்க்ஸ் 70

 

அ.மார்க்ஸ் 70

அனைவருக்கும் வணக்கம்.

அ.மார்க்ஸ் 70 என்ற இந்த நிகழ்வில் கலந்துகொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.  தோழர்சுகுமாரன் அவர்கள்தான்

இந்த நிகழ்ச்சியில் பேசுகிறீர்களா என்று கேட்டார். முதலில்கொஞ்சம் தயங்கினாலும்,  உடனடியாக சரிஎன்று சொல்லிவிட்டேன்.  சாரை எப்படிச்சொல்லி தொடங்குவதுஎனயோசித்தேன்.  சாருடன் முதல் சந்திப்பு, பேச்சு குறித்து பெரிதாக ஒன்றும் நினைவில் இல்லை. அவருடைய நூல்கள் குறித்து பலரும் பேசுவார்கள். வேறு என்ன பெரிதாக உள்ளது என்று யோசித்தேன்.

அவருடைய கருத்துகளுக்காக அதிகம் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்றார். அதனால் தமிழகத்தில் பெரியாருக்குப் பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்டவர் என்பதைச் சொல்லியே தொடங்கலாம் என நினைத்தேன்.

இன்று, தமிழகத்தில் தன்மனதில் பட்டதை, தனக்கு சரியென்று தோன்றியதை தயக்கமில்லாமல் கூறுவதன்மூலமாக பல தரப்பிலும் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஆனாலும், தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.

இதைத்தான் நாம்சாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது. சாருடைய தந்தை மலேசியாவில் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்ட கணபதி என்பவருடன் செயல்பட்டவர் என்பதையும், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர் என்பதையும் 2000 த்திற்கு முன்பே தகவலாக அறிந்திருந்தேன். அப்போதெல்லாம் சாருடன் பழக்கம் கிடையாது. 2000 தொடக்கத்தில்  வெளியான 'இந்துத்துவம் பன்முகப் பார்வை' என்ற நூல்தான் முதலில் படிக்கத்தொடங்கினேன். அதன் பிறகு கலாச்சாரத்தின் வன்முறை எனத்தொடர்கிறது.

மார்க்ஸ் சார் அவர்களிடமிருந்து  நாம் முக்கியமாக  தெரிந்துகொள்ள வேண்டியது கண்ணோட்டம் Perspective என்பதாகும். சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தகண்ணோட்டத்தையும், பார்வையையையும் நமக்கு அளிப்பார். புதிய பார்வையைஉருவாக்குவார். சமூகசெயல்பாட்டாளர்களாக உள்ள நமக்கு எதைப்பற்றியும் ஒரு கண்ணோட்டம் வேண்டும். புதிய கண்ணோட்டம்/பார்வையினை வழங்குவதில் முன்னோடியாக இருந்துகொண்டு, வழிகாட்டியாக உள்ளார். சில விஷயங்களில் சார் கூறுகின்ற கருத்துக்களுக்காக காத்திருப்பதும் கூட உண்டு.

மேலவளவு முருகேசன் படுகொலை வழக்கு அனைவருக்கும் தெரியும். வழக்கறிஞர் ரத்தினம் பல்வேறு சவால்களுக்கிடையே குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தார். முருகேசன் குடியிருப்புப் பகுதியை அம்பேத்கர் நகர் என்று பெயர் மாற்றம் செய்ய ஒரு நிகழ்ச்சியை வழக்கறிஞர் ரத்தினம் நடத்தினார். நாங்கள் நிறைய பேர் அதில் பங்கேற்றோம். தனது மகன்களுக்கு அம்பேத்கர் எனப் பெயரிட்டிருந்த சில பெற்றோர்களையும் அழைத்து நிகழ்ச்சியில் சிறப்பு செய்கின்ற ஒருஏற்பாட்டையும்  வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் செய்திருந்தார். 

நான் என்மகனுக்கு  அம்பேத்கர் என பெயரிட்டுள்ள நிலையில், நானும் அந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டேன். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்தான் என்னை சிறப்பித்துப் பாராட்டினார். இதுதான் சார் அவர்களுடனான முதல் நிகழ்வாக என்மனதில் உள்ளது அடுத்ததாகச் சொல்ல வேண்டும் என்றால்நூல்களுக்கான முன்னுரை குறித்து சொல்லவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்ட அமுலாக்கம் குறித்து நான் எழுதிய 'நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும்நீதியும்' என்ற நூலுக்கு  விரிவாக, மிகப்பெரிய  முன்னுரை எழுதிக் கொடுத்தார். “எழுத்து நடையும், மொழியும் நன்றாக உள்ளது. இதுபோல உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்” என்று கூறி ஊக்குவித்தார். அதன் பிறகுதான் எனக்குஅந்த நூல் குறித்த ஒரு முழு நிம்மதியும் ஏற்பட்டது.

அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற பழங்குடியினர் மாநாட்டில், நான் எழுதிய 'இருளர்கள் சிக்கல்களும் சவால்களும்' நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கும் ஒரு நல்ல அணிந்துரையை வழங்கி  சிறப்புசெய்தார்.

அதன்பிறகு நான் முன்பே எழுதிய 'இருளர்களின் இதயம் வி.ஆர்.ஜெகன்நாதன்' என்ற 30 பக்கம் கொண்ட சிறுநூலுக்கு, சார் அவருடைய முகநூலில் விரிவான  அறிமுகம் செய்து எழுதினார்.  அடுத்தது உண்மையறியும் குழு குறித்து சிலவார்த்தைகளை சொல்லவேண்டும்.

2006ஆம் ஆண்டு மண்டபம் அகதி  முகாமிற்கு சார் தலைமையில் சென்ற உண்மை அறியும் குழுவில் நானும் சென்றேன். அங்கு, அப்போதிருந்த ஆர்வக்கோளாறில் சார் பேசிக்கொண்டிருக்கும்போது நானும் சில கேள்விகளைக் கேட்டேன். உடனே, சார், ‘’நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். நான் பிறகு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். அதன்பிறகு குழு முடியும் வரை

யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது ஒரு நல்ல அனுபவம்.

இன்னொரு முக்கிய நிகழ்வையும் எல்லோரும் தெரிந்துகொள்வது நல்லது. விழுப்புரத்தில் செந்தில் என்ற தலித் இளைஞர், வன்னியர் பெண்ணை காதலித்ததால் ஒரு கை, ஒரு கால் வெட்டப்பட்டதாக வந்த தகவலையடுத்து, நான் இரு முறை செந்திலை சந்தித்துப் பேசினேன். அவர் சொல்வது உண்மைதான் என நம்பினேன். அடுத்து சார் தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டோம். அதில்தான் இறுதியில், செந்திலின் கை, கால்கள் வெட்டப்படவில்லை. செந்திலுக்கு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒரு கை ஒரு காலை இழந்துள்ளார் என்பதை அறிந்தோம். இதனை அறிக்கையில்  தெளிவாகக் குறிப்பிட்டோம்.

அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மறுநாள், ரயில் விபத்தில் கை கால் இழப்பு எனபத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. இது பல விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது வேறு. ஆனால், விழுப்புரத்தில் நிகழவிருந்த மிகப்பெரிய சாதிய சமூகப் பதட்டத்தை தணித்தது. கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அடுத்து மிகமுக்கியமான ஒன்று. அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள்  என்ற ஒரு நூல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஆசிரியர் மீனா அவர்கள்  இந்த நூலைத்தொகுத்துள்ளார். பலரும் பலகோணங்களில் சாரைப் பற்றிசொல்லியிருப்பார்கள். இந்த நூல் ஒரு அகராதியை போன்றது ஆகும். இந்த நூல்நூல் வெளியான காலத்தில் மூன்று நான்குமுறை படித்துள்ளேன். ஒவ்வொரு முறைபடிக்கும்போது புதிய புதிய உத்வேகம் பிறக்கும். கட்டுரைகள் நம்மை விழிப்படையச் செய்வதாக இருந்தது.

அடுத்ததாக "கரையும் நிழல்கள்" "மேன்மைபடுவாய் மனமே கேள்" இந்த  இரண்டு நூலும் மிக முக்கியமானது. வாழ்க்கை வரலாறு சுயசரிதை இல்லை என்றாலும் வாழ்க்கையில் சில சம்பவங்களை நினைவிலிருந்து குறிப்பிட்டுள்ளார். அந்தநூலின் முன்னுரையில் அவரே சொல்வதுபோன்று, இரவு பதினொரு மணிக்கு மேல்அறிவுப் பூர்வமான சிந்தனைகள் மங்கி, உணர்வுகள் மேலோங்கிய நிலையில் எழுதப்பட்டவை அந்த எழுத்துக்கள்.

இதனை நாம் படிக்கும்போது,  அவர் சொல்கின்ற நிகழ்வுகளை  நாம் அருகிருந்து நேரடியாகக் கண்டு அனுபவிப்பது  அல்லது உடனிருப்பது போன்ற உணர்வினைத் தரும். அதேபோன்று இரவு 11 அல்லது 12 மணிக்கு மேல் சற்றே அறிவுப்பூர்வமான சிந்தனை மங்கி, உணர்வுகள் மேலோங்கிய நிலையில் எப்போதேனும் மிக அபூர்வமாக தொலைபேசியில்  அழைத்து பேசுவார்.  முதல்முறை அழைக்கும்போது சார்  என்ன இந்த நேரத்தில் அழைக்கின்றார்  என்று பயந்து விட்டேன்.

ஆனால் பேசிய பிறகு மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அடுத்து எப்போது 11, 12 மணிக்கு மேல் அழைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அனைவருக்கும் நன்றி கூறிவிடை பெறுகிறேன் நன்றி வணக்கம். இறுதியாக ஒன்று. திண்டிவனத்தில் நாங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்துவது அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏழை எளிய குழந்தைகள்தான் படிக்கின்றனர். குழந்தைகளிடம் கட்டணம் வாங்குவதில்லை. உங்களைப் போன்ற நண்பர்களும் தோழர்களும்  பொதுமக்களும் அளிக்கின்றார் உதவியால் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகக் கல்வியைஅளிப்பதுடன் இலவசமாக மதிய உணவும் வழங்கி வருகின்றோம்.

இந்த மதிய உணவுத் திட்டத்தை தொடங்கும்போது, முதல் முதலாக ரூபாய் பத்தாயிரம் நன்கொடையாக அளித்தார். இலவச மதிய உணவுத் திட்டத்தை தொடர்ந்து நடத்தமுடியும் என்ற நம்பிக்கை விதையைஊன்றியவர் சார் ஆகும்.

மேலும் எங்களைப் போன்று பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பலருக்கும் உந்துசக்தியாகவும், உதாரணமாகவும் உள்ளார். வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

 (15 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)
 

 

 

 

No comments: