Saturday, February 27, 2016

அன்புத் தோழருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

அன்புத் தோழருக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
என்னைப் போன்றோர்
தொடர்ந்து
பொது வாழ்க்கையில் 
ஈடுபட
உந்து சக்தியாய்
இருப்பவர்...
நீங்களும் வாழ்த்துங்கள்..
(22.02.2016 முகநூல் பதிவு)

உங்களுக்குத் தைரியம் இருக்குமானால்... கன்னையகுமார் உரை

////////// உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை எழுப்புங்கள். இந்த நாட்டிலுள்ள மிகப் பெரும் பிரச்சினை சாதியம்தான். சாதியத்திற்கு எதிராகப் பேசுங்கள்.//////////
///////////////// கஸாப் யார்? அஃப்ஸல் குரு யார்? தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறச் செய்து கொள்ள விரும்பும் கட்டத்திற்குச் சென்ற அந்த மனிதர்கள் யார்? இந்தக் கேள்வி ஒரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்படாவிட்டால், அத்தகைய பல்கலைக் கழகம் இருப்பதற்குப் பொருளே இல்லை./////////////////
(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கன்னைய குமார் 2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்).
Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.
மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.
நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
சங் பரிவாரத்தினரோ, வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.
ஆனால், இன்று ஏ.பி.வி.பியும் அதன் ஊடகக் கூட்டாளிகளும் சேர்ந்து பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான இயக்கத்தைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்துவருவது மிகவும் வெட்கக்கேடானதும் துயரமிக்கதும் ஆகும்.
ஆராய்ச்சி மாணவர்களின் உதவித் தொகைகளுக்காகத் (fellowships) தாங்கள் போராடுவதாக ஏ.பி.வி.பி.யின் இணைச் செயலாளர் நேற்று கூறினார். இதைக் கேட்பது கேலிக்குரியது. ஏனெனில் அவர்களது அரசாங்கம், திருமதி மனு-ஸ்ம்ரிதி இரானி, உதவித் தொகைகளை வெட்டிக்கொண்டு வருகிறார். ஏ.பி.வி.பி.யோ “நாங்கள் உதவித்தொகைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறது. அவர்களது அரசாங்கம் உயர் கல்விக்கான வரவு-செலவு நிதியில் (budget) 17 விழுக்காடை குறைத்துள்ளது. நான்கு ஆண்டுகளாக எங்கள் உண்டி உறையுள் விடுதி கட்டப்படவில்லை. எங்களுக்கு ‘வை ஃபி’ வசதி இன்று வரை கிடைக்கவில்லை. ‘பெல்’ நிறுவனம் எங்களுக்கு ஒரு பேருந்தைக் கொடுத்தது. ஆனால், அதை ஓட்டுவதற்கு வேண்டிய எரிபொருளை வழங்குவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பணம் இல்லை. ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் (திரைப்பட நடிகர்) தேவ் ஆனந்தைப் போல, சாலை அமைக்கும் யந்திர வண்டிகளுக்கு (Rollers) முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு , “நாங்கள் உண்டி உறையுள் விடுதிகள் கிடைக்கச் செய்து கொண்டிருக்கிறோம்”, “‘வை ஃபி’ யைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்”, “உதவித் தொகைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். நண்பர்களே, இந்த நாட்டில் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விவாதம் நடக்குமேயானால், அவர்களது பொய்கள் அம்பலப்படுத்தபடும். ஜே.என்.யு.வைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்புவதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
ஜே,என்.யு.வில் ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்று (சுப்பிரமணியன்) சுவாமி கூறுகிறார். ஜே.என்யு.வில் இருப்பவர்கள் வன்முறையைப் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார். இங்கு வந்து எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஜே.என்.யு. சார்பில் நான் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர்களுக்குச் சவாலிடுகிறேன். வன்முறை என்ற கருத்தாக்கத்தின் மீது நாங்கள் விவாதம் புரிய விரும்புகிறோம். நாங்கள் கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.
“கூன் ஸெ திலக் கரேங்கெ, கோல்யோ ஸெ ஆர்த்தி” (இரத்தத்தால் திலகமிடுவோம், தோட்டாக்களால் ஆரத்தி எடுப்போம் –எஸ்.வி.ஆர்.) என்னும் ஆர்.எஸ்.எஸ். முழக்கத்தின் மீது கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். யாருடைய இரத்தத்தை இந்த நாட்டில் ஓடச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்கள் மீது பயன்படுத்தப்படுவதற்காக பிரிட்டிஷாருடன் சேர்ந்து நீங்களும் தோட்டாக்களை வழங்கினீர்கள். இந்த நாட்டின் ஏழைகள் உணவு வேண்டும் என்று கேட்கும்போது, பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, நீங்கள் அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்துகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
பெண்கள், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியபோது, அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். கையிலுள்ள ஐந்து விரல்களும் சரிசமமானவையாக இருக்க முடியாது என்றும், பெண்கள் சீதையைப் போல வாழ்ந்து அக்னிப் பரிட்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.
ஆனால், இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் ஒவ்வொருவருக்கும் சமத்துவம் என்னும் உரிமையை வழங்குகிறது. ஒரு மாணவரோ, ஒரு துப்புரவுத் தொழிலாளரோ, ஒரு ஏழையோ, ஒரு தொழிலாளியோ, ஒரு விவசாயியோ அல்லது ஒரு அம்பானியோ, ஒரு அதானியோ அவர்கள் யாராக இருந்தாலும், எல்லோருக்கும் சம உரிமை உள்ளது. ஆகவே, நாங்கள் பெண்களின் உரிமையைப் பற்றிப் பேசினால், அவர்கள் (சங் பரிவாரத்தினர்) நாங்கள் இந்தியக் கலாசாரத்தை நாசப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். சுரண்டல்வாத, சாதிய, மனுவாத, பார்ப்பனிய மரபுகள் என்பனவற்றைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிவதை நாங்கள் விரும்புகிறோம்.
ஆகவே, அவர்கள் ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறார்கள்? இந்த நாட்டின் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும் போது, அவர்கள் செவ்வணக்கத்தோடு நீல வணக்கம் சொல்லும்போது, மார்க்ஸோடு சேர்த்து பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரைப் பற்றியும் மக்கள் பேசும் போது, அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகிறது. அஷ்ஃபகுல்லா கானைப்• பற்றிப் பேசும் போது அவர்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
அவர்கள் சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகள். வாருங்கள், என் மீது அவதூறு வழக்குத் தொடருங்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு, பிரிட்டிஷாருடன் வலுவாக சேர்ந்து நின்று கொண்டிருந்த வரலாறுதான். இந்த தேசதுரோகிகள்தாம் இன்று தேசபக்தி சான்றிதழ்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனது செல்பேசியை சோதித்துப் பாருங்கள், நண்பர்களே. எனது தாயாரையும் சகோதரியையும் அவர்கள் எவ்வளவு கொடூரமாக அவதூறு செய்து செய்திகளை அனுப்புகிறார்கள் என்று. எனது தாய் இந்த பாரத மாதாவின் பகுதி இல்லை என்றால், எந்த பாரத மாதாவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? அந்த பாரதா மாதா என்ற கருத்தாக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது தாயார் ஒரு அங்கன்வாடித் தொழிலாளி. எனது குடும்பம் ரூ.3000 மாத வருவாயை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் எனது தாயாரை அவதூறு செய்கிறார்கள். இந்த நாட்டின் ஏழைகள், தொழிலாளர்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோரின் தாய்மார்கள் பாரதாமாதாவின் பகுதியாக இல்லாமல் இருப்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுங்கள். ‘பகத் சிங் நீடூழி வாழ்க’ என்று கூறுங்கள். ‘சுக்தேவ் நீடூழி வாழ்க’என்று கூறுங்கள். ‘அஷ்ஃபக்குல்லா கான்’ நீடூழி வாழ்க’ என்று சொல்லுங்கள். பிறகுதான் நாங்கள் நம்புவோம், உங்களுக்கு இந்த நாட்டின் மீது பற்றுறுதி இருக்கிறது என்று.
பாபாசாகெப்பின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் கனவு காண்கின்றீர்கள். உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை எழுப்புங்கள். இந்த நாட்டிலுள்ள மிகப் பெரும் பிரச்சினை சாதியம்தான். சாதியத்திற்கு எதிராகப் பேசுங்கள். இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள். தனியார் துறையிலும்கூட இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள்.
இந்த தேசம், ஒருபோதும் உங்களுடைய தேசமாக இருந்ததில்லை – ஒருபோதும் இருக்கப் போவதுமில்லை. ஒரு தேசம் என்பது மக்களால் உருவாக்கப்படுவது. பசியால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு தேசத்தில் இடம் இல்லை என்றால், அது ஒரு தேசமே அல்ல. நேற்று ஒரு தொலைக்காட்சி சேனல் விவாதத்தின் போது தீபக் செளரியாஸிஜியிடம் கூறினேன்: “செளரியாஸிஜி, இது ஓர் இருண்ட தருணம், நினைவிருக்கிறதா?” என்று.
பாசிசம் இந்த நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், இனி ஊடகங்களும்கூட பாதுகாப்பாக இரா. சங் பரிவார அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்படுவதைத்தான் அவை பயன்படுத்த வேண்டியிருக்கும் – இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்ததைப் போல. இதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தேசபக்தியை நீங்கள் உண்மையிலேயே காட்ட விரும்புகிறீர்களா? ஜே.என்.யு., வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு, மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது என்று சில ஊடகத்தினர் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆம், அது உண்மைதான். ஜே.என்.யு., வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு கேள்வி எழுகின்றது: ஒரு பல்கலைக் கழகம் எதற்காக இருக்கிறது? சமுதாயத்தின் “பொது மனசாட்சியை” விமர்சனப்பூர்வமாகப் பகுத்தாய்வு செய்வதற்குத்தான் ஒரு பல்கலைக்கழகம் இருக்கின்றது. விமர்சனரீதியான சிந்தனைய ஊக்குவிக்கத்தான் அது இருக்கின்றது.
இந்தப் பணியைச் செய்யப் பல்கலைக் கழகங்கள் தவறுமேயானால், பின்னர் ஒரு தேசம் என்பதே இருக்காது, மக்களின் பங்கேற்பு ஏதும் இருக்காது. நாடு முதலாளிகளுக்கான தீவனமாகவே இருக்கும். கொள்ளைக்கும் சுரண்டலுக்குமான தீவனமாக மட்டுமே இருக்கும். மக்களின் கலாசாரம், விழுமியங்கள், உரிமைகள் முதலியன உள்ளடக்கப்படாவிட்டால், தேசம் என்பதே ஏதும் இராது. நாங்கள் இந்த நாட்டோடு நிற்கிறோம். பகத் சிங்கும் பாபாசாகெப் பீம்ராவ் அம்பேத்கரும் கண்ட கனவைப் பார்க்கிறோம். அனைவருக்கும் சமத்துவம், வாழ்வதற்கான உரிமை, உணவு, தண்ணீர், உறைவிடம் ஆகியன பெறுவதற்கான உரிமை என்கின்ற கனவுக்காக நிற்கிறோம். நாங்கள் இந்தக் கனவுக்காக நிற்கிறோம். இந்த கனவுகளோடு நிற்பதற்காக ரோஹித் தமது உயிரைத் தத்தம் செய்தார். ஆனால், இந்த சங் பரிவாரத்தினருக்குச் சொல்கிறேன்: “உங்கள் அரசாங்கத்திற்கு வெட்கக் கேடு”.
மத்திய அரசாங்கத்திடம் சவாலிட்டுச் சொல்கிறேன்: ரோஹித்துக்கு நடந்ததை ஜே.என்.யுவில் நடக்க விட மாட்டோம். ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் நினைவில் கொள்வோம். கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நாங்கள் நிற்போம்.
பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் விடுங்கள், உலகிலுள்ள ஏழைகள், தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். உலகிலுள்ள மனிதகுலத்துக்கு, இந்தியாவிலுள்ள மனிதகுலத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம். இந்த மனிதகுலத்துக்கு எதிராக நிற்கும் குழுவை இன்று நாம் அடையாளம் கண்டுள்ளோம். இன்று நமக்கு எதிரே உள்ள மிகக் காத்திரமான பிரச்சினை இதுதான். இந்த அடையாளப்படுத்துதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சாதியத்தின் அந்த முகத்தை, மனுவாதத்தின் அந்த முகத்தை, பார்ப்பனியத்துக்கும் முதலாளியத்துக்குமுள்ள கூட்டணி என்னும் முகத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த முகங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் இந்த நாட்டில் நிறுவ விரும்புவது உண்மையான ஜனநாயகத்தை, உண்மையான சுதந்திரத்தை, ஒவ்வொருவரின் சுதந்திரத்தை.
அந்த சுதந்திரம் வரும், அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றம், ஜனநாயகம் ஆகியவற்றோடு அந்த சுதந்திரம் வரும். அதனால்தான் நான் எனது நண்பர்கள் அனைவரிடமும் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள் என்று. நமது கருத்து சுதந்திரத்தை, நமது அரசமைப்புச் சட்டத்தை, நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பிளவுச் சக்திகளை – பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பிடம் தரும் சக்திகளை – எதிர்த்து நிற்கும் பொருட்டு நமது நாட்டை ஒற்றுமைக்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியுள்ளது.
கஸாப் யார்? அஃப்ஸல் குரு யார்? தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறச் செய்து கொள்ள விரும்பும் கட்டத்திற்குச் சென்ற அந்த மனிதர்கள் யார்? இந்தக் கேள்வி ஒரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்படாவிட்டால், அத்தகைய பல்கலைக் கழகம் இருப்பதற்குப் பொருளே இல்லை.
வன்முறை என்பதை வரையறுக்காவிட்டால், வன்முறையை உங்களால் எவ்வாறு காண முடியும்? வன்முறை என்பது ஏதோ துப்பாக்கிகளால் மக்களைக் கொல்வது மட்டுமே அல்ல. அரசமைப்புச் சட்டத்தால் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஜே.என்.யு. நிர்வாகம் மதிக்க மறுப்பதும்கூட வன்முறைதான். இதுதான் நிறுவனம்சார்ந்த வன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த மனிதர்கள் (சங் பரிவாரத்தினர்) நீதி பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்று தீர்மானிப்பது யார்? பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியபோது, தலித்துகள் கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் நாய்களும் இந்தியர்களும் உணவு விடுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. இந்த நீதிக்கு நாங்கள் சவாலிட்டோம். இன்றும்கூடத்தான், நீதி பற்றி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் ஏ.பி.வி.பி.யும் கொண்டுள்ள கருத்தை எதிர்த்துப் போராடுகிறோம்.
நீதி பற்றிய உங்களது கருத்தில் நீதி பற்றிய எனது கருத்து உள்ளடக்கப்படாவிட்டால், நீதி பற்றிய உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒவ்வொருவரும் அரசியலமைப்புச் சட்டரீதியாகத் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறும் போதுதான் இந்த நாட்டை சுதந்திர நாடு எனக் கருதுவோம். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலைப்புச் சட்டத்தின் கீழ் சரிசமமானவர்களாக இருக்கும்போது, நீதி இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்முறை எதனையும், பயங்கரவாதி எவரையும், பயங்கரவாதத் தாக்குதல் எதனையும், தேச-விரோத நடவடிக்கை எதனையும் ஆதரிக்காது. சந்தேகத்துக்கு இடமற்ற உறுதியான வார்த்தைகளில் இதை நான் மீண்டும் அறுதியிடுகிறேன். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை எழுப்பினர். அவர்களை ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.
ஜே.என்.யு. நிர்வாகம், ஏ.பி.வி.பி.ஆகிய இரண்டுக்கும் பொதுவான கேள்வியொன்றை எழுப்ப விரும்புகிறேன். இந்த வளாகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. தயவு செய்து எ.பி.வி.பி.யின் முழக்கங்களைக் கவனமாகக் கேளுங்கள். அவர்கள், “கம்யூனிஸ்ட் நாய்கள்” என்று கூறுகிறார்கள். “அப்ஃஸல் குரு என்னும் நாயின் குட்டிகள்” , “ஜிஹாதியின் பிள்ளைகள்” என்று கூறுகிறார்கள். இந்த அரசமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமையை நமக்கு வழங்கியிருக்குமானால், எனது தந்தையை நாய் என்று சொல்வது நமக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? இதை நான் ஏ.பி.வி.பி.யிடம் கேட்கிறேன். இந்தக் கேள்வியை ஜே.என்.யு. நிர்வாகத்திடம் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? யாருடன் வேலை செய்கிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் வேலை செய்கிறீர்கள்?
இன்று ஒரு விஷயம் முழுமையாகத் தெளிவாகிவிட்டது: ஜே.என்.யு. நிர்வாகம் முதலில் அனுமதி வழங்குகிறது. பிறகு நாக்பூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அனுமதியை அது திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அனுமதி கொடுப்பதும், பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கு, மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதும் பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கைப் போலவே அடிக்கடி நிகழ்கிறது. உதவித் தொகை அதிகரிக்கப்படுவதாக முதலில் அவர்கள் அறிவிப்பதும், பிறகு அதற்கு நேர்மாறாக, உதவித் தொகை நிறுத்தப்படுவதாகச் சொல்வதும் போன்றதுதான் இது. சங் பரிவாரம் செயல்படும் பாணி இதுதான். ஆர்.எஸ்.எஸ். – ஏ.பி.வி.பி.பாணி. இந்த பாணியில்தான் அவர்கள் நாட்டை நடத்த விரும்புகிறார்கள். இதே பாணியில்தான் அவர்கள் ஜே.என்.யு.வை நடத்துகிறார்கள்.
ஜே.என்.யுவின் துணை வேந்தரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஜே.என்.யு.வளாகத்தில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. உணவு விடுதிகளில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்குப் பிரச்சினை இருந்திருந்தால், நீங்கள் அனுமதி கொடுத்திருக்கக்கூடாது. ஆனால், நீங்கள் அனுமதி கொடுத்திருந்ததால், அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன என்பதைப் பல்கலைக் கழக நிர்வாகம் தெளிவுபடுத்தியாக வேண்டும்.
இந்த மனிதர்களைப் பற்றிய உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் யாரையும் வெறுப்பதில்லை. எனவே தயவு செய்து அவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள். உண்மையில் அவர்களுக்கு நான் இரக்கப்படுகிறேன். அவர்கள் சும்மா பீற்றித் திரிபவர்கள். ஏன்? கஜேந்திர செளஹான் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக உட்காரச் செய்யப்பட்டது போல, தங்களுக்கும் ஒரு செளஹான், திவான், ஃபர்மான் (அரசனின் முத்திரை தாங்கிய ஆணை – எஸ்.வி.ஆர்.) கிடைக்கும் என்று நம்புகிறார்கள். தாங்களும் ஃபர்மான்களை அனுப்புவோம், இந்த ஃபர்மான்களைக் கொண்டு தங்களுக்கும் தொடர்ந்து வேலைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கத்தும்போது, அது அவர்கள் பதவிகளுக்கான நேர்காணலுக்குத் தயாராகும் தருணம் வந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், பதவி கிடைத்தவுடன் தேசபக்தியையையும் பாரத மாதாவையும் மறந்துவிடுவார்கள். மூவண்ணக் கொடி ஒருபுறமிருக்கட்டும் – அதை அவர்கள் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை, காவிக் கொடியையும் மறந்துவிடுவார்கள்.
இது எந்த வகையான தேசபக்தி என்று அவர்களைக் கேட்க விரும்புகிறேன். வேலைக்கு அமர்த்துபவர், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியரை நன்றாக நடத்தாவிட்டால், விவசாயி தொழிலாளியை நன்றாக நடத்தாவிட்டால், முதலாளி தனது தொழிலாளர்களை முறையாக நடத்தாவிட்டால், ரூ15000த்திற்கு வேலை செய்யும் தொலைக்காட்சி நிருபரை அவரது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சரியாக நடத்தாவிட்டால், இது எந்த வகையான தேசபக்தி என்று கேட்க விரும்புகிறேன்.
ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி என்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டிகளோடு மட்டும் நின்றுவிடுவதுதான். அதனால்தான், அவர்கள் தெருக்களில் வரும் போது, பழம் விற்பவரை மோசமாக நடத்துகிறார்கள். “ஐயா, ஒரு டஜன் வாழைப் பழத்தின் விலை ரூ 50” என்று அவர் சொல்லும்போது, அவர்கள் வசவுகளை அவிழ்த்துவிட்டு , “நீங்களெல்லாம் எங்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். நாங்கள் ரூ 30தான் தருவோம்” என்று கூறுகிறார்கள். ஆனால், பழம் விற்பவர் ஒரு நாள் அவர்களை எதிர்த்து நின்று, “ நீங்கள்தான் ஆகப்பெரும் கொள்ளைக்காரர். கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளீர்கள்” என்று கூறினால் என்ன நடக்கும்? அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.) பழம் விற்பபவரை தேச-விரோதி என்று முத்திரை குத்துவார்கள்.
ஏ.பி.வி.பி.யில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். “ தேசபக்தி உடையவர்களாக உண்மையிலேயே நீங்கள் உங்களைக் கருதுகிறீர்களா? என்று நான் அவர்களிடம் அடிக்கடி கேட்பதுண்டு. அவர்கள் சொல்வார்கள்: “ என்ன செய்வது? அரசாங்கத்துக்கு ஐந்தாண்டுக் காலம் இருக்கிறது. இரண்டாண்டுகள் கழித்துவிட்டன. மூன்றாண்டுப் பேச்சுக் காலம் எஞ்சியுள்ளது. எதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டுமோ, அதை எஞ்சியுள்ள இந்த ஆண்டுகளில் செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறுவார்கள். ஆகவே, அவர்களிடம் நான் சொல்வேன், “ஜே.என்.யுவைப் பற்றி நீங்கள் பொய் சொன்னால், நாளை யாரேனும் ஒருவர் உங்கள் சட்டைக் காலரையும்கூட பிடித்துவிடக் கூடும்; அப்படிச் சட்டைக் காலரைப் பிடிப்பவர், உங்கள் நண்பர்களிலொருவராக, ரயில் வண்டிகளில் மாட்டுக் கறி இருக்கிறதா என்று சோதனை செய்யக்கூடியவர் போன்ற உங்கள் நண்பரொருவராக இருக்கலாம். அவர் உங்களைப் பிடித்து, வதைத்து, நீங்கள் ஜே.என்.யு.மாணவர் என்பதால் நீங்களும் தேச விரோதிதான் என்று சொல்லலாம். நீங்கள் இப்போது செய்வதிலுள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறீர்களா?”
“நாங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம், அதனால்தான் ஜே.என்.யுவை மூடுவதை எதிர்க்கிறோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். “பிரமாதம், முதலில் ஜே.என்யு.வை மூடுவதற்கான சூழலை உருவாக்குவது, பிறகு, நீங்கள் ஜே.என்.யுவில் தங்க வேண்டியிருப்பதால், அதை மூடுவதை எதிர்ப்பது” என்று அவர்களிடம் கூறினேன். அதனால்தான் ஜே.என்.யு. மாணவர்களாகிய உங்களிடம் சொல்கிறேன், மார்ச் மாதம் (மாணவர் சங்கத்துக்கான) தேர்தல் நடக்கப் போகிறது. ‘ஓம்’ சின்னத்துடன் ஏ.பி.வி.பி.யினர் உங்களிடம் வருவர். தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்: “நாங்கள் தேச விரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள். எங்கள் வாக்குகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்களும் தேச விரோதியாகிவிடுவீர்கள்”.
இப்படிச் சொல்வதை உறுதி செய்யுங்கள். பிறகு அவர்கள் சொல்வார்கள் : “இல்லை, இல்லை. அப்படிப்பட்டவர்கள் நீங்களல்லர். வேறு யாரோ சிலர்தான் அப்படிப்பட்டவர்கள்”. பிறகு நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் : “தேசவிரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள் என்பவர்கள் வேறு யாரோ சிலர்தான் (ஜே.என்.யு.வைச் சேர்ந்த அனைவரும் அல்லர்) என்று ஏன் ஊடகங்களின் முன் நீங்கள் கூறவில்லை? உங்கள் துணை வேந்தர் ஏன் இதைச் சொல்லவில்லை? உங்களது பதிவாளர் இப்படிச் சொல்லவில்லையா?”
யார் அந்த ஒரு சிலர்? “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்களா? அந்த ஒரு சிலர் நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர் என்று கூறவில்லையா? அந்த ஒரு சிலர், முறைப்படி பெறப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறுவது தங்களது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் என்று கூறுவதில்லையா? நாட்டின் ஏதோவொரு பகுதியில் சண்டை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்களும் அதில் சேர்ந்து நிற்போம் என்று கூறுகிறார்கள்.
அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.- எஸ்.வி.ஆர்.) இந்த சின்ன விஷயத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்*. ஆனால், குறுகிய கால அவகாசத்தில் இங்கு கூடியுள்ளவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இந்த வளாகத்திலுள்ள ஒவ்வொரு மாணவரிடமும் செல்ல வேண்டும். ஏ.பி.வி.பி., இந்த நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது. ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது. நாம் ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த விட மாட்டோம். ஜே.என்.யு. நீடூழி வாழ்க! இப்போது நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் அனைத்திலும், ஜே.என்.யு.முழுமையாகப் பங்கேற்கும். ஜனநாயகத்தின் குரலை, சுதந்திரத்தின் குரலை, கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தும்.
நாம் முன்னேறிச் செல்வோம். நாம் போராடுவோம். நாம் வெற்றி பெறுவோம். இந்த நகரத்தின் துரோகிகளைத் தோற்கடிப்போம். இந்தச் சொற்களுடன், ஒற்றுமைக்கான வேண்டுகோளை விடுக்கிறேன்.
ஜெய் பீம், லால் சலாம்!
நன்றி: Countercurrents.org, 18 February, 2016
அஷ்ஃபகுல்லா கான்: உத்தரப்பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த இவர், ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன்’ என்னும் அமைப்பில் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால், சதி, தேச துரோகக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு, அவருடைய நண்பரும் போராட்டத் தோழரும் அவரைப் போன்ற உருதுக் கவிஞருமான பிஸ்மில்லுடன் சேர்த்துத் தூக்கிலிடப்பட்டார். பிஸ்மில் பிறப்பால் ஓர் இந்து.
கன்னைய குமாரின் உரை எழுதி வாசிக்கப்பட்டது அன்று. எனவே, வாக்கிய அமைதியை உரையின் எல்ல இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது. எனினும் இந்தக் குறிப்பிட்ட வாக்கியம் சற்றுக் குழப்பத்தைத் தருகிறது. அதன் ஆங்கில மூலம் பின்வருமாறு: “They will never understand this small thing”. அவருடைய உரையில் இந்த வாக்கியம் இடம் பெறும் பத்தியைக் கருத்தில் கொளகையில் ‘They’ என்று அவர் இங்கு குறிப்பிடுவது ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றைத்தான் என்று கொண்டு, அவ்வாறே மொழியாக்கம் செய்துள்ளேன் -எஸ்.வி.ஆர்.
நன்றி:thetimestamil.com
(23.02.2016 முகநூல் பதிவு)

தேசபக்தர்களின் சேவை!!!!!!!

(24.02.2016 முகநூல்பதிவு)

ஏதோ ஒன்றைத் தேடப்போய்

ஏதோ ஒன்றைத் தேடப்போய் 
இது கையில் கிடைத்தது..
2008 இல் எழுதிய புகார்...
 

(26.02.16 முகநூல் பதிவு)


Friday, February 19, 2016

தலித் மக்கள் சார்பாக தமிழக சட்டமன்றத் தேர்தல்-2016 க்கான தேர்தல் அறிக்கை




தலித் மக்கள் சார்பாக 
தமிழக சட்டமன்றத் தேர்தல்-&2016 க்கான
தேர்தல் அறிக்கை
---------------------------------

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால் மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
                                                        &    புரட்சியாளர் அம்பேத்கர்


தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் உரிமைகள் மற்றும்  வாழ்வியல் மேம்பாடுகளுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 25 தலித் அமைப்புகள் இணைந்து உருவாக்கியதுதான் நீதிக்கான தலித் கூட்டமைப்பு(Dalit Collective for Justice).

இதேபோன்று தேசிய அளவில் 25 மாநிலங்களில் தலித் மனித உரிமை, வன்கொடுமை தடுப்புச் சட்டச் செயலாக்கம், அரசின் கொள்கை மற்றும் சட்ட உருவாக்கம் போன்றவற்றிற்காக பங்காற்றி வருகின்ற டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 17 வருடமாக செயல்படுகின்ற அமைப்பு நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (National Dalit Movement for justice).

விரைவில் தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலித் மக்களின் சார்பாக இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவேண்டும். அதற்கு அக்கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற கட்சியின் துணை அமைப்புகள் மற்றும் பிற ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவை கட்சிகளின் கவனத்திற்கு இக்கோரிக்கைகளை எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழகத்தில் தலித் மக்களின் நிலை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 20,13,78,086 தலித் மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 16.6% ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 1,44,38,445 தலித் மக்கள் உள்ளனர். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 20.0% ஆகும்.
2004--&05 ஆண்டு கணக்கெடுப்பின்படி  நாட்டில் பழங்குடி மக்களில் 50% சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில் 32% சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
சமூக அடுக்கில் அனைத்து வகையிலும் கீழ் நிலையில் உள்ள தலித் மக்களை முன்னேற்றமடையச் செய்து மேம்படுத்த அரசியல் அமைப்பு மூலமாக பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்கிற சமூக நீதி, சமூக பொருளாதார ரீதியிலான நலத் திட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவைகள் உள்ளன.
நாடு முழுவதுமுள்ள தலித் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக 1965 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. 1969 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை பட்டியலிட்டிருந்த திரு இளையபெருமாள், தலித் மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமை கொஞ்சங்கூட முன்னேற்றமடையவில்லை என்பதைத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு 47 வருடங்கள் ஆனாலும் இந்நிலைகளில் எந்தமாற்றமும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலத்தில் மொத்தம் 18,623  வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 352 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 259  தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு      உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2,269  தலித்துகள் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இது வழக்காக பதிவு செய்யப்பட்டதால் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் பதிவான தகவல்கள் ஆகும். வழக்காக பதிவு செய்யப்படாத வன்கொடுமைகள் ஏராளம் என்பது நாம் அறிந்ததே.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குளில் குற்றவாளிகளை விடுதலை செய்யவதையே நீதிமன்றங்கள் தமது கடமையாகச் செய்துவருகின்றன. உதாரணத்திற்கு 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களில் பெறப்பட்ட தகவல்கள். மூன்றாண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் 69 வழக்குகளில் 42 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு 9 இல் மட்டுமே தண்டனையளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 வழக்கில் 8 விடுதலை செய்யப்பட்டு ஒன்றில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் மொத்தமுள்ள 23 வழக்குகளில் ஒன்றில் மட்டுமே தண்டனையளிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் நிலவுகின்ற ‘‘ஒயிட் காலர்பொருளாதாரச் சூழலில் தலித் மக்களுக்கு உரிய முக்கிய இடம் அளிக்கப்படவில்லை. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டின் மூலம் இதை சரி செய்ய நமது அரசியல் சட்டங்கள் முயற்சித்தன. ஆனாலும் நடைமுறையில் இன்றளவும் செயல்படாமலே உள்ளதுதலித் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்படமால் உள்ளது.
மேலும், தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறந்துவிடுகின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000 த்திற்கு 61 ஆக உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 பேர் இறந்துவிடுகின்றனர். தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22 ஆகும். தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%. 2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.தலித் மக்களில் முக்கால்வாசிக்கும் மேல் கூலித் தொழிலாளிகளாகவே உள்ளனர்இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது. மேலும் தலித் அமைப்புகள், கட்சிகள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அவர்களுக்கான உரிய முக்கியத்துவமோ, பிரநிதித்துவமோ கொடுக்கப்படுவது இல்லை. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. முதன்மைக் கட்சிகளில் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாகமாக மாற்றப்பட்டு வாய்மூடி அமைதியாக்கப்படுகின்றனர்
நாட்டில் மலிந்துவிட்ட ஊழல் காரணமாக அரசின் எந்தவொரு சலுகை அல்லது நலத்திட்டங்களையும் தலித் மக்களால் அணுகமுடியாத நிலை உள்ளது. சமூகம் நாகரீகமடைந்ததாக கூறிக்கொண்டாலும் இன்னும் தலித் மக்கள் கையால் மலம் அள்ளும் மற்றும் கழிவுகள் அகற்றும் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுத்தப்படுகின்றனர். இன்றைய உலகமயமாக்கலின் தாக்கமும் தலித் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் தாக்கத்தால் தலித் மக்கள் மேலும் பலவகையிலும் பாகுபாடுகளுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் ஆளாகின்ற  அவல நிலை உள்ளது.
இத்தகையச் சூழலில் தலித் மக்களின் பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் தலித் மக்கள் சார்பாக இந்தத் தேர்தல் அறிக்கையினை வெளியிடுகின்றோம்.

கோரிக்கைகள் :

1.   தலித் மக்களுக்கு நிலம், குடியிருப்பு மனை, பட்டா வழங்கப்படவேண்டும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 14.4% தலித் மக்கள்தான் குடியிருப்பில் வசிக்கின்றனர். மீதமுள்ள அனைவரும் குடியிருப்பு என கணக்கெடுக்கமுடியாத குடிசைகளில் வசித்து வருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளும், பழங்குடியினரும் நிலமற்ற அன்றாடக் கூலிகளாகவே உள்ளனர். அதனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள இவர்கள் நாட்டில் அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர். எனவே, கோயில் நிலங்கள் மற்றும் நில உச்சவரம்பு சட்டங்களில் உரிய திருத்தங்களைச் செய்து அதன் மூலம் கிடைக்க கூடிய கூடுதல் நிலங்கள்தரிசு நிலங்கள்வனத்துறைக்குச் சொந்தமான விவசாயம் செய்யக்கூடிய  நிலங்கள் போன்ற அனைத்துவகை நிலங்களும் விவசாயக் கூலிகளாக உள்ள நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
·  பல தலைமுறைகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் வாழ்ந்து வரும் தலித் குடும்பங்கள் அனைவருக்கும் அரசு வீட்டுமனைகளும், பட்டாக்களும் வழங்கப்படவேண்டும்.
      பஞ்சமி நிலங்களை மீட்டெடு : ஆங்கிலேயர் காலத்தில் தலித் மக்களுக்கு என ஒப்படைப்பு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை அடையாளங்கண்டு, தனிச் சட்டமியற்றி மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள பிறசாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நிலங்கள் மீட்கப்படவேண்டும்.

2.----------கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை
குடிசையில்லா மாவட்டங்களாக மாற்ற சிறப்பு குடியிருப்புத் திட்டங்கள்
  
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்றளவும் தலித் மக்கள் பெருமளவில் குடிசைகளில் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களாலும், கோடைகாலத்தில் தீ போன்ற விபத்துகளாலும் குடிசைகள் பாதிப்படைகின்றன. எனவே இவ்விரண்டு மாவட்டங்களையும் குடிசைகள் இல்லாத நிலையினை உருவாக்க சிறப்பு குடியிருப்புத் திட்டமியற்றி அனைத்து குடிசைகளையும் கட்டிடங்களாக மாற்றவேண்டும்.
மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தலித் குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, தற்போதைய நவீன சூழலில் வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்

3.----------------கல்வி, வேலை வாய்ப்புகளில் தலித் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் தலித்/பழங்குடியினர் இதனை அனுபவிக்க முடிவதில்லை. குறிப்பாக மேல் மற்றும்  நடுத்தர வகுப்பினர் மட்டுமே இவைகளை அனுபவிக்கின்றனர். கல்வி என்பது இன்று பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய, அதிகாரத்துடன் தொடர்புடையவர்கள் மட்டுமே பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. தலித் மாணவர்கள் கல்வி பயில்வது என்பது அதுவும் உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதன் ஒரு உதாரணம்தான் ஹைதாராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் மரணம்.
அரசின் அடிமட்ட, பிறருக்கு ஏவல் செய்கின்ற பணியிடங்களில் மட்டுமே இன்றும் தலித்துகள் நியமிக்கப்படுகின்றனர். அரசின் உயர் பதவிகளிலோ, பணியிடங்களிலோ இடஒதுக்கீட்டின்படிகூட நியமனங்கள் நடைபெறுவதில்லை. உதாராணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழங்களின் துணைவேந்தர்கள் மொத்தம் 25 பேர் உள்ளனர். இதில் ஒருவர் கூட தலித் இல்லை. இதுபோன்ற நிலைகளை மாற்றி உரிய பணியிடங்கள் நிரப்பட்டு, கல்வி வழங்கப்படவேண்டும்.

4. தனியார் துறையில் இடஒதுக்கீடு :
இன்று நாட்டில் தனியார் துறைகள் அனைத்தும் கார்ப்பரேட் மயமாகி வருகின்றனஇந்த கார்ப்பரேட் துறையின் நுழைவு வாயில் அருகில்கூட தலித் / பழங்குடியினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை நியாயப்படுத்திக்கொள்ள நாடு வளர்கிறது என்று வெளிப்படையான பொய்யினைக் கூறுகின்றனர். உலகின் 4-&வது மிகப்பெரிய நாடான இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்  இருக்க கூடிய தலித் மக்களை புறக்கணித்து விட்டு அர்த்தமுள்ள வளர்ச்சியை இந்தியா எட்ட முடியாது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேறுவதன் மூலமே நாடு வறுமையின் பிடியில் இருந்து விடுபடும். எனவே அனைத்து வகையிலான தனியார் துறையான கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு தலித் பழங்குடியினர் பணியமர்த்தப்படவேண்டும். இதற்கான தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும். இதில் தலித் கிறிஸ்துவர்களையும் உள்ளடக்கவேண்டும்.

5.பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்டம்: தனி சட்டம் தேவை
சமூகத்தில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளின் காரணமாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வில் எவ்வித மேம்பாடோ, முன்னேற்றமோ அடையமுடியாத நிலை உள்ளது. இதனால், பிற சமூகத்திற்கான இணையான சமமான வளர்ச்சியினை தலித் / பழங்குடியின மக்கள் அடையவெண்டும் என்பதற்காக பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணைத்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. இதன் மூலம் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு என மத்திய அரசு பல்லாயிரம் கோடி கணக்காண ரூபாய்களை மாநில அரசுக்கு அளிக்கின்றது. மாநில அரசோ இதனை வேறு ஏதேனும் பொது திட்டங்களுக்கோ அல்லது இலவச திட்டங்களுக்கோ செல்வழித்துவிட்டு, தலித் மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் எதனையும் நடைமுறை படுத்துவதில்லை. குறிப்பாக கடந்த நிதியாண்டில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத்திட்டத்திற்கு என ரூ பதினோறாயிரத்து ஐநூறு கோடியினை அரசு ஒதுக்கியது. ஆனால் இந்நிதியில் தலித் மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசு இலவச திட்டங்களான மிக்சி, கிரைண்டர் வழங்க பயன்படுத்தியுள்ளனர். திட்டமாக உள்ளதால் இவ்வாறு அரசு வேறு செலவினங்களுக்கு இந்நிதியை பயன்படுத்துகின்றது. இதற்கென தனிசட்டம் இயற்றினால் நிதி முறைகேடாக பயன்படுத்துவது தடுக்கப்படும்.
எனவே, ஆந்திர அரசாங்கம் இதற்கான தனிசட்டம் இயற்றியுள்ளதுபோல், தமிழகத்திலும் பட்டியலினத்துவருக்கான துணைத்திட்டத்திற்கு தனிச் சட்டம் இயற்றவேண்டும். இலவசங்கள் என்ற பெயரில் ஏழை மக்களை வஞ்சிக்காமல் சட்டத்தின்படி உரிமை மற்றும் வளர்ச்சியினை அளிக்கவேண்டும்.

6.குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான பாகுபாடுகள் / வன்கொடுமைகள் நிறுத்தப்படவேண்டும்பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை :

தலித் குழந்தைகளும், மாணவர்களும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கும், புறக்கணிப்பிற்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர். சிறு வயது குழந்தைப்பருவத்தில் ஏற்படுகின்ற இதுபோன்ற பாதிப்புகளும், புறக்கணிப்புகளும் கடைசிவரையில் அவர்கள் மனதில் ஆறாத வடுக்களாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் பெரும்பகுதி தலித் மாணவர்களின் கல்வி இடையிலேயே நின்றுவிடுகின்றது. தற்போதுள்ள இத்தகைய சமூகச் சூழலில்  87% தலித் குழந்தைகள் தங்களின் பள்ளிக் கல்வியை முழுமையாக முடிக்கமுடியாத நிலை உள்ளது. இதனால் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் நிலவுகின்றது. பல்வேறு கல்வி நிலையங்களில் தலித் குழந்தைகள் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்கின்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற அடிமட்ட வேலைகளைச்  செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுன்றனர். இவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்தவேண்டும். கல்வி நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு மனித உரிமை, சமத்துவம், பாகுபாடுகளை ஒழிப்பது உள்ளிட்ட சமூக நீதி தொடர்பான பயிற்சிகளை அளித்து சமூகக் கண்ணோட்டத்தினை உருவாக்கவேண்டும்.
·         அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களில் பாகுபாடுகளை ஒழிப்பது, சமத்துவத்தை உருவாக்குவது, பெண்களுக்கு சம வாய்ப்பு, தலித் / பழங்குடியினரை அக்கறையுடன் அணுகுவது, ஆதரவாய் இருப்பது, மூடநம்பிக்கைகளை ஒழிப்பது மற்றும் மனித உரிமைக் கல்வி போன்றவைகளை இணைத்து  புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும். இவைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். இவைகள் மூலம் பிரச்சனைகளை பாதிப்புற்றோர் தரப்பிலிருந்து அணுகுவது என்ற புதிய கண்ணோட்டங்கள் வளர்வதுடன், மதிப்பீடுகள் உயரும். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்தப் பாடத்திட்டங்களை நடைமுறைபடுத்தவேண்டும்.
·         தலித் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான வன்கொடுமைக் குற்றங்களில் 30% தலித் பெண் குழந்தைகளே பாதிப்புற்றுகின்றனர். இவைகளை தடுத்து நிறுத்த அரசு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி, புதிய சட்ட நடைமுறைகளை உருவாக்கவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைபடுத்தவேண்டும்.
·         பள்ளிக்கல்வி, கல்லூரி மட்டுமல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை தொடரமுடியாத இழிநிலை தொடர்வது ரோகித் மரணம் மூலம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது. எனவே உடடியான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தோரட் குழு அறிக்கையினை உடனடியாக நடைமுறைபடுத்தி பாகுபாடில்லா கல்விச்சூழலை உருவாக்கவேண்டும்.
·         மேலும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடர்பான தமிழக அரசின் அரசு ஆணை 92 எவ்வித பாகுபாடும், தடைகளும் இன்றி நடைமுறைபடுத்தப்படவேண்டும். இதனை செயல்படுத்தாத தனியார் கல்வி நிறுவனங்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

7.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவேண்டும்

நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக நடைமுறைபடுத்தப்படாமல், அதிகாரிகள் வேண்டுமென்றே தமது கடமையை புறக்கணித்து வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015&ன் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சட்ட அமுலாக்கத்தில் தாமதமின்றி வழக்கு பதிவு, உரிய பிரிவுகள், உரிய அதிகாரி குறிப்பிட்ட நாளுக்குள் விசாரணை, சட்டத்தின்படி உரிய நிவாரணம், சிறப்பு வழக்கறிஞர் நியமனம் போன்றவைகளை உரிய கண்காணிப்பினை மேற்கொள்ளவேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட விழிகண் குழுவும், முதல்வர் தலைமையிலான மாநில விழிகண் குழுவும் முறையாக காலமுறைப்படி கூடி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மேலும், மாவட்டத்தில் வழக்கு நடைமுறை மற்றும் வழக்கு விசாரணை ஆகியவை குறித்து ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யவேண்டும்.
தமிழக அரசு 28 மாவட்டங்களை வன்கொடுமை பகுதியாக அறிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் வன்கொடுமை நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் வன்கொடுமை நிகழாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் அப்பகுதிகளுக்கு என புதிய எதிர்பாரா செலவினங்களுக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.



8.வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர் :

நீதிபதியே சிறப்புவழக்கறிஞர்களை நியமனம் செய்யவேண்டும் : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிப்புற்றோர் விருப்பத்தின்பேரில் சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதில் மாவட்ட ஆட்சியர்களின்  அலட்சியம், அலைக்கழிப்பு போன்றவைகளினால் நீதிகிடைக்காமல் போகின்றது. எனவே, பாதிப்புற்றோர் விரும்புகின்ற சிறப்பு வழக்கறிஞர்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதியே நியமிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்களையும் அரசு உருவாக்கவேண்டும்.

9.அரசியல் கட்சியினர் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும்:

தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களே வன்கொடுமை வழக்குகளை நடத்துகின்றனர். அவர்களுக்கான பிற வழக்குகள், பிற அரசுப் பணிகள் போன்றவற்றால் இவ்வழக்கில் சிறப்புக்கவனம் அளிக்கமுடிவதில்லை. மேலும், தன்னை நியமித்துள்ள அரசாங்கத்தில் குற்றங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது என்கிற நிலையேற்படமால் இருக்கவேண்டும் என்பதற்காக வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருந்து விடுதலையாக வழிசெய்கின்றனர். இத்துடன் இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு சமரசத்திற்கு எளிதில் அணுகும் சூழலில் உள்ளனர். பாதிப்புற்றோருக்கு உரிய வழிகாட்டுதலோ, ஆலோசனைகளோ அளிப்பதில்லை. எனவே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுவது என்பதை நிறுத்திவிட்டு, புதிய பணியிடமாக உருவாக்கவேண்டும்.

10.தலித் மற்றும் பழங்குடியின கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை விரிவுபடுத்தவேண்டும்.
‘‘கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதியத் தீண்டாமைக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இவர்கள் தலித் அல்லாத கிறித்துவர்களாலும், மற்ற ஆதிக்கச் சாதியினராலும் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள்என்பதை அம்பேத்கர் (தொகுதி :5, பக்கம் :470) சுட்டிக்காட்டியுள்ளார். பிற தலித்துகளைப் போலவே தலித் கிறித்துவர்களும் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் புறக்கணிப்பிற்கும், தீண்டாமைப் பாகுபாடுகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். சாதியின் பெயராலேயே தலித் கிறித்துவர்கள் மீது இந்த வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாறு பாதிப்புறும் தலித் கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தினால், குறைந்தபட்ச பாதுகாப்புகள் உறுதி செய்யப்படும். மேலும், ஆதிக்கச் சாதி மற்றும் தலித் அல்லாத பிற கிறித்துவ சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமை மற்றும் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்பு, சேதங்களுக்கு குறைந்தபட்ச நிவாரண உதவிகளைப் பெறமுடியும். எனவே  சாதிய வன்கொடுமையால் பாதிப்புறும் தலித் கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தும் வகையில்  விரிவுபடுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

11.கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013 உடனடியாக நடைமுறைபடுத்தபடவேண்டும் :

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் உச்சநீதி மன்ற உத்திரவிட்டதின் பேரில் 2013 இல் - கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இதுவரை இச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. எனவே உடனடியாக இச்சட்டத்திற்கான விதிகள் உருவாக்கப்பட்டு உடனடியாக நடைமுறைபடுத்தப்டவேண்டும்.

12.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை :

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 17 இல் ‘‘தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது, நடைமுறைப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுயாரேனும் கடைப்பிடித்தால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான சட்டமாகத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது. ஆனாலும் நடைமுறையில் தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமைகள் ஆகியவை குறையாமல், வெவ்வேறு வடிவங்களில் அதிகரித்தே வருகின்றது. அதிலும் குறிப்பாக தீண்டாமையை நடைமுறைபடுத்தி, கடைபிடிக்கும் சாதியம் மிகவும் கெட்டித்தட்டி இறுகிப்போயுள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டம் பிரிவு 17 &இல் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை ‘‘சாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது, மேலும், சாதியின் பெயரால் நடத்தப்படும் சங்கங்களும், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும், திருமணத் தகவல் நிலையங்களும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது’’ என புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். இதன் மூலம் சாதி ஆதிக்கத்தையும், சாதியின் பெயரால் நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக் குற்றங்களையும் வெகுவாகக் குறைக்கமுடியும்.

13.சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் :

சமூக நீதியின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பில் முக்கிய பங்காற்றுகின்ற சாதி மறுப்பு மற்றும் வேறு சாதிகளைச் சேர்ந்தோரின் காதல் திருமணங்களுக்கு அரசு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கவேண்டும். இதற்கு அரசு தனி சிறப்பு அறிவிப்புகளை வெளியிடவேண்டும். மேலும், இதுபோன்ற திருமணங்களுக்கு எதிராக செயல்படுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சிறப்பு அறிவிப்புகளில் இதுபோன்ற திருமணங்களால் பாதிப்புற்றோருக்குக் குறிப்பாக தலித் மற்றும் பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அதில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை, நிலம் போன்றவைகள் உள்ளடக்கப்படவேண்டும்.

14.சாதி ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் :

‘‘கலப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்’’ ‘‘கலாசாரம் கெட்டுப்போகிறது’’ என சாதிய அமைப்புகள், கட்சிகள்  கூறுகின்றன. சாதி, மதம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள் என எவ்விதப் பாகுபாடுகளும் இல்லாமலும் உருவாகின்ற காதலுக்கு அன்பு, ஆதரவுதோழமை, சமத்துவம் ஆகியவை  அடிப்படையாக உள்ளது. இதுபோன்றக் காதலை எதிர்க்கும் சாதியம் தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், பெண்ணடிமை, புறக்கணிப்பு, வேறுபாடு, ஒடுக்குமுறை போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டுள்ளது. இப்படியான சமூக சமத்துவத்துவமின்மையை காதலும், காதல் திருமணங்களும் உடைத்து, தகர்க்கின்றபோது காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர். சாதியக் கட்டுமானத்தில் தன் சாதிக்கு கீழுள்ள சாதியை ஏற்கமுடியாத ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாக கொலைகள் நிகழ்கின்றது.
இந்த ‘‘கௌரவக்கொலை’’ என்ற பெயரில் நிகழும் சாதி ஆணவக் கொலைகளில் பெண்கள் மட்டுமே கொலை செய்யப்படுகின்றனர். தேசிய மகளிர் ஆணையம் இதுபோன்ற கொலைகளில் 75% சாதிய அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றது எனக்கூறியுள்ளது. இவ்வாறு சாதியின் பெயரால் நிகழும் கொலைகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இதுபோன்ற கொலைகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

15.தலித் பஞ்சாயத்துக் கிராமங்களை சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஊராட்சிப் பதவிகளில் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. தலித் ஒருவர் ஜனாதிபதியாக வரலாம, சாதி ஆதிக்கமுள்ள கிராமங்களில் பஞ்சாயத்து தலைவராக வரமுடியாது என்பதை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல உதாரணங்கள் நிருபித்து வருகின்றன. மீறியும் தலித் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரானால் அவரால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்படுத்த முடியாது, அலுவலக நாற்காலியில் உட்கார அனுமதி கிடையாது, இந்திய தேசிய கொடியினை ஏற்றமுடியாது, ஊராட்சிக்கான நிதி மற்றும் காசோலைகளை கையாள முடியாது. மொத்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரு தலைவராக செயல்படமுடியாது.
மேலும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமைப் பாகுபாடுகள், வன்கொடுமைகள், புறக்கணிப்புகளால் பல தலைவர்கள் மரணமடைந்துள்ளனர். எனவேதலித் பஞ்சாயத்து தலைவர் மட்டும் பங்கேற்கின்ற கருத்தறியும் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவையின் அடிப்படையிலோ மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள புதிய வழிமுறைகளை கண்டறியவேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய சட்டப்பாதுகாப்பினை வழங்கவேண்டும். இவ்வாறு தலித் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

16.பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பாகுபாடுகள் நீக்கப்பட்டு, தனிக்கவனம் செலுத்தப்படவேண்டும் :

தற்போதைய மழை, வெள்ள பாதிப்பில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்பட்டாலும், குடிசைகளிலும், அன்றாடக் கூலிவேலை செய்தும் வாழ்ந்து வந்த தலித் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டு சொல்லணாத் துயருக்கு ஆளானார்கள். அரசு மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் பெருமளவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்த நிவாரணப் பலன் / பயன்கள் தலித் மக்களுக்கு போதுமானவகையில் சென்றடையவில்லை என்பதை ஊடகங்கள் பலவும் வெளியிட்டன.
நிவாரணப் பணிகளில் சிறப்புக் கவனம் : அரசு இனிவரும் பேரிடர் காலங்களில் அளிக்கும் நிவாரணப் பணிகளில் தலித் மற்றும் பழங்குடி மக்களையும், அவர்களின் குடியிருப்பினையும் கருத்திகொண்டு முன்னுரிமையின் மூலம் சிறப்பு கவனம் செலுத்தி செய்யவேண்டும். இதுகுறித்த கண்ணோட்டதை வளர்த்துக்கொள்ளும் வகையில் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கவேண்டும்.   தலித்&பழங்குடி மக்களுக்கான நிவாரணங்களைத் தடுப்போர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் : பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது நிகழும் வன்கொடுமை மற்றும் நிவாரணங்களில் புறக்கணிப்பு போன்றவைகளை தீர்க்கும் விதமாக தேசியப் பேரிடர் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். பேரிடர் காலங்களில் மத்திய மற்றும் உள்ளூர் சேத மதிப்பீட்டுக் குழு மட்டுமல்லாமல், பாதிப்புகளைப் பார்வையிடுகின்ற அனைவரும் தலித் & பழங்குடி மக்களையும், அவர்களின் குடியிருப்புகளையும் பார்வையிடும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கவேண்டும்.

17.நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவேண்டும் :

2011 ஆம் ஆண்டு விவரப்படி தமிழகச் சிறைகளில் இந்தியத் தண்டனைச் கீழ் சட்டத்தின் தண்டனைக் கைதிகளாக மொத்தம் 5200 பேர் இருந்துள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் 1,609 (30.95%), பழங்குடியினர் 176 (3.36%), முஸ்லீம்கள் 671 (12.90%), கிறித்துவர்கள் 999 (19.21%). இந்த நான்கு பிரிவினரும் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் 66.44% பேர் ஆகும். அதே 2011 ஆம் ஆண்டில் விசாரணைக் கைதிகளாக மொத்தம் 7682 பேர் இருந்துள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் 2783 (36.22%), பழங்குடியினர் 757 (9.85%), முஸ்லீம்கள் 943 (12.27%), கிறிஸ்துவர்கள் 1213 (15.79%). இந்த நான்கு பிரிவினரும் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் இது 74.14%  பேர் ஆகும். சமூகத்தின் விளிம்பில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள இந்த நான்கு பிரிவினருமே மொத்த விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் 75% வரை உள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்-பட்டுள்ள இவர்கள் அனைவரும் குற்றங்களில் தொடர்புடை-யவர்கள் அல்ல என்பதும், பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பதும் நம் நேரடி அனுபவத்தில் கண்டுள்ள உண்மை-களாகும். இதுபோன்ற சிறைவாசிகள் அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படுவதுடன், மறுவாழ்வு தொடர்பான திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.

18.குற்றப்பரம்பரையினர் என்கிற கண்ணோட்டம் மாறவேண்டும் : தலித் மற்றும் பழங்குடியினர் மீதான காவல் நிலைய சித்திரவதை மற்றும் மரணங்கள்நீதிவிசாரணை வேண்டும் :

காவல் துறையினரால கண்டுபிடிக்கமுடியாத திருட்டு வழக்குகளில் கணக்கு காட்ட அழைத்துச் செல்லப்பட்ட தலித்&பழங்குடி இளைஞர்களை திருட்டு வழக்கினை ஒப்புக்கொள்ளும்படி காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். ஒப்புக்கொள்ள மறுப்பவர்களை தொடர்ந்து அடித்து, சித்திரவதை செய்து பொய்வழக்கில் சிறையில் அடைக்கின்றனர். இதுபோன்ற வழக்குகளில் இன்று தஞ்சை, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த குறவர் சமூக மக்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர் போலீசார். குறவர் சமூக மக்களை இன்றும் குற்றப்பரம்பரையினராகவே கருதுகின்ற அவலநிலை மாற்றப்படவேண்டும்.
மேலும் இதுபோன்ற காவல் நிலைய சித்திரவதையில் ஏராளமான தலித் மற்றும் பழங்குடியினர் இறந்துபோயுள்ளனர். இதுபோன்ற மரணங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுதில்லை. கொலையுண்டவர் குடும்பத்திற்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படுவதில்லை. காவல்துறையின் என்கவுன்டர் மரண நிகழ்வில் தொடர்புடைய நிலைய காவலதிகாரிகள் மீது .. பிரிவு 302 இன்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் உள்ளது. இதனைக் காவல் நிலைய மரணம் சம்பவத்திலும் பின்பற்ற அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். இனி இதுபோன்று காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்தால் காவலதிகாரிகள் மீது .. பிரிவு 302 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யவெண்டும். மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனித உரிமை ஆர்வலர்கள், துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை உறுதி செய்யவேண்டும்.

 
 --------------


நீதிக்கான தேசிய தலித் கூட்டமைப்பு(DCJ)தமிழ்நாடு
Dalit Collective For Justice(DCJ),
Secretirate :  SASY, 33A, Anna Nagar, 4th Street,
Marakanam Road, Tindivanam-604001.

நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (NDMJ-NCDHR) & புதுடெல்லி.
National Dalit Movement for Justice-NDMJ,

7/58, 1st Floor, South Patel Nagar, New Delhi-110008