Tuesday, January 23, 2018

பெத்தவன் - (நெடுங்கதை) - இமையம்
திவ்யாவின் தந்தை மரணமும், கண்ணகி உயிரோடு கொளுத்தப்பட்டதும் எப்படி நடந்திருக்கும் என்பதை உணரவேண்டுமானால் இந்தக் கதையை படிக்கவேண்டும். 
படித்ததிலிருந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மனதை விட்டு அகல மறுக்கின்றனர் முருகேசன், கண்ணகி, இளவரசன் எல்லாம். 
கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் தலித் இளைஞரும், வன்னியர் பெண்ணும் காதலிக்கின்றனர். வாழ்வதற்காக ஊரை விட்டு ஓடும் நான்கு முறையும் பிடிபடுகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காதலை ஏற்காத சாதிய சமூகம் பெண்ணை கொல்ல நினைக்கின்றது. அதுவும் தந்தையிடம் நீ கொல்கிறாயா நாங்கள் கொல்லட்டுமா என அச்சுறுத்துகின்றது. இதில் வேதனையடைந்த தந்தை பெண்ணை அவள் காதலித்தவனோடு சேர்ந்து வாழ யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். 
முருகேசனும் கண்ணகியும் கொலை செய்யப்பட்ட பிறகு, முருகேசனின் பெற்றோர் மற்றும் தம்பியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளேன். வழக்கறிஞர் ரத்தினம், தோழர் சுகுமாறன் உள்ளிட்டோருடன் கிராமத்திற்கும் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் எழாத உணர்வுகள் இந்த பெத்தவன் கதை மனதை உலுக்குகின்றது.
வாக்குமூலம் வழக்கில் இருக்கின்றது. படைப்புதான் வாழ்க்கையில் வருகின்றது. எங்களின் வாக்குமூலங்களைவிட இந்த படைப்புதான் பெரும் அதிர்வை உருவாக்குகின்றது. முருகேசனும் கண்ணகியும் வாழ்வதற்காக எப்படி போராடினார்காளோ அதைவிட அதிகமாக அவர்களின் கொலை வழக்கு பெரும் போராட்டங்களை சந்திக்கின்றது. முருகேசனையும் கண்ணகியையும் உயிரோடு கொளுத்தியது போன்று வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கின்றனர்.

செல்லாத பணம் (நாவல்) - இமையம்
செல்லாத பணம் என்றதும் பண மதிப்பிழப்பு தொடர்பான நாவலாக இருக்கும் என்ற நினைத்தும், ஆனால் இமையம் ஏற்கனவே எழுதியுள்ள நாவல்கள் மனதில் வந்துபோனதில் வேறாகவும் இருக்கலாம் என்று படிக்கத் தொடங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. பொறியியல் படித்த பெண் ரேவதி. பர்மா அகதியான ரவி என்கிற படிக்காத ஆட்டோ டிரவரை விரும்புகின்றார். பெற்றோர் சம்மதிக்காத நிலையில், யாரிடமும் பேசாமல் பிடிவாதம். வேறு திருமண முயற்சிகளை தற்கொலைக்கு முயன்று ரேவதி தடுப்பதால் வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் விருப்பமின்றி ரவிக்கு திருமணம் செய்விக்கின்றனர். 6 வருடத்திற்கு பிறகு உடல் முழுவதும் நூலிழை அளவுக்கு கூட சதையில்லாமல் 80% மேல் தீயில் உடல் எரிந்து வெந்துபோன நிலையில் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது. அதன்பிறகு கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையாக விரிந்து செல்கிறது. அனைவரும் மனித குணங்களின் நுட்பமான உணர்வுகளை இயல்பாக போகிற போக்கில் வெளிப்படுத்துகின்றனர். 6 வருட திருமண வாழ்க்கையில் ரேவதி, கணவன் ரவியிடம் அனுபவிக்கும் சித்திரவதையை தாங்கி பொறுத்துக்கொள்கிறாள். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால் தானே பொறுப்பு எனத் தாங்கிக்கொள்கின்றாள். மகள் அனுபவிக்கும் கொடுமை தெரிந்தும் பெற்றோர்கள் தலையிடாமல் ஒதுங்கியே உள்ளனர். தாயார் மட்டும் பணம், மளிகை பொருள் என உதவி செய்கின்றார். மீறி கேட்கப்போனால் மகளை ரவி் மேலும் கொடுமை செய்வானோ என்று அமைதியாக இருப்பார்கள். இப்படி எல்லோரும் தங்களை ஒதுக்கி வைத்த கோவத்தில்தான் தன்னால் மாறமுடியாமல் ரேவதியை கொடுமை செய்ததாக ரவி கூறுகின்றான். தங்கள் மகள் ரேவதியை ரவிதான் தீ வைத்துக்கொளுத்தினான், அவனை விடக்கூடாது என பெற்றோர்கள் புலம்புவதும், கோவத்தில் திட்டுவதுமாக இருக்கின்றனர். வாக்குமூலத்தில் சமைக்கும்போது தீ பிடித்துவிட்டதாக ரேவதி கூறிவிடுகின்றாள். தற்கொலையா, ரவி கொளுத்தினானா எனவும் தெரியவில்லை. அது கதைக்கு முக்கியமானதாகவும் தெரியவில்லை. ஜிப்மர் மருத்துவமனையில் காத்திருக்கும்போது அங்குள்ள ஒவ்வொருவரும் தங்களின் கதைகளைப் பரிமாறிக்கொள்வதெல்லாம் இமையம் அவர்களின் படைப்பு உத்தியில் மிக முக்கியமானதாகும். கதையில் வரும் அனைவரும் அவரவர் போக்கில், அவரவர் நிலையிலிருந்து கதையை நகர்த்துகின்றனர். கதை முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அனுபவிக்கும் கொடுமையும், வலியும், வேதனையும் ஆழமான உணர்வுகளோடும், இயல்பாக பதிவாகியுள்ளன. முழுவதும் கதைதான் என்றும் கூறமுடியாமல், அனுபவங்களின் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு என்றும் ஏற்கமுடியாமல் கதையோடும், கதை மாந்தர்களோடும் நாமும் பயணிக்கின்றோம். திருமணமாகிச் சென்ற ரேவதியை ஆறு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, 80% வெந்துபோன தீக்காயங்களிலிருந்து காப்பாற்றச்சொல்லி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு எப்படியேனும் காப்பாற்றுங்கள் எனும்போது, மருத்துவர்கள் "இந்தப் பணமெல்லாம் இப்போது செல்லாத பணம்" என்கின்றனர். இதுதான் கதை. உயிரோடு இருக்கையில் நல்ல நிம்மதியான வாழ்கைக்கு பயன்படாத பணம் உயிரைக் காப்பாற்றவும் பயன்படவில்லை.

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்


மீள்பதிவு 2014
---------------------------
நிறைவான 2014 – 1

எனது அப்பா தொ.பா.இராமசாமி. ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். எப்போதும் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிப்பார். நிறைய குறிப்புகள் எடுப்பார்.  நிறைய கவிதைகள், சில சிறுகதைகள், தமிழ் சொற்கள் குறித்த கருத்துகள் என எழுதியுள்ளார். தனது இறுதிக் காலத்திற்குள் எப்படியேனும் அவைகளை புத்தகமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

எனது இரு அண்ணன்கள் (துரையப்பன், அண்ணாதுரை) நிறைய கவிதை எழுதுவார்கள். அவர்களுக்கும் புத்தகமாக வேண்டும் என்ற கனவு உண்டு. இவர்களின் பாதிப்பில் நானும் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். கையெழுத்திலும், அச்சிலுமாக சிற்றிதழ்கள் சில கொண்டுவர முடிந்தது. 

பிறகு, செயல்பாட்டுத் தளம் மாறியது.  இலக்கியத்திலிருந்து சமூக அரசியல் ஈடுபாடுகளின் காரணமாக கண்ணோட்டம் – பார்வை விரிவடைந்து வளர்ந்தது. இத்தணையாண்டுகளுக்குப் பிறகு எனது தந்தை, அண்ணன்களின் விருப்பங்கள் என் மூலமாக நிறைவேறிய.. முக்கியத்துவம் மிகுந்த ஆண்டாக இது அமைந்தது. 

இலக்கியம் குறித்த புத்தகம் அல்ல. சமூக கொடுமைகள் குறித்த புத்தகம். ’’நொறுக்கப்படும் மக்களும்.. மறுக்கப்படும் நீதியும்.” நூல் எழுதி வெளியான ஆண்டு. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது கடந்த 2007 முதல் நிகழ்ந்த வன்கொடுமைகள், அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு ஆய்வு நூல். 

குறிப்பாக இதில் மிக முக்கியமாக 1921 ஆம் ஆண்டு சென்னை மில் ஒன்றில் தலித் மக்கள் மீது நிகழ்த்த சாதிய வன்கொடுமைத் தாக்குதல் தொடங்கி 2014 மரணக்காணம் வன்கொடுமை நிகழ்வு வரையிலான தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றதாக அமைந்தது. என் எழுத்துகளுக்கு உந்து சக்தியாக உள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அணிந்துரை முக்கியமானதாகும். 

சாதிய உணர்வை கடக்க உதவும் நூல் என தமிழ் இந்துவும், சரியான நேரத்தில் வந்துள்ள முக்கியமான நூல் என ஜீனியர் விகடனும் நூலினை அறிமுகம் செய்தது பரவலான கவனம் பெற்றது. நூலினை முழுமையாக படித்து உள்வாங்கி அதனை வெளிப்படுத்தி எழுதிய திரு.நீதிராஜன்(தமிழ் இந்து), திரு.திருமாவேலன்(ஜீ.வி) இருவருக்கும் மிகுந்த நன்றிகள். 

மேலும் நண்பர்கள், தோழர்கள் பலரும் படித்துவிட்டு செயல்பாடுகளுக்கும், பயிற்சிகளுக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து உள்ளம் மகிழச் செய்தனர். 

எதிர்பார்த்த சிலரிடம் இருந்து எவ்வித கருத்தும் வெளிவராத அமைதியும், மெளனமும் பார்த்து ஆச்சரியபட்டதும் நிகழ்ந்தது. 

இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. 
அந்த அளவிற்கு மன நிறைவாகவும், மகிழ்வாகவும் இருந்த நிகழ்வாக அமைந்த ஆண்டு 2014 ஆகும். 

இவைகளுக்கு காரணமான இருவரைக் குறிப்பிட்டுதான் நூல் வெளியீட்டு விழாவில் நன்றி கூறினேன். இப்போதும் அந்த இருவருக்கும் நன்றி கூறுவது கடமை. 

ஒருவர் இந்த நூலினை நான் எழுத வாய்ப்பளித்து, எழுதுவதற்கான கருத்துகளைக் கூறி, அச்சகத்திலிருந்து நூல் வெளிவருகின்ற வரையிலான ஒவ்வொரு மணித்துளியும் நூல் குறித்து கலந்துரையாடி, நூலின் வெளியீட்டாளராகவும் உள்ள நான் பணியாற்றுகின்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குநர் திரு.வே.அ.இரமேசுநாதன். இவர் இந்த வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் இந்த நூல் இல்லை.

இன்னொருவர் எல்லோருக்கும் தெரிந்த பேராசிரியர் கல்யாணி. கடலூர் மாவட்டத்தில் சரியான சாலை வசதி கூட இல்லாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நான் இன்று பலருக்கும் தெரிகின்ற ஒரு அடையாளமாய் திண்டிவனத்தில் இருப்பதற்கு காரணமானவர். அழைத்து வந்ததுடன் வீட்டிலேயே வளர்த்து கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்குமான எல்லா வாய்ப்புகளையும் வழங்கியவர். மனித உரிமை சார்ந்த கண்ணோட்டத்தையும், சமூக செயல்பாடுகளுக்கான கருத்தினையும் எனக்கு அளித்தவர். இன்றைய எனது செயல்பாடுகளுக்குமான மன வலிமையை உருவாக்கியவர். இவரின் கருத்தும், கண்ணோட்டமும் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் இந்த நூல் இல்லை. 

2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டு தற்போது ஏறக்குறைய 800 புத்தகங்கள் விற்பனையாகியுள்ள நிலையில்.. முடிந்த 2014 நிறைவான மகிழ்வான ஆண்டாக அமைந்தது.