சிவகங்கை மறைமாவட்டத்தில்
தீண்டாமையை எதிர்த்துப் போராடிய சார்லஸ் மரணம்
உண்மை அறியும் குழு அறிக்கை
இராமநாதபுரம்,
செப்டம்பர் 14, 2015.
இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் வணங்கப்படும் அருளானந்தர் திருத்தலம் உள்ளது. கத்தோலிக்க மதத்தால் புனிதராக ஏற்கப்பட்ட அருளானந்தர் (St.John de Brito 1647- 1693) அவரது மதமாற்றப் பணிக்காக மன்னன் கிழவன் சேதுபதியால் வெட்டிக் கொல்லப்பட்ட இடம் இது. பிரேசில் நாட்டு இளவரசுப் பதவியைத் துறந்து வந்து தியாகியான புனிதர் இவர். வேளாங்கன்னி, பூண்டி முதலான கத்தோலிக்கத் தலங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை வந்து போகும் ஆலயங்களில் ஒன்று இது. தான் இரத்தம் சிந்திய இந்த ஓரியூரில் இந்தியக் கிறிஸ்தவத்துடன் இரண்டறக் கலந்து போன சாதீயமும் தீண்டாமையும் தலித் கிறிஸ்தவர்களை ஆண்டாண்டு காலமும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும் என டி பிரிட்டோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
இந்திய தலித் கிறிஸ்தவர்கள் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இந்து தலித்களுக்கு உள்ள அத்தனை தீண்டாமைகளையும் அவர்கள் அனுபவித்தாக வேண்டும். அதே நேரத்தில் இந்து தலித்களுக்கு உள்ள பட்டியல் சாதி உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. திருச்சபைக்கோ இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. இரட்டைக் கோவில்கள், இரட்டைக் கல்லறைகள் என தலித்கள் இழிவு செய்யப்படுவதை அது எந்நாளும் கண்டுகொண்டதில்லை.
ஓரியூர் பங்கைச் சேர்ந்த 11 கிராமங்களிலும் தலித் கிறிஸ்தவர்களே நிறைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருத்தலம் அமைந்துள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள சுமார் 180 குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்கள் தலித் கிறிஸ்தவர்கள். எனினும் ஓரியூரை ஓரங்கமாகக் கொண்ட சிவகங்கை மறைமாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமானோர் உடையார் கிறிஸ்தவர்கள். அடுத்த நிலையில் இருப்போர் தலித் கிறிஸ்தவர்களில் ஒருவரான தேவேந்திர குல வேளாளப் பிரிவினர். பிற தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்தால் ஆக மொத்தத்தில் அதிகமாக உள்ளவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்தான். பிற நாடார், வெள்ளாளர். கோனார் முதலான அனைத்து
சாதிகளைச் சேர்ந்தோர்களும் அங்கிருந்தபோதும் அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.
ஒன்றாக இருந்த மதுரை மறைமாவட்டத்தில் வெள்ளாளக் கிறிஸ்தவர்களின் சாதி ஆதிக்கம் இருந்தது என எழுந்த எதிர்ப்பின் விளைவாகப் புதிதாக உருவாக்கப்பட்ட சிவகங்கை மறைமாவட்டம் உடையார் கிறிஸ்தவர்களின் ஆதிக்கப் பூமியாகியது. திருச்சபையிலும் அவர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. வெளிப்படையாகத் தீண்டாமையும் பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டது. இங்குள்ள சுமார் 125 மறை மாவட்டப் பள்ளிகளில் சுமார் 960 பேர்கள் பணி செய்கின்றனர். இதில் 80 சதம் பேர் உடையார் கிறிஸ்தவர்கள். கிட்டத்தட்ட சம அளவில் உள்ள தலித் கிறிஸ்தவர்களின் பங்கு வெறும் 10 முதல் 15 சதம் கூட இல்லை.
ஆர்.எஸ்.மங்கலம் எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம், முதலான ஊர்களில் உயர்சாதியினருக்கும் தலித்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. உயர் சாதியினர் வசிக்கும் பகுதிகளில்தான் மறைமாவட்டப் பள்ளிகள், அழகான விசாலமான ஆலயம், மருத்துவ மனை, கன்னியர் மடம் முதலிய வசதிகள் செய்யப்படுவதும் (எ.கா சவேரியார் பட்டினம்), தலித் பகுதிகளில் இந்த வசதிகள் எதுவும் இல்லாததோடு ஆலயமும் கூட சிறுத்துக் குறுகலாக இருப்பதும் கண்கூடு. காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சூசையப்பர் பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சமுதாயக் கூடத்திற்கு சாதிப் பெயர் இடப்பட்டுள்ளது.
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள மொத்த குருக்களின் எண்ணிக்கை 157 ஆகும். இதில் 89 பேர் உடையார்கள், 32 வெள்ளாளர்கள், 12 நாடார்கள், 4 கள்ளர், 9 பறையர், 2 பேர் கடையர். இதில் இப்பகுதியில் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் ஒருவர் கூட இல்லை.
இப்படி நிறையச் சொல்லலாம். இப்பகுதியில் உள்ள தலித் மாணவர்கள் குருத்துவக் கல்லூரிகளில் சென்று படிக்கும்போது, அவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி குரு பட்டம் மறுக்கப்படுகிற குற்றச்சாட்டுகளும் இங்குண்டு. மைக்கேல்ராஜ் என்பவர் முறையாகப் படிப்பை முடித்த பின்னும் கூட மற்றொருவர் செய்த ஒரு குற்றத்தை இவர் மீது சுமத்தி, இவருக்கு இன்று வரை குருபட்டம் அளிக்கவில்லை. இத்தனைக்கும் ரெக்ஸ்டன் என்பவர் தானே அந்தக்
குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் இது நடந்துள்ளது.
இதுதவிர இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறிக் காவல்துறையின் ஒப்புதலுடன் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, மறைமாவட்டக் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை உயர் சாதியினருக்கே கொடுப்பது, ஆலயத் திருவிழாக்களில் கொடி சுமந்து செல்வது போன்ற மரியாதைக்குரிய பணிகளை அடித்தளப் பிரிவினருக்கு அளிப்பதில் பிரச்சினை செய்வது, அடித்தள மக்கள் வசிக்கும் ஓரியூர் போன்ற திருத்தலங்களின் முக்கிய மத நிகழ்வுகளான மறை மாவட்ட திருயாத்திரை முதலானவற்றை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றுவது முதலான பல வடிவங்களில் இந்தத் தீண்டாமைகளை திருச்சபையும் அதில் தலைமை ஏற்றுள்ள உயர்சாதிப் பாதிரிமார்களும் செய்து வருகின்றனர்.
மறை மாவட்டத்தின் இந்தத் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து நின்ற ஒருவர்தான் புல்லூர் சார்லஸ். சென்ற ஆகஸ்டு 31 இரவு 8 மணி அளவில் அவர் ஓரியூர் ஆலயத்தின் மேற்குப் புறம் சுமார் 100 மீட்டர் தொலைவில் தீப்பற்றி எரிந்தார். கடும் தீக்காயங்களுடன் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்படும் வழியில் அவர் உயிர் பிரிந்தது. எந்தத் தற்கொலைக் குறிப்புகளையும் அவர் விட்டுச்செல்லாதபோதும் அதைச் சந்தேக மரணம் என முதல்தகவல் அறிக்கையில் (எஸ்.பி.பட்டினம் காவல் நிலையம், குற்ற எண் 74/15, குற்றப் பிரிவு Cr.PC 174) பதிவு செய்திருந்தபோதும், அதைத் தற்கொலை என்கிற கோணத்திலேயே விசாரிக்கிறது இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை.
இதை ஒட்டி இப்பகுதியில் கிறிஸ்தவத்திற்குள் நிலவும் தீண்டாமை, ஓரியூர் ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பிரச்சினைகள், புல்லூர் சார்லசின் மரணம் ஆகியவை குறித்த உண்மைகளை ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
குழு உறுப்பினர்கள்
அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு (NCHRO),
கோ.சுகுமாரன், தலைவர், மக்கள் உரிமைக் கூடமைப்பு, புதுச்சேரி (FPR)
இரா.முருகப்பன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் (SASY), திண்டிவனம்
குமரன்தாஸ், எழுத்தாளர், காரைக்குடி,
தங்க. செங்கதிர், எழுத்தாளர், இளையான்குடி,
இக்குழுவினர் நேற்றும் இன்றும் கீழ்க்கண்டோரை ஓரியூர், புல்லூர், தொண்டி, எஸ்.பி.பட்டணம், வெள்ளையபுரம், இராமநாதபுரம் முதலான ஊர்களுக்குச் சென்று இப்பிரச்சினையுடன் தொடர்புடைய பலரையும் சந்தித்தது. மறைந்த சார்லசின் மகன் அருள் செபாஸ்டியன், மருமகள் அமலி, சகோதரர் செபாஸ்டியன் மற்றும் ஊர்க்காரர்கள், வெள்ளையபுரம் அப்துல் சமது, தலித் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு,புதுவை ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், பிரதர் மைக்கேல்ராஜ், சோளகம்பேட்டை அருளானந்தம், ஓரியூர் மாணிக்கம், பங்குப் பேரவைச் செயலர் ஆரோக்கியசாமி, தேவகோட்டை ஸ்டீபன், ஓரியூர் நிக்கோலஸ், ஓரியூர் ஆலயத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பங்கு குரு அருட் தந்தை மரியநாதன், பிரதர் புருனோ, எஸ்.எஸ்.பி.பட்டினம் தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்ஸ் நிர்வாகி, ஓரியூர் கிராமப் பொது மக்கள், எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் ந.துரைபாண்டி, ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை, சார்லசின் மரணத்தை விசாரிக்கும் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி கணபதி, ‘நெற்றிக்கண்’ இதழ் நிருபர் டி.வி.மணிகண்டன், தியாகி இம்மானுவல் பேரவை நிறுவனத் தலைவர் பூ.சந்திரபோஸ் ஆகியோரை நேரில் சந்தித்தும் தொலைபேசியில் அழைத்தும் பேசினோம். சார்லசின் பிரேத பரிசோதனைச் சான்றிதழையும் பரிசீலித்தோம்.
இப்போதைய நிகழ்வின் பின்னணி
தொடர்ந்து பலவேறு வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த ஓரியூர் தலித் கிறிஸ்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2012 ஜூலையில் சிவகங்கை மறைமாவட்ட வெள்ளி விழாவின்போது முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர், தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை ஸ்டீபன் இதற்குத் தலைமை ஏற்றார். ஆர்.எஸ்.மங்கலம் பங்கைச் சேர்ந்த ஓடைக்கால் குரு மாணவர் மைக்கேல்ராஜுக்குக் குரு பட்டம் அளிக்க மறுப்பதைக் கைவிட்டு அவருக்கு பட்டமளிக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் உட்பட 7 ஆயர்களும் திருச்சபையின் முக்கியப் பொறுப்பில் இருந்த பலரும் இந்தக் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்காமல் திருப்பலி நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் முழக்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பூசை நிறுத்தப்பட்டது. அப்போது மேடையில் இருந்த தலித் கிறிஸ்தவரான ஓரியூர் திட்டையைச் சேர்ந்த D. அருள்வேதமாணிக்கம் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் சூசைமாணிக்கம் உட்பட ஆறு பேர்கள் மீது அருள் வேதமாணிக்கம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை
பின்னர் பங்குப் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் ஒப்புதலுடனேயே ஆலயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனினும் 2013 அக்டோபரில் வழக்கமாக ஓரியூரில் தொடங்கும் மறை மாவட்ட திருயாத்திரை ஆயர் சூசைமாணிக்கம் அவர்களால் ஓரியூர் காரை ரஸ்தாவிலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பங்குப் பேரவையைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவைப் பங்குப் பேரவை எதிர்த்தது. பேரவையைக் கலந்தாலோசித்துப் பேரவையும் குருவானவர்களும் இணைந்து ஆலய விழாக்களை நடத்த வேண்டும் என்பது பங்குப் பேரவையின் கோரிக்கையாக இருந்தது. பங்குப் பேரவையைப் புறக்கணிப்பது, முடிந்தால் பங்குப் பேரவையைக் கலைப்பது என்பது மறைமாவட்ட நிர்வாகத்தின் நிலைபாடாக இருந்தது.
இப்படிப் பிரச்சினைகள் தொடர்ந்தன. 2014 ஆகஸ்ட் 27 அன்று தொண்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில் பங்குப் பேரவை உறுப்பினர்களும் ஓரியூர் ஏசுசபை நிர்வாகமும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினர். ஓரியூர் திருத்தல நடவடிக்கைகள், திருவிழாக்கள் முதலியவற்றை பாரம்பரியமாக உள்ளவாறு ஓரியூரைச் சேர்ந்த பாத்தியப்பட்ட 11 கிராமங்களுக்கும் 7 மண்டகப்படிகளாகப் பிரிக்கப்பட்டு அதுவரை நடத்தப்பட்டு வந்தது. அது இனி பங்குப் பேரவையுடன் ஆலய நிர்வாகம் கலந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு (2015) ஓரியூர் ஆலயத் திருவிழாவைப் பொறுத்த மட்டில் அதை எவ்வாறு நடத்துவது என ஜூன் 14 அன்று பங்குத் தந்தையும் பேரவை உறுப்பினர்களும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். மீண்டும் ஆகஸ்ட் 9 அன்று பங்குத் தந்தை வேதநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின்படி ஆலயத் திருவிழாக் கொடியேற்ற நிகழ்வின் போது பங்குப் பேரவைச் செயலாளர் ஆரோக்கிய சாமியும், மூத்த தலைவர் சோழகன்பேட்டை அருளானந்தமும் கொடியைத் தூக்கி வந்து பாதிரியார்களிடம் அளித்துக் கொடியேற்றம் நடைபெறும் என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. . பங்குத் தந்தை வேதநாயகம், பேரவைத் துணைத் தலைவர் சார்லஸ் உட்பட ஐவர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
எனினும் மறைமாவட்டத் தலைமை இவ்வாறு பேரவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முறியடிப்பதென முடிவெடுத்துச் செயல்படத் தொடங்கியது. பெரும்பாலும் தலித் கிறிஸ்தவர்களே பாத்தியப்பட்ட 11 கிராமங்களிலும் நிறைந்திருப்பதால் அவர்களின் ஒற்றுமையைச் சிதைக்க அது முனைந்தது. ஒப்பந்தத்திற்கு மாறாகச் செயல்படுவது என முடிவெடுத்த பங்கு நிர்வாகம் சென்ற ஆக 28 அன்று தன்னிச்சையாக, பேரவையைக் கலந்தாலோசிக்காமல் ஒரு அறிவிப்பை துணைத் தலைவர் சார்லசிடம் கொடுத்துள்ளது. இதுவே இன்றைய சார்லசின் மரணத்திற்கும், தொடர்ந்த கலவரங்களுக்கும் காரணமாகியுள்ளது.
ஆக 28 அன்று ஆலய நிர்வாகம் வெளியிட்ட அந்த அறிவிப்பு பங்குப் பேரவையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக இருந்தது. ஓரியூர் தலைக் கிராமத் தலைவர் அருள்பத்திநாதன் என்பவர் தானும் கொடி தூக்கி வருவதாகக் கோருவதாகவும், காவல்துறையும் அவ்வாறே கருதுவதாகவும் கூறி, அருள்பத்திநாதனின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஆரோக்கியசாமி மற்றும் அருளானந்தம் இருவர் மட்டுமே கொடியைச் சுமந்து வருவது என்பதற்கு மாறாக இவர்களோடு மூன்றாவதாக அருள்பத்திநாதனும் கொடியைச் சுமந்து வருவார் என்று கூறப்பட்டது.
அருள்பத்திநாதன் என்பவரும் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றபோதிலும் அவர் பங்குப் பேரவையுடன் இணைந்து செயல்பட்டவர் இல்லை. மாறாக அவர் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கமானவர். அவரை இப்படி பங்குப் பேரவைக்கு எதிராக நிறுத்தித் தலித் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது மறைமாவட்டம். அப்படியே அருள்பத்திநாதன் முந்தைய ஒப்பந்தக்களுக்கும் முடிவுகளுக்கும் மாறாகத் திடீரென ஒரு கோரிக்கை வைத்திருந்தால் உடனடியாக பங்குப் பேரவைத் தலைவர்களைக் கூப்பிட்டு ஆலய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் காவல்துறை கருதி இருந்தால் அவர்களும் பங்கு பெறும் முத்தரப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டியாவது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவும் இல்லாமல் இப்படி முந்தைய ஒப்பந்தங்களுக்கு மாறாக ஒரு முடிவைத் தன்னிச்சையாக எடுத்ததைப் பங்குப் பேரவை ஏற்கவில்லை.
கொடியேற்றத்தில் அருள்பத்திநாதன் கொடி தூக்கி வந்தால் நாங்கள் கொடி தூக்க மாட்டோம் என சார்லஸ் தலைமையில் இருந்த பங்குப் பேரவை மறுத்தது. காவல்துறை, மற்றும் தாசில்தாரிடம் பங்குப் பேரவையின் சார்பாக இதை மனு ஒன்றின் மூலம் சார்லஸ் தெரிவித்தார். ஆக 29, கொடி ஏற்றும் நாளன்று கொடி ஏற்றும் நேரத்திலும் சார்லஸ் தலைமையில் பங்குப் பெரவையினர் ஒப்பந்தப்படிச் செயல்படுமாறு வற்புறுத்தினர். காவல்துறை தலையிட்டு பாதிரிமார்களே முன்னின்று கொடியேற்றுமாறு அறிவுறுத்த அவ்வாறே நடை பெற்றது.
ஒப்பந்தம் மீறப்பட்டது கண்டு மனம் வெதும்பிய சார்லசும் பங்குப் பேரவையினரும் தாங்கள் திருப்பலியில் கலந்து கொள்ளாமல், ஜெப வழிபாடு செய்து தொடர்ந்து மண்டகப்படிகளையும் சப்பர ஊர்வலத்தையும் நடத்துவதாகக் கூறியபோது ஆலய நிர்வாகம் அவ்வாறு செய்தால் சாமித் திரு உரு மற்றும் சப்பரங்களைத் தர இயலாது என அறிவித்தது. காவல்துறையும் ஆலய நிர்வாகத்திற்கு முழு ஆதரவளித்தது. சார்லசும் பங்குப் பேரவையினரும் திகைத்து நின்றனர். அப்படியெல்லாம் திருவிழாவை நடத்தத் தாங்கள் அனுமதிக்க முடியாது என சார்லஸ் கூறியபோது போலீசை வைத்து நடத்திக் கொள்வோம் என ஓரியூர் ஆலய சுப்பீரியர் யாகு கூறியுள்ளார்.
அவ்வாறே ஆக 30 அன்று மண்டலக்கோட்டை முதல் மண்டகப் படியை காவல்துறை உதவியுடன் ஆலய நிர்வாகம் டிராக்டர் ஒன்றில் சப்பரத்தை ஏற்றி மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாமலே நடத்தி முடித்தது.
ஆக 31 அன்று சார்லசின் சொந்த ஊரான புல்லூர் மண்டகப்படியையும். ஆலய நிர்வாகம் புல்லூர் மக்களின் ஒத்துழிப்பின்றி காவல்துறைத் துணையுடன் “வெற்றிகரமாக” தம் டிராக்டர் சப்பர ஊர்வலத்துடன் நிகழ்த்த இருந்த தருணத்தில்தான் இரவு எட்டுமணிவாக்கில் ஆலயத்தின் பின்புறம் சுமார் 100 மீ தொலைவில் முட்புதர்களுக்கு மத்தியில் சார்லஸ் தீயில் எரிந்து மரணமடைந்தார்’
சந்தேகத்திற்குரிய சார்லசின் மரணம்
சார்லசின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆலய நிர்வாகம், அதற்குத் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் காவல்துறை முதலியன இது ஒரு தற்கொலை எனக் கூறுகின்றன. தன் சொந்த ஊர் மண்டகப்படி தனது ஒப்புதலில்லாமலேயே தன் கண்முன் நடப்பதைப் பார்க்கப் பொறாமல் சார்லஸ் எப்படியாவது மண்டகப்படியையும் திருவிழாவையும் தடுக்கும் முயற்சியில் தானே தீவைத்துக் கொண்டு இறந்து போனார் என அவை சொல்கின்றன. அந்தக் கோணத்திலேயே இன்று போலீஸ் விசாரணையும் நடை பெறுகிறது.
சார்லஸ் மரணம் குறித்த முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்த எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி எங்களிடம் கூறுகையில், தற்போது விசாரணை கிரைம் பிரான்ச் துணைக் கண்காணிப்பாளர் கணபதி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தான் எதுவும் கூற இயலாது என்றார். தொடர்ந்து கேட்டபோது சார்லஸ் செய்து கொண்டது தற்கொலைதான் எனவும் இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மறைமாவட்ட நிர்வாகம் காரணமில்லை எனவும், தற்கொலைக்குத் தூண்டுதல் எனவும் கூட மறைமாவட்ட நிர்வாகத்தைக் குற்றம் சொல்ல இயலாது எனவும் கூறினார். திருவிழாவை நிறுத்த சார்லஸ் ஏதாவது செய்வார் எனத் தங்களுக்குத் தகவல் வந்ததாகவும் ஆக 31 அன்று மதியம் முதலாகவே அவரைத் தேடி வந்ததாகவும், ஆனால் கண்டுபிடிக்க இயலவில்லை எனவும் கூறினார். வெள்ளையபுரத்தில் சார்லஸ் அன்று பெட்ரோல் வாங்கிய கடையைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டபின் அங்கு கிடந்த பெட்ரோல் கேன் முதலியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பிரச்சினையின்போது பந்தோபஸ்துப் பணியில் இருந்த ஏ..டி.எஸ்.பி வெள்ளத்துரை தான் எதுவும் கூற இயலாது என மறுத்துவிட்டார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி கணபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தங்களுக்கு சார்லஸ் ஏதாவது செய்து திருவிழாவை நிறுத்த முயற்சி செய்வார் என்கிற தகவல் இருந்ததால் அவரை அன்று மதியம் முதல் தேடி வந்தது உண்மைதான் என்றார். இது நிச்சயமாகத் தற்கொலைதான், அதில் சந்தேகமே இல்லை என்றார். பெட்ரோல் வாங்கிய கடை அடையாளம் காணப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுவது உண்மையா எனக் கேட்டபோது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் சொல்ல இயலாது என்றார்.
இதற்கிடையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ‘நெற்றிக்கண்’ இதழ் நிருபர் டி.வி மணிகண்டன் என்பவரிடம் சார்லஸ் கூறியதாகவும் அவர் அதைக் காவல்துறைக்குச் சொல்ல அவர்கள் அவரைத் தேடியதாகவும் சிலர் எங்களிடம் கூறினர். மணிகண்டனைத் தொடர்பு கொண்டபோது அவர் அது உண்மை எனக் கூறினார். 30ந் தேதி மாலையே தன்னிடம் சார்லஸ் அப்படிக் கூறியதாகவும் 31 காலை அதை மீண்டும் உறுதி செய்ததாகவும், தான் கவலை கொண்டு உடனடியாகத் தன் தலைமை அலுவலகத்துக்குப் போன் செய்ததாகவும் அவர்கள் அதை உயர் அதிகாரிக்குத் தெரிவிக்கச் சொன்னதாகவும், தான் அதை 8056677930 என்கிற எண்ணிலிருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விரிவாகச் சொன்னதாகவும் கூறினார்.
ஆனால் சார்லசின் குடும்பத்தாரும், பேரவை உறுப்பினர்களும், பிற இயக்கத்தவர்களும், நண்பர்களும் இதை மறுக்கின்றனர். சார்லஸ் தற்கொலை மனநிலையுடன் இருக்கவில்லை, அன்று முழுவதும் மிகவும் இயல்பாக நடந்து கொண்டிருந்தார் எனக் கூறுகின்றனர். ஆக் 31 முழுவதும் வீட்டிலேயே இருந்ததாகவும், மாலை 4 மணிக்கு நெல்லு காசு வாங்கச் சென்று பின் அதை பூனைகுட்டி வயலுக்குக் கொண்டு சென்று கொடுத்து வந்துப் பின் வழக்கம்போல மாலை 5.30 மணி வாக்கில் வெளியே சென்றதாகவும் அவரது மருமகள் அமலி கூறினார். அங்கிருந்த மற்றவர்களும் அதை உறுதி செய்தனர்.
அங்கிருந்து வெள்ளைபுரத்திற்கு வந்த சார்லஸ் தன் நெடுநாள் நண்பர் பாம்பாட்டி எனப்படும் அப்துல் சமதுவிடம் வழக்கம்போல நகைச்சுவையாகப் பேசி விட்டுச் சென்றுள்ளார். கடைத்தெருவில் கறிக் கடை வைத்துள்ள சமது கூறும்போது சார்லஸ் வழக்கம் போலவே இருந்ததாகவும், எந்த வித்தியாசமும் அன்று தென்படவில்லை எனவும், அவர் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளக்கூடியவர் அல்ல எனவும் கூறினார். பின் சார்லஸ் ஓரியூர் ஆலயத்திற்கு வழக்கமாகச் செல்லும் வழியில் அல்லாமல் பின்புறமாக உள்ள குறுக்குப் பாதை வழியாக ஆலயத்தின் பின்புறம் வந்து நின்று அங்கிருந்தவாறே ஓரியூர் மாணிக்கம் என்பவருக்கு போன் செய்துள்ளார் தனது மோட்டார் சைக்கிளை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். . காவல்துறை தேடி வருவதால் அவர் வழக்கமான பாதையைத் தவிர்த்து
இப்பாதையைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என சார்லசின் நண்பர்களும் பேரவையினரும் கூறுகின்றனர். மாணிக்கத்துடன் இணைந்து சார்லஸ் ஓரியூரில் ஒரு மாணவர் விடுதி நடத்துகிறார். ஓரியூர் வரும் போதெல்லாம் அங்குதான் தன் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது அவர் வழக்கம்.
அன்று ஆலயத்தின் பின்புறம் நின்று மாணிக்கத்திற்குப் போன் செய்த சிறிது நேரத்தில் அவர் வந்துள்ளார். அவருடன் வண்டியை எடுத்துச் செல்ல விடுதி மாணவன் தினேஷும் வந்துள்ளான். மாணிக்கத்திடம் சுருக்கமாகப் பேசி அவரை அனுப்பியுள்ளார். தினேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளான்.
சற்று நேரத்தில் சார்லஸ் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் ஓடி வந்தது புதரில் வீழ்ந்ததாகவும் காவல்துறையினர் ஓடி வந்து அந்த இடத்தில் யாரையும் அனுமதிக்காமல் விரட்டியதாகவும் அனைவரும் கூறினர். 8 மணி வாக்கில் எஸ்.பி.பட்டணம் தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்சுக்குக் காவல் துறையினர் போன் செய்துள்ளனர். சார்லஸ் உயிருடன் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. அடுத்த கால் மணி நேரத்தில் தாங்கள் அங்கு சென்று விட்டதாகவும் போலீசுடன் சேர்ந்து தானும் சார்லசைத் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி உடன் புறப்பட்டதாகவும், போகும் வழியில் கேட்டபோது சார்லசின் உடலுக்கு அருகில் இருந்த காவலர் அவர் இறந்து விட்டதாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகி கூறினார்.
அடுத்த நாள் சாலை மறியல் முதலியவற்றை பேரவையினர் நடத்தியுள்ளனர். வயதான பாதிரியார் காப்ரியல் தாமஸ் அவர்களின் தலையில் காயமும் பட்டுள்ளது. பின் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை (ஆக 2) முடித்தபின் சார்லசின் உடலைப் பெற்று ஆக 7 அன்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். கொலை எனில் கொலைகாரர்களும், தற்கொலை எனில் அதற்குத் தூண்டியவர்களும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. பிரேத பரிசோதனைச் சான்றிதழில் 99 சதத் தீக்காயங்களால் சார்லஸ் மரணம் அடைந்துள்ளதாகவும், வேறு குறிப்பிட்ட உடற் காயங்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்லஸ் மரணத்தில் முன்வைக்கப்படும் அய்யங்கள்
- உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவர் இறுதி வரை உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்துளார். கடைசி நேரத்திலும் கூட தேவகோட்டை ஸ்டீபனிடம் பேசும்போது சுவரோட்டிகளை அச்சகத்திலிருந்து பெற்று ஒட்டுவது குறித்துப் பேசியுள்ளார். அவர் தற்கொலை மனநிலையில் இருந்ததாகத் தெரியவில்லை.
- ஒரு எதிர்ப்பாகத் தீக்குளிக்க ஒருவர் முடிவு செய்தால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புறமாக வந்து எந்தத் தற்கொலைக் குறிப்பும் எழுதி வைக்காமல் இப்படிச் செய்து கொள்வாரா?
- அவர் மீதிருந்த தீ அணைக்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றிப் பாதிதூரம் செல்லும் வரையில் அவருக்கு உயிர் இருந்துள்ளது. அப்போது அவரிடம் இறுதி வாக்குமூலம் எதையும் பெறும் முயற்சி எதுவும் செய்யப்பட்டதா?
- சார்லசை இறுதியாகச் சந்தித்தவர் அவரது நெடுநாளைய நண்பர் மாணிக்கம். தான் கடைசியாக அவரிடம் விடைபெறும்போது தான் இதுவரை பார்த்திராத வாட்டசாட்டமான ஒரு பத்துப் பதினைந்து பேர் பெரிய இரு சக்கர வாகனங்களில் வந்ததாகவும் அவர்களே சார்லசைக் கொலை செய்திருக்கலாம் எனவும் கூறுகிறார்.
எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
கிறிஸ்தவத்திற்குள் மிக மோசமாகக் கடைபிடிக்கப்படும் தீண்டாமை சிவகங்கை மறைமாவட்டத்தில் உச்சத்தில் உள்ளது குறித்து இந்த அறிக்கையின் முன் பகுதியில் விரிவாகப் பேசியுள்ளோம். இந்த மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களே அதிகம் இருந்த போதும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் சாதி உண்ர்வுடன் செயல்பட்டவருமான பணி.சூசைமாணிக்கம் போன்றோரை ஆயர்களாக நியமித்து வந்த திருச்சபை கண்டனத்துக்குரியது.
சென்ற ஆண்டில் எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் ஒரு முஸ்லிம் சுடப்பட்டுக் கொல்லப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்தக் காவல் நிலையம் இருந்த பகுதியில் ஒரு முஸ்லிம் காவலர்கள் கூடப் பணியமர்த்தப்படாததோடு, முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவான ஒருவர் உதவி ஆய்வாளரும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது நடந்தது. இது சுட்டிக்காட்டப்பட்ட பின் அவசர அவசரமாக அங்கு ஒரு முஸ்லிம் அதிகாரியை காவல்துறை நியமித்தது. அதேபோலத்தான் இன்று சிவகங்கை மறைமாவட்டமும் செயல்பட்டுள்ளது. எல்லாம் முடிந்த பின் இன்று மறைமாவட்டம் ஓரியூர் பங்குத் தந்தையாக அங்குள்ள பெரும்பான்மை தலித் சமூகத்தைச் சேர்ந்த அருட் திரு எஸ். மரியநாதன் அவர்களை நியமித்துள்ளது. இது ஒரு வகையான damage control
முயற்சியாக இருந்தபோதும் தந்தை மரியநாதன் அவர்கள் மிகவும் பொறுப்பானவர். தான் இருளர்கள் மத்தியில் சென்று சேவை செய்ய இருந்த தருணத்தில் இந்தப் பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னதாக இங்கு நடந்த சம்பவங்கள் குறித்துத் தனக்கு அதிகம் தெரியாது எனவும், தான் முதல் நாள்தான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும், தன்னால் இயன்றவரை இங்கு கூறப்படும் குற்றச்சாட்டுகளை கணக்கில் கொண்டு குறைபாடுகளைக் களைய முயல்வதாகவும் அவர் கூறினார். மறைமாவட்டம் தலித் கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்ததோடு, அவர்களை இன்று பிளவுபடுத்தி வைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியபோது அப்படி இருந்தால் அது மிகவும் தவறு எனவும் தான் அவற்றைச் சரிசெய்ய முயல்வதாகவும் கூறினார்.
1. இன்றைய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் கிறிஸ்தவத்தில் ஊறிப்போன சாதிமுறையும் தீண்டாமைக் கொடுமையுந்தான். இது வேறோடு களையப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, உடனடியாக மறைமாவட்டத்தில் உள்ள குறைபாடுகளை அறிய திருச்சபையினர் அருட் திரு எக்ஸ்.டி.செல்வராசு போன்ற ஒரு மூத்த நடுநிலையாளர் ஒருவரை நியமித்து இந்தக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். சாதி உணர்வுடன் செயல்பட்ட பாதிரிமார்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
2. முறையாக எல்லாத் திருத்தலங்களிலும் பங்குப் பேரவைகளை உருவாக்கி ஆலய நிர்வாகமும் பங்குப் பேரவையும் இணைந்தே ஜனநாயக முறையில் முடிவு செய்து செயல்பட வேண்டும், எடுக்கப்பட்ட முடிவைத் தன்னிச்சையாக மீறிச் செயல்பட்ட பங்குத் தந்தை வேதநாயகம், சுப்பீரியர் பணி.யாகு, அவருக்கு ஆதரவாக இருந்த ஆயர் சூசைமாணிக்கம் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர் முழுக்க முழுக்க ஆலய நிர்வாகத்திற்குச் சாதகமாகவே செயல்பட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. பங்குப் பேரவையும் ஆலய நிர்வாகமும் பேசி எடுத்த முடிவைத் தன்னிச்சையாக மாற்றி அமைக்க காவல்துறை உத்தரவிட்டிருந்தால் அதற்கு அது விளக்கமளிக்க வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறை தலையிட நேர்ந்தால் அதை அவர்களே முடிவு செய்யாமல் ஒரு விரிந்த சமாதானக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின்படி செயல்பட வேண்டும்.
4. காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது அவர்கள் சார்லசின் மரணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தற்கொலை என்பதாகவே முடிவு செய்து விசாரணை செய்யத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி அந்தச் சமூகமே இது தற்கொலை அல்ல கொலை எனக் கருதுகிறது. இது ஒரு சமூகப் பிரச்சினை என்கிற வகையில் காவல்துறை இதைக் கவனம் கொள்ள வேண்டும். இது கொலையாகவும் இருக்கலாம் என்கிற வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
5. உள்ளூர் காவல்துறை மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இல்லாதிருப்பதால் அவர்கள் கோரிக்கைப்படி இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட வேண்டும்.
6. சார்லசின் மரணம் தற்கொலையாகவே இருந்தாலும் கூட பங்குப் பேரவையின் முடிவைத் தன்னிச்சையாக மாற்றியது, அடித்தளச் சமூகத்தைப் பிளவு படுத்தியது. ஊருக்கு முக்கியமானவர்களே இல்லாமல் டிராக்டர் வைத்து சப்பர ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றின் மூலம் சார்லசுக்குத் தீராத மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சார்லஸ் செய்து கொண்டது தற்கொலை ஆயின் அவர் இந்த வகையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என்றே ஆகிறது. எனவே வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என்பதிலிருந்து மாற்றி தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்காக (இ.த.ச 306) விசாரிக்கப்பட வேண்டும்.
7. சார்லஸின் மரணம் அது எப்படி ஆயினும் அதற்கு திருச்சபையே பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு