Saturday, December 26, 2020

வன்கொடுமை தடுப்புச் சட்டம்

வன்கொடுமை_தடுப்புச்_சட்டம்

  • உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு  வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 8(c)-க்கு எதிரானதாகும்.

  • நீதிபதிகள் முறையாக அணுகாத மேல்முறையீட்டு வழக்கினை 5 பேர் அமர்வுக்கு மாற்றவேண்டும்.

தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை தடுப்பது மற்றும் பாதிக்கப்பாட்டால் விரைவான நீதி வழங்குவதற்காகத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் உள்ள பிற சட்டங்கள் அளவிற்கு இச் சட்டம் இதுவரை சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தலித் / பழங்குடியின மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக உள்ள இந்தச் சட்டத்தினை நீக்கவும், நீர்த்துப்போகச் செய்யவும் பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும், கட்சிகளும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.

மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக் சக்திகள், சமூக செயல்பாட்டாளர்கள் போன்ற சமூக அக்கறையுள்ளோரின் அழுத்தம் காரணமாக ஓரளவேணும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், மேல்முறையீடாக வந்த வழக்கில் இச்சட்டத்திலுள்ள பிரிவு 3(1)(r) குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு சமூக அநீதியானதாகும்.

உத்திரகாண்ட் மாநிலத்தில் நிலம் தொடர்பான வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் ஒருவர் அளித்த புகாரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 452 (மிரட்டுதல்),

506 (குற்றமிழைக்கும் நோக்கத்துடன் அச்சுறுத்துதல்) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(r) (தலித் / பழங்குடியினரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் குற்றமிழைத்தல்) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், செய்த மேல்முறையீட்டு வழக்கில்தான்

 

உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தனது தீர்ப்பில் ‘’உயர்சாதியினரின் செயல்களைக் கண்டிக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் உள்ளது. இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான வழக்கு ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலப்பிரச்சனைக்கும், வழக்கின் புகார்தாரரின் (தலித்) சாதிக்கும் எந்தப் பிரச்சனையும் / தொடர்பும் இல்லை. இரு தரப்பினரும் நிலத்தின் மீது உரிமை கோருவதற்கும், தீர்வினைப் பெறுவதற்கும் உரிமை உள்ளது. இருவருக்கும் இடையில் நான்கு சுவற்றுக்குள் நடக்கும்போது, வேறு யாரும் பார்த்திருக்காத நிலையில், அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை குற்றம் ஆகாது, அதனால், இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(r) பொருந்தாது.” என்று தீர்ப்பளித்துள்ளார்.

சட்டத்தின் வழியிலான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, தீர்ப்பு வழங்கவேண்டிய நீதிபதியின் இச்செயல்பாடு, சட்டத்தினை தவறாக வழி நடத்துவதாக உள்ளது. மேலும், முன் அனுமானத்துடனும் உள்நோக்கத்துடனும் இவ்வழக்கினை நீதிபதி அணுகியுள்ளார் என்பதையே அவரின் இத்தீர்ப்பு காட்டுகின்றது.

இவ்வழக்கில் போலீசார் 3(1)(u) மற்றும் 3(2)(va) ஆகிய இரு பிரிவுகளை சேர்த்திருக்கவேண்டும்.  குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டால், அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு  3(2)(va)-வினை இணைந்தே வழக்கு பதிய வேண்டும் என இ.த.ச பிரிவுகளின் பட்டியல் சட்டத்தின் பிரிவு 23 ல் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இ.த.ச பிரிவு 506 உள்ளதால், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(2)(va) பொருந்தும். ஆனால் நீதிபதி அவர்கள் தலித்துகளுக்கு எதிரான மனநிலையில் இருந்து இவ்வழக்கினை அணுகியதால், போலீசாரின் அலட்சியத்தை கவனத்தில்கொள்ளாமல், அநீதியான தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8(c) ”பாதிக்கப்பட்டவர் குறித்தோ, அவரது குடும்பம் குறித்தோ குற்றம்சாட்டப்பட்டவர் தனிப்பட்ட வகையில் அறிந்திருக்கும்போது, பாதிக்கப்பட்டவரின் சாதி அல்லது இன அடையாளம் தனக்குத் தெரியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர் நிரூபித்தாலன்றி, அவர் பாதிக்கப்பட்டவரின் சாதி அல்லது இன அடையாளத்தைத் தெரிந்தே அந்தக் குற்றத்தை அவருக்கு எதிராக இழைத்தாகக் அனுமனிக்கமுடியும்” என்று கூறுகிறது. சட்டத்தின் முக்கியமான இந்த அம்சத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கத் தவறியுள்ளனர்.

இவ்வாறு இவ்வழக்கினை உரிய முறையில் அணுகாமல், முன் அனுமானத்துடன் தீர்ப்பளித்துள்ளது, சட்டத்தினை நீர்த்துப்போகச் செய்வதுடன், ஜனநாயத்திற்கு ஆபத்தான போக்காகும்.

இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டு வழக்கினை உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு உரிய முறையில் சட்டத்தின்படி அணுகாத காரணத்தினால்,

இம்மேல்முறையீட்டினை 5 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதி மன்றமே மாற்றவேண்டும்,

இத்தீர்ப்பினைன் எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

குற்றமிழைத்தோருக்குச் சாதகமாக செயல்படும் நோக்கத்துடன், பொருத்தமில்லாத பிரிவுகளைச் சேர்த்து, வழக்கினை பலவீனமாக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மற்றும் விசாரணை செய்த காவலதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கக்கோரியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவற்கான தேசியக் கூட்டமைப்பு National Coalition for Strengthening SCs & STs (PoA) Act) சார்பில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவன்,

டாக்டர். வே.அ. இரமேசுநாதன்

இயக்குனர், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் (SASY),

தேசிய அமைப்பாளர்,

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு.

(06.11.2020 முகநூல் பதிவு)

 

 

 

 

 

No comments: