Saturday, December 26, 2020

கொரோனா காலத் திருமணங்கள்.


 கொரோனா காலத் திருமணங்கள்.

------------------------------------------------------------------

நேற்று மாலை ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தோம். உள்ளூரில்தான். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் இருந்தனர். அரசியல் பிரமுகர்கள் சிலர் வந்து சென்றனர். எங்களுடன் மேலும் சிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர்.

90% பேர் முகக்கவசம் அணியவில்லை. கூட்டமாக நெருக்கடியத்துக் கொண்டிருந்தனர். ஏராளமான குழந்தைகளும் இருந்தனர்.

அதிர்ச்சியாக இருந்தது. அரசியல் பிரமுகர்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்திருந்தனர். யாருக்கேனும் தொற்றிருந்து பரவினால் என்ன ஆவது, என இரவெல்லாம் யோசனையாக இருந்தது.

 இன்று காலை தமிழ் இந்துவில் தொற்று எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என ஒரு கட்டுரை பார்த்ததும், இன்னும் அதிர்ச்சி அதிகமானது. 1918 உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான மக்களை பலிகொண்ட ஃப்ளூ வைரஸ் முடிவுக்கு வந்த அனுபவத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அதாவது உலகில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று வந்து, அனைவருக்கும் வைரஸ் நோய் தடுப்பாற்றல் வந்து, இனி தொற்றுக்கு ஆளே இல்லை என்ற நிலையில் வைரஸ் ஒழியும் என்பதாக உள்ளது இக்கட்டுரை.

கட்டுரையில் உள்ள அப்பகுதி "முதலில் அந்த வைரஸ் உலகம் முழுவதும் சுற்றியது, பலரைத் தொற்றியது. ஒரு கட்டத்தில் புதிதாகத் தொற்றுவதற்கோ வைரஸை மீண்டும் பரப்புவதற்கோ போதுமான அளவில் தொற்றால் பாதிக்கப்படாத மனிதர்கள் இருக்கவில்லை. இப்படித்தான் அந்தக் கொள்ளை நோய் முடிவுக்கு வந்தது.

அதாவது நோய்த் தடுப்பாற்றலைப் பெற்ற மக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டால், தொற்று தானாகவே வீரியத்தை இழந்து விடும். வைரஸால் புதிய மனிதர்களிடம் நோயைப் பரப்ப முடியாது.

கொள்ளை நோய் முடிவடையும் காலத்தில் வெளியில் வந்து புழங்குபவர்களில் பெரும்பாலோர் நோய்த் தடுப்பாற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அதனால், வைரஸால் யாரையும் புதிதாகத் தொற்ற முடியவில்லை”என்கிறார் மருத்துவ வரலாற்று மையத்தின் துணைத் தலைவரான ஜே.அலெக்சாண்டர் நவாரோ.

இவர் குறிப்பிடுகிற சமூக நோய்த் தடுப்பாற்றல் (Herd immunity) பற்றி இன்றைக்குப் பரவலாக விவாதிக்கப் படுகிறது. ஒரு கொள்ளைநோய் முடிவுக்கு வரும்போது, உலகின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும். (இப்போது உலக மக்கள் தொகையில் 0.5% மனிதர்கள் மட்டுமே கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி யிருக்கிறார்கள்)

அதிகமான எண்ணிக்கையில் மக்களிடையே தொற்றியதாலும் நோய்த் தடுப்பாற்றல் பரவியதாலும் மட்டுமே 1918 கொள்ளைநோய் முடிவுக்கு வந்துவிடவில்லை. சமூக/தனிமனித இடைவெளியும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். இன்றைய காலகட்டத்தைப் போலவே வைரஸ் வீரியமாகப் பரவாமல் தடுப்பதற்காகப் பொதுநலம், சுகாதாரம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது, அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற வணிகத்தளங்களையும் பள்ளிகளையும் பொது இடங்களையும் மூடுவது என வைரஸ் பரவுவதற்கான வழிகளைத் துண்டிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விதிகள் இவை"

 முழுக்கட்டுரை சுட்டி : ஸ்பானிஷ் ஃபுளூ கற்றுத்தந்த பாடங்கள்: கோவிட் 19 எப்படி முடிவுக்கு வரும்?-https://www.hindutamil.in/.../nal.../594254-spanish-flu.htm

 (24.10.20 முகநூல் பதிவு)


No comments: