Wednesday, January 27, 2016

பழனிபாபாவும் நினைவு விருதும் : பெறுகிறார் பேராசிரியர் கல்யாணி

நண்பர் இசாக் மூலமாக பழனிபாபாவின் ஒலிநாடாக்கள் (கேசட்) கேட்டு அவரது பேச்சால் பெரிதும் கவரப்பட்டேன்.  பழனிபாபா மீதான் ஈர்ப்பும் தொடங்கியது. அவரை ஒருமுறை கூட நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போனது. நண்பர்கள் இசாக், பேராசியர் கல்யாணி, புதுவை சுகுமாரன், திண்டிவனம் நசீர் ஆகியோருடன் இந்துத்வா எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும்போதெல்லாம் பழனிபாபா குறித்து பேச்சு வரும். அதுவும் பேராசிரியர் கல்யாணி பழனிபாபாவின் பேச்சு நடையினை மிகவும் சிலாகித்து ரசனையோடு கூறுவார்.
பழனிபாபாவின் கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. பல மாற்றங்களையும் உருவாக்கியது. இன்றுள்ள இசுலாமிய அமைப்புகளுக்கு எல்லாம் முன்னோடி பழனிபாபாவாகத்தான் இருக்கவேண்டும். தமிழகத்தின் சமூக நீதி போராட்ட வரலாற்றினை தொகுத்தால் அவரும் இந்துத்துவா எதிர்ப்பும், அவரது ஜிஹாத் கமிட்டியும் இல்லாமல் முழுமை பெறாது.
இப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரிய பழனிபாபா அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகின்றது கே.எம்.செரீப் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சி. இந்த 2015 ஆம் ஆண்டுக்கான விருதினை பழனிபாபாவோடு நெருக்கமாக பழகி, செயல்பட்ட பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு பழனிபாபா நினைவு விருது நாளை 28.10.2016 மாலை 5.00 பழனிபாபாவின் சொந்த ஊரான பழனி அருகே உள்ள புதுஆயக்குடியில் வழங்கப்படுகிறது.
இவ்விருது கடந்த 2014 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிடைத்தவரையில் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்…



இளமைப்பருவம்
பழனிபாபாவின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச்சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின்புதுஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
பொதுவாழ்க்கை
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திமுக, எம்.ஜி.ஆரை எதிர்க்க இவரைப் பயன்படுத்திக்கொண்டது. தி.மு.. அரசும் பின்னர் இவரை எதிர்த்த போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
முஸ்லிம் சமூகத்தில் பரவலாக இருந்த வரதட்சணை ,வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். சந்தன கூடு, சமாதி வழிபாடு போன்ற பழக்கங்களைப் பின்பற்றிய முஸ்லிம்களை கடுமையாக சாடினார் பாபா. இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார். எனினும் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார். பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார். பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார். பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் மக்கள் குடியியல் உரிமைக் குழு (PUCL) போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டார். இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.

எழுத்துப்பணி
கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக கிருஸ்தவ பாதிரிமார்களோடு இவர் விவாதம் நடத்தினார். ராமகோபலய்யருக்கு மறுப்பு நூல் எழுதியதற்காகவும் பாபா கைது செய்யப்பட்டார். தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா. பேரா . மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார். பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID? என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா. நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கையில் கடுமையான கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி எழுதினார். இதனால் அவருக்கு இந்துத்வ அமைப்புகளுள் எதிரிகள் உருவாகினர்.
இறுதிக்காலம்
தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போதுதான் 1997 ஜனவரி 28ஆம் நாள் இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.




No comments: