அதிகாரிகள் அலட்சியத்தால் இறந்த
பழங்குடி இருளர் அய்யனார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம்
மாவட்டம், நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர் அய்யனார்(35),
விபத்தில் அடிபட்டு, மருத்துவ சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார். அவருக்கு
அவ்வப்போது வாயில் பால் ஊற்றிக் கவனித்துக்கொண்டிருந்த, அவரது தாய் மற்றும் மனைவியை
கொரோனோ சந்தேகத்தில் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றனர். கொஞ்ச நேரத்தில்
அய்யனார் இறந்துவிட்டார். ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது மகன் ஜீவா மட்டும், இறந்துபோன தந்தையின் உடலுடன் தவித்துக் கிடந்தான்.
தாய்
அல்லது மனைவி இருவரில் ஒருவரை, அய்யனாரை கவனித்துக்கொள்ள விட்டுச்
சென்றிருக்கலாம். அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வாய்பளித்திருக்கலாம். அல்லது, இரு
பெண்களுடன் அந்த வீட்டினை தனிமைப் படுத்தியிருந்திருக்கலாம். இதுபோன்ற எந்த மாற்று
யோசனையும் செய்யாமல், மனிதாபிமானமற்ற நடந்துகொண்ட அதிகாரிகள் அலட்சியத்தால்
பழங்குடி இருளர் ஒருவர் இறக்க நேரிட்டது.
இதுகுறித்து,
இரவே, உள்ளூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தபோது இது எங்கள் வேலை இல்லை என்று
ஒதுங்கிக் கொண்டனர். காவல் கண்காணிப்பாளிடம் இரவு சொல்லியபோது, “அவருக்கு கொரோனா
இல்லை.. அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்” என்று இரு வார்த்தைகளை மட்டுமே பதிலாக
அளித்தார். அதன்பிறகு இச்சம்பவம் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்
தெரிவித்தோம்.
இன்று
காலையில் புதிய தலைமுறை செய்தியாளர் அன்பு நண்பர் ஜோதி அவர்கள் அங்கு
சென்றபின்புதான். போலீசாரும் அதிகாரிகளும் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். புதிய
தலைமுறை தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டு வெளியுலகிற்கு இந்த அவலத்தை எடுத்துச்
சென்றது.
அதன்பிறகு,
இன்று காலையும் காவல் கண்காணிப்பாளரிடம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்
சார்பில் உடல் நல்லடம் செய்யப்படவேண்டும், அய்யனாரின் உடலைப் பார்க்க அவரது தாயார்
மற்றும் மனைவி இருவருக்கும் அனுமதி அளிக்கவேண்டும் பேராசிரியர் பிரபா கல்விமணி
தகவல் அனுப்பினார். ‘’அனுமதிக்கின்றோம்… நான் இங்குதான் உள்ளேன்” என்று பதில்
அளித்தார் காவல் கண்காணிப்பாளர்.
அதனைத்
தொடர்ந்து ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் உடல்
புதைக்கப்பட்டது. ஒரு ஆம்புலன்சில் அய்யனாரின் மனைவி மற்றும் தாயார்
அழைத்துவரப்பட்டு தூரத்தில் நிறுத்தப்பட்டனர்.
உடல்
புதைக்கப்பட்டதும் மீண்டும் அதே ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டனர்.
இரவெல்லாம்
தந்தையின் உடலுடன் தவித்த 10 வயது மகன் ஜீவா, தற்போது உறவினர் பாதுகாப்பில்
உள்ளான்.
பொறுப்பின்றி
செயல்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தில், பழங்குடி இருளர் அய்யனார் இறந்துள்ளார்
என்பதை எவரும் மறுக்கமுடியாது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும்.
தந்தை
இறந்துவிட்ட நிலையில், தாயாரும் பாட்டியும் மருத்துவமனையில் உள்ள சூழலில், 10 வயது
சிறுவன் ஜீவா நிலை கவலைக்குறிய ஒன்றாகும்.
பாதிக்கப்பட்டுள்ள இக்குடும்பதிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.
நெருக்கடியான
நேரத்தில் உடன் நின்ற நண்பர்கள், உதவிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஆதரவளித்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவன்,
பழங்குடி
இருளர் பாதுகாப்புச் சங்கம்.
No comments:
Post a Comment