Thursday, August 27, 2015

அத்தியூர் விஜயா நினைவு விருது அளிக்கப்பட்டது ஏன்?

(விருது பெறுவோர்களின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து நேற்று விழாவில் துண்டறிக்கையாக வெளியிட்டப்பட்டுள்ளது.
அதிலுள்ள என்னைப் பற்றிய குறிப்புகள்)

கடலூர் மாவட்டத்தில் மங்கலம்பேட்டை அருகே சரியான பேருந்து வசதிகூட இல்லாத சின்னப்பரூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்த இவர். தலைமை ஆசிரியரான இவரது தந்தையின் வாசிப்பு அனுபவம், திராவிட இயக்கப் பின்னணி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இலக்கியம் மற்றும் தமிழ்த் தேசிய அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபடத்தொடங்கினார்.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பெரியாரியக்கப் பேரவை, தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கி செயல்பட்டுள்ளார்.
இலக்கியம் மற்றும் அரசியல் ஆர்வத்தில் கையெழுத்து மற்றும் அச்சிலும் தமிழ்ப்பரணி என்கிற சிற்றிதழ் ஓராண்டு நடத்தியுள்ளார்.
மங்கலம்பேட்டை மேனிலைப் பள்ளியில் பெரியார் படம் வைப்பதை தடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் முறையாக சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் கந்துவட்டி கொடுமையை எதிர்த்த போராட்டம் உட்பட 5 முறை சிறை சென்றுள்ளார். விருத்தாசலம் கல்லூரியில் பயின்ற போது மாணவர் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
மங்கலம்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டபோது ஆலோசனை, ஆதரவு தேடி பேராசிரியர் கல்யாணி அவர்களை சந்தித்தது முதல் தன்னுடைய செயல்பாட்டுத் தளங்களை விரிவுபடுத்திக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பேராசிரியர் கல்யாணி முன்னெடுத்த அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2000 ஆம் திண்டிவனம் ரோசனையில் தொடங்கப்பட்ட தாய்த் தமிழ்ப் பள்ளியை பார்த்துக்கொள்வதற்கு என திண்டிவனம் வந்து, பேராசிரியர் கல்யாணியுடன் அவரது வீட்டிலேயே தங்கி செயல்பட்டார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் முன்னெடுத்த அனைத்துப் பணிகளிலும் 2000 முதல் ஈடுபட்டுள்ளார். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஆலோசனைக் கூட்டம், கோடை காலப் பயிற்சி, உண்டு உறைவிடப்பள்ளி, மாநாடு, வழக்கு விசாரணை, புகார் எழுதுவது போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் உடனிருந்து செயல்பட்டுள்ளார். குறிப்பாக அத்தியூர் விஜயா வழக்கு விசாரணையில் இறுதிவரை உடனிருந்தார்.
சங்கத்தின் சார்பில் புகார்கள், தீர்மானங்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவைகள் எழுதியுள்ளார். இருளர் செய்தி ஆசிரியர் குழுவில் இடம்பெற்று செயல்பட்ட இவர், பழங்குடியினர் கதை, கவிதை, கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் அவர்களுடன் இணைந்து தொகுத்துள்ளார்.
மனித உரிமைகளுக்காகச் செயல்படுகின்ற அரசு சாரா நிறுவனமான மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் 2003 இல் பணியாற்றிய இவர் 2007 தொடங்கி திண்டிவனத்திலுள்ள இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அமைப்பில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகம் சார்பிலும், பேரா.அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் உள்ளிட்டோருடன் இணைந்தும் மனித உரிமைகள் மீறல் சம்பங்களில் உண்மை அறியும் குழுவாக கள ஆய்வு செய்வதுடன் அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.
மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு கட்டுரைகள், செய்திக் குறிப்புகள்-அறிக்கைகள் எழுதியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகள் தலித் முரசு இதழில் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளன. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்தும், வழக்குகள் குறித்தும் ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ தலைப்பில் ஆய்வு நூல் எழுதியுள்ளார். இது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கான பாலின சமத்துவக் கொள்கை மற்றும் குழந்தை உரிமைக் கொள்கை எழுதியுள்ளார்.
‘‘தலைமுறைக் கனவு..’’ என்கிற தலைப்பில் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர் என்கிற கிராம மக்களள் குறித்த சிறு புத்தகம் எழுதியுள்ளார்.
திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயலாளராக உள்ள இவர்,
தாய்த் தமிழ் பள்ளியின் அறங்காவலர் மற்றும் பொருளாளராகவும் உள்ளார்.

(16.08.2015 முக நூல் பதிவு)

No comments: