Thursday, August 27, 2015

மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்

மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்… 
-----------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை சென்னை சென்று திரும்பும்போது பேருந்து நெரிசல் குறித்து அன்று இரவே ஒரு சிறு பதிவு போட்டிருந்தேன்…
அப்போதைய எரிச்சல், கோபமும் இன்னும் தீர்ந்தபாடில்லை. 
நேற்று நிகழ்ச்சி இருந்ததால் எதுவும் எழுதமுடியவில்லை. 
அன்று இரவு 9.20 க்கு தாம்பரத்தில் பேருந்துபிடித்து பெருங்களத்தூருக்கு பேருந்து ஏறினேன். 5 நிமிடம்தானே நின்றுகொண்டே சென்றுவிடலாம் இடமில்லாத நிலையிலும் ஏறினேன். ஆனால் 10.30க்குதான் பெருங்களத்தூர் போகமுடிந்தது. 
மீண்டும் அடுத்த பேருந்து காத்திருந்து, அலைந்து, நடந்து நடந்து 11.40 க்கு அரியலூர் செல்லும் அரசு பேருந்து நிற்பதற்கு கிடைத்த கொஞ்ச இடத்தில் நின்றபடியே தொடங்கியது பேருந்து பயணம். நத்தையாக ஊர்ந்து ஊர்ந்து செங்கல்பட்டு தாண்டி மதுராந்தகம் அருகே மட்டும் ஒரு 30 நிமிடத்து கொஞ்சம் வேகமாகச் சென்றது. மீண்டும் நத்தையாக ஊர்ந்து மேல்மருவத்தூர் முன்பே பல கீ.மீ தூரம் சுத்தமாக வழியில்லை. நான்கு வழிப்பாதையிலும் திருச்சி, மதுரை, சேலம், சிதம்பரம் நோக்கிய பேருந்தே நின்றது. கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்து திண்டிவம் வரும்போது விடியற்காலை மணி 3.00. 
படியில் நின்று கொண்டிருந்த ஒருவரின் கலாட்டா காமெடி, வயதான ஒருவருக்கும் நடத்துனருக்குமான் விவாதம் என பேருந்தில் எவரும் அதுவரை தூங்காமலே பொழுது ஓடியது. 
தனியார் தொலைகாட்சிகாரர்களுக்கு அறிவுகூட தமிழக அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பதை வெளிபடுத்திக்கொண்டே உள்ளனர். சுதந்திரதினம், விடுமுறை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயாரிக்கின்றனர். 
ஆனால் சனி, ஞாயிறு சேர்ந்து வருகின்ற சுதந்திர தின விடுமுறையில் சென்னையிலிருந்து லட்சக்கணக்கில் ஊருக்குச் செல்லும் பயணிகள் கூட்டம், ஆடிவெள்ளி மேல் மருவத்தூர் கூட்டம், ஆடி அமாவாசை மேல்மலையனூர் கூட்டம் என லட்சக் கணக்கில் பயணம் நிகழும் என்பதை முன்கூட்டியே தெரிந்தும், அவைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சரி செய்வதற்கும் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியம் நிச்சயம் ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. அன்று இரவு மட்டும் பெருங்களத்தூரில் குறைந்த பட்சம் 30 ஆயிரம் பேருக்குமேல் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பேருந்து கிடைக்காத அவதியில் யாரேனும் ஒருவர் அவர்களை ஒருங்கிணைத்திருந்தால் கட்டுக்கடங்காத அளவில் எதிர்வினை நடந்திருக்கும். 
கோமா நிலையில் உள்ள தமிழக அரசும், அதிகாரிகளின் அலட்சியம் பெரும்பாலான இடங்களில், நேரங்களில் மக்களை தன்னிச்சையான எதிர்வினைகளுக்கே இட்டுச்செல்லும். 
கோட்டையில் ஜெ. கொடியேற்றுகின்ற சில நிமிடங்களுக்காக ஒட்டுமொத்த தமிழக அரசும் நிர்வாகமும் ஒரு வாரத்திற்கு மேலாக செயல்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் 7 கோடி மக்கள் உள்ளனர் என்பதையே மறந்துபோன கோமா நிலையில்தான அரசு இயந்திரம் உள்ளது. 
அடிபட்டு நினைவிழந்த நிலையில் ஏதேனும் ஒன்று மட்டுமே நினைவில் இருப்பதைப் போன்று ஆள்வோர் அனைவருக்கும் ஜெ. என்பது மட்டுமே நினைவில் உள்ளது. 
மக்களை மறந்துபோன கோமா நிலை அரசுக்கு நல்லது அல்ல. 
பேருந்துக்காக அலைந்த அலைச்சலில், ஜெ.குறித்த வதந்திகள் உண்மையாகக் கூடாத என்று நினைக்கத் தோன்றியது..அப்போதேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்ற நப்பாசை ஏற்பட்டது. 
சீக்கிரமே எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படவேண்டும். 
நாட்டு மக்களின் கோபம் ஆளும் அரசுக்கு நல்லது அல்ல..
மக்களின் கோபம் அதிகரிக்க இன்னும் கொஞ்ச காலம் இந்த அரசு நீடிக்கவேண்டும்… 
கடைசியாக ஒன்று.. 
வெள்ளியன்று இரவு பேருந்தில் நான் சென்னையிலிருந்து திண்டிவனம் அதே நேரத்தில்தான் நண்பர் இசாக் சிங்கபூர் கிளம்பினார். 
நான் திண்டிவனம் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அவர் சிங்கபூர் சென்றடைந்தார்.

(16.08.2015 முகநூல் பதிவு)

No comments: