Saturday, December 26, 2020

முதல்வருக்குக் கடிதம்

 தாய்த்தமிழ்ப் பள்ளி,

ரோசணை, திண்டிவனம் - 604001.

-------------------------------------------------------------

07.11.2020

பெறுதல்

1.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,  சென்னை – 600009.

2.மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம், சென்னை – 600 009.

 

ஐயா,

பொருள் : திண்டிவனம் – ரோசணை – தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி என்ற சுயநிதிப் பள்ளி – 1 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவயமாக தமிழ் வழிக் கல்விப் பயின்று, பின்பு திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி கா.சந்திரலேகா – அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உதவும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு சட்ட அமைச்சர் ஆகியோருக்கு வேண்டுகோள் தொடர்பாக –

    வணக்கம். அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையை நன்கு உணர்ந்து, அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி ஆணையும் பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பள்ளியின் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியை நடத்திவரும் ’’திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம்” என்ற அறக்கட்டளை சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேற்படி பொருள் தொடர்பாக கீழ்க்கண்டவற்றை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

1). திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம் என்ற அறக்கட்டளையானது 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திண்டிவனம் திரு.ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் அப்போதைய பேராசிரியர் அபிபுர்ரகுமான் அவர்களால் நிறுவப்பட்டது.

     2) தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தவும் ஏழை, எளிய பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் 01.08.2000 இல் திண்டிவனம் நகரம், ரோசணையில் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடகப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்பு அது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்று வரும் பெரும்பான்மையான பிள்ளைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகள் ஆவர். மேலும் பயின்றுவரும் 150 குழந்தைகளில் 90% க்கும் அதிகமானோர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    3). அரசின் நிதி உதவி இன்றி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவரும் இப்பள்ளியில் அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு அனைத்து குழந்தைகளுக்கும் இலவயமாகக் கல்வி அளிப்பதோடு, தரமான மதிய உணவும் சீருடைகளும் வழங்கி வருகிறோம். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலம் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவயமாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) க்கு இணங்க அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவயக் கல்வி வழங்கப்படுகிறது.

 

4). மேற்படி மாணவி கா.சந்திரலேகா இப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு வரை இலவயமாகப் படித்து முடித்துவிட்டு அருகில் உள்ள அதாவது திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து 2020 மார்ச் +2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

10-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் 447/500 (89.4%)

11-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் 456/600(76 %)

12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் 471 /600 (78.5%)

மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து மூன்று பொதுத்தேர்வுகளிலும் பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

     5). தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்று கல்வியிலும் கல்வி இணைச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியதைப் பாராட்டி மாணவி சந்திரலேகாவுக்கு 2017-2018 இல் ”தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது” வழங்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

     6). மாணவி சந்திரலேகா மேற்படி பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும்போது அதாவது 2018-2019 மற்றும் 2019-2020 கல்வி ஆண்டுகளில் இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு முழுநேர ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் 11-ஆம் வகுப்பில் 76%, 12-ஆம் வகுப்பில் 78.5% பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு நடத்திய நீட்தேர்வு பயிற்சியில் கலந்துகொண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்று திண்டிவனம் நகரில் 2-வது இடத்டிலும், மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற 52 அரசுப் பள்ளி மானவர்களில் 10-வது இடத்திலும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 747 பேரில் 271-வது இடத்திலும் உள்ளார்.

    7). மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு, Health and Family Welfare (MCA.1) Department G.O (Ms) No 438 Dated 29.10.2020 சார்வாரி வருடம், ஐப்பசி மாதம் 13-ம் நாள், திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆணை வெளியிட்டுள்ளது.

     மேற்படி ஆணையின்படி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மானவர்கள் 6-வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது குழந்தைகளின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) C ன்படி 8-ஆம் வகுப்பு வரை சுயநிதிப் பள்லியில் பயின்றிருக்க வேண்டும். மேற்படி மாணவி 1-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரை பயின்ற எங்களது தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி ஒரு சுயநிதி பள்ளிதான். இங்கு அனைவருக்கும் குழந்தைகளின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்க இலவயக் கல்வி அளிக்கப்படுகிறது.

     8). மேலும் மாணவி கா.சந்திரலேகா குழந்தையாக இருந்தபோதே, அவரது தாயார் மகேஸ்வரி கணவரால் கைவிடப் பட்டவர் ஆவார். மேற்படி மகேஸ்வரி எங்களது பள்ளியில் மொட்டு (எல்.கே.ஜி), மலர் (யு.கே.ஜி) வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வறுமையில் வாழும் முதியோர்களான தன் பெற்றோர்களுடன் மேற்படி மகேஸ்வரியும், மாணவி சந்திரலேகாவும் வாழ்ந்து வருகின்றனர்.

     மாணவி கா.சந்திரலேகா-வின் நிலையை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி மேற்படி மாணவி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உதவும்படி மாண்பு மிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அறங்காவலர்கள் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

(அ.மரிய அந்தோணி)

தலைமை ஆசிரியர்

(திருமதி ராதா)

தலைவர், பெ.ஆ.க

(மு.பூபால்)

தாளாளர்/ செயலாளர்

(இரா.முருகப்பன்)

மேலாளர்

(சி.துரைக்கண்ணு)

கல்வி ஆலோசகர்

(பிரபா கல்விமணி)

தலைவர்

திண்டிவனம் நகர மற்றும் ஊரக் கல்வி மேம்பாட்டுக் கழகம்.

 

 

 

 

 

நகல் :

1.அரசு முதன்மைச் செயலாளர், Health and Family Welfare (MCA.1) Department.

The Director of Medical Education,

Chennai – 600010.

2.The Additional Director of Medical Education/Secretary, Selection Committee, office of the directory medical Education, Chennai – 600010.

3.The law (Bills) Department,

Chennai – 600 009.

4.The Principal Secretary, The School Education Department, Chennai – 9

5.The Health and Family Welfare (IM-1 / IM-2 / Data Cell, Chennai – 600 009.

6.மாவட்ட ஆட்சித் தலைவர், விழுப்புரம் – 605602.

 

(07.11.2020)

 

 

 

No comments: