அரசின் மிக மோசமான நடவடிக்கைகளில் இது ஒன்று.
இந்த அரசின் மீது எங்களைப் போன்றோருக்கு எப்படி நம்பிக்கை வரும்?.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்யவும், தண்டனை வழங்கவும், பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் உருவாக்கப்பட்டது பிரிவு 4. இதன் அடிப்படையில்தான் நீதிபதி செம்மல், டி.எஸ்.பி சங்கரை கைது செய்ய உத்திரவிட்டுள்ளார்.
இச்சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டது, அனேகமாக இந்தியாவிலேயே இதுதான் முதலாவதாக இருக்கலாம்.
இப்படி சமூக நீதியினைக் காப்பாற்ற சட்டத்தினை சரியாக நடைமுறைபடுத்திய நீதிபதி செம்மல் அவர்களுக்கு, உண்மையிலியே சமூக நீதி அரசு பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். மாறாக இரவோடு இரவாக உயர்நீதிமன்றம் மூலமாக டி.எஸ்.பி சங்கரை பாதுகாத்து, நீதிபதி செம்மல் அளித்த உத்திரவினை ரத்து செய்தது மட்டுமல்லாமல்,
சட்டத்தின்படி செயல்பட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
இந்தியாவிலியே வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் முதல் 10 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மலக்குழி மரணங்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளில், ஒரு வழக்கில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
நீதிபதி செம்மல் அவர்களை பணி நீக்கம் செய்திருப்பது என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் சரியாக செயல்படும் நீதிபதிகளுக்கு, இனி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்ற மறைமுக எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது.
பல்பிடுங்கி பல்பீர் சிங் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை இல்லை. மாநில SC/ST ஆணையம் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்திரவிட்ட சுமார் 20 தீர்ப்புகளுக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள தடைகளை நீக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வெள்ளைத்துறை மீதான சட்ட நடவடிக்கையை தண்டனையை ஒரே நாளில் மாற்றி காப்பாற்றி, வழி அனுப்பியது தமிழக அரசு. தூத்துகுடி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது ஆணையம் பரிந்துரை செய்தும் நடவடிகை இல்லை.
குற்றமிழைக்கும் காவலதிகாரிகளை காப்பாற்றுவதால் தமிழக அரசுக்கு என்ன கிடைக்கப்போகின்றது?
குற்றமிழைப்போரையும், ஊழல் செய்வோரையும் காப்பாற்றி, நேர்மையாக சட்டத்தின்படி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் கடமையா?
காவல் துறையா? நீதித்துறையா? என்றால், அரசு சட்டத்தின்படியான நீதியின் பக்கத்தில்தான் நிற்கவேண்டும்.


No comments:
Post a Comment