Thursday, March 27, 2008

காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்











13.03.08
அனுப்புதல்
இரா.முருகப்பன்,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
56/52 விவேகானந்தா நகர்,
மரக்காணம் சாலை,
திண்டிவனம் - 604 002.

பெறுதல்
தலைவர்,
மாநில மனித உரிமை ஆணையம்,
திருவரங்கம் மளிகை,
143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
கிரின்வேஸ் ரோடு,
சென்னை - 28.

ஐயா,
பொருள் : உளுந்தூர்பேட்டை வட்டம், எரையூர் கிராமத்தில், தலித் கிறித்துவர்கள் மீதும், வீடுகள் மீதும் தாக்குதல் - போலீசார் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி - சம்பவம் தொடர்பான கள ஆய்வின்போது, வழக்கு தொடர்பான விவரம் அறியச் சென்ற என்னை காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றி ; அவமானப்படுத்தி ; தாக்க முயற்சித்த எலவனாசூர்கோட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பு-



வணக்கம்.

நான் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் என்கிற மனித உரிமை அமைப்பின் விழுப்புரம் மாவட்ட மனித உரிமைக்காப்பாளராக பணியாற்றி வருகிறேன். தலித் மக்கள் மீதான வன்கொடுமை, தீண்டாமை, சமூகப் புறக்கணிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக சட்ட ரீதியான செயல்பாடுகளை செய்துவருகிறது.
2) கடந்த 09.03.08 ஞாயிறு காலை, உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் வன்னியர் கிறித்துவர்களால், தலித் கிறித்துவர்களூம், அவர்களது வீடுகளும் தாக்கப்பட்டும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து, நொறுக்கப்பட்டும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தலித் மக்கள் மீதான வன்னியர் கிறித்துவர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றபோது நடந்த காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு வன்னியர் கிறித்துவர்கள் இறந்துள்ளனர். மேற்படி சம்பவத் தகவல் கிடைக்கப்பெற்று, எங்களுடைய இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பில், சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்படி கிராமத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினரையும், மற்றும் பிற பொதுமக்களையும் பார்த்து, பேசி, ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்தோம். 3) மறுநாள் 10.03.08 திங்கள் அன்று மீண்டும் மேற்படி கிராமத்திற்கு சென்று, கள ஆய்வு செய்தோம். அப்போது என்னுடன் எமது அமைப்பின் கடலூர் மாவட்ட மனித உரிமைக் காப்பாளர் சரவணக்குமார், தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளரான விழுப்புரத்தை சேர்ந்த ஜோதிநரசிம்மன் ஆகியோர் வந்திருந்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் தெரிந்துகொள்வதற்காக, மேற்படி எறையூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு 10.03.08 அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் சென்றோம்.

4) நான், சரவணகுமார் ஆகிய இருவரும் காவல் நிலையம் சென்றோம். காவல் நிலையத்தின் கிரில் கதவுகள் சாத்தப்பட்டிருந்த நிலையில், கதவருகில் நின்றுகொண்டிருந்த காவலர் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வழக்கு எண், பிரிவுகள் ஆகிய தகவல்களை அறிய வந்திருப்பதை சொன்னேன். அவர் என்னிடம் அடையாள அட்டை கேட்டார். நான் தந்ததும், அவர் உள்ளே உட்கார்ந்திருந்த காவலதிகாரிகளிடம் அடையாள அட்டையைக் காட்டி விபரத்தைச் சொன்னார். அதற்கு அங்கிருந்த காவலதிகாரி ஒரு அரமணி நேரம் கழித்து சொல்வதாகச் சொல்லுங்கள் என்றார். இதைக் மேற்படிக் காவலர் என்னிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே, உள்ளிருந்த வேறு காவலதிகாரி அவர்கள் கேட்கும் தகவலை சொல்லி அனுப்புங்கள் என்றார். அப்போது வெளியில் வந்த வேறு ஒரு காவலதிகாரி, ‘‘ ஒரு 10 நிமிடம் இருங்க சார், இந்த கைதிகளையெல்லாம் வண்டி ஏத்திட்டு, உங்களுக்கு அனைத்தையும் சொல்கிறோம்’’ என்றார். நாங்கள் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் காத்திருந்தோம்.

சில நிமிடங்களில் காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியில் வந்த ஆய்வாளர் ராஜேந்திரன், ‘‘உங்களுக்கு என்ன வேணும், இங்க எதுக்கு நிக்கிறீஙக, போங்க’’ என்றார். அப்போது நான், மேற்படி எறையூர் சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்கின் எண், பிரிவுகள் தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளேன் என்பதைக்கூறினேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘அதெல்லாம் தர முடியாது, வெளிய போ’’ என்றார். நான், மீண்டும் மனித உரிமை அமைப்பில் இருந்து வந்திருப்பதைக் கூறினேன். அதற்கும் அவர், ‘‘ஒரு தடவ சொன்னா புரியாதா முதல்ல ஸ்டேஷன விட்டு வெளிய போ’’ என்றார். அதற்கு நான், ‘‘சார் தருவதாக சொல்லியுளார். அதற்காக நிற்கிறேன்’’ என்றேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘அதெல்லாம் எந்த சாரும் தரமாட்டாங்க, வெளிய போ என்று’’ என் மீது கைவைத்து என்னை நிலைய வளாகத்திலிருந்து வெளியே தள்ளினார். ‘‘எதுக்கு சார் வெளியில் போகச் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டேன். அதற்கு ஆய்வாளர் ‘‘ஏய்... இது என்னோட ஸ்டேஷன் வெளியில போ’’ என்றார். அப்போது காவல் நிலையத்தின் உள்ளிருந்து சீருடையணியாத, அடையாளம் தெரிந்த ஒரு காவலதிகாரியும், மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களுடன் சேர்ந்து என்னை நெட்டித்தள்ளியும், சட்டையை பிடித்து இழுத்தும், மெயின் ரோட்டில் தள்ளினார்கள். என்னுடன் வந்திருந்த சரவணகுமார் தடுப்பதற்கு முயன்றார். காவல்நிலையத்தில் இருந்த 20&க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாதுகாப்பிற்கு வந்திருந்த சுமார் 35 ஆண், பெண் காவலர்களும் இச்சம்பவத்தை பார்த்தனர். சத்தம் கேட்டு, என்னுடன் வந்திருந்த மேற்படி ஜோதி நரசிம்மன் என்னிடம் வந்தார். நான் நடந்ததைச் சொன்னேன்.

5) அப்போது, அங்கு நின்றிருந்த காவல் வண்டியில் காவல் நிலையத்தின் உள்ளிருந்த சிலரை ஏற்றினார்கள். அதை மேற்படி தமிழன் தொலைக்காட்சி செய்தியாளரான ஜோதி நரசிம்மன் படம் எடுத்தார். நான் அருகில் நின்றிருந்தேன். அப்போது மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன் எங்களிடம் வந்து, ‘‘உள்ள வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அப்புறம் என்னா வந்து படம் எடுக்கறீங்க’’ என்று மிரட்டிக்கொண்டே அருகில் வந்து, மேற்படி ஜோதி நரசிம்மன் கையிலிருந்த கேமராவை பிடுங்கினார். அப்போது நான், ‘‘என்னாங்க சார் கையில் இருக்கிற கேமராவ எல்லாம் பிடுக்கிறீங்க’’ என்றேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘ஏய் இது என் ஸ்டேசன்யா’’ என்று கையை ஓங்கிக்கொண்டு அருகே வந்தார். அப்போது வேறு காவலர்கள் வந்து அவரைத் தடுத்தார்கள்.

மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவன் என்று தெரிந்தும், கேட்ட தகவலை தரமுடியாது என்று மறுத்தும், காவல் நிலைய வளாகத்தின் மரத்தடியில் கூட நிற்கவிடாமல், வெளியே தள்ளி, தாக்க முயற்சித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட மேற்படி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. ராஜேந்திரனையும், அவருடன் சீருடை அணியாமலிருந்த, அடையாளாம் தெரிந்த காவலதிகாரியையும், உடனடியாக பணிநீக்கம் செய்து, மேற்படி இரு காவலதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவன்,

(இரா.முருகப்பன்)

இணைப்பு : மேற்படி சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, மற்றும் மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன், வேறொடு கிராமத்தில் பொதுமக்களை மிக மோசமாக விரட்டி, விரட்டி லத்தியால் அடித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சம்பவத்தின் புகைப்படங்கள் அடங்கிய சி.டி.