கோவி.லெனின்
படிப்பதா? வாசிப்பதா?
--------------------------------------
தமிழாசிரியரைப் பார்க்கப் போனேன். ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் சுறுசுறுப்பாக இலக்கியப் பணிகளை செய்து வருகிறார். புத்தகம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, “அய்யாவுக்கு நேரம் கிடைக்கும்போது இதை வாசிங்க” என்றேன்.
“இது என்ன ஃப்ளூட்டா? வாயிலே வச்சி வாசிக்கிறதுக்கு.. புத்தகம்தானே, படிச்சிட்டு சொல்றேன்” என்றார். பள்ளியில் பாடம் நடத்தும்போதே ‘இரட்டுற மொழி’பவர் அவர்.
“அய்யா.. புத்தகத்தைப் படிப்பதைவிட வாசிப்பதுதான் நல்லதுன்னு சொல்றாங்களே” என்றேன்.
“எவன் சொன்னான்?” என்றார்.
“மேலோட்டமாக படிக்கிறதுக்கும் ஆழ்ந்து வாசிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல. படிக்கிறதுன்னா reading. வாசிக்குறதுன்னா learning அப்படின்னுதானே சொல்றாங்க” என்றேன்.
“அப்படிப் பார்த்தால் reading என்பது படிக்கிறது. Learning என்பது கற்பது. புத்தகத்தை ஒழுங்கா படிச்சீன்னா அதிலே என்ன இருக்குதுன்னு கத்துக்க முடியும். பாரதிதாசன் என்ன சொல்றாரு? ‘காலையில் படி.. கடும்பகல் படி.. மாலை-இரவு பொருள்படும்படி நூலைப் படி’ அப்படின்னுதான் பாடியிருக்காரு. பொருள் புரியும்படி படிக்கிறதுக்குப் பேருதான் கற்றல். அப்படிப் படிச்சீன்னா, படிப்படியா மேலே உயர்ந்து போகலாம். இல்லைன்னா, அதே படிப்படியா கீழேதான் வரணும்.”
“அப்படின்னா வாசிக்கிறது?”
“எனக்கு வாயில நல்லா வந்திடும். வாசிப்புங்கிறது தமிழ்ச் சொல் இல்லை. நாயனம் வாசிக்கிறதைக்கூட தமிழில் இசைத்தல்னுதான் சொல்லுவோம். நம்ம ஆளுங்களுக்கு ஒரு மனநோய் உண்டு. சோறுன்னு தமிழில் சொன்னால் கேவலம்னு நினைச்சிக்கிட்டு சாதம்னு வடமொழியிலே சொல்லுவான். அதையும் இப்ப ‘ஒயிட் ரைஸ்’ ஆக்கிப்புட்டானுங்க பச்சரிசிக்குப் பொறந்த பசங்க. அதுமாதிரிதான் படிக்கிறதுன்னு சொல்லாம வாசிக்கிறதுன்னு சொல்றானுங்க வாய் நீண்ட பயலுக” என்ற'படி' புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார்.
இனி கூல்டிரிங்ஸை குடிக்கிறப்பல்லாம் எதையோ குடிக்கிற நினைப்பு வரும்னு வடிவேலுகிட்ட சொன்ன சிங்கமுத்து மாதிரி, வாசிச்சியான்னு இனி யாராவது கேட்டால் தமிழாசிரியர் சொன்னதுதான் நினைவில் வரும் போல..
திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆடி 23
ஆகஸ்ட் 9, 2020 முகநூல் பதிவு
No comments:
Post a Comment