பத்திரிக்கைச் செய்தி
· உடல்நிலை சரியில்லையென செயலாளர் சிந்துஜா வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி.
· தலைமறைவாக உள்ள துணைத் தலைவர் கைது செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
· மாவட்டத்தில்_தலித்_பழங்குடியினர் தலைவராக உள்ள 241 ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு விசாரணை செய்யவேண்டும்.
12.10.2020
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக திருமதி ராஜேஸ்வரி அவர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது, நாற்காலியில் உட்கார வைக்கப்படாமல் தரையில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் தரையிலும், பிற அனைவரும் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இந்தப் படம் கிராமங்களில் நிலவும் தீண்டாமைப் பாகுபாடுகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக கிராமத்திற்கு சென்று, விசாரணை செய்தனர். தீண்டாமை பாகுபாட்டினை கடைபிடித்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது புவனகிரி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டடத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1_வது வார்டில் 45, வேறு இடங்களில் சுமார் 30 என மொத்தம் 100 க்கும் குறைவான தலித் குடும்பங்களும், 1000 த்திற்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் குடும்பங்களும் வசிக்கும் இந்த தெற்குத்திட்டை ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 1-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுகன்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆகும். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரி அவர்களும் இதே வார்டைச் சேர்ந்தவர் ஆகும்.
#ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்தவராகும். துணைத் தலைவர் மோகன்ராஜ் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆகும். துணைத் தலைவராக மோகன்ராஜ் பதவியேற்றது முதல் தலித் அல்லாத 4 வார்டு உறுப்பினர்களையும், தன்னோடு சேர்த்துக்கொண்டு சாதி ரீதியான பாகுபாடுகளை தலைர் ராஜேஸ்வரி, உறுப்பினர் சுகன்யா ஆகியோர் மீது கடைபிடித்து வந்துள்ளார். தலைவரை செயல்பட விடாமல், அவரது பணிகள் எதனையும் செய்யவிடாமல் அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார்.
#இந்த ஊராட்சியில் இதுவரை 2 கிராம சபைக் கூட்டமும், 2 ஊராட்சி கூட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த நான்கு கூட்டத்திலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைவர் ராஜேஸ்வரியை, உறுப்பினர் சுகன்யா இருவரும் தரையில் உட்கார வைத்து இழிவு செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.
#இதுகுறித்து செயலாளர் சிந்துஜாவிடமும் தலைவர் ராஜேஸ்வரி அடிக்கடி முறையிட்டுள்ளார். ஆனால், செயலாளரும் துணைத் தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.
#கடந்த சுதந்திர தினத்தன்று தலைவர் ராஜேஸ்வரியை தேசியக் கொடி ஏற்றவிடாமல், துணைத் தலைவர் மோகன்ராஜின் அப்பா கொடியை ஏற்றியுள்ளார்.
அவமானம் தாங்கமுடியாத தலைவர் ராஜேஸ்வரி அழுதுக் கொண்டே அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
#தலித் பகுதியான 1-வது வார்டில், தேர்தலுக்கு முன்பே குடிநீர் மோட்டார் பழுதடைந்து, குடிநீருக்காக தலித் மக்கள் பெரும் அவதிபட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு மோட்டாரை பழுது நீக்கி மோட்டார் அறையின் சாவியை வார்டு உறுப்பினர் சுகன்யாவிடம் கொடுத்து பராமரிக்க செய்துள்ளார் தலைவர். ஒரு வாரத்திற்கு முன்பு துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் 6 வது வார்டு உறுப்பினர் சுகுமார் ஆகிய இருவரும் தலித் பகுதிக்குச் சென்று மோட்டார் அறையின் பூட்டை உடைத்து அதில் வேறு பூட்டை போட்டு பூட்டிவிட்டு தலைவர் ராஜேஸ்வரியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட டேங்க் ஆப்ரேட்டர் சங்கரிடம் சாவியை கொடுத்துள்ளார். அப்போது தலைவரிடம் ’’பேருக்குத்தான் நீ தலைவர்.. இங்கு எல்லாமே நான்தான் என மிரட்டியுள்ளார்”
#இந்நிலையில்தான் இப்புகைபடம் மூலம், தலைவர் மீதான வன்கொடுமை வெளியாகியது. தலைவர் ராஜேஸ்வரி, புவனகிரி காவல் நிலையத்தில் 10.10.2020 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் கு.எண்: 1103/2020 வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தில் 3(1)(m),3(1)(r) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.
• தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு மோகன்ராஜ் உடனடியாக கைது செய்யப்படுவதுடன், துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக நீக்கப்படவேண்டும்.
• கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் உள்ள செயலாளர் சிந்துஜா, இளவயது பெண் மற்றும் உடல் நிலை சரியில்லை எனக்கூறி, பிணையில் வெளியில் வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதுடன், இவ்வழக்கிலிருந்து தப்பிக்கவும் முயற்சித்து வருகிறார். இதனை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பு செய்து தடுத்து நிறுத்தவேண்டும். மேலும், ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்.
• மிகுந்த அச்சம் மற்றும் அறியாமையின் காரணமாக தலைவர் ராஜேஸ்வரி அவர்கள், தான் அளித்த புகாரில் தன்மீதான சாதிய வன்கொடுமைகளையோ, தான் தலைவராக செயல்படவிடாமல் துணைத் தலைவர் உள்ளிட்டோரால் தடுக்கப்பட்டதோ, இழிவு செய்யப்பட்டது குறித்தோ விரிவாக சொல்லவில்லை. எனவே, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஊராட்சித் தலைவரின் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்படவேண்டும், அப்போது தலைவர் நம்புகின்ற வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்கப்படவேண்டும்.
• ஊராட்சி மன்ற தலித் உறுப்பினர் திருமதி சுகன்யா அவர்கள் மீது தீண்டாமைப் பாகுபாடுகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ள நிலையில், அவரிடம் புகார் பெறப்பட்டு, அதனடிப்படையிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.
• தலித் குடியிருப்பில் இருந்த குடிநீர் மோட்டார் கொட்டகையின் பூட்டினை உடைத்த ஊராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் 6-வது வார்டு உறுப்பினர் சுகுமார் ஆகியோர் மீது பொது வளமான குடிநீரை பயன்படுத்துவதைத் தடுத்து வன்கொடுமை இழைத்த குற்றத்திற்காக எஸ்.சி/எஸ்.டி சட்டம் 3(1)(za) A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.
• கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 683 ஊராட்சிகள் உள்ளது. இதில் 241 ஊராட்சிகளில் ஒதுக்கீடு அடிப்படையில், 237 தலித், 4 பழங்குடியினர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் பல தலித் ஊராட்சித் தலைவர்கள் தாங்கள் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை என்றும், சாதிய வன்கொடுமை மற்றும் தீண்டாமை பாகுபாடுகளுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் தலித் / பழங்குடியினர் தலைவராக உள்ள அனைத்து ஊராட்சிகளும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்யவேண்டும். எந்த ஊராட்சிகள் தலித் / பழங்குடியின தலைவர் தேசியக் கொடி ஏற்றவில்லையே, ஊராட்சிக் கூட்டத்தில் நாற்காலியில் அமர வைக்கப்படவில்லையோ, ஊராட்சி அலுவலகம் செல்ல முடியவில்லையோ, காசோலை மற்றும் தீர்மானக் குறிப்பேடுகள் தலைவரிடம் இல்லையோ, தலைவர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியவில்லையோ அந்த ஊராட்சிகளில் தலைவர்களிடம் புகார் பெற்று, வன்கொடுமை இழைக்கும் துணைத்தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
• வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விழிகண் குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட ஆய்வினை மேற்கொண்டு, மாவட்டத்தில் தலித் / பழங்குடியின தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், பாதுகாப்பினையும் உறுதி செய்திட வேண்டும்.
• 2016 சட்ட மன்றத் தேர்தலின்போது புவனகிரி தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், வாக்கு சேகரிக்க வேட்பாளர் என்ற முறையில் தெற்குத் திட்டை கிராமத்திற்கு சென்றபோது, அவரின் கார் மீது கற்களை வீசி, அவரை கிராமத்திற்குள் விடாமல் தடுத்துள்ளனர் சாதி இந்துக்கள். இவ்வாறு சாதி ஆதிக்கமும், சாதிய இறுக்கமும் உள்ள இக்கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தலைவர் ராஜேஸ்வரி உறுப்பினர் சுகன்யா ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
• ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அரசாங்கத்தின் அனைத்துநிலைகளிலும் துணைத்தலைவர் பதவிகளுக்கும் தலித் & பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
(12 அக்டோபர் 2020 முகநூல் செய்தி)
No comments:
Post a Comment