Saturday, December 26, 2020

கடலூர் - அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் - ஆலோசனைக் கூட்டம்.

 20.11.2020

#அனைத்துக்_கட்சி_மற்றும் #இயக்கங்களின்_ஆலோசனைக்_கூட்டம்

#தீர்மானங்கள்.

கடலூர் ஆல்பேட்டை இரா.பாபு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சாதிய வன்கொடுமை, காவல் துறை அத்துமீறல் போன்ற மனித உரிமை மீறல்கள் போன்றவைகளில் மாநில அளவிலான உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்று பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்காக செயல்பட்டுவருகின்றார்.

இந்நிலையில், அதே ஆல்பேட்டை பகுதியில் வசிக்கும் 2122திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன்கள் அருண் மற்றும் தினேஷ் இருவரும் 14.11.2020 அன்று பாபு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். மேற்படி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினரால், ஏற்கனவே 3 முறை பாதிக்கப்பட்டபோதும் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன்காரணமாகவே 14-ஆம் தேதி தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதலை கண்டித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடவும் இன்று கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெண்புறா குமார், சி.பி.ஐ.(எம்) கட்சியின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் இல.திருமேணி, சி.பி.ஐ கட்சியின் மாநில குழு உறுப்பினர் திரு குளோப், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் சு.ஆறுமுகம், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், விழுப்புரம் மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் பி.வி.ரமேஷ், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மையம் முருகப்பன், சமூக ஆர்வலர் சாமிநாதன், அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பேரவை சந்திரசேகர், புதுச்சேரி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு செய்யாள், புதுச்சேரி மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சு.காளிதாஸ், நுகர்வோர் பேரவை விக்டர், அனைத்துலக அப்துல் கலாம் பேரவை எஸ்.என்.கே.இராமு, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 28 பேர் பங்கேற்றனர்.

#இக்கூட்டத்தில்_கீழ்கண்ட_தீர்மானங்கள் #நிறைவேற்றப்பட்டது.

#மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு மீதான சமூக விரோதிகளின் தாக்குதலை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.

#பாபு வை தாக்கியவர்கள் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே மூன்று முறை புகார் அளித்தும், புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மணிகண்டன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றமிழைத்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு ஆதரவாகவே நடந்துகொண்டுள்ளார். எனவே, உதவி ஆய்வாளர் திரு மணிகண்டன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

#பாபுவைத் தாக்கியதில் மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

மேற்படி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தொடர்ந்து பாபுவிற்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால், உடனடியாக பாபு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கவேண்டும்.

#கடலூர் நகரில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவது தொடர்பாக பத்திரிகைகளில் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளனது. கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு குற்றச் சம்பவங்களும் நகரில் நிகழ்ந்துள்ளன. காவல் துறை அனுமதியுடன் கஞ்சா விற்பனை நடைபெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது. சிறுவர்களும் கஞ்சா புகைக்குக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வரும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. கஞ்சா விற்பனை கடலூர் நகரின் சமூக சீர்கேடாக உள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு,

கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கஞ்சா இல்லாத நகரமாக கடலூரை மாற்றவேண்டும். கஞ்சா விற்பனைக்கு ஆதரவளிக்கும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 01.12.2020 அன்று காலை 10.00 மணிக்கு கடலூர் கார் & டாக்சி ஸ்டேண்ட் முன்பு அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

21.11.2020 முகநூல் பதிவு



 

No comments: