Friday, August 25, 2017

நீட் எதிர்ப்பு : யாருடைய குரலாக ஒலின்றது?

நீட் எதிர்ப்பு : யாருடைய குரலா ஒலிக்கின்றது? 
எதிர்ப்பது மட்டுமே தீர்வா? - என்ன செய்யவேண்டும். 
------------------------------------------------------------------------------

நீட் தேர்வு குறித்த விவாதம் ஒன்று முகநூலில்  தொடங்கியது. அதில் கேள்வியாகவும், பதிலாகவும், கருத்துகளாவும் என்னுடைய எண்ணங்களை பதிவிட்டேன். அவைகள் அனைத்தையும் தொகுத்து, சிறு சிறு திருத்தங்கள் செய்து உருவானதே இந்தக் கட்டுரை.

தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் மொத்தமிருக்கின்ற 4000 த்திற்கும் குறைவான மருத்துவ இடங்களைப் பிடிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் +2 தேர்வு மதிப்பெண்ணில் கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவ இடம் நிரப்பப்பட உள்ளதால், போட்டியில் இருந்த பலருக்கும் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது, போட்டியிடாத சிலருக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை ஒட்டுமொத்த தமிழகப் பிரச்சனையாகவும், சமூக நீதியின் தோல்வியாகவும் பார்க்கப்படவேண்டுமா?

2015-16 ம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கான 2,253 இடங்களில் 24 பேர் (1%) மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள். 2014-15 ல் 2,975 அரசு மருத்துவக்கல்லூரி இடங்களில் 37 இடங்களே அரசு பள்ளி மாணவர்கள். 2016-17 ல் 2839 மருத்துவ இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே ஆக்கிரமித்தனர். இதில் கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் அல்லது பங்கேற்பு எதுவுமே இல்லை.

கிராமப்புற-அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் அன்றும் இடமில்லை, இன்றும் இடமில்லை. இந்நிலையில் இதனை சமூக நீதியின் தோல்வியாகவும், கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறுவது எந்த அளவிற்கு சரி?. வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருந்தால்தானே பறிபோனது என சொல்லமுடியும்.

தனியார் பள்ளியில் பயின்ற வசதி படைத்த 4000 சொச்சம் மாணவர்கள் கைபற்றுகின்ற இந்த மருத்துவ இடங்கள் ஒட்டுமொத்த தமிழகப் பிரச்சனையாக திட்டமிட்டு மாற்றப்படுகின்றது. இதுவே ஒரு (மிடில்கிளாஸ்) நடுத்தர மக்கள் மனநிலைதான்.

இவ்விடத்தில் இயல்பாக ஒரு சந்தேகம் எழுகின்றது.  இந்த மருத்துவப் படிப்பைத் தவிர வேறு உயர்கல்விகளில் ஏன் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. முக்கியத்துவம் அளிக்கவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையில் 50% இடங்கள் ஏறக்குறைய 1 லட்சத்து 40 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. காலியாக உள்ளது. இது கவனமோ முக்கியத்துவமோ பெறவில்லை. காரணம் எல்லோருக்கும் தெரியும்.

இன்னொரு முக்கிய செய்தியினை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  10 நாட்களுக்கு முன்பு தமிழ் இந்துவில் பார்த்த ஒரு செய்தி. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை என்றும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவ சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் வாழ்வா சாவா என்பதான போராட்டம் போல் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் மருத்துவத் துறை ஆராய்ச்சியில் ஏன் இந்த தேக்கநிலை? மருத்துவம் படிக்கின்ற 97% லிருந்து 99% வரையிலான மாணவர்கள் யாரும் தமது பள்ளிக்கல்வியை தாய்மொழி வழியில் கற்கவில்லை. மனதும், மூளையும் சொந்தமாக சிந்திக்கின்ற தாய்மொழி வழியில் கல்வி இல்லாத காரணத்தால் புதிய சிந்தனையோ ஆராய்ச்சியோ தோன்றுவதில்லை.

தமிழகத்தில் மொத்த கல்வி முறையுமே சிக்கலாகத்தான் உள்ளது.  பண வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி. பணமில்லாத ஏழைகளுக்கு ஒரு கல்வி என கல்வி இரு முறையாக உள்ளது.

மருத்துவ சேர்க்கையில் மெட்ரிகுலேசன் மாணவர்களுடன் கூட அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் கிடையாது. இதில் சி.பி.எஸ்.சி மாணவர்களோடு நினைத்துகூட பார்க்க முடியாது. இந்தப் போட்டி என்பது சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கும் மெட்ரிகுலேசன் மாணவர்களுக்குமானது என்பதுதான் உண்மை. இது தனியார் பள்ளிகளின் லாபியால், திட்டமிட்ட கருத்துக்களால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கல்வி பிரச்சனையாக மாற்றப்படுகிறது என்பதே என் கருத்து. நீட் வருவதால் பாதிப்பு உண்டுதான். ஆனால் ஏன் இப்படி பயப்பட வேண்டும்? இதோடு வாழ்க்கையே முடிந்துபோனது, கல்வியே அழிந்துபோனது, உலகமே இருண்டுபோனது என்பதைப் போன்ற தோற்றம் ஏன்? மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு என்பது இப்போது புதிதாக வருவதில்லை. இதைவிட மோசமான பாதிப்புகளை அனைத்து நிலையிலும் தமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனுபவித்து வருகிறார்.  இவர்களைக் குறித்தானதுதான் என் கவலை.

இதில் அடுத்தகட்டமாக பார்க்கவேண்டியது முக்கியமான ஒன்று. இதனை வெறும் நீட் நுழைவுத் தேர்வு, மருத்துவ சேர்க்கையில் இடம், மருத்துவர் என்ற ஒரே நிலையில் அல்லது ஒரே இடத்தில் மட்டுமே தேங்கி நின்று பேசாமல் அடுத்த கட்டம் நகர வேண்டும். குறிப்பாக மத்திய அரசுக்கும்  மாநில அரசுக்குமான உரிமைகள் குறித்து பேசவேண்டும்.

மத்திய அரசு கொண்டுவருகின்ற அனைத்துமே மக்களுக்கு எதிரானவைதான். பெரும்பாலன திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாகும். அதில் அவ்வளவு கவனம் இல்லை. ஆனால் இந்த மருத்துவ சேர்க்கை என்பது ஏறக்குறைய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் சேர்த்து மொத்தம் 4000 த்திற்கும் குறைவான இடங்கள்தான்.  அதுவும் இது அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடையாது.

இது சிறு பிரச்சனை இல்லைதன். பெரிய பிரச்சனைதான். யாருக்கான பிரச்சனை. யார் போட்டியிடுகின்றார்களோ, யார் அய்யோ தனக்கு கிடைக்காதோ என்று காத்திருக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் பிரச்சனை. போட்டியிலேயே இல்லாதவனுக்கு இது பிரச்சனையே இல்லை. இதில் (மருத்துவ சேர்க்கையில்) பயனாளிகள் யார்? என்று பார்க்கவேண்டும். யாருக்காக குரல்கள் ஒலிக்கின்றது என்பதையும் பார்க்கவேண்ட்டும். தனியார் பள்ளி மாணவர்கள்தான் பயனாளிகள். தனியார் பள்ளிகளின் குரல் எல்லோரின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கின்றது.

தற்போது பள்ளிக்கல்வி மீண்டும் மதிப்பெண், மருத்து இடம், மருத்துவர் என்பதில் மட்டுமே நிற்கிறது. மதிப்பெண் பெறுவதும், மருத்துவர் ஆவது என்பது மட்டுமே கல்வி அல்ல.

அனைத்து வாய்ப்பு வசதிகளுடன் தனியார் பள்ளிகளில் பயிலும் 35% மாணவர்கள் மருத்துவ இடங்களில் 97% இடங்களைப் பிடித்துக்கொள்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 65% மாணவர்கள் நிலை? இங்கு கல்வி எல்லோருக்குமானதாக இல்லை. யாருக்கு வாய்ப்பும், வசதியும் உள்ளதோ அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். வாய்ப்பும் வசதியும் இல்லாத ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் நிலை?

மாநிலத்தின் கல்வி உரிமை மட்டுமல்ல, பெரும்பாலான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதிகாரங்கள் மையப்படுத்தப்படுகின்றன. நீட் எதிர்ப்பு என்பது மாநிலங்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான பிரச்சாரம், இயக்கம் முன்னெடுக்கப்படவேண்டும்.

பாஜக மிகவும் திட்டமிட்டு மாநிலக் கட்சிகளை ஒழிப்பதற்கான வேலைகளை செய்கின்றன. கொஞ்ச காலத்தில் மாநிலங்கள், அதற்கான உரிமைகள் எதுவும் இல்லாமல் போகும்.

மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான உரிமைகள் மீட்கப்படவேண்டும். இருப்பவை காப்பாற்றப்படவேண்டும். இதுதான் நீட் போன்ற அனைத்திற்கும் தீர்வாகும். 

Monday, August 7, 2017

அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர்.

கல்விக் கண் திறந்த   
திண்டிவனம் சார் ஆட்சியர்  திரு.பிரபு சங்கர் - 
அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர். 
-----------------------------------------------------------------------------------------------------------------

திருமூர்த்தி. பழங்குடி இருளர் மாணவர். 12 ஆம் வகுப்பில் 963 மதிப்பெண் எடுத்திருந்தான். பொறியியல் படிக்க விருப்பம். சாதிச் சான்று இல்லாமல் விண்ணபிக்க முடியாத நிலை. கடைசி நாளன்று அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் பதிவு செய்தான். விண்ணப்பதை அனுப்ப ஒருநாள்தான் இடைவெளி. அப்போதுதான் திண்டிவனம் சார் ஆட்சியராக பிரபு சங்கர் அவர்கள் பொறுப்பேற்று சில நாட்கள் ஆகியிருந்தது. அவரை அனுகினோம். நேரடியாக விசாரணை செய்து மாலையே சாதிச் சான்றை வழங்கினார். அதனால் இறுதி நாளன்று விண்ணப்பதினை அனுப்ப முடிந்தது. கலந்தாய்வில் பங்கேற்றான். 

இயந்திரவியல் கிண்டியியே இடம் கிடைத்தது. பல்கலைக்கழகத்திலேயே இடமென்பதால் சில கட்டணங்கள் கட்டவேண்டியுள்ளது. முதல் தலைமுறை சான்றிதழ் இருந்தால் கட்டண விலக்கு கிடைக்கும். அதுவும் இல்லை. மூன்று நாள் அவகாசம் கேட்டதை பல்கலைக் கழக அலுவலர்கள் ஏற்றனர். கலந்தாய்வு முடித்த மறுநாள் இதனை சார் ஆட்சியர் கவனத்திற்கு பேராசிரியர் கல்யாணி கொண்டு சென்றார். இதனையும் சார் ஆட்சியர் தனிக்கவனம் எடுத்து செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவரே பேசினார். இப்படி நேரடியாக அவர் தலையிட்டு அவசரத்தை வலியுறுத்தியதால் அன்றே விசாரணை முடிந்து மாலையே முதல் தலைமுறை சான்றிதழை பெறுமுடிந்தது. 

இப்படி சார் ஆட்சியர் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யவில்லை என்றால் இன்று பழங்குடி இருளர் சமூகத்திலிருந்து முதல் தலைமுறை மாணவன் திருமூர்த்தி அண்ணா பொறியியல் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.  பழங்குடியினர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும்  சார் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கலந்தாய்வில் திருமூர்த்திக்கு வழிகாட்டியாக இருந்து, திருமூர்த்தியின் கல்விக்கு அனைத்து வகையிலும் உதவியாகவும், உறுதுணையாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட கல்வியாளர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் அவரது குழுவினருகும்.இதயங்கனிந்த நன்றிகள்.




Tuesday, July 25, 2017

மாணவி வளர்மதி இடைநீக்கம் : பெரியார் பல்கலைக் கழகமும் - என்னை பிணையில் எடுத்த கொளஞ்சியப்பர் கல்லூரியும்


மாணவி வளர்மதி இடைநீக்கம் : 

பெரியார் பல்கலைக் கழகமும் -
என்னை பிணையில் எடுத்த கொளஞ்சியப்பர் கல்லூரியும்
---------------------------------------------------------------------------------------------------------



கைதினைத் தொடர்ந்து அரசின் அழுத்தம் காரணமாக மாணவி பல்கலைகழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அச்சப்படுவதை வெளிபடுத்துடன், ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஒரு பாசிசத்தை நோக்கி நகர்வதை உறுதிபடுத்துகின்றது.

நான் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்றபோது (அநேகமாக 2 ஆம் ஆண்டாக இருக்கும். 3 ஆம் ஆண்டு போகவில்லை) நான் அப்போது தொடர்பிலிருந்த அமைப்பு நடத்திய கந்துவட்டி ஒழிப்பு இயக்க நடவடிக்கையொன்றில் 11 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டேன். மாணவர் என்பதையும், தேர்வு காரணத்தையும் கூறி என்னை முதலில் பிணையில் எடுத்தனர். வெளியில் வந்தபிறகுதான் கூறினார்கள். பிணை எடுக்க எனக்கு மாணவர் என்கிற சான்றிதழ் வாங்க கல்லூரி சென்ற தோழர்களிடம் முதல்வர் "இவன் நல்ல பையனாச்சே. இவன் தப்பு எதுவும் செய்திருக்க மாட்டானே என்று" கூறியுள்ளார். கந்துவட்டி என்கிற சமூகப் பிரச்சனை, அதற்கான பிரச்சார இயக்கம், அதனையொட்டி கைது என அனைத்தையும் தோழர்கள் கூறியுள்ளனர். அதனைக் கேட்ட முதல்வர் "சீக்கிரமா வெளியில எடுங்க" எனக்கூறி எனக்கு சாதகமான சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இந்த முதல்வருக்கும் எனக்குமான அறிமுகம் மிக வேடிக்கையானது. எங்களுக்கு முன்பு வரை கல்லூரியில் ஸ்டிரைக் என்றால் வெளி நுழைவாயில் நின்றுகொண்டு மாணவர்கள் அனைவரையும் குறிப்பாக பெண்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். நாங்கள் இதனை மாற்றினோம். எந்த ஸ்டிரைக் என்றாலும் கல்லூரி தொடங்கிய பிறகு ஒவ்வொரு வகுப்பாக சென்று காரணத்தை கூறி அனைவரையும் வெளியில் அழைத்துவந்து போராட்டம் நடத்துவது அல்லது கூட்டமாக நின்று முழக்கம் போட்டுவிட்டு கலைவது என்ற நிலையை உருவாக்கினோம். பெரும்பாலும் காரணத்தை விளக்கி சொல்லவும், சமாதானப்படுத்தவும் என்னை அனுப்பிவிடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை ஈழப்பிரச்சனைக்காக ரயில் மறியல் செய்ய ஒவ்வொரு வகுப்பாக சென்று சொல்லி மாணவர்களை வெளியில் அழைத்து ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தோம். 

இயற்பியல் வகுப்பு என நினைக்கின்றேன், நேராக உள்ளே சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்தவரிடம் சார் ஒரு நிமிடம் சார் எனக் கூறிவிட்டு மாணவர்களிடம் காரணத்தைச் சொல்லி வெளியில் அழைத்தேன். அப்போது பாடம் நடத்தியவர் "பிரின்ஸ்பாலுக்கு தெரியுமா? சொல்லிட்டிங்களா" என்று கேட்டார். இன்னும் இல்ல சார் போய் சொல்லிவிடுகிறோம் என்று கூறிவிட்டு, மாணவர்களை வெளியில் வருமாறு மீண்டும் அழைத்தேன். "அனுப்பி வைக்கிறேன் போங்க" என்று அவர் கூறினார். நான் கிளம்பி என்னுடன் வகுப்பறைக்குள வராமல் வராண்டாவில் நின்ற நண்பர்களிடம் சென்றேன். அப்போதுதான் கூறினார்கள், "அவர்தான் பிரின்ஸ்பால்" என. அதனாலதான் நீங்க எவனும் உள்ள வரலயா என்றேன். அதன்பிறகு அந்த ரயில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

தொடர்ந்து பல போராட்டங்கள். என் தலைமையில் நடந்த உண்ணாவிரத்தை அந்த முதல்வர் மாலை பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தெல்லாம் பேசினார். அதைத் தாண்டி அவருடன் பேசியதில்லை. கல்லூரியில் எதிரே பார்க்கும்போது வணக்கம் சொல்வேன். சிரித்துக்கொண்டே வணக்கம் சொல்லியபடி செல்வார். 

கல்லூரிக்கு தொடர்பில்லாத நான் இருந்த அமைப்பு போராட்டத்தில் கைதான என்னை பிணையில் எடுத்த முதல்வர் எங்கே, கற்றுகொடுத்த கல்லூரி எங்கே?. 
துண்டறிக்கை கொடுத்தற்காக கைது, குண்டர் சட்டம், இடை நீக்கம் என அடக்குமுறை செலுத்தும் பல்கலைக் கழகம் எங்கே?

அரசின் இந்த அடக்குமுறை 
திமிறி எழுவதற்கு உதவி செய்யும்..
எழுவோம்...