Monday, August 7, 2017

அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர்.

கல்விக் கண் திறந்த   
திண்டிவனம் சார் ஆட்சியர்  திரு.பிரபு சங்கர் - 
அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர். 
-----------------------------------------------------------------------------------------------------------------

திருமூர்த்தி. பழங்குடி இருளர் மாணவர். 12 ஆம் வகுப்பில் 963 மதிப்பெண் எடுத்திருந்தான். பொறியியல் படிக்க விருப்பம். சாதிச் சான்று இல்லாமல் விண்ணபிக்க முடியாத நிலை. கடைசி நாளன்று அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் பதிவு செய்தான். விண்ணப்பதை அனுப்ப ஒருநாள்தான் இடைவெளி. அப்போதுதான் திண்டிவனம் சார் ஆட்சியராக பிரபு சங்கர் அவர்கள் பொறுப்பேற்று சில நாட்கள் ஆகியிருந்தது. அவரை அனுகினோம். நேரடியாக விசாரணை செய்து மாலையே சாதிச் சான்றை வழங்கினார். அதனால் இறுதி நாளன்று விண்ணப்பதினை அனுப்ப முடிந்தது. கலந்தாய்வில் பங்கேற்றான். 

இயந்திரவியல் கிண்டியியே இடம் கிடைத்தது. பல்கலைக்கழகத்திலேயே இடமென்பதால் சில கட்டணங்கள் கட்டவேண்டியுள்ளது. முதல் தலைமுறை சான்றிதழ் இருந்தால் கட்டண விலக்கு கிடைக்கும். அதுவும் இல்லை. மூன்று நாள் அவகாசம் கேட்டதை பல்கலைக் கழக அலுவலர்கள் ஏற்றனர். கலந்தாய்வு முடித்த மறுநாள் இதனை சார் ஆட்சியர் கவனத்திற்கு பேராசிரியர் கல்யாணி கொண்டு சென்றார். இதனையும் சார் ஆட்சியர் தனிக்கவனம் எடுத்து செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவரே பேசினார். இப்படி நேரடியாக அவர் தலையிட்டு அவசரத்தை வலியுறுத்தியதால் அன்றே விசாரணை முடிந்து மாலையே முதல் தலைமுறை சான்றிதழை பெறுமுடிந்தது. 

இப்படி சார் ஆட்சியர் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யவில்லை என்றால் இன்று பழங்குடி இருளர் சமூகத்திலிருந்து முதல் தலைமுறை மாணவன் திருமூர்த்தி அண்ணா பொறியியல் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.  பழங்குடியினர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும்  சார் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கலந்தாய்வில் திருமூர்த்திக்கு வழிகாட்டியாக இருந்து, திருமூர்த்தியின் கல்விக்கு அனைத்து வகையிலும் உதவியாகவும், உறுதுணையாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட கல்வியாளர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் அவரது குழுவினருகும்.இதயங்கனிந்த நன்றிகள்.
Tuesday, July 25, 2017

மாணவி வளர்மதி இடைநீக்கம் : பெரியார் பல்கலைக் கழகமும் - என்னை பிணையில் எடுத்த கொளஞ்சியப்பர் கல்லூரியும்


மாணவி வளர்மதி இடைநீக்கம் : 

பெரியார் பல்கலைக் கழகமும் -
என்னை பிணையில் எடுத்த கொளஞ்சியப்பர் கல்லூரியும்
---------------------------------------------------------------------------------------------------------கைதினைத் தொடர்ந்து அரசின் அழுத்தம் காரணமாக மாணவி பல்கலைகழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அச்சப்படுவதை வெளிபடுத்துடன், ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஒரு பாசிசத்தை நோக்கி நகர்வதை உறுதிபடுத்துகின்றது.

நான் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்றபோது (அநேகமாக 2 ஆம் ஆண்டாக இருக்கும். 3 ஆம் ஆண்டு போகவில்லை) நான் அப்போது தொடர்பிலிருந்த அமைப்பு நடத்திய கந்துவட்டி ஒழிப்பு இயக்க நடவடிக்கையொன்றில் 11 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டேன். மாணவர் என்பதையும், தேர்வு காரணத்தையும் கூறி என்னை முதலில் பிணையில் எடுத்தனர். வெளியில் வந்தபிறகுதான் கூறினார்கள். பிணை எடுக்க எனக்கு மாணவர் என்கிற சான்றிதழ் வாங்க கல்லூரி சென்ற தோழர்களிடம் முதல்வர் "இவன் நல்ல பையனாச்சே. இவன் தப்பு எதுவும் செய்திருக்க மாட்டானே என்று" கூறியுள்ளார். கந்துவட்டி என்கிற சமூகப் பிரச்சனை, அதற்கான பிரச்சார இயக்கம், அதனையொட்டி கைது என அனைத்தையும் தோழர்கள் கூறியுள்ளனர். அதனைக் கேட்ட முதல்வர் "சீக்கிரமா வெளியில எடுங்க" எனக்கூறி எனக்கு சாதகமான சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இந்த முதல்வருக்கும் எனக்குமான அறிமுகம் மிக வேடிக்கையானது. எங்களுக்கு முன்பு வரை கல்லூரியில் ஸ்டிரைக் என்றால் வெளி நுழைவாயில் நின்றுகொண்டு மாணவர்கள் அனைவரையும் குறிப்பாக பெண்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். நாங்கள் இதனை மாற்றினோம். எந்த ஸ்டிரைக் என்றாலும் கல்லூரி தொடங்கிய பிறகு ஒவ்வொரு வகுப்பாக சென்று காரணத்தை கூறி அனைவரையும் வெளியில் அழைத்துவந்து போராட்டம் நடத்துவது அல்லது கூட்டமாக நின்று முழக்கம் போட்டுவிட்டு கலைவது என்ற நிலையை உருவாக்கினோம். பெரும்பாலும் காரணத்தை விளக்கி சொல்லவும், சமாதானப்படுத்தவும் என்னை அனுப்பிவிடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை ஈழப்பிரச்சனைக்காக ரயில் மறியல் செய்ய ஒவ்வொரு வகுப்பாக சென்று சொல்லி மாணவர்களை வெளியில் அழைத்து ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தோம். 

இயற்பியல் வகுப்பு என நினைக்கின்றேன், நேராக உள்ளே சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்தவரிடம் சார் ஒரு நிமிடம் சார் எனக் கூறிவிட்டு மாணவர்களிடம் காரணத்தைச் சொல்லி வெளியில் அழைத்தேன். அப்போது பாடம் நடத்தியவர் "பிரின்ஸ்பாலுக்கு தெரியுமா? சொல்லிட்டிங்களா" என்று கேட்டார். இன்னும் இல்ல சார் போய் சொல்லிவிடுகிறோம் என்று கூறிவிட்டு, மாணவர்களை வெளியில் வருமாறு மீண்டும் அழைத்தேன். "அனுப்பி வைக்கிறேன் போங்க" என்று அவர் கூறினார். நான் கிளம்பி என்னுடன் வகுப்பறைக்குள வராமல் வராண்டாவில் நின்ற நண்பர்களிடம் சென்றேன். அப்போதுதான் கூறினார்கள், "அவர்தான் பிரின்ஸ்பால்" என. அதனாலதான் நீங்க எவனும் உள்ள வரலயா என்றேன். அதன்பிறகு அந்த ரயில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

தொடர்ந்து பல போராட்டங்கள். என் தலைமையில் நடந்த உண்ணாவிரத்தை அந்த முதல்வர் மாலை பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தெல்லாம் பேசினார். அதைத் தாண்டி அவருடன் பேசியதில்லை. கல்லூரியில் எதிரே பார்க்கும்போது வணக்கம் சொல்வேன். சிரித்துக்கொண்டே வணக்கம் சொல்லியபடி செல்வார். 

கல்லூரிக்கு தொடர்பில்லாத நான் இருந்த அமைப்பு போராட்டத்தில் கைதான என்னை பிணையில் எடுத்த முதல்வர் எங்கே, கற்றுகொடுத்த கல்லூரி எங்கே?. 
துண்டறிக்கை கொடுத்தற்காக கைது, குண்டர் சட்டம், இடை நீக்கம் என அடக்குமுறை செலுத்தும் பல்கலைக் கழகம் எங்கே?

அரசின் இந்த அடக்குமுறை 
திமிறி எழுவதற்கு உதவி செய்யும்..
எழுவோம்...