மனித உரிமை செயல்பாட்டாளர்
கடலூர் இரா.பாபு
மீது தாக்குதல்
கண்டன அறிக்கை
----------------------------------------------------------
· தாக்கியவர்கள்
உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
· செயல்பாட்டாளர்
பாபு-விற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
கடலூரில் மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள ஆல்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்
இரா.பாபு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு
தளத்தில் செயல்பட்டு வருகின்றார். கடலூர் நகர வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காகவும்
தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற ‘’கடலூர் பொது நல இயக்கங்கள் கூட்டமைப்பில்’’ முனைப்போடு
செயல்பட்டுவருகின்றார். மேலும், திண்டிவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இளைஞர்களுக்கான
சமூக விழிப்புணர்வு மையம் என்ற மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளாராகவும் பணியாற்றுகின்றார்.
மறைந்த நுகர்வோர்
காவலர் திரு.நிஜாமுதீன் அவர்களுடன் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர்
உரிமைகளுக்காகவும் செயலாற்றியுள்ளார்.
தலித் மற்றும்
இருளர், குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியினர், திருநங்கை போன்றோரின் உரிமை மற்றும்
பாதுகாப்பிற்காகவும் மனித உரிமைக் காப்பாளராக செயலாற்றி வருகின்றார்.
குறிப்பாக
சாதிய வன்கொடுமை, காவல் துறை அத்துமீறல் போன்ற மனித உரிமை மீறல்கள் போன்றவைகளில் மாநில
அளவிலான உண்மை அறியும் குழுக்கள் அமைத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்காக
செயல்பட்டுவருகின்றார்.
இந்நிலையில்,
அதே ஆல்பேட்டை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் அருண்,
14.11.2020 அன்று பாபு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். புகார் அளிக்க இருசக்கர
வாகனத்தில் காவல் நிலையம் சென்றுகொண்டிருந்த பாபுவை, மேற்படி அருண், அவரது நண்பர்கள்
இருவருடன் சேர்ந்து வழிமறித்து கீழே தள்ளி, தாக்கியுள்ளனர். அருண் உள்ளிட்டோரின் தாக்குதலில்
கடுமையாக காயமடைந்த பாபு, கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று
வருகிறார்.
சம்பவம் தொடர்பாக
நேற்று வழக்குப் பதிவு செய்த கடலூர் புதுநகர் காவல் நிலையப் போலீசார், தாக்குதல் நடத்திய
அருண் உள்ளிட்டோரை இதுவரை கைது செய்யவில்லை.
மேற்படி அருணின்
தந்தை கிருஷ்ணமூர்த்தி, கடலூரில் குற்றப்பின்ணனி உள்ள பலருடன் தொடர்பில் உள்ளவராகும்.
கட்டப்பஞ்சாயத்து போன்றவைகளுக்காக கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி காவல் நிலையம் சென்று வருபவராகும்.
கிருஷ்ணமூர்த்தியால்
பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், போலீசார், ஏற்கனவே உள்ள நெருக்கம்
காரணமாக கிருஷ்ணமூர்த்தி மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கொரோனா ஊரடங்கு
காலத்தில் வேலை மற்றும் வருமானமின்றி இருந்த தலித், இருளர், குறவர், நரிக்குறவர் சமூகத்தைச்
சேர்ந்தவர்களுக்கு, பாபு அவர்கள் தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக கடந்த இரு மாதங்களுக்கு
முன்பு, அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை நிவாரணமாக அளித்தார். சிலர், பாபுவின்
வீட்டிற்கே வந்து, நிவாரணப் பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். அப்போது மேற்படி கிருஷ்ணமூர்த்தி,
“பாம்பு பிடிக்கிறவன், பல்லி பிடிக்கிறவன், பறப்பசங்கயெல்லாம்.. இங்க.. தெருவுக்குள்ள
வரானுங்க.. இவன் இருக்கிற தைரியம்தானே.. முதல்ல இவன உதைக்கனும்’’ என்று திட்டியுள்ளார்.
”ஏன் இப்படி பேசுகிறீர்கள்…” என்று பாபு கேட்டதற்கு அவரை அடிக்கச் சென்றுள்ளார். தடுக்க
முயன்ற பாபுவின் தாயாரை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதுதொடர்பாக உடனடியாக பாபு புதுநகர்
காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் 3 நாட்களாக விசாரணை என அலைக்கழித்து,
எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சம்பவத்தை
மனதில் வைத்துக்கொண்டு, பாபுவின் நண்பர் கார்த்திகேயனை அக்டோபர் மாதம், மேற்படி கிருஷ்ணமூர்த்தி
திட்டி, வம்பிழுத்து, தாக்கியுள்ளார். இதுதொடர்பாக கார்த்திகேயன் காவல் நிலையத்தில்
புகார் அளித்தும் போலீசார் புகார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு கடலூர் காவல்
துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) அவர்களின் நேரடி கவனத்திற்கு இதனைத் தெரிவித்தபின்,
டி.எஸ்.பி அவர்களின் அறிவுத்தலுக்குப் பின்பு, புதுநகர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது
வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்நிலையில்தான்,
தீபாவளியன்று, 14.11.2020 அன்று, மேற்படி கிருஷ்ணமூர்த்தியின் மகன் தினேஷ், பாபுவின்
வீட்டிற்கு எதிரில் நின்றுகொண்டு பட்டாசினைக் கொளுத்தி வேண்டுமென்றே பாபுவின் வீட்டு
முன்பு வீசியுள்ளனர். இதனைக் கேட்ட பாபு மற்றும் பாபுவின் மனைவியை தினேஷ் தரக்குறைவாகப்
பேசியுள்ளார். காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துவிட்டு, புகார் அளிக்க
தனது இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையம் சென்ற பாபுவை, கிருஷ்ணமூர்த்தியின் மூத்த
மகன் அருண், இரண்டு பேருடன் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று, பாபுவை வண்டியிலிருந்து
கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த பாபு,
தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
14.11.2020
அன்று இரவு 11 மணிக்கு பாபுவிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், நேற்று முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்துள்ளனர். ஆனால், பாபுவை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
காவல் நிலையத்தில்
கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி
மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதும், தயங்குவதும் கடந்த கால உதாரணங்கள்
ஆகும். இந்தச் சூழலில்தான் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போலீசார்
தயக்கம் காட்டுகின்றனர்.
மனித உரிமை
மற்றும் சுற்றுச் சூழலுக்காக செயல்படும் மனித உரிமைச் செயல்பாட்டாளர் இரா.பாபு மீதான,
தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பாபு அளித்துள்ள புகாரின் மீது, கடலூர் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக தலையீட்டு நடவடிக்கை எடுத்து, பாபுவிற்கு, பாபு
குடும்பத்திற்கும் உரிய பாதுகப்பினை வழங்கிட வேண்டுமென்று, அனைத்துக் கட்சி மற்றும்
இயக்கங்கள், மனித உரிமை மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
· தாக்குதல்
நடத்திய கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் அருண், தினேஷ், அவர்களது நண்பர்கள் உள்ளிட்டோர்
உடனடியாக கைது செய்யப் படவேண்டும்.
#தொடர்ந்து குற்றச்
செயல்களில் ஈடுபடும் கிருஷ்ணமூர்த்தி மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
#பாபு மற்றும் அவரது
குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவேண்டும்.
இவண்,
தி.வேல்முருகன்,
நிறுவனத் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
பேராசிரியர் அ.மார்க்ஸ்,
மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு.
பேராசிரியர்
பிரபா கல்விமணி,
பழங்குடி இருளர்
பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்.
வே.அ.இரமேசுநாதன்,
பொதுச் செயலாளர்,
நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புதுடெல்லி
ஹென்றி டிபேன்,
மக்கள் கண்காணிப்பகம்,
மதுரை
எஸ்.ஜி.ரமேஷ்பாபு,
மாவட்ட செயற்குழு
உறுப்பினர், சி.பி.ஐ.(எம்).
வழக்கறிஞர்
இல.திருமேனி,
மாவட்ட துணைச்
செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடலூர்.
கே.எம்.ஷேக்தாவூது,
மாவட்டத் தலைவர்,
மனித நேய மக்கள் கட்சி, கடலூர்.
வெண்புறா குமார்,
கடலூர் அனைத்து
பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு.
இரா.திருநாவுக்கரசு, நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கடலூர்.
தெ.சிவக்குமார், திராவிடர் கழகம், கடலூர்.
ம.இளங்கோ, தலைமை செயற்குழு உறுப்பினர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி.
தேவநேயன்,
மனித உரிமைச்
செயற்பாட்டாளர், சென்னை.
இரா.முருகப்பன்,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.
பி.வி.ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்.
சு.காளிதாஸ், நுகர்வோர் மற்றும் மனித உரிமை கழகம், புதுச்சேரி.
தொடர்புக்கு
:
இரா.முருகப்பன்
– 9894207407.
இரா.பாபு
- 9750308010.
No comments:
Post a Comment