தலைமுறை
-----------------------
அரை மூட்டை
நெல் சுமந்து
ஆற்றைக் கடந்து
சென்று
அரைத்து வருவாளாம்
ஆத்தா
நான்கு பேர்
நடும் சேற்றை
ஒத்தையாய்
நின்று
நட்டு படிப்பாள்
அம்மா
வெட்டிய விறகிலிருந்தே
நார் உரித்து
கட்டி நிறுத்தி
தலையில் ஏந்தி
வந்து
கொல்லையில்
போடுவாள் அத்தை
ஊற ஊற காத்திருந்து
நீர் இறைத்து
சோறாக்கி வைத்துவிட்டு
வேலைக்கும்
போய்விடுவாள் சித்தி
இரட்டைக் குடம்
சுமந்து
தண்ணீர் எடுத்து
வருவேன் நான்
குடத்தில்
நீர் நிறையும்
நேரம் வரைக்
கூட
காத்திருக்க
முடியாமல்
தவிக்கின்றார்கள்
தங்கச்சிகள்
வீட்டிற்குள்ளிருக்கும்
தண்ணீர்க்
குழாய்களை
திறந்து ஓடவிட்டு
மறந்து போய்விடுகிறார்கள்
பிள்ளைகள்
தலைமுறை மாற்றம்
நல்ல முன்னேற்றம்.
- இளம்பிறை கவிதை. Ilampirai
ஓவியம் : ராம்குமார்
நெமதி
விகடன் தீபாவளி மலர் 2020.
No comments:
Post a Comment