Saturday, January 6, 2007

பட்டினிச் சாவில் பழங்குடியினர்

17.12.2005 இரவு. விழுப்புரம் மாவட்டம் கொரலூர் கிராம நாட்டாமை ஜெயபால் தலைமையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் ஊர்க் கூட்டம் கூட்டியுள்ளனர். அதில், இருளர்களுக்கு இனி யாரும் வேலை கொடுக்கக் கூடாது. அப்படி கொடுப்பவர்கள் 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இருளர்களின் ஆடு, மாடுகள் சாதி இந்துக்களின் இடங்களில் மேயக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு போட்டுள்ளனர். அதற்குப் பிறகு நான்கு நாட்களும், அங்கு வாழ்ந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 105 இருளர்களும், கஞ்சி காய்ச்சி குடிக்கக்கூட வழியில்லாமல் பட்டினியாகவே இருந்துள்ளனர். இன்னும் 4 நாட்கள் இந்நிலை நீடித்திருந்தால், சாதி இந்துக்களின் ஊர்க்கட்டுப்பாட்டால் பழங்குடி இருளர்களும், குழந்தைகளும் பட்டினியால் இறந்திருப்பர்.

மேலே குறிப்பிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் செய்தி, "பழங்குடி இருளர் சங்க'த்திற்கு நான்கு நாட்கள் கழிந்து தெரிந்தவுடன் உண்மையைக் கண்டறிந்து, பட்டினிச் சாவைத் தடுத்து நிறுத்த அப்பகுதிக்கு விரைந்தோம். சங்கத்தின் முன் முயற்சியாக, இருவரிடம் 4 மூட்டைகள் அரிசி நன்கொடையாகப் பெற்று, கொரலூர் இருளர்களுக்கு அளிக்கப்பட்டது. அரிசி நன்கொடையாகக் கிடைத்த இரவு 12 மணிக்கு, அதைக் கஞ்சி வைத்து சாப்பிட்டனர்.

கொரலூர் கிராமம் கஞ்சனூர் அருகே உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (படையாச்சி) என்பவன் மகள் தனலட்சுமியின் ஆடுகள், பழங்குடி இருளரான ரமேஷ் என்பவன் வாழை, பூந்தோட்டங்களில் மேய்ந்துள்ளது. இதைப் பார்த்த ரமேஷ், ஒரு சிறு கல் எடுத்து வீசி ஆடுகளைத் துரத்தியுள்ளார். அப்போது தனலட்சுமி, ரமேஷைப் பார்த்து, “தொடப்பக் கட்டையால அடிப்பண்டா... சாண்டக் குடிச்சவனே... ஆட்ட ஏண்டா கல்லால அடிச்ச'' என்று திட்டியுள்ளார். அதற்கு ரமேஷ், "தோட்டத்தில் ஆடு மேய்ந்தது. அடிக்கவில்லை துரத்தினேன்'' என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட தனலட்சுமி, "இருளப் பையனுக்கு தோட்டம் ஒண்ணு வாழுதா' எனக் கேவலமாகத் திட்டியுள்ளார். பிறகு ஊருக்குள் சென்று, அவருடைய தாயார் மற்றும் அக்காவையும் கூட்டிக் கொண்டு இருளர் குடியிருப்பிற்குச் சென்று ரமேஷையும் மற்ற இருளர்களையும் தரக்குறைவாகவும், அவமானப்படுத்தியும் பேசியுள்ளார். அன்று மாலையே தனலட்சுமியின் தம்பி ராஜேந்திரன், ரமேஷை கடுமையாகத் தாக்கியுள்ளார். தடுத்த ரமேஷின் மனைவியையும் பிடித்து இழுத்து கீழே தள்ளி அசிங்கமாகத் திட்டியுள்ளார்.

மறுநாள் 4.12.2005 அன்று, இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில், பழங்குடி இருளர் சங்கப் பொறுப்பாளருடன் சென்று ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். அதற்கு ரசீது கேட்டதற்கு, அங்கிருந்த தலைமைக் காவலர், "ரசீது வாங்கி வழிச்சி நக்கப் போறீயா'' என்று கேட்டுள்ளார். அன்று மாலை காவல் நிலையம் வந்த ஆய்வாளர் உஸ்மான் அலிகான், சாதி இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு, புகாரைத் திரும்பப் பெறும்படி இருளர்களை மிரட்டியுள்ளார். இருளர்கள் இதற்கு உடன்படாத நிலையில், காவல் ஆய்வாளர் கடும் கோபத்துடன் எழுந்து சென்று, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிறுவாலை . நாகராஜன் என்பவரை, சட்டையைப் பிடித்து இழுத்து, "உட்காருடா' என்று தள்ளியுள்ளார்.

பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வந்தவர்களையே கைதி போல காவல் நிலையத்தில் உட்கார வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி புகாரை திரும்பப் பெற மறுத்து நியாயம் கேட்டதற்காக, 3 இருளர் பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், ஆடு மேய்ந்ததால் வாய்த்தகராறு நடந்த இடத்திலேயே இல்லாத ராஜவேல் என்பவரையும் மற்ற இரு ஆண்களையும் சேர்த்து மூன்று பேரையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ராஜவேல், இருளர் சங்கத்தின் முகாம் தலைவர். பொறுப்புடனும், திறமையாகவும் பணியாற்றுபவர். இதன் காரணமாகவே போலிசார் இவரையும் கைது செய்துள்ளனர்.

இருளர்கள் மீது போடப்பட்ட பொய்ப் புகார், போலிசாரால் இரவு முழுவதும் பலமுறை எழுதி எழுதி கிழிக்கப்பட்டு, கடைசியாகத் தயாரிக்கப்பட்டதாகும். தனலட்சுமியை குற்றவாளியாக சேர்க்காத போலிசார், சாதி இந்துக்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குற்றமிழைக்காத 6 இருளர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, 3 பேரையும் கைதும் செய்தனர். முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அதிநவீன வசதிகளுடனும், அதிகளவு ஊதியத்துடனும் இயங்கும் தமிழக காவல் துறையின் லட்சணம் இப்படி சந்தி சிரிக்கிறது!

கொரலூரில் ஊர்க்கட்டுப்பாடு இப்படி என்றால், கொத்தமங்கலத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம். இதுவும் ஆடு சம்பந்தப்பட்டதுதான். திண்டிவனம் வட்டம் செ. கொத்தமங்கலம் கிராமத்தில், இருளர் குடும்பங்கள் மொத்தம் 14 தான். வன்னியர்கள் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2.12.2005 அன்று இருளரான அமாவாசை என்பவன் ஆடுகள், அந்த ஊர் நாட்டாமையான லட்சுமணக் (கவுண்டன்) கரும்பு நிலத்தில் மேய்ந்தது என்பதற்காக, அவருடைய மகன் சுந்தர்ராஜன் (கவுண்டர்), ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அமாவாசையின் மகன் பூங்காவனம் என்கிற 18 வயது பையனை, கடப்பாரையால் அடித்துத் தள்ளியுள்ளார். இதைத் தடுத்த பூங்காவனத்தின் தாயார் பச்சையம்மாவை மாராப்பு சேலை, ஜாக்கெட்டை கிழித்து அவமானப்படுத்தி உள்ளார். மேலும், ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைப் பிடித்து ஓங்கி தரையில் அடித்துக் கொன்றுள்ளார். இது தொடர்பாக பெரிய தச்சூர் காவல் நிலையத்தில் பச்சையம்மா புகார் கொடுத்தார். போலிசார் வழக்குப் பதிந்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சுந்தர்ராஜன் (கவுண்டரை) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து 4.12.2005 அன்று முதல் இக்கிராமத்திலும் இருளர்கள் ஊர்ப்புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இருளர்கள் யாருக்கும் வேலை கொடுக்கக் கூடாது என சாதி இந்துக்கள் முடிவெடுத்ததுடன், அங்குள்ள கடைக்காரர்களிடம், "இருளர்களுக்குப் பொருள் கொடுக்கக் கூடாது என்றும், மீறி கொடுத்தால் ஊர்க்கட்டுமானம் போட்டு சாதியைவிட்டு நீக்கிவிடுவோம்' எனக் கூறி கடைக்காரர்களை பொருள் தர விடாமல் தடுத்தனர். ஆனால், வன்னியர்களின் இந்த மிரட்டலை மீறி சிறீராம் (செட்டியார்) என்பவர், தன்னுடைய கடையில் தற்போது பொருள் கொடுத்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை கேட்டும், இருளர்களுக்குப் பாதுகாப்பு கேட்டும், கொத்தமங்கலம் முகாம் அமைப்பாளர் சங்கர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டிவனம் சார்பாட்சியருக்கு 21.12.05 அன்று புகார் செய்தார்.

இந்நிலையில், 23.12.2005 அன்று சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த சுந்தர்ராஜன் (கவுண்டர்), தன் உறவினர்களுடன் பழங்குடி இருளர் குடியிருப்பிற்குச் சென்று, இருளர்களை மிகக் கேவலமாகப் பேசி மிரட்டியுள்ளார். மறுநாள் 24.12.2005 அன்று காலை 6 மணியளவில் சாதி இந்துக்கள், இருளரான ஆறுமுகம், அவர் மனைவி மங்கலட்சுமி என்பவரைத் தூண்டிவிட்டு, கூடவே சிவகொழுந்து (கவுண்டர்), அவர் மனைவி, மகள் அனைவரும் இருளர் குடியிருப்பிற்குச் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பிய சங்கன் அக்கா காசியம்மாவின் கையை, காலைப் பிடித்துக்கொண்டு கடுமையாக அடித்துள்ளனர். கீழே விழுந்த காசியம்மாளின் மார்பிலும், வயிற்றிலும் சிவகொழுந்தும், ஆறுமுகம் ஏறி மிதித்துள்ளனர்.

இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசியம்மா, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொஞ்ச நேரத்தில் அதே மருத்துவமனைக்கு ஆறுமுகம் மட்டும் வந்து சேர்கிறார். காவல் நிலையம் சென்று, சங்கர், காசியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது சாதி இந்துக்கள் தூண்டுதலின் பேரில் பொய்ப்புகார் கொடுத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து காசியம்மாளும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலிசார், வன்னியர் தூண்டுதலின் காரணமாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சங்கரையும் அவரது தந்தையையும் அவசர அவசரமாகக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். "சங்கம் வச்சிகிட்டு எங்களப் பத்தி நோட்டீசா போடுற' என்று கூறி காவல் நிலையத்தில் சங்கரை, காவல் ஆய்வாளர் குமார் கடுமையாக அடித்துள்ளார்.

உண்மையான புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், பொய்ப்புகாரில் பாதிக்கப்பட்டவர்களையே காவல் துறை கைது செய்கிறது. சாதி இந்துக்களும் போலிசாரும் (அரசு நிர்வாகம்) சேர்ந்து திட்டமிட்டுச் செய்யும் சதி இது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். காவல் துறை சாதியமயமாகி இருக்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

இரண்டு கிராமங்களிலும், ஜாதிக்கட்டுப்பாடு ஊர்ப்புறக்கணிப்பு என்ற பெயரில் இருளர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானது குறித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் அசையாமலிருக்கிறார்கள். இருளர்களுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கு அடிவருடியாக இருந்து அடிமை சேவகம் புரியும் அதிகாரிகளுக்கும் இழப்பதற்கு நிறைய உள்ளன. இது தேர்தல் நெருங்கும் நேரம். இருளர்கள் "தேர்தல் புறக்கணிப்பு' என்கிற ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள். இதற்கு இந்த நாட்டு "ஜனநாயகம்' பதில் சொல்லியாக வேண்டும்.

சொந்த ஊரில் இருளர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகம் செத்துப் போனால் தான் என்ன?

(நன்றி: தலித்முரசு ஜனவரி 2006)

கொத்தடிமைத் தமிழர்கள்

தமிழகத்தின் சில கிராமப்பகுதிகளில், தீபாவளியன்று ஆடு வெட்டுவார்கள். தீபாவளியன்று ஆடு கிடைக்காமல் போய்விடும் என்பதால், அதற்கு முன்பிருந்தே நிறைய ஆடுகளைப் பிடித்தும், வாங்கியும் அடைத்து வைப்பார்கள். இந்த ஆடுகளைப் போன்றுதான் தற்பொழுது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பழங்குடி இருளர்கள், கரும்பு மேஸ்திரிகளால் கடத்திச் செல்லப்பட்டு, மறைவான இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர். தேவையான ஆட்கள் கிடைத்ததும், நல்ல விலைக்கு கொத்தடிமைகளாக லாரிகளில் ஆந்திராவிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 36 வகைப் பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் 8 சதவிகிதம் உள்ள பழங்குடியினர், தமிழக மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் 0.52% ஆகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2.16%ஆகவும் உள்ள இருளர்கள், இன்று கொத்தடிமைகளாக ஆந்திராவிற்குக் கடத்தப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் ரெட்டியார் போன்றோர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிகப்பெரும் ஆதிக்க சக்திகளாக வலம் வருகிறார்கள். பழங்குடியினர் மட்டும் அடிமைகளாகவும், கேட்பதற்கு நாதியற்ற நிலையில், அச்சத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் கீழ் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், கரும்பு மேஸ்திரி. இருளர்களை நீண்ட நாட்களாக ஆந்திராவிற்கு அனுப்பும் இவர், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் மனைவி, தி.மு.க.வின் அருங்குண ஒன்றியத்தின் கவுன்சிலராக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகளை மிரட்டியும், பணங்கொடுத்தும் ஆதிக்கம், அதிகாரம் செய்கிறார். அருங்குணம் அருகில் உள்ள பாரதி நகல், நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 46 குடும்பத்திற்கு காளிமுத்து முன்பணமாக 2,75,480 ரூபாய் கொடுத்து அனைவரிடமும் பத்திரம் எழுதி வாங்கி உள்ளார்; 4 குடும்பத்தினரிடமிருந்து வீட்டுமனைப் பட்டாவையும் பிடுங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம், இன்னும் கடன் முடியவில்லை என்று மிரட்டியே அவர்களைப் பிடித்து வைத்து தொடர்ந்து அனுப்பி வருகிறார்.

இந்த ஆண்டு கரும்பு வெட்ட ஆந்திராவுக்கு ஆட்களை அனுப்பும் காலம் நெருங்கிவிட்டதால், பல பகுதிகளில் இருந்து ஆட்களைப் பிடித்துக் கொண்டுவந்து, காளிமுத்து தன் வீட்டில் அடைத்து வைத்துக் கொள்வார். செல்வம் என்ற இருளர், ஆந்திரா போக மறுத்துள்ளார். இதனால், தேவராசனை 15.11.05 அன்று காளிமுத்து கடத்திக் கொண்டுபோய் அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவரை மீட்கச் சென்ற செல்வம், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கி, சித்திரவதை செய்த காளிமுத்து, ஓர் அறையில் அடைத்து வைத்துப் பூட்டிவிட்டார். அங்கு ஏற்கனவே, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 11 இருளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் அன்று இரவு புகார் தரப்பட்டது. அன்றிரவே பழங்குடியினரை அடையாளம் காட்ட கூடவே அழைத்துச் சென்று, காளிமுத்துவை போலிசார் கைது செய்தனர். ஆனால், சற்று நேரத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதி தி.மு.க. பிரமுகர்கள் காளித்துவை அழைத்துச் சென்றுவிட்டனர். புகார் கொடுக்கச் சென்ற இருளர்கள், காவல் நிலயத்திலேயே தி.மு.க.வினரால் புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, குப்பு என்பவன் வீட்டை காளிமுத்து தீ வைத்து எரித்துள்ளார். இதனால் பயந்துபோன பாரதி நகர் பழங்குடியினர் பலர், தமது ஊரைவிட்டு வெளியூரில் போய் தங்கியுள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மேற்கொண்ட முயற்சிக்குப் பிறகு, காளிமுத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பலராமன், மருத்துவமனை வார்டில் பொறுப்பில் இருந்த ஆண் செவிலியர் கண்ணன் என்பவர் மூலம், காளிமுத்தால் பாதிக்கப்பட்ட செல்வம், பாலகிருஷ்ணன் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகப் படுக்கையில் இருக்கும்போதே, "காணவில்லை' எனப் பதிவேட்டில் எழுதி, போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர்.

இதேபோன்று பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்கிற கரும்பு மேஸ்திரியிடம், பாக்கி பணம் வாங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இருளர்களான கதிர்வேலு, அவர் மனைவி குப்பு இருவரும் சென்றுள்ளனர். கலியமூர்த்தி அவர்களுக்குப் பணம் தராமல், அவர்களை இழுத்துக் கொண்டு போய் எபிட்டவெளி என்ற கிராமத்தில் மறைத்து வைத்துள்ளார். 10 நாட்களாகியும் அவர்களை கலியமூர்த்தி விடவில்லை. காணாமல் போன தன் அண்ணன், அண்ணியைத் தேடி கிராமத்திற்குச் சென்ற முருகன் மற்றும் ராமு ஆகிய இருவரையும் கலியமூர்த்தியும், அவர் தம்பியும் கடுமையாக அடித்து, சித்திரவதை செய்துள்ளனர். முருகன் செங்கல் சூளையில் வேலை செய்து, வாங்கி வைத்திருந்த 10,045 ரூபாயையும் பிடுங்கிக் கொண்டு துரத்தி அடித்து உள்ளனர். இது தொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரும்பு வெட்டத் தொடங்குகின்ற இந்த மாதத்தில் டன் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 100 ரூபாயும், இரண்டு மாதம் கழித்து 200 ரூபாய் எனவும் உயர்த்துவர். ஆனால், மேஸ்திரிகள் இருளர்களுக்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கணக்கு எழுதுவார்கள். அதையும் கடனுக்கு வட்டி, போக்குவரத்துச் செலவு என கணக்கு எழுதி ஏமாற்றுவார்கள். பிறந்த கைக்குழந்தை இருந்தாலும் குடும்பத்துடன் சென்று, 8 மாதம் வேலை செய்தும் வெறும் கையுடன் திரும்புவார்கள் இருளர்கள். இது குறித்துப் பல்வேறு புகார்கள் மேலிடத்திற்குக் கொடுக்கப்பட்டும் எந்தப் பயனுமில்லை.

இதைவிட, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையை அனுபவித்து, கொத்தடிமையாக உள்ளனர் விழுப்புரம் மாவட்ட இருளர்கள். 23.11.05 அன்று இரவு 12 மணி அளவில், கோலியனூர் கரும்பு மேஸ்திரி பாலு என்பவருடைய அடியாட்கள் 8 பேர், ஒரு மினி லாரியில் இளங்காடு இருளர் குடியிருப்பிற்குச் சென்று, ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி, கண்ணன், சுப்புராயன், ஜெயராமன் ஆகியோரை குண்டுக்கட்டாக வண்டியில் தூக்கிப் போட்டனர். இத்தகவலை ஊருக்குள் சொல்ல ஓடிய ஜெயராமன் மனைவி லட்சுமியையும் பிடித்து இழுத்து வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, கோலியனூர் சென்றனர். அவர்களை பாலு மேஸ்திரி வீட்டில் கொண்டுபோய் அடைத்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட இருளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்பு கண்ணன், சுப்புராயன் இருவரையும் பாலு வெளியில் அனுப்பியுள்ளார். தன்னைக் கடத்திக் கொண்டு போன பாலு மீது நடவடிக்கை எடுத்து, அவரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றவர்களையும் விடுதலை செய்யும்படி வளவனார் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். ஆனால், போலிசார் பாலு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்ணனிடம் சமாதானமாகப் போகும்படி கூறி உள்ளனர். இதே பாலு மேஸ்திரி மூலம், புதகரிளத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி, அவர் மனைவி அஞ்சலை, மகன் முருகன், மகள் சுதா ஆகியோர் ஆந்திராவுக்கு நான்கு ஆண்டுகளாக கரும்பு வெட்டச் சென்று வந்தனர். ஆளுக்கு நூறு ரூபாய் என மொத்தம் 400 ரூபாய் தந்து கரும்பு வெட்ட அனுப்பி உள்ளார் பாலு மேஸ்திரி.

வேலை செய்த இடத்தில் கரும்பு உரிமையாளர் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அய்ந்து ரூபாயும், ஒரு லிட்டர் அரிசியும் தந்துள்ளனர். எட்டு மாதம் வேலை செய்யும் இருளர்களுக்கு மேஸ்திரி பாலு வேறு எந்தப் பணம் தந்ததில்லை. அதனால் கலியமூர்த்தி 5 ஆண்டுகள் கரும்பு வெட்ட ஆந்திரா போக மறுத்துள்ளார். அதனால் பாலு சவுக்குக் கட்டையால் கலியமூர்த்தியை கடுமையாக அடித்துள்ளார். அதன் காரணமாக கலியமூர்த்தி உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த வேலையும் செய்ய முடியாமல் இன்றுவரை அவதிப்படுகிறார்.

அதே ஊரில் இருந்தால் பாலுவால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாவோம் என்று பயந்த கலியமூர்த்தி, குடும்பத்துடன் சாலையாம்பாளையம் கிராமத்திற்குச் சென்று விட்டார். நான்கு ஆண்டுகளாக பாலுவால் எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர். பாலுவால் பாதிக்கப்பட்ட கண்ணன் காவல் நிலையத்தில் புகார் தந்த அன்று, சாலையாம்பாளையம் சென்று கலியமூர்த்தி குடும்பத்தினரிடம் கணக்கு பார்க்க வேண்டும், ஆந்திரா போக வேண்டும் என்று பாலு ஆட்கள் மிரட்டியுள்ளனர். கண்ணன், கலியமூர்த்தி மகன் முருகன் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டு, புகார் தந்துள்ளனர்.

மேற்கூறிய அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்க் கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976'இன்படி, மாவட்ட ஆட்சியர்தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும். இவர்களும் எதுவும் செய்யவில்லை. குற்றவியல் வழக்காக காவல் துறையும் எதுவும் செய்யவில்லை. ஒரு நபரோ அல்லது அவர் முன்னோரோ பணமோ அல்லது விவசாயப் பொருட்களோ ஒருவரிடம் இருந்து பெற்றதற்காக, அந்த நபரை தனக்காக உழைக்கும்படி சொல்வதும், ஏதேனும் வேலை செய்வதற்கு முன்பணம் எனக் கொடுப்பதோ கொத்தடிமை முறையாகும். கலியமூர்த்தி, காளிமுத்து, பாலு போன்ற கரும்பு மேஸ்திரிகளிடம் மட்டும் இல்லாமல், செங்கல் சூளைகளிலும் இருளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

கொத்தடிமையாக இருந்தவர்களிடம், முன்பணமாகத் தரப்பட்ட தொகையை, தந்தவர் கேட்க முடியாது. ஆனால், அந்த முன்பணம் என்பதைச் சொல்லிச் சொல்லியே செங்கல், கரும்பு மேஸ்திரிகளால் இருளர்கள் அடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். இருக்கின்ற வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் இருளர்களுக்கு மறுவாழ்வு எப்போது?


(நன்றி: தலித்முரசு டிசம்பர் 2005)



இருப்பிடங்களைப் பறிக்கும் இந்துக்கள்

ஓமந்தூர் கிராமம் திண்டிவனத்தில் இருந்து புதுவை செல்லும் திசையில், ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தினசரி கூலி வேலைக்குச் சென்றுதான் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதே கிராமத்தில் உள்ள வன்னியர் இனத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டியும், இடையர் இனத்தைச் சேர்ந்த குமாரும், அவ்வப்போது 50, 100 என இருளர்களுக்கு முன் பணம் கொடுத்து அவர்களைக் கடனாளியாக்கி, அடிமைகளைப் போன்று வைத்துள்ளனர்.

குமாரிடம் பணம் பெற்றவர்ககள் மண்ணாங்கட்டியிடமோ, மண்ணாங்கட்டியிடம் வேலை செய்பவர்கள் குமாரிடமோ வேலைக்குப் போக முடியாது. மீறிப் போனால் அடி, உதை மட்டுமில்லாமல் தொகுப்பு வீடுகளையும் இழுத்துப் பூட்டி விடுவார்கள். தென் சுருளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற இருளர், ஓமந்தூர் கிராமத்தில் தங்கி, மண்ணாங்கட்டியிடம் வேலை செய்துள்ளார். அவரிடம் வேலை இல்லாத ஒரு நாள் குமாரிடம் வேலைக்குச் சென்றுள்ளார். இதனையறிந்த மண்ணாங்கட்டி, ஆறுமுகம் வீட்டிற்குச் சென்று, தனக்கு வரவேண்டிய ரூபாயைக் கேட்டு, சவுக்குக் கட்டையால் ஆறுமுகத்தை அடித்துள்ளார். அதைத் தடுத்த அவர் தம்பி பாலுவையும் அடித்துள்ளார். இதுகுறித்து, சம்பவம் நடந்த 19.9.2005 அன்றே கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல, மல்லிகா - தேவராஜ் குடும்பத்தினருக்கு குமார் அவ்வப்போது ரூ.100, 200 என முன் பணமாகத் தந்து ரூ.4000 வரை கொடுத்துள்ளார். இத்தொகையை உடனடியாகக் கொடுக்கும்படி கேட்டு, மிரட்டி, மல்லிகா குடும்பத்தினரை வெளியேற்றி தொகுப்பு வீட்டைப் பூட்டி விட்டார். பின்பு, வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டும் அல்லது பணத்திற்கு 10 வட்டி போட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆறு மாதம் கழித்து வீட்டைத் திறந்து விட்டுள்ளார். தொகுப்பு வீடு ஒன்றில் 3 ஆண், 3 பெண் குழந்தைகளுடன் குடியிருந்த குப்பன் என்ற இருளரை, குடும்பத்துடன் அடித்துத் துரத்திவிட்டு, அவருடைய தொகுப்பு வீட்டில் இன்றுவரை குமார் குடியிருந்து வருகிறார்.


மல்லிகாவின் பெரியப்பா மகள் பவுனு, அவர் கணவர் காத்தவராயன் ஆகியோர் மல்லிகாவின் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார்கள். காத்தவராயன் குமாரிடம் வேலை பார்த்த வகையில் ரூ. 750 கடன்பட்டுள்ளார். ஒரு நாள் காத்தவராயன் மண்ணாங்கட்டியிடம் வேலைக்குச் சென்றுள்ளார். இதனையறிந்த குமார், அவர் மனைவி இந்திரா, மகன்கள் சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் மல்லிகா வீட்டிற்குச் சென்று, மல்லிகா, பவுனு, காத்தவராயன் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளனர். பவுனுவை அடித்துள்ளார்கள். மல்லிகா தரவேண்டிய ரூ. 4000 பணத்தையும் சேர்த்து ரூ. 10 வட்டி போட்டு உடனே கொடுங்கள் எனக் கேட்டு, மல்லிகாவின் வீட்டை மீண்டும் பூட்டி உள்ளார்கள். இச்சம்பவம் நடந்த 1.10.2005 அன்று காவல் நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், குமார், மண்ணாங்கட்டி மீது நடவடிக்கை எடுத்து, இருளர்களின் தொகுப்பு வீடுகளை சாதி இந்துக்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 3.10.2005 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு குமார், மண்ணாங்கட்டி இருவரும் கைது செய்யப்பட்டு, மல்லிகா வீட்டை போலிசார் திறந்து விட்டனர். மொத்தம் உள்ள 24 தொகுப்பு வீடுகளில், 12 வீடுகள் குமார் உள்ளிட்ட சாதி இந்துக்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதில் குமார் தன் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளை, அதே ஊரைச் சேர்ந்த சாதி இந்துக்களுக்கு விற்றுள்ளார். கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள மண்ணாங்கட்டி, குமார் இருவரும் மீண்டும் இருளர் குடியிருப்பிலேயே இருந்து வருகிறார்கள்.

தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட வீடு, மனைகளை அவர்கள் விற்கவும் முடியாது; யாரும் வாங்கவும் முடியாது. பழங்குடியினர் மற்றும் தலித் நிலவுரிமை கோரிக்கை எழுந்து வரும் இந்நேரத்தில் அரசு அளித்த தொகுப்பு வீடு, மனைகள் இருக்குமா? சாதி இந்துக்களால் அது பறிபோகுமா?

(நன்றி: தலித்முரசு நவம்பர் 2005)

சாதி இந்து ஏவல் துறை

ஞானவேல் 9 ஆம் வகுப்பு மாணவன். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். தலித் மாணவன். ஆசிரியர்கள் யாரும் இவனை வகுப்பறைக்குள் உட்கார வைக்காமல், படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்காமல், பள்ளிக்கு எடுபிடி வேலை செய்வதற்குப் பயன்படுத்தி உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த மாலா, அப்பள்ளியில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். பொறுப்பாளர் மாலா, மாணவர்களுக்கு தினம் சாப்பாடு போடுகிறாரோ இல்லையோ, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தினம் தன்னுடைய வீட்டில் இருந்து தேநீர் தயாரித்து கொடுக்கத் தவறுவதில்லை. பள்ளியில் படிக்கும் ஞானவேலையும் வீட்டுக்கு அனுப்பி தேநீரை எடுத்துவரச் சொல்வார்கள்.


இதுபோன்றுதான் 24.8.2005 அன்று காலை 11 மணிக்கு ஞானவேலை அழைத்த மாலா, “வீட்ல டீ போட்டு வச்சிருக்கேன், போய் எடுத்துக்கிட்டு வா'' என்று கூறியுள்ளார். வீட்டுக்கு தேநீர் எடுக்கச் சென்றவன், மூடியிருந்த கதவைத் தள்ளி உள்ளே சென்றுள்ளான். அப்போது வீட்டிலிருந்த மாலாவின் கணவர் முனுசாமி, “ஏண்டா பற நாயே எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்குள் நுழைவ'' என்று திட்டிக்கொண்டே இரும்புத்தடி ஒன்றால் ஞானவேலின் நெஞ்சில் வேகமாக குத்தி உள்ளார். அடிதாங்க முடியாமல் தப்பித்தால் போதும் என ஞானவேல் பள்ளியை நோக்கி ஓடி உள்ளான். கூடவே முனுசாமியும் தெருவில் இறங்கி ஞானவேலை துரத்தியுள்ளார்.
அப்போது எதிரில் வந்த சிலரைப் பார்த்து, "பிடிங்க அவனை' என்று முனுசாமி கத்தியுள்ளார். எதிரில் ஓடிவந்த 7 பேர் அவனைப் பிடித்து, தெருவில் இருந்த மின்கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனர். அங்கிருந்த கலியன் (கவுண்டர்) என்பவர், ஞானவேலின் வாயிலும் மார்பிலும் குத்தி, அடித்துள்ளார். இதற்குப் பிறகுதான் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள், ஊர்க்காரர்களிடம் பேசி ஞானவேலின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, "போடா ஸ்கூலுக்கு' என்று அனுப்பி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற பிறகும் விடாமல், அதே ஊரைச் சேர்ந்த வேலு (கவுண்டர்) என்பவர், ஞானவேலுவை ஆசிரியர் கண் எதிரிலேயே இவன்தானா'' என்று கேட்டு செருப்புக்காலுடன் அவனை எட்டி உதைத்து, கல் உடைக்கும் டிரில்லிங் இரும்பு ராடால் முதுகில் கடுமையாக அடித்துள்ளார். இதற்கடுத்த சில நிமிடங்களில் ஞானவேல் நினைவிழந்து விழுந்துள்ளான்.

பக்கத்து ஊரில் கூலிவேலை செய்து கொண்டிருந்த ஞானவேலின் தாயார் ஏகவள்ளி, கேள்விப்பட்டு பதட்டமடைந்து பள்ளிக்குச் சென்றுள்ளார். இதற்குப் பிறகு ஞானவேலின் உறவினர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். வன்னியரான அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர், ஞானவேலின் நிலையைப் பார்த்து காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். மறுநாள் 25 ஆம் தேதி சரியாகி விட்டதென மருத்துவமனையில் இருந்து மாணவன் அனுப்பப்பட்டுள்ளான். அன்று பகல் 12 மணிக்கு நேராக வானூர் காவல் நிலையம் வந்து ஞானவேலும், அவரது தாயார் ஏகவள்ளியும் புகார் அளித்துள்ளனர்.

அப்போது ஞானவேல் வாந்தி எடுத்துள்ளான். வாந்தி முழுவதும் கட்டி கட்டியாக ரத்தமாக வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்த ஏட்டு இதைப் பார்த்துள்ளார். அவர் கூறியபடி உடனடியாக ஞானவேலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கும் அவன் தினம் 2 அல்லது 3 முறை வாந்தி எடுக்கும் போதெல்லாம் ரத்தமாக எடுத்துள்ளான். ஆனால் சரியாகிவிட்டதென, 29 ஆம் தேதி அங்கிருந்தும் அவனை மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையில் 25 ஆம் தேதி புகார் தந்தும், அவன் ரத்த வாந்தி எடுப்பதை காவலர் நேரில் பார்த்த பிறகும் குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குப் போடவில்லை. அதன் பிறகு 26 ஆம் தேதி, உரோசனை தலித் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபால், கேபிள் சாரதி ஆகியோர் காவல் நிலையம் சென்று வலியுறுத்தி ஞானவேல் உறவினர்களுடன் கூடி மறியல் செய்ய முயன்ற பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றமிழைத்த சாதி இந்துக்கள் மீது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3 (1) (x) மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆனால், ஞானவேலை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் எனக் கேட்ட ஞானவேலின் உறவினர்கள் 12 பேர் மீது, “திருடியதாக'' சாதி இந்துக்களிடம் புகார் வாங்கி வைத்துள்ளது காவல் துறை. இது, காவல் துறையா இல்லை, சாதி இந்துக்களின் ஏவல் துறையா?

சென்ற ஆண்டு விக்கிரவாண்டி அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த தலித் மாணவன் சிவராமன், சாதி இந்து ஆசிரியர்களால் தூண்டிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டான். மேலும், இவ்வாண்டு திருவெண்ணெய் நல்லூர் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவி சரண்யா, ஆசிரியை அவமானப்படுத்தியதில் தீக்குளித்து இறந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் மீது தொடரும் இந்த வன்கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்காது. ஏனெனில், மாணவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதால், ஜெயலலிதா அரசு இதில் உடனடி கவனம் செலுத்தாது.

(நன்றி: தலித்முரசு செப்டம்பர் 2005)

செங்கள் சூளையில் வேகும் இருளர்கள் வாழ்க்கை

குறைந்து வரும் மக்கள் தொகை, அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வது, கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்குடி இனங்களில் மிகவும் பின்தங்கிய பழங்குடிகள் என்று சில இனங்களை அண்மையில் மத்திய அரசு வரையறுத்துள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இருளர் இனம் அடங்கும். இந்த இருளர்கள் ஊருக்கு ஒன்று, இரண்டு அல்லது மிகச் சிறிய எண்ணிக்கையில் கிராமங்களில் ஏரி, குளக்கரைககளில் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.

பாம்பு, எலி, முயல் பிடிப்பது, தோப்புகளில் காவல் காப்பது, கூலி வேலை செய்வது போன்றவைதான் இவர்களுடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. இன்று இந்த வேலைகளுக்கும் நெருக்கடி வந்த நிலைகளில் பெரும் பாலான இருளர்கள் குடும்பத்துடன் சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு செங்கற்சூளைகளில் செங்கல் அறுக்கின்ற வேலைக்குச் சென்று விடுகிறார்கள். கிராமங்களில் ஒருசில குடும்பங்களே வாழ்வதால், மிகவும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள போரூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளரான 40 வயதாகும் முருகன் என்பவர், தன் மனைவி பொன்னி, மகன்கள் மணிகண்டன் (12), மணிவேல் (7), சக்திவேல் (3), சூர்யா (2) மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் திருச்சி அருகே அன்பில் கிராமத்திலுள்ள காவேரி செங்கற் சூளையில் குடும்பத்தோடு போய் தங்கியிருந்து செங்கல் அறுத்து வந்தானர். முருகன், அவர் மனைவி, அவருடைய 12 வயது மகன் ­ருவரும் சேர்ந்து ஒன்றரை ஜதை. இரண்டு பேர் சேர்ந்த 1 ஜதை, ஒரு நாளைக்கு ஆயிரம் செங்கல் அறுக்க வேண்டும். முருகன் தன்னுடைய உறவினர்களில் இருந்து 10 ஜதைகளுக்கு முன் பணம் வாங்கிக் கொடுத்து அவர்கள் எல்லாம் சேர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல் அந்த செங்கற்சூளையில் வேலை செய்து வந்தார்கள். இந்த இருளர்கள் இல்லாமல் வேறு 10 ஜதைகளும் அங்கே வேலை செய்து வந்தனர்.

இவர்களுடைய மேஸ்திரி சிவக்குமார் என்பவர், சென்னைக்கு அருகில் வேறுசில செங்கற்சூளைக்கும் மேஸ்திரியாக இருப்பதால், இங்கு எப்போதாவது ஒருமுறைதான் வருவார். இவருடைய மகன் முருகன் என்பவர்தான் இந்த செங்கற் சூளைக்கு வந்து, இவர்களை அவ்வப்போது மேற்பார்வை செய்வார். இவர் இல்லாத நேரத்தில் அதே சூளையில் செங்கல் அறுத்துவரும் கோவிந்தன், சங்கர், கண்ணன் ஆகியோர் மேற்கண்ட இருளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து சென்று கண்காணித்து மிரட்டுவார்கள். இவர்கள் ­ருவரும் கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள்.சம்பளம் என்று கூறி, இங்கு வந்து 180 ரூபாய் மட்டுமே தந்துள்ளார்கள். அதுவும் தினமும் அறுக்கின்ற 1000 செங்கற்களுக்கு 950 மட்டுமே அறுத்ததாக கணக்கு வைத்துக் கொண்டுள்ளார்கள். மீதி 50 செங்கல்லை அந்த மேஸ்திரிகள் ­ருவரும் தங்கள் கணக்கில் வைத்துக் கொண்டனர். இவர்கள் தினம் அறுக்கின்ற செங்கலை கணக்குக் காட்டுவதில்லை. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை சம்பளம் தருவார்கள். அப்போது மேஸ்திரியின் கையாளாக இருக்கின்ற அந்த மூவரும் தருகின்ற சம்பளம்தான் இவர்களுக்கு.

சம்பளம் வாங்குகின்ற இந்த செவ்வாய் கிழமை மட்டும்தான் இவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியில் சென்று சமையலுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவைகளை வாங்கி வரமுடியும். அப்போதும் அந்த மூவரும் இவர்களைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அதுவும் சரியாக 2 மணி நேரம் மட்டுமே. உடனே சூளைக்குத் திரும்ப வேண்டும். மற்ற நாட்களில் என்ன தேவை என்றாலும் இவர்களால் செங்கல் சூளையைவிட்டு வெளியே செல்ல முடியாது. மீண்டும் அடுத்த செவ்வாய் கிழமைதான். இப்படித்தான் பெரும்பாலான இருளர்களின் வாழ்க்கை செங்கல் சூளையில் வேகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜேந்திரன் (ஒன்றரை ஜதை), ஏப்ரல் மாதம் குமார் (இரண்டரை ஜதை) ஆகிய இருவரும் உடல் நிலை சரியில்லாத தங்கள் மனைவிகளை கவனிக்க செங்கல் சூளையைவிட்டுச் சென்றுவிட்டார்கள். செங்கல் சூளைக்கு வந்த மேஸ்திரி சிவக்குமார் முருகனை அழைத்து, ஓடிப்போன ஜதைக்கெல்லாம் நீதான் பொறுப்பு என்று கடுமையாக மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து, ஒரு வாரத்திற்குள் எல்லோரையும் கூட்டி வருகிறேன் என்று முருகன் கூறியுள்ளார். இதற்கு அடுத்து வந்த செவ்வாய் கிழமை (21.6.2005) மாலை அந்த வார சம்பளம் கொடுக்கப்பட்டது. முருகனின் அண்ணி ரஞ்சிதம் குடும்பத்தினர் (இரண்டு ஜதை) ஆரம்பத்தில் முன்பணம் வாங்கிக் கொண்டு வராமலிருக்கின்ற மணியை அழைத்து வருவதாக கூறிச் சென்றனர். இதனையறிந்த கோவிந்தன், சங்கர், கண்ணன் மூவரும் முருகனை அன்பில் கிராமத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி, கட்டாயப்படுத்தி பிராந்தி குடிக்க வைத்துள்ளனர்.

அவர்களும் குடித்துவிட்டு, “ஏற்கனவே 4 ஜதை போயிடுச்சி; இப்போ உன் அண்ணியும் இரண்டு ஜதையோடு போயிட்டா. எல்லாம் நீதான் திட்டமிட்டு வேறு சேம்பர்ல அனுப்பிட்ட. எங்க இருக்காங்க சொல்லு'' என்று அடித்துள்ளனர். செங்கல் சூளைக்கு இழுத்து வந்தும் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனை தடுத்த முருகனின் மனைவி பொன்னியையும் மேற்படி மூவரும் அடித்துள்ளனர். இதைத் தடுத்த அவர் மனைவி பொன்னியின் சேலையை கண்ணன் உருவியுள்ளார். கத்திய பொன்னியை "ஏண்டி கத்துற' எனக் கூறிக் கொண்டே கோவிந்தன் பெரிய தடியால் அடித்ததில் பொன்னி மயக்கமடைந்திருக்கிறார்.

அதன் பிறகு, மூவரும் மீண்டும் குடித்துவிட்டு கண்ணன், கோவிந்தன் இருவரும் சூளையில் இருந்த நெருப்பில் நன்றாகப் பழுத்திருந்த கம்பியுடன் முருகனை அடைத்து வைத்திருந்த கொட்டகைக்குள் நுழைந்து, முதலில் கோவிந்தன், “ஜதைகளை எந்த சேம்பரில் விட்டுவச்சிருக்க சொல்லுடா'' என்று கூறிக் கொண்டு முருகனின் வலது முழங்களில் நான்கு இடங்களில் சூடு வைத்தார். வலிதாங்க முடியாமல் முருகன் அலறியுள்ளார். அதன்பிறகு கண்ணன், “இப்போதாவது உண்மையைச் சொல்லு'' என்று கூறிக் கொண்டே முருகனின் இடது தொடையில் சூடுவைத்து, முருகனையும் அவரது பிள்ளைகளையும் அதே கொட்டகையில் வைத்துப் பூட்டி உள்ளார். அன்று இரவு 3 மணியளவில் முருகன், மனைவி, பிள்ளைகளுடன் அங்கிருந்து தப்பித்துச் செல்லும்போது மீண்டும் பிடித்துக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்பிறகு முருகனின் மகன்களான மணிகண்டனை கண்ணனும், மணிவேலை கோவிந்தனும் தங்கள் வீடுகளில் பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதற்குப் பிறகு, தாங்களாவது உயிரோடு தப்பித்தால் போதும் என வேறு வழியில்லாமல், மறுநாள் 22.6.2005 அன்று முருகன், பொன்னி, மூன்று சின்னக் குழந்தைகளுடன் தப்பித்து, படுகை என்கிற கிராமத்தில் அன்பழகன் வீட்டில் தங்கியுள்ளனர். அவரிடம் தங்களுடைய இரு மகன்களையும் மீட்டுத் தரும்படி கேட்டுள்ளனர். அவரும் விரைவில் மீட்டுத் தருவதாகக் கூறியதை அடுத்து, அங்கேயே தங்கி முருகனின் சூடுபட்ட காயம் கொஞ்சம் ஆறும் வரையிலும், தங்களுடைய மகன்கள் கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனும், பொன்னி அவர் வீட்டில் விவசாய வேலைகள் செய்து வந்தார்.

அதன்பிறகு, விசாரித்ததில் அவர்களுடைய மகன்கள் செங்கல் சூளையில் இல்லை என்பதை அறிந்து, "பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க' ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பா. கல்யாணியை திண்டிவனத்தில் சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். அதன் பிறகு பேராசிரியர் பா. கல்யாணி முன்முயற்சியில், திருச்சி வழக்குரைஞர் அலெக்ஸ் உதவியுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நேரில் புகார் தரப்பட்டு, குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும், சூடுபோடப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டும், இரு மகன்களின் நிலை என்ன எனத் தெரியாமல் அவர்களைப் பிரிந்தும் ஒரு மாதமாக இந்த இருளர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு இவர்களின் அறியாமை மட்டுமா காரணம்? இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்ற இன்றும் (26.7.2005) விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு கிராமம் மாரி என்கிற இருளர், தன் மனைவி, உறவினர்களுடன் செங்கல் சூளையில் பாதிக்கப்பட்டது தொடர்பாக, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை அணுகியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் பா. கல்யாணியிடம் கேட்டபோது, "நாங்கள் சங்கம் தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்தே எங்களுக்கு மொத்தம் 17 புகார்கள்தான் வந்தன. ஆனால், 2004 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 19 புகார்கள் வந்தன. தற்பொழுது 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை, மொத்தம் 21 புகார்கள் வந்துள்ளன. இதில் 8 வழக்குகள் செங்கற்சூளையில் இருளர்கள் சித்திரவதை செய்யப்பட்ட வழக்குகளாக உள்ளன. சங்கம் தொடங்கிய 10 ஆண்டுகளில், இதுவரை ஒன்று, இரண்டு என வந்தது செங்கற்சூளை வழக்கு; மற்றவை எல்லாம் சாதி இந்துக்களாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட வழக்காகவே இருந்தது'' என்று கூறினார்.

மேலும், "பழங்குடி இருளர்கள் மீது சாதி இந்துக்களின் தாக்குதல்கள், பொய் வழக்குகள், பாலியல் வன்முறைகள், கொலைகள், உழைப்புச் சுரண்டல், அடிப்படை உரிமைகளை மறுத்தல் போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இந்த இனத்தின் எழுத்தறிவு வெறும் 12 சதவிகிதம் மட்டும்தான். இவர்களில் ஏறக்குறைய 80 சதவிகிதத்தினர் பழங்குடி சான்று பெறமுடியாமல் உள்ளனர். இதன் காரணமாக, இவர்களின் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, சலுகைகள் எதுவும் பெறமுடியாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர், அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் எவ்வித நன்மையையும் பெறவில்லை. இவர்கள் கல்வியில் மேம்படவும், பொருளாதார முன்னேற்றம் பெறவும் நிலமே ஆதாரம். இவர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். விதி விலக்காக, விழுப்புரம் மாவட்டம் கஸ்பா காரணை மற்றும் வீரமடைப் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களில் சிலர், கடந்த 50 ஆண்டுகளாக சிறிதளவு நிலம் வைத்திருந்த காரணத்தால் அங்கிருந்து 26 பேர் படித்து மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு நில உரிமை அடிப்படை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், பெரும்பான்மையோருக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. நில உச்சவரம்புச் சட்டம், பூமிதான இயக்கம் மூலம் பழங்குடிகள் குறிப்பாக இருளர்கள் எவ்விதப் பலனும் அடையவில்லை'' என்று கூறிமுடித்தார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 27.7.2005 அன்று, கடலூர் வட்டம் தொட்டித் தோப்பு கிராமத்தில் பழங்குடி இருளர்களின் நிலவுரிமை மற்றும் கோரிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் "பஞ்சமி நில மீட்பு' கோரிக்கை வலுவடைந்து வருகின்ற இந்த நேரத்தில், நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்ற இருளர் என்கிற பழங்குடி இனத்தைக் காப்பாற்ற அவர்களுக்கான நிலவுரிமை குறித்தும் பேசப்பட வேண்டும்.

(நன்றி: தலித்முரசு ஆகஸ்டு 2005)