1971 தேர்தலில் வெற்றிபெற்ற விஸ்வநாத் பிரதாப் சிங், அப்போது வி.பி.என்.சிங் என்று குறிப்பிடப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை மண்டா ராஜா என்று அழைத்தார்கள். அலகாபாத் அருகில் இருந்த மண்டா என்ற ஒரு பகுதியில் ராஜாராம் கோபால் சிங் என்பவரின் தத்துப்பிள்ளையாக சென்றதால் மன்னர் பரம்பரையில் சேர்ந்தார்.
முதலில் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் இணை அமைச்சராக உயர்ந்தார். சில குழுக்களில் அவருடன் இருந்தபோது, அவர் அடக்கமாகவும், தெளிவாகவும், அனைவரும் பாராட்டும் வகையிலும் பணிபுரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தூய்மையான அமைச்சராக விளங்கினார். 1997-க்குப் பிறகு அவர் உத்திரப்பிரதேச அரசியலில் ஈடுபட்டு 1980-ல் அம்மாநில முதலமைச்சரானார்.
பின்னர் 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராவின் மரணத்துக்குப் பிறகு, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தொழிதுறை அமைச்சராக இருந்து பின்னர் நிதியமைச்சரானார். வரி கொடுக்காமல் ஏமாற்றிய பெரிய முதலாளிகளின் வருமான விவரங்களை ஆராய தனி கவனம் செலுத்தி ஊழல் பெருச்சாளிகளை அடக்க அவர் முற்பட்டார். அதில் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் சிக்கினார்கள். அதனால் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. அதிலும் வி.பி.சிங் சிறிதும் தளர்ச்சியடையாமல் அதன் விவரங்களை கடுமையாக கவனிக்கத் தொடங்கினார். இதில் உண்டான மோதலில் அவர் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத நிலைமையில் 1987-ல் ஏப்ரல் 12-ல் தமது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஊழலை ஒழிக்க முற்பட்ட உயர்தர அரசியல்வாதி என அவரை மக்கள் போற்றினார்கள். போபர்ஸ் பிரச்சனை மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பிரிந்து இருந்த ஜனதா அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு பெங்களூரில் 1988 அக்டோபர் 11-ல் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினர். போபர்ஸ் ஊழலை எதிர்த்தும், அரசாங்கத்தின் அலங்கோலங்களைக் கண்டித்தும் எதிர்கட்டிகளின் உறுப்பினர்கள் 1989 ஜூலை மாதத்தில் தத்தம் மக்களவை உறுப்பினர் பதவிகளை விட்டு விலகினார்கள். அதுவரை ராஜீவ் காந்தியின் தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு சிதைந்து 1989 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்த தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி அமைச்சரவை இந்திய அரசியலில் முதன்முறையாக தலைமையில் அமைந்தது. பிரதமர் வி.பி.சிங் காலத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட பிரதிநிதித்துவங்களைத் தரும் மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் அரசானை பிறப்பிக்கப்பட்டது. இதனால் பிற்பட்ட வகுப்பினர் பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய்வர்களாக இருந்த நிலைமையை நீக்க அரசியல் முறையில் தீர்வு காணப்பட்டது.
இந்த முடிவுக்கு பலமான கண்டனமும், கிளர்சியும் எழுந்தன. அத்துடன் அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் அத்வானி எடுத்த ரத யாத்திரை மீது வி.பி.சிங் காட்டிய எதிர்ப்பினால் அமைச்சரவைக்கு ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை நீக்கிக் கொண்டது.
மக்களவையில் உள்ள ஆதரவை நிரூபிக்க 1990 நவம்பர் 9-ஆம் தேதிக்குள் நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் வி.பி.சிங் கொண்டுவர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட காரணத்தால் வி.பி.சிங் முன்கூட்டியே பதவி விலகி விடுவது நல்லது என்று சிலர் அவரிடம் கூறினார்கள். இதற்குமுன் பெரும்பான்மை பலத்தை இழந்த பிரதமர் அவையில் வந்து தோல்விபெறாமல் அதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து விலகுவது வழக்கம். ஆனால் அவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோற்கடிக்கப்படுவதாக இருந்தாலும், தாம் எடுத்த சமுதாய நீதி பற்றிய குறிக்கோளுக்காக கடைசிவரை போராட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்து மிகவும் உறுதிப்பாட்டுடன் வி.பி.சிங் பேசினார். அவையில் காங்கிரஸ் கட்சி, பாஜக உட்பட எதிர்த்தரப்பினர் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டனர்.
மண்டல் குழுவின் பரிந்துரையை வி.பி.சிங் நிறைவேற்றியதற்காக அவருடைய அமைச்சரவை வீழ்த்தப்பட்ட பிறகும், அந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திரா ஷானி பெயரில் வந்த அந்த வழக்கு ஒன்பது உச்சநீதிமன்ற நீத்பதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இரண்டாண்டு காலம் நடைபெற்றது. கடைசியாக 16-11-1992 -ல் வி.பி.சிங் போட்ட அரசாணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
வி.பி.சிங் பிரதமராக இருந்தது 2-12-1989 முதல் 10-11-1990 வரையிலான காலம் மட்டுமே. இது கால அளவில் குறுகியது என்றாலும், இந்திய நாட்டின் சமுதாய அரசியல் வரலாற்றில் நீடித்து நிற்கும் மகத்தான சாதனையை உண்டாக்கினார். இந்த மண்டல் நாயகனின் மற்றொரு மகத்தான பணி. இலங்கையில் இருந்த இந்தியாவின் அமைதிப் படையை திரும்ப அழைத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்றிய பெரும்பணியாகும்.
No comments:
Post a Comment