Tuesday, July 8, 2025

நிகிதா போன்றவர்கள் எப்படி உருவாகின்றார்கள்? யாரால் வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள்.

நிகிதா போன்றவர்கள் எப்படி உருவாகின்றார்கள்?

யாரால் வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள்.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே, நிலா மகளிர் குழுவின் ஊக்குநர், பிரதிநிதி இருவரும் சேர்ந்து ரூ 4,49,000/- கையாடல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் உரிய நடடிக்கை எடுத்து பணத்தை மீட்டு, வங்கியிடம் ஒப்படைக்கக்கோரி உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். உறுப்பினர்களில் ஆறு பேர் பழங்குடி இருளர்கள். மீதமுள்ள ஆறு பேர் அனைத்து சமூகத்தையும் சார்ந்தவர்கள்.
ஊழல் செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ‘’மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதிக்கொடுக்குமாறு’’ மகளிர் திட்ட உதவி அலுவலர் அருண், ‘’பணத்தைக் கட்டலன்னா உங்க மேலதான் நடவடிக்கை எடுக்கனும்” என எஸ்.பி அலுவலக உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி இருவரும் புகார் அளித்த உறுப்பினர்களை மிரட்டியுள்ளனர்.
விசாரித்த எஸ்.பி.ஐ வங்கி அலுவலர், மகளிர் திட்ட உதவி அலுவலர் விக்கிரவாண்டி போலீசார், எஸ்.பி அலுவலக உதவி ஆய்வாளர் அனைவரும் கையாடல் மற்றும் ஊழல் செய்த ஊக்குநர், பிரதிநிதிக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.
விக்கிரவாண்டி, ஆவுடையார்பட்டில், 16 பேர் கொண்ட நிலா மகளிர் முன்னேற்றச் சங்கம் எனும் மகளிர் குழு உள்ளது. இதில் ஊக்குநர் தமிழ்ச்செல்வி, பிரதிநிதி சுபாஷினி இருவரும், உறுப்பினர்கள் கையெழுத்தினை அவர்களே போட்டு, விழுப்புரம் எஸ்.பி.ஐ வங்கியில் குழுவிற்காகப் பெற்ற 16,49,000/- ரூபாய் கடனில், ரூ 4,49,000/- ஐ கையாடல் செய்துள்ளனர்.
கையாடல் செய்த ஊக்குநர், பிரதிநிதி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையம், காவல் கண்காணிப்பாளர், மகளிர் திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அதன்பிறகு முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்ட பிறகு, சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.
ஒருவர் ஒரு மாதத்தில் பணத்தைக் கட்டுகிறோம் என எழுதிக்கொடுத்துள்ளார். இன்னொருவர், ‘நான் பணம் கட்டமாட்டேன், ஜெயில்ல கூட போடுங்க” என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இப்படிக் கூறிய இவர் மீது நடவடிக்கை எடுக்காமல், சமாதானப்படுத்தி, எப்படியாவது பணத்தைக் கட்டுங்கள் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இவர் வேறு எங்காவது, யாரையாவது ஏமாற்றி பணத்தைக் கட்டப்போகின்றார்.
இப்படி வருகின்ற புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால்தான், நிகிதாக்கள் உருவாகின்றனர்.

No comments: