Wednesday, September 11, 2024

அனைத்துக் கட்சி, அமைப்பு, இயக்கங்களுக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வேண்டுகோள்..

அனைத்துக் கட்சி, அமைப்பு, இயக்கங்களுக்கு 

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள்,

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வேண்டுகோள்..

                                                                                                                                          08.09.2024



  • பச்சையப்பன் அறக்கட்டளையின் முந்தைய கால ஊழல், முறைக்கேடுகளை வெளிக்கொணரும் இடைக்கால நிர்வாகி மற்றும் செயலாளருக்கு துணை நிற்போம்!!

  • அறக்கட்டளையின் உயர் கல்வி நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த ஆதரவளிப்போம்!!

  • அறக்கட்டளையின் கல்வி முயற்சிகளுக்கு எதிராகச் செயல்படும் தமிழக அரசின் உயர்கல்வித் துறை போக்கினைக்  கண்டித்து விரைவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்!!

 

தற்போதைய மதிப்பில் 45,000 கோடி சொத்துகள், 6 பள்ளி, 6 கல்லூரி, மாதாந்திர வாடகை மற்றும் குத்தகை என நூற்றுக்கணக்கான இடங்கள், நிலம், கடைகள் என இயங்கிக்கொண்டிருக்கிறது பச்சையப்பன் அறக்கட்டளை. தற்போது இந்த அறக்கட்டளைக்கு பல முன்னோடியான தீர்ப்புகளை வழங்கிய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு பார்த்தீபன் அவர்கள் நிர்வாகியாகவும், நெய்வேலி என்.எல்.சி நிறுவன கல்வித் துறை செயலாளராக சிறப்பாகச் செயல்பட்ட திரு சி.துரைக்கண்ணு அவர்கள் செயலாளராகவும் உள்ளனர்.

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் முதன்மையானதாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நகரங்களில் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கட்டணமே இக்கல்லூரிகளில் வசூலிக்கப்படுகிறது.   


132 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நியமனங்களை நிறுத்த முயற்சி

உதவிப் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்தும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியிடங்கள் நிரப்படவில்லை. கெளரவ மற்றும் ஒப்பந்த பேராசிரியர்கள் மூலம் சமாளித்தாலும், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி தடையின்றி முழுமையாக கற்பிக்கப்படவேண்டும் என்பதால், இக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகிக்கு அதிகாரமில்லை, அறிவிப்பிற்கு தடை விதிக்கவேண்டுமென முன்னாள் மாணவர் என்ற பெயரில் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார்.

 இவ்வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நீண்ட காலத்துக்கு பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் குழு அமைத்து நேர்காணல் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.       இதனடிப்படையில் அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவிற்கு தமிழ்நாடு அரசில் உயர்கல்வித் துறை ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்திய நிலையில், அறக்கட்டளை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, நேர்காணல் குழுவிற்கு அனுமதி  பெறப்பட்டுள்ளது.  

         இந்த 132 பணியிடங்களை நிரப்பப்படுவதை தடுப்பதற்காக, அதிகாரிகள் மற்றும் சில பேராசிரியர்கள் ஒன்று சேர்ந்து, அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி மற்றும் செயலாளர் சி.துரைக்கண்ணு மீது காவல் நிலையம், மகளிர் ஆணையத்தில் பொய்யான புகார்களைக் கூறியும், வெளியில் பொய்யான தகவல்களைப் பரப்பியும் பல்வேறு இடையூறுகளைச் செய்து வருகின்றனர்.

         தமிழக அரசின் உயர் கல்வித் துறை அலுவலர் ஒருவர் ’’132 பேரில் 60% பேரை தாங்கள் நிரப்பிக் கொள்வதாகவும், 40% பேரை நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள்’ என அறக்கட்டளை நிர்வாகியிடம் பேரம் பேசியதாக ராவணா வலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஏகலவைன் கூறியுள்ளார்.

குறிப்பாக ஒரு பணியிடத்திற்கு சுமார் 50 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு நிரப்புவதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் வாய்பினை இடைக்கால நிர்வாகியும், செயலாளரும் தடுக்கின்றார்களே என்ற எரிச்சலிலும், தகுதியில்லை இல்லை என்றாலும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் வேலை பறிபோகின்றதே என்ற கோவத்திலும் மேற்படி குழு எதிராக செயல்படுகிறது.

 இடைக்கால நிர்வாகி நீதிபதி பார்த்தீபன், செயலாளர் சி.துரைக்கண்ணு ஆகியோர்  ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றத்தினை நாடி, நீதியின் துணையுடன் 100% நேர்மையுடன் தகுதியுள்ள 132 பேரை பணியமர்த்த  முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.


இடைக்கால நிர்வாகி மற்றும் செயலாளர் மீது ஏன் இந்தக் கோவம்?

செயலாளராக உள்ள சி.துரைக்கண்ணு அவர்கள், என்.எல்.சி நிறுவனத்தின் முன்னாள் கல்வித் துறைச் செயலாளராக இருந்து, பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கியிருந்த 18 பள்ளிகளையும் மீட்டு ஒழுங்குபடுத்தி, சிறப்பாக செயல்பட நடவடிக்கைகளை மேற்கொண்ட நீண்ட அனுபவம் பெற்றவர். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியின் துணையுடன் மிகவும் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கிய ஒரு சில நேர்மையான நீதிபதிகளில் ஒருவரான ஓய்வு பெற்ற நீதிபதி திரு பார்த்தீபன் அவர்கள் நிர்வாகியாகவும் உள்ளார். இவர்கள் இருவரும் அறக்கட்டளையினை சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பல்வேறு ஆக்கிரமிப்புகளில் இருந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் 206 ஏக்கர், கடலூரில் 57 ஏக்கர் முக்கியமானவையாகும்.

  • இவர்கள் பொறுப்பேற்கும் முன்பு அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களிலிருந்து வாடகையாக ஆண்டுக்கு வெறும் 38 லட்சம் மட்டுமே வந்துள்ளது. அனைத்து வாடகை தாரரிடமும் முறைப்படியாக அணுகி, இன்று ஆண்டு வாடகை ஐந்தரை கோடியாக  (5.50 கோடி) வருமானம் உயர்ந்துள்ளது.

  • பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு Bio Metric நடைமுறைக்கு வந்து, அனைவரின் வருகையும் இருப்பும் உறுதி செய்து, கண்காணிப்பிற்கு உள்ளானது. இதனால் வகுப்புகள் முறையாக நடைபெறுவதுடன், மாணவர்கள் வருகையும் நிலையானதாக உள்ளது.

  • விடுதியில் சேரும் மாணவர்கள் செலுத்தும் ரூ 9,500 முன் தொகையினை (Deposit), அவர்கள் கல்வி முடிந்ததும் அவர்களுக்கு திருப்பி அளிக்கவேண்டும். 2017 முதல் 2021 வரை கல்லூரி அறக்கட்டளையின் கண்காணிப்பாளராக இருந்த சேகர் என்பவர், மாணவர்களுக்கு திருப்பி அளிக்காமல், தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பிக்கொண்டு ரூ.39.50 லட்சம் கையாடல் செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயலாளர் சி.துரைக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • சென்னை, கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் லட்சக் கணக்கான  ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை அறிந்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார். இவ்விசாரணையின் இறுதியில், அக்கல்லூரியில் உள்ள இரு அலுவலர்கள் சுமார் 90 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து கையாடல் செய்துள்ளதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளார்.  

  • அறக்கட்டளையின் கீழ் உள்ள ஆறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற உதவி பேராசிரியர்கள், நூலகர் உள்ளிட்ட நியமனங்களில், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 234 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து 2022 நவம்பரில் உத்தரவிட்டார். இதில் 154 பேர் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு வரையறுத்துள்ள தகுதி இல்லாதவர்கள் ஆவர்.

 

2020 இல் தி.மு.க பொருளாளர் திரு துரைமுருகன் அறிக்கை.

  •  மேற்படி 234 பேர் நியமனம் குறித்து, செப்டம்பர் 1, 2020 அன்று "பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" என அப்போதைய தி.மு.க பொருளாளர்                          திரு. துரைமுருகன் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அவ்வறிக்கையில், ’’தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது. மறைந்த பேராசிரியர் பெருந்தகை, என்.வி.என். சோமு, முரசொலி மாறன், நான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்த புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில்; உதவிப் பேராசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர்கள் போன்ற 234 பேர் நியமனத்தில் 152 பேர் தகுதியற்றவர்கள் என்பது, நடைபெற்றுள்ள நியமனங்களில் தலைவிரித்தாடியுள்ள முறைகேட்டினை வெளிப்படுத்தியிருக்கிறது.  சிறந்த கல்வி நிறுவனம் ஒன்று இத்தகைய முறைகேடுகளால் மட்டுமின்றி - பிரின்சிபால் நியமனத்திலும் குளறுபடிகள் ஏற்பட்டு - அனைத்து விஷயங்களுமே உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நேரத்தில், “அறக்கட்டளையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கும், புகழுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது” என்று உயர்நீதிமன்றமே வேதனைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி “இந்த நியமனங்கள் அனைத்தும் அடிப்படையிலேயே தவறானவை” என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி - 234 பேர் நியமிக்கப்பட்டதில் 60 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்பது – ஓர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் எவ்வளவு மோசமாக ஒரு தேர்வு- அதுவும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தேர்வு நடைபெற்றுள்ளது என்பது மிகுந்த கவலையளிக்கிறது. ஆகவே பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நியமனங்கள் குறித்து தனியாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் - “ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா” என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். புகழ்பெற்ற - மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு “விலங்கிட்டு” இது போன்ற முறைகேடுகள் நடைபெற இடம் தரக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தற்போதைய தி.மு.க பொதுச் செயச்செயலாளராகவும், அமைச்சராகவும் உள்ள திரு  துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

 

  • பச்சையப்பன் அறக்கட்டளையில் நடைபெற்ற முறைகேடுகளை, எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்த தி.மு.க, தற்போது ஆளுங்கட்சியான பிறகு இம்முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், ஆதரவளிகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.  தமிழக அரசின் முக்கிய நிர்வாகிகளும், உயர் கல்வித் துறையும் பச்சையப்பன் அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ளும் நேர்மையான முயற்சிகளுக்கு எதிராகவும், தடையாகவும் உள்ளதுடன், ஏற்கனவே பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களோடு சேர்ந்துகொண்டு, தற்போது நேர்மையாக செயல்படும் இடைக்கால நிர்வாகி மற்றும் செயலாளருக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.

 

இடையூறுகள் ஏற்படுத்த பொய்ப் புகார்.

  • சென்னை பச்சையப்பன் கல்லூ ரி முதல்வர், ’’ஏன் தாமதமாக வருகின்றீர்கள்?’’ என விலங்கியல் துறை பெண் உதவி பேராசிரியரைக் கேட்டுள்ளார். முதல்வரும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அந்த பெண் உதவிப் பேராசிரியர், கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் இருவரும் தன்னை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார். விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் புகாரில் உண்மையில்லை என்பதை அறிந்துகொள்கின்றனர். உடனே அந்தப் பெண் பேராசிரியர், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கின்றார். உடனடியாக முதல்வருக்கும், செயலாளருக்கும் மகளிர் ஆணையம் விசாரணைக்கு வரும்படி சம்மன் அளிக்கின்றது.  பிற பணிகள் உள்ளதைக் குறிப்பிட்டு இன்னொரு நாள் வழங்கும்படியும், அதில் பங்கேற்கின்றேன் என செயலாளர் கடிதம் எழுதியும் அதனை ஏற்காமல், ’’விசாரணைக்கு ஆஜராத துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மகளிர் ஆணையத் தலைவி பத்திரிகையாளர்களிடம் கூறுகின்றார்.

 

நாள்தோறும் மனித மீறல்களாலும், வன்கொடுமையாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அமைப்புகளும் அனுப்புகின்ற நூற்றுக்கணக்கான புகார்களை பெறுகின்ற மாநில மகளிர் ஆணையம், ஒன்றில் கூட உடனடியாக, இதுபோன்று ஒரு சில நாளில் விசாரணை நடத்தியதில்லை. எந்த விசாரணைக்கும் இதுபோன்று பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தியதில்லை என்பது முக்கியமானதுடன், குறிப்பிடத்தக்கது. உள்நோக்கத்துடன் கூடிய மகளிர் ஆணையத்தின் தன்னிச்சையான இச்செயல்பாடுகளின் பின்னணியில் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர்கள் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 நேர்மையான முறையில் நடைபெற உள்ள 132 பணியிடங்கள் நிரப்பும் செயலினை, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கமுடியவில்லை, லஞ்சமாக பணமும் வாங்கமுடியவில்லை என்ற நிலையில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென பல்வேறு இடையூறுகளை உருவாக்குவதுடன், அவதூறுகளையும் பரப்புகின்றனர். இதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய உயர் கல்வித் துறை உள்ளிட்டோர் முறைகேடுகளுக்கு துணைபோவதும், அரசு அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் பெருத்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.  

 

அறக்கட்டளையில் முந்தைய காலங்களில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒவ்வொரு கட்டத்திலும் நீதியின் துணையுடன் வெளிக்கொண்டுவருவதுடன், தரமான உயர்கல்வியை முழுமையாக அளிக்கவேண்டும் என்பதற்கான நல்முயற்சிகளை மேற்கொள்ளும் இடைக்கால நிர்வாகி நீதிபதி பார்த்தீபன் மற்றும் செயலாளர் சி.துரைக்கண்ணு ஆகியோரின் முன்னெடுப்புகளுக்கும், செயல்பாடுகளுக்கும் துணை நிற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

1. எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்

2. வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.

3. பேராசிரியர் .மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்

4. பேராசிரியர் பிரபா கல்விமணி, தலைவர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்.

5. பேராசிரியர் சங்கரலிங்கம்,

6. வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்,

7. கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

8. பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி. (எம்.எல்), தமிழ் நாடு

9. வே..இரமேசுநாதன், அமைப்பாளர், நீதிக்கான தலித்-பழங்குடியினர் கூட்டமைப்பு

10. பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை

11. .சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம்.காரைக்குடி.

12. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

13. காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்

14. அருட்தந்தை .ரபேல்ராஜ், கவசம், கக்கனூர், விழுப்புரம்

15. எழுத்தாளர் .கீதா, சென்னை

16. பேராசிரியர் வீ.அரசு, சென்னை

17. பேராசிரியர் அரங்க மல்லிகா, சென்னை

18. எழுத்தாளர் சு.உமா மகேஸ்வரி, கல்வியாளர், சென்னை.

19. பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், சிவகங்கை

20. .இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.

21. வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை

22. வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், உயர்நீதிமன்றம், மதுரை.

23. ஆர்.மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற ஆசிரியர், விழுப்புரம்

24. பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்

25. இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்

26. முருகப்பன் ராமசாமி, செயலாளர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்.

 தொடர்புக்கு :

பிரபா கல்விமணி, 9442622970.













No comments: