Wednesday, September 18, 2024

பெரியார் பிறந்த நாளும் நீதியரசர் சந்துரு குழுவிற்கான கலந்துரையாடல் கூட்டமும்.

 பெரியார் பிறந்த நாளும்

நீதியரசர் சந்துரு குழுவிற்கான கலந்துரையாடல் கூட்டமும்.



தமிழகத்தில், ‘’பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதி மற்றும் சமூக உணர்வுகளின் அடிப்படையிலான வன்முறையைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு நீதியரசர் கே.சந்துரு ஒரு நபர் குழு அமைத்து 23.082023 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இக்குழுவிற்கு தமிழகம் முழுவதிலிமிருந்தும் தனிநபர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பிலிருந்து நூற்றுக் கணக்கான கடிதங்கள் சென்றன.
அதனடிப்படையில், பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளான 17.09.2023 அன்று திண்டிவனம் தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்தினோம். 25 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பரிந்துரைகளை 13 பக்க அறிக்கையாக தொகுத்து, நீதியரசர் சந்துரு குழுவிற்கு அனுப்பினோம்.
ஒன்பது மாதம் செயல்பட்ட நீதியரசர் சந்துரு குழு தனது 610 பக்க அறிக்கையினை ‘’நாங்குநேரி இன்றும் என்றும் வேண்டாம்” என்ற தலைப்பில், பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து மாண்புமிகு தமிழக முதல்வரிடம் 18.06.2024 அன்று அளித்தது.
பாஜக தவிர பிற அனைவரும் இவ்வறிக்கையினை வரவேற்றனர். ஒன்றிரண்டு திருத்தங்களுடன் இக்கல்வியாண்டியிலேயே நடைமுறைபடுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
எப்போதும்போல் பாஜக இந்த அறிக்கையினை வைத்து அரசியல் செய்ய முயற்சித்தனர். அதுஎடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்தது.
இந்த அறிக்கைக்குப் பின்புதான் நான் தினமும் பொட்டு வைத்துக்கொள்கிறேன் போன்ற ’’அதிபுத்திசாலி’’ வெளிபட்ட அதியசங்கள் எல்லாம் நடந்தன.
இப்பதிவு அதற்கானது அல்ல. நீதியரசர் சந்துரு அறிக்கை வெளியான பிறகுதான், எதிர்ப்பினைத் தெரிவித்து, தமிழகத்தில் சில ‘’பக்திமான், சக்திமான், புத்திமான்கள்’’ எல்லாம் புற்றிலிருந்து வெளியில் வந்தார்.
ஆனால், திண்டிவனத்தில் கடந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளின்போது கலந்துரையாடல் கூட்டம் நடத்தியபோதே, ‘’சாதியப் பாகுபாடுகள் நிலவும் பள்ளியில், சாதியைத்தைக் கடைபிடிக்கும் சாதியவாதிகள் ஒன்று கூடி, சாதியை ஒழிக்க ஆலோசனை கூட்டம் நடத்தி பரிந்துரை அளிக்கின்றார்கள்” என்று கூறி எதிர்த்தனர் புத்திமான்கள்.
கலந்துரையாடல் கூட்டம் நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள், பரிந்துரைகள் அளித்தவர்கள், அறிக்கையை தொகுத்தெழுதியவர்கள் எல்லாம், எந்த எதிர்பாப்பும் இல்லாமல், எப்போதும் போல் தங்கள் பணியினை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், சாதியப் பள்ளியில் சாதியவாதிகள் நடத்தும் கூட்டம் என்று கூறிய புத்திமான்கள், இந்த அறிக்கையின் வெளியீட்டுக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தபோது, பல்லிளித்துகொண்டு நீதியரசர் பக்கத்தில் போய் நின்று கொண்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சாதியப் பள்ளியில், சாதிய வாதிகள் கூடி, சாதியை ஒழிக்க அளித்த பரிந்துரை அறிக்கையை ஏற்று, அதற்கு ASO-28 என்ற அடையாளக் குறியீடு அளித்து, பரிந்துரைகள் பலவற்றை, நீதியரசர் சந்துரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பது முக்கியமானது.
பெரியார் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்.






No comments: