Thursday, June 18, 2020

5 குடும்பம் 18 பேர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்கள்..

5 குடும்பம் 18 பேர்     
நீண்ட போராட்டத்திற்கு   பின் மீட்கப்பட்டார்கள்..
---------------------------------------------------------------------------

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர்கள் 5 குடும்பத்தினர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.பி.சி செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். பக்கது நிலத்தில் வெங்காய அறுவடை முடிந்தபிறகு, சிதறி கிடக்கும் வெங்காயத்தை பொறுக்கியதற்காக சாதி இந்துக்களால் தாக்குதலுக்கு ஆளானார்கள். அடைத்து வைத்து , மிரட்டப்பட்டுள்ளனர்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. ரமேஷ் அவர்கள் மூலம், 30-ஆம் தேதி இணையம் வழியாக புகார் அனுப்பப்பட்டது. தொடர்ந்து முகநூலிலும் பதிவிட்டோம்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 01.06.2020 காலை பல்வேறு நண்பர்களும் தோழர்களும் அமைப்பைச் சார்ந்தவர்களும் பல முயற்சிகளை எடுத்தனர். தொடர்ந்து ஆதரவளித்தனர்.
விளைவாக நேற்று காலை 11 மணி அளவில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு மேல் முடிந்தது. சார் ஆட்சியர் திரு பவன்குமார் அவர்களின் ஏற்பாடு செய்திருந்த மூடுந்து வாகனத்தில் இரவு தாராபுரத்திலிருந்து கிளம்பி நள்ளிரவு 2 மணிக்கு விழுப்புரம் வந்தனர்.

5 குடும்பத்தைச் சேர்ந்த 18 பழங்குடி இருளர் மக்கள் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டு சொந்த மாவட்டம் திரும்பவும், மீட்கவும் உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அறுவடை முடிந்த நிலத்தில் வெங்காயம் பொறுக்கியதற்காக வினோத் என்ற இருளர் இளைஞர் தாக்குதலுக்கு ஆளானார்.
தகவல் அறிந்து, வேதனையடைந்த வினோத்தின் மைத்துனர் முத்து, செங்கல் சூளை உரிமையாளரிடம் சென்று, ”உங்கள நம்பிதானே இருக்கோம். உங்க முன்னாடியோ அப்படி அடிச்சிருக்காங்க.. நீங்க கேட்கவே இல்லையே” என்று தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு செங்கல் சூளை உரிமையாளர், ‘’நீ என்னடா கேக்கற” என்று கூறியபடியா, செருப்பால் முத்துவைத் தாக்கி, மேலும் அடித்து, அங்கிருந்த அறைக்குள் தள்ளி அறையினை பூட்டியுள்ளார்.
நாம் அளித்த புகாருக்குப் பின், விசாரணைக்கு சென்ற அதிகாரிகளிடம் வினோத் மட்டுமே நடந்ததைக் கூறியுள்ளார். ஏன் சொல்லவில்லை என முத்துவிடம் கேட்டதற்கு, மேஸ்திரி ஏழுமலை என்னை தனியே அழைத்து, ‘’ஓனர் அடித்ததை யாரிடம் சொல்லக்கூடாது.. சொன்னால் சேம்பரில் உள்ள உன் மனைவியை விடமாட்டேன்” என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன முத்து தான் பாதிக்கப்பட்டதை அதிகாரிகளிடம் சொல்லவில்லை.
இன்று, இதனை புகாராக எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகாராக அளித்துள்ளோம்.
(02.06.2020 முகநூல் பதிவு)

No comments: