Tuesday, June 23, 2020

மணல் உரையாடல் - இசாக் கவிதை நூல்

மணல் உரையாடல் - இசாக்
-----------------------------------------------
வெளிநாடு சென்றவர்கள் பணம் சம்பாதித்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் மிக வசதியுடன் வாழ்வார்கள் என்று நினைப்பதுதான் எல்லோருக்குமான பொதுப்புத்தி.
ஆனால் அதற்குப் பின்னால் வலிமிகுந்த வாழ்க்கை உள்ளது என்பதை கவிதைகள் மூலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர் இசாக் Ishaq

துணையிழந்தவளின் துயரம் என்ற தலைப்பில் அச்சிட்டப் புத்தகமாக வெளியாகி கவனம் பெற்ற இந்தக்
கவிதை நூலை 2018 ல் மணல் உரையாடல் என்ற தலைப்பில் மறு மதிப்பு செய்தார்.

அண்ணன் அறிவுமதி, இன்குலாப் ஐயா, கவிஞர்கள் இந்திரன், பழமலய் ஆகியோர் வாழ்த்துரை எழுதியுள்ளனர்.
நூல் குறித்த இசாக்கின் அறிமுகம்.
"வாழ்வின் பொருளாதார சுமைகளைச் சரிசெய்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கான தமிழர்களின் வளைகுடா உள்ளிட்ட பிற நாட்டுப் பயணங்கள், பலருக்குள் புதிய மனச்சுமைகளைத் தந்து, உளவியல் ரீதியான வலிகளை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தச் சுமைகளும் வலிகளும் உலகின் கவனத்திற்கு வராமலே போளிணிவிடுகின்றன. அதன் இன்மையை இட்டு நிரப்பும் முயற்சியே இத்தொகுதி. இத்தொகுப்பில் பொருள்தேட வேண்டி குடும்பம் பிரிந்தோரின் வலிகளில் சிலவற்றைத் தமிழ்ச் சமுதாயத்தின் பார்வைக்கு ஈரம் காயாமல் கவுச்சி குறையாமல் அப்படியே கொடுக்க முனைந்துள்ளேன்" என்று கூறுகிறார்.

ஒன்றிரண்டு வார்த்தைகளில்
வலிமிகுந்த அந்த வாழ்க்கையைக் அழுத்தமாகக் காட்டும் சில கவிதைகள்.
"எப்படிச் சொல்ல
கணவன்
மனைவி
உறவென்பது
வெறும் கடிதத்தில்
நடத்துவதன்று என்று
இன்னும்
பிரிந்தே வாழும்
நம் பெற்றோர்களிடம்"
"துபாய்க்காரன் மனைவி
கட்டியிருக்கும்
சேலையில்
மின்னும் கம்பிகளில்
முகத்தில்
பூசியுள்ள
யாளி பவுடர்
மினுமினுப்பில்
தெளித்துள்ள
ப்ளூ ஃபார் லேடி
வாசனைத் துளிகளில் தூரதூரமாகிவிடுகின்றன
கடல் கடந்தவனின் துயரம்"
"பேரீச்சம்
பழத்தோட்டப்
பராமரிப்புப்
பணிக்குச் சென்று
கவனிப்பாரற்று
இறந்து கிடந்தவன்
அருகில் படபடத்தது...
‘நான் இங்கு மிக்க நலம்’ என்று
எழுதிய மடல்
முடிக்கப்படாமல்"
"என்னை நீயும்
உன்னை நானும்
தீவிரமாக
நேசிக்கத் தொடங்கி
பிரிய நேர்ந்த
கணங்களிலிருந்து
தொடங்கிவிட்டது
அவரவர் மீதான
அதிகப்படியான கவனம்"
“வாழ்க்கையில்
விடுமுறை நாள்கள்
வரும் போகும்
அனைவருக்கும்.
விடுமுறை
நாள்களில்தான்
வந்து போகிறது
வாழ்க்கை நமக்கு”
"உழைப்பாளிகளில்
வெளியில்
இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே கனவு''
"நினைவிருக்கிறதா
உனக்கு
நம்
சிரிப்புகளையெல்லாம்
அடமானம் வைத்து நெடுநாள்களாகிவிட்டன
நம் வீடுகளில் காந்தி சிரிக்க வேண்டுமென்று"
"எனக்கும் எவருமில்லை
இந்த அந்நிய மண்ணில்
இருந்தும்
வெட்கமற்றுச்
சொல்லிக்கொள்கிறேன்
“நான் குடும்பக்காரன்”"

திண்ணைப் பள்ளியும் - இணையக் கல்வியும்

திண்ணைப் பள்ளியும் -
இணையக் கல்வியும்
---------------------------------------
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணையவழிக் கல்வி பெரும் வணிகமாக / சூதாட்டமாக வடிவெடுத்துள்ளது. இதனை தடை செய்யவேண்டும் என்ற குரலும் வலுவாக ஒலிக்கின்றது. அதிலும் சரியாக பேச்சுகூட வராத மழலையர்களுக்கெல்லாம இணையம் வழியாக கல்வி கொடுப்பது என்பது, ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இணைய வழிக் கல்வி வேண்டாம் என்று சொன்னால், பள்ளி திறக்கும்போது தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காதோ என்று நினைக்கும் பெற்றோர்களின் தயக்கத்தை, பயன்படுத்திக்கொண்டு பணம் பிடுங்குகின்றனர். பெற்றோர்களும் வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு தங்கள் இயலாமையை வெளிக்காட்டாமல் அழுதுகொண்டே பணத்தை அள்ளிக்கொடுக்கின்றனர்.


0

இணைய வழிக் கல்வி தொடர்பாக தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினோம். 30 பேர் பங்கேற்றோம். பெரும்பாலோனார், இணைய வழிக் கல்வி தேவையில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைகள் அந்தக் கல்வியைப் பெறும் குடும்ப சூழலில் இல்லை. குழந்தைகளுக்கு அது தேவையும் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பல மாதங்கள் கல்வியோடு தொடர்பில்லாம இருப்பதும் நல்லதில்லை என்ற கருத்தும் வெளிப்பட்டது. குறைந்த பட்சம் 8 அல்லது 8-ஆம் வகுப்பு வரை இணைய வழிக் கல்வி உட்பட எதுவுமே தேவையில்லை. விடுமுறையாக கருதிக் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும். 8 ஆம் வகுப்பிற்கு மேல், குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் இணைய வழிக் கல்வி இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையில் கற்பித்தல் பணி செய்வது என்பது குறித்து பேசலாம் என கருத்து வந்தது. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள், இணைய வழிக் கல்விக்கான செல்பேசி, கணிணி, மடிக்கணிணி, இணையம் இணைப்பு, அதற்கான செலவினம் என எதுவும் சாத்தியமில்லாத மாணவர்கள் சதவிகிதம் அதிகம் எனவே, இணைய வழிக் கல்வி தேவையில்லை என்றும் வேறு எப்படி கல்வி கொடுப்பது என மாற்று குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ’’திண்ணைப் பள்ளி” என்ற வார்த்தை வெளிப்பட்டது.


0

திண்ணைப் பள்ளி என்ற கருத்தின் அடிப்படையில், நாம் சில முயற்சிகளை எடுக்கலாம். ஒரு தெருவில் அல்லது ஒரு பகுதியில் அல்லது ஒரு குடியிருப்பில் 8 ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் விரும்பினால் யாராவது ஒரு வீட்டில் ஒருங்கிணைப்பது. அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியர் அல்லது ஒரு தன்னார்வலர் அல்லது கல்வியில் அக்கறையுள்ள ஒருவர் மூலமாக ஒரு வீட்டில் கற்பித்தல் பணி செய்வது. அதுவும், பாடப்புத்தகம் இல்லாமல் பொதுக்கல்வியை வழங்குவது. அதுவும், தமிழ் ஆங்கிலம் நன்றாக தவறில்லாமல் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பது. கணிதம், அறிவியலின் அடிப்படைகளை சொல்லி புரிய வைப்பது என்ற அளவில் இருந்தால் போதும். பாடங்களை பள்ளி திறந்தபிறகு மாணவர்கள் படித்துக்கொள்ளட்டும் என்று பேசினோம்.
0

இந்நிலையில், உங்கள் நூலகம், ஏப்ரல்-மே இதழில், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதியுள்ள ”திண்ணையில் பாடமெடுத்த அண்ணாவிகள்” என்ற கட்டுரையை இன்று பார்த்தேன். திண்ணைப் பள்ளிகள் குறித்த சில தகவல்களை தெரிந்துகொள்வது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாகவும், தேவையானதாகவும் இருக்கும் என்பதால், அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தொகுத்துள்ளேன்.


0

ஒரு செய்தியை இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேணிடியுள்ளது. இந்தத் திண்ணைப் பள்ளிகளில் நடக்கும் கற்பித்தலில் வட்டார ரீதியாக வேறுபாடுகள் இருந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரி, ஒரே பாடங்களைக் கற்பிக்கவில்லை.

0


0
யாழ்ப்பாணம் குடநாட்டில் நிலாக்காலங்களில் பனையோலையை நார்நாராகக் கிழித்து மாடுகளுக்குக் கொடுபர்கள். இதைச் செய்கின்ற வயதான மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு பாரத, ராமாயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பார். சில சமயம் நீதி நூல் பாடல்களைச் சொல்லி விளக்கமும் கூறுவார். இதை நிலாப்பள்ளி படிப்பு என்பார்கள். சி.வை.தாமோதரன் பிள்ளை இப்படியான நிலாப்பள்ளியில் படித்திருக்கிறார்.


வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வையாபுரிப் பிள்ளை தாமிரபரணித் தமிழறிஞர்கள் சிலர் திருநெல்வேலி தெற்கு புதுத்தெருவில் இருந்த கணபதியா பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் வாழ்ந்த தமிழறிஞர்களில் பலரும் இது போன்ற திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தாம். ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை (திருச்சி ஓதுவார் திண்ணைப் பள்ளிக்கூடம்) மறைமலை அடிகள் (காடம்பாடி தி.ப) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (மகிபாலன் பட்டி தி.ப) பி.ஸ்ரீ (தென்திருப்பேரை தி.ப) என இப்படியான தமிழறிஞர்களின் பட்டியல் நீளமானது.

#தொன்மமாகிவிட்டது
திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய செய்திகள் எல்லாம் இன்று தொன்மமாகிவிட்டன. இது பற்றிய செய்திகள் பெரிய அளவில் சேகரிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் முறையும், நெறிமுறையும் தமிழகத்தின் ஒரே மாதிரியான போக்கில் இருக்கவில்லை. இது வட்டார ரீதியான வேறுபாடு இருந்தது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி போன்ற மொழிகளைக் கற்பித்த திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இது போல தமிழின் பாடத்திட்டமும் கணக்கு கற்பித்தலிலும் வேறுபாடு இருந்தது.

திண்ணைப் பள்ளிக்கூடம் தொடர்பான சொற்கள் முழுதும் வழக்கில் இல்லை. இவை அழிந்து விட்டன. இவற்றில் சில பழம் அகராதிகளில் கூட இடம்பெறவில்லை இவை எல்லாவற்றிற்கும் மாற்றுச் சொற்கள் வந்து விட்டன. தமிழகக் கல்வி குறித்த பழம் தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. கல்வி உயர்வானது, கற்றவன் சமூகத்தில் மதிப்புடையவன் என்பன போன்ற அறச் சார்புடைய சில சிறு குறிப்புகள் பழம் பாடல்களில் வருகின்றன. முந்தைய காலங்களில் இயங்கிய கல்வி நிலையம், மாணவர்களின் பாடத் திட்டம் ஆசிரியர் தகுதி, பெண்கள் கற்கும் நிலை என்பன போன்ற பல விஷயங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. 17, 18, 19, நூற்றாண்டு கதைப் பாடல்களில் ஆசிரியரின் தகுதி, கற்பித்த பாடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. இவை கிராமங்களில் கற்பித்தமுறை தொடர்பானவை கல்வெட்டுகளில் காணப்டாதவை.


திருவிதாங்கூரில் அரசு பள்ளிகள் அறிமுகமாவதற்கு முன் இருந்த திண்ணைப் பள்ளிக் கூடங்கள் பற்றி திருவிதாங்கர் சர்ச் வரலாற்றை எழுதிய சி.எம்.ஆகர் என்பவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். "1903 இல் திருவிதாங்கூரில் 1300 திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவற்றில் 50,000 மாணவர்கள் படித்தனர். ஒரு பள்ளிக்கு ஒரே ஆசிரியராக இருந்தார். பெண்கள் இந்தப் பள்ளிகளில் படிக்கவில்லை. திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர்கள் செல்வந்தர் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்கிறார். திருவிதாங்கூரில் 1860 லேயே பள்ளிகள் வந்த பின்பும் 40 ஆண்டுகள் கழித்தும் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன. இது போன்றே தமிழகத்தின் நிலையும், சென்னையில் பல்கலைக்கழகம், ராஜதானி கல்லூரி, தாம்பரம் கல்லூரி, பிஷப் ஹியூபர் கல்லூரி, பாளை தூய சேவியர் கல்லூரி, வளனார் கல்லூரி எல்லாம் தொடங்கப்பட்ட பின்பு 60 - 70 ஆண்டுகள் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன.


#திண்ணையில்_#பள்ளிகள்
பள்ளி என்பது சமண சமயம் தொடர்பான சொல். மடங்களைக் குறிக்கவும் பின் கல்விக் கூடங்களைக் குறிக்கவும் பயன்பட்டது. ஆசிரியரின் வீட்டுத் திண்ணையே பள்ளியாகச் செயல்பட்டது. இது தமிழகத்தில் பரவலான ஆரம்பகால நிலை. இது பற்றிய குறிப்புகள் உ.வே.சா. போன்ற பழைய தமிழறிஞர்களின் அனுபவக் கட்டுரைகளில் உள்ளன. பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்த ஊரில் உள்ள மாணவர்களே இங்குக் கற்றனர். மாணவர்கள் வீட்டிற்குச் சென்று திரும்பும் அளவு தூரத்தில்தான் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது.


திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ் கணக்கு இரண்டு மட்டும் கற்பிக்கப்பட்டன. தொடக்ககாலத்தில் நீதி நூற்கள் வழி ஒழுக்கத்தைக் கற்பிப்பதே கல்வி என நம்பப்பட்டது. கணக்கு என்பது வாய்ப்பாடுகளை மனனம் செய்வதுதான். அவை கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம் குழிமாற்று நெல்லிலக்கம் என்பவை. முக்கியமாக பெருக்கல் வகுத்தல் கூட்டல் வாய்ப்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டன. மரபுவழியான தொழில் நுட்பம் கல்வியாக அங்கீகரிக்கப் படவில்லை. இவை தந்தை / மாமா வழியே அறியப்பட்டன.


திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடத்தை ஒப்புவிப்பதை முறை சொல்லுதல் என்றனர். இதற்கு முறண்டு என்றும் பேச்சுவழக்குச் சொல்லும் உண்டு. திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்பது இதன் பொருள். முறண்டு பிடித்தல் என்னும் சொல் வழக்காறு இதிலிருந்து வந்திருக்கலாம்.


திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்பட்ட இன்னொரு விஷயம் ஓலையில் எழுதவும் படிக்கவும் பயிற்சி கொடுத்தது. பனை ஓலையை வடிவமைப்பது எழுதுவது, பாதுகாப்பது எனப்பல விஷயங்களை திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரே கற்பித்திருக்கிறார்.

#திண்ணைப் பள்ளிக் கூடம் தொடர்பான சில சொற்கள் இப்போது வழக்கில் இல்லை.
அண்ணாந்தாள் - மாணவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை.
ஏற்றாள் அல்லது வேற்றாள் - பள்ளிக் கூடத்துக்கு முதலில் வரும் மாணவன். கட்டை மாட்டல் - மாணவனுக்குரிய தண்டனை
குதிரை ஏற்றம் - மாணவனுக்குரிய தண்டனை.
கோதண்டம் இடுதல் - மாணவனுக்குரிய தண்டனை சட்டம்.
சட்டாம்பிள்ளை - மாணவர் தலைவன்.
சுவடி தூக்கு - ஓலைச் சுவடிகளை ஒரு பலகையில் வைத்து முதுகின் முன் தொங்கவிட்டு தூக்கிச் செல்வது.
துவக்கல் - புதிய ஏட்டை படிக்கத் தொடங்கும் முதல் நிகழ்வு.
படியோலை - மூல ஓலையிலிருந்து பிரதி செய்யும் ஓலை.
மானம்பூ - ஆசிரியருக்கு நவராத்திரியில் வரும் உபரி வருமானம்.
முறங்கு சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.
முறை சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.
முரண்டு – உருப்போடுதல், திரும்பத் திரும்பச் சொல்லுதல்.
வாவுநாள் - விடுமுறை நாள்
வாவுக்காசு - ஆசிரியரின் சம்பளம்.

அருட் சகோதரி லூசினா

அருட் சகோதரி லூசினா
=====================

விழுப்புரம் மாவட்டத்தில் பேரா. கல்விமணி அவர்கள் அங்குள்ள இருளர் பழங்குடி மக்கள் மத்தியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணித்துப் பணியாற்றுவதை அறிவோம்.
அந்த முயற்சியில் அவருக்குத் துணை நிற்பவர்களுள் அருட் சகோதரி லூசினா மற்றும் அருட் பணியாளர் ரஃபேல் அடிகளார் முதலானோரின் பங்கு முக்கியமானது.
தற்போது சகோதரி லூசினா அவர்கள் தனது களப் பணி அனுபவங்களை "பழங்குடியினர் பாதையில்" எனும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அதற்கு ஒரு முன்னுரை எழுதும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சற்றுமுன் அதை முடித்தேன். நல்ல அனுபவம்.
அவரிடம் நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டேன்:
"சிஸ்டர் நீங்கள் ஒரு முப்பதாண்டுகளாக தேவகோட்டை, பச்சை மலை, விழுப்புரம் முதலான பகுதிகளில் பழங்குடி மக்கள் மத்தியில் நிறையப் பணி செய்துள்ளீர்கள். இப்பகுதிகளில் எதிலேனும் யாராவது கிறிஸ்துவத்திற்கு மாறியுள்ளார்களா?”
சற்றும் தயங்காமல் அவர் உடன் சொன்னார்: “இல்லை. ஒருவர் கூட இல்லை. எங்கள் நோக்கம் மத மாற்றம் கிடையாது. சேவை நோக்கம் ஒன்றுதான்.”
“மன்னியுங்கள் சிஸ்டர். எனக்கு அது தெரியும். ஒரு வேளை உங்கள் பணி, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பார்த்து அந்த அடிப்படையில் யாரும் மதம் மாறி இருக்கலாமே என்றுதான் கேட்டேன்..”
“இல்லை அப்படியும் கிடையாது”
ஆனால் தொண்டு எனும் பெயரில் மக்களைப் பிளவுபடுத்தி வன்முறைக் கருவிகளாக அவர்களைக் களமிறக்கும் கொடியவர்கள் இப்படி அருட் தொண்டு செய்பவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாய் மதம் மாற்றுபவர்களாக மட்டுமே சித்திரிக்கும் கொடுமையை எண்ணிக் கொண்டே இந்த முன்னுரையை எழுதி முடிக்கிறேன்.

ஏன் கற்க வேண்டும்? -

ஏன் கற்க வேண்டும்? -
யுனெஸ்கோ பரிந்துரை
--------------------------------------------------
அறிவதற்காகக் கற்றல், செயலாற்றுவதற்காகக் கற்றல்,
பிறரோடு சேர்ந்து வாழக் கற்றல்,
சுய ஆளுமையுடன் வாழக் கற்றல்
எனும் நான்கு தூண்களைக் கொண்டதாகக் கல்வி திகழ வேண்டும்.

இரண்டரை மாத ஊரடங்கில் 878 பேர் மரணம்

இரண்டரை மாத ஊரடங்கில்
விபத்து, பட்டினி உள்ளிட்ட காரணத்தால்
878 பேர் மரணம்,,
-----------------------------------------------------------------------
#இடம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 209 பேர் உயிரிழப்பு.
#பட்டினி மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 167 பேர் உயிரிழப்பு.
#தற்கொலை 125 பேர்.
#சிறப்பு ரயில் விபத்தில் 95 பேர் உயிரிழப்பு.
#மருத்துவ வசதிகள் பராமரிப்பு அல்லது கவனிப்பின்றி 63 பேர் உயிரிழப்பு.
#மதுபானங்கள் இல்லாமல் 49 பேர் உயிரிழப்பு.
#நடப்பது, வரிசையில் காத்திருப்பது ஏற்பட்ட சோர்வு காரணமாக 47 பேர் உயிரிழப்பு.
#தனிமைப்படுத்தல் முகாம்களில் 36 பேர் உயிரிழப்பு.
#ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட குற்றச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழப்பு.
#போலீஸ் தாக்கியது அல்லது மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் உயிரிழப்பு.
#வகைப்படுத்த முடியாத மரணங்கள் 60 பேர் உயிழப்பு.

குழந்தைகள் என்னவாகப் போகின்றதோ?

எல்லோரின்
வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ள
கொரோனா பேரிடரில்
இந்தக் குழந்தைகள்
என்னவாகப் போகின்றதோ?



Friday, June 19, 2020

என்.எல்.சி ஊழலுக்கு எதிராக மக்கள் அதிகாரம்

செல்பேசி பயன்படுத்தியதில்
1.20 லட்சம் ரூபாய் தொடங்கி
பணி நியமனம் செய்வது உள்ளிட்ட
வாய்ப்புள்ள அனைத்திலும் ஊழல் செய்யும் விக்கிரமனுக்கு எதிராக
மக்கள் அதிகாரம்..


#உங்க_கடமை_உணர்ச்சி_இருக்கே_யப்பா...?

மதிய உணவுக்கான பணத்தை பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் போடுவதற்கு பதிலாக.. குழந்தைங்க பேரை சொல்லி நீங்களே ஏதாவது செஞ்சிக்கலாம்..!
ஒரு வேளை டீ குடிக்ககூட
நீங்க கொடுக்கப்போற பணம் போதாது.
குழந்தைகளோட ஆதார் EMIS இருக்கும், அதை எடுத்து அந்தக் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குடிமைப் பொருட்கள் (ரேசன் கடை) கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் என பொருளாக கொடுத்தால் நன்றாக இருக்கும்...

இதற்கும் முன்பாக...

இதற்கு முன்பாக...

1. குழந்தைகள் எல்லாம் எங்குள்ளார்கள் என கண்டுபிடிக்க வேண்டும்.
2. அவர்களுக்கு வீடு உள்ளதா, வீட்டிற்கு செல்ல வழி உள்ளதா என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும்.
3. வீட்டில் மின்சார வசதி உள்ளதா என்பதை அறியவேண்டும்.
4. அவர்கள் பகுதியில் செல்பேசி கோபுரம் உள்ளதா இணைப்பு கிடைக்குமா பார்க்கவேண்டும்.
5. அவர்களுக்கு செல்பேசி உள்ளதா பார்க்கவேண்டும்.
6. அந்த செல்பேசிக்கு இணையக் கட்டணம் செலுத்தமுடியுமா? கிடைக்குமா?
7. அரசு கொடுத்த 1000 ரூபாய் பணமும், குறைவான அரிசியும் கொடுக்கப்பட்டதா எனப் பார்க்கவேண்டும்...
இதற்குப் பிறகும் அந்தக் குழந்தை கூலி வேலைக்கோ, ஆடு/மாடு மேய்க்கவோ செல்லாமல் இருக்கவேண்டும்...

இவைகள் எல்லாம் இல்லை என்றால்
நீங்கள் செய்துகொடுங்கள் அய்யா..
அதற்குப்பிறகு உங்கள் ஆசிரியர் மூலம் எந்த குழு வேண்டுமானாலும், எத்தனைக் குழு வேண்டும் உருவாக்கலாம்?

பொதுத் தேர்வு ரத்தும் - முதன்மைக் கல்வி அலுவலர் பதிலும்



பொதுத் தேர்வு ரத்தும் - முதன்மைக் கல்வி அலுவலர் பதிலும்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தேன். வழக்கிற்கு தேவைபடும் கூடுதல் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தேன்.

விரைவாக பதில் வந்திருந்ததை பார்த்து, திகைத்துபோய் ஆச்சர்யத்துடன் பிரித்தேன்.

பதிலை படித்தபின்புதான், அவ்வளவு விரைவாக பதில் அனுப்பிய காரணம் புரிந்தது.
தேர்வு ரத்தானதில் நம்மைவிட அவர்களுக்குதான் பெரும் மகிழ்ச்சி போலும்..

18.06.2020 முகநூல் பதிவு

பிறந்த நாள் வாழ்த்தும் பதிவும் - 2

தம்பி செந்தில் பிறந்த நாள் வாழ்த்து முகநூல் பதிவு 


நான் விழுப்புரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேரம் அது. நண்பன் ஒருவன் திண்டிவனத்தில் தலித் மனித உரிமை சம்மந்தமாக வேலை வாய்ப்பு உள்ளது அப்லை செய் என்றான். நானும் விண்ணப்பம் செய்திருந்தேன். என்னை நேர்காணலுக்கு வரச்சொன்னார் ஒருவர் தொலைபேசி வாயிலாக.

சரியாக 13/09/2013 அன்று எனக்கு நேர்காணல், காலை திண்டிவனம் சென்று அவருக்கு போன் செய்தேன் எங்கு வரவேண்டும் என்று தெரிந்துக் கொள்ள. எதிர் முனையில் அதே குரல்,
நீங்க இப்ப எங்க இருகீங்கனு?
நான்: திண்டிவனம் போருந்து நிலையம் சார்.
அந்த குரல்: அப்படியா, நான் பக்கத்துல தான் இருக்கன், பாலத்துக்கு கீழ நில்லுங்க நானே அலுவலகம் கூட்டிட்டு போரனு சொன்னது அந்த குரல்.


அந்த குரலின் சொந்தகாரருக்காக காத்திருந்தேன். என்னை நிறைய நபர்கள் கடந்து சென்ற வண்ணம் இருந்தனர். ஒருவர் சற்று தொலைவில் ஷ்கூட்டி வண்டியில் வருவதை கண்டேன். அப்போழுது என் மனதில் தோன்றியது இவராகதான் இருக்க வேண்டும் என்று. நான் நினைத்தது போலவே அவரும் என் அருகில் வந்து, நீங்க தான் செந்தீல என்றார், நானும் தலையாட்டினேன். சற்று புன்முருவலோடு நான் முருகப்பன் என்றார்    (அன்று தொடங்கிய நட்பு பயணம், இன்று வரை). இது தான் எங்களின் முதல் சந்திப்பு....

இவர் தான் என் வாழ்வின் நிறைய மாற்றங்களுக்கு செந்தகாரராக இருக்க போகிறார் என அறிந்திருக்கவில்லை நான் அன்று .. என்னை போலவே அவரும் நாத்திகராக இருந்தார். என் வாசிப்பை உலகத்தை விரிவுபடுத்தினார். என் எழுத்தை மேம்படுத்தினார், உங்களுக்கு சிறுகதை நல்லா வருது எழுதுங்க செந்தில் என்றார் (கண்டிப்பாக உங்களின் அன்பு கட்டளையை நிறைவேற்றுவேன் சார்). என் இக்கட்டான காலங்களில் எனக்கு உறுதுணையாக நின்ற அண்ணன். நான் எடுத்த கடுமையான முடிவுகளுக்கு அதரவு கரம் நீட்டிய கரங்களுக்கு செந்தகாரன்.

SASY அலுவலகத்தில் முருகப்பன் சாரும், ஜெசியும், நொருக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் புத்தகம் எழுத தொடங்கிய சமயம் அது. கள ஆய்வு சம்பவங்களை தொகுக்க வேண்டிய நபர், அவரின் திருமணம் காரணமாக அப்பணியை தொடரமுடியாமல் போனதால். அப்பணியை எதிர்பாராமல் நான் செய்ய வேண்டி இருந்தது. நான் செய்த பணி இப்புத்தகத்திற்க்கு வலுசேர்ததாக சொல்லி இன்றுவரை பாராட்டுபவர்.

இடுக்கண் களைவதாம் நட்பு- என்பதற்க்கு உதாரணமானவர்.
நி
ற்

சாரி சார் பணி நிமிர்தமாக உரிய நேரத்தில் வாழ்த்த முடியவில்லை....
இன்று போல் என்றும் சமுக பணி செய்து மகிழ்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணன் சார்.



பிறந்த நாள் வாழ்த்தும் பதிவும்

வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்  முக நூல் பதிவு 

(15.06.2020 பிறந்த நாள் முன்னிட்டு)

2003 ஆம் ஆண்டு, மதுரை நாகமலை-புதுக்கோட்டையில் உள்ள "PILLAR" ஹவுசில் “தலித் மனித உரிமை மற்றும் கண்காணிப்பு" என்ற திட்டத்திற்காக, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமான வழிகளைக் கையாளுதல் எனும் நோக்கத்தில் "மக்கள் கண்காணிப்பகம்-தமிழ்நாடு" அமைப்பு ஐந்து நாள் பயிற்சி ஒன்றை நடத்தியது. அப்போது சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நானும் அதில் கலந்து கொண்டேன். சுமார் 50 பேர் கலந்து கொண்ட அந்த பயிற்சியில், என்னைப் போலவே மற்றொரு பயிற்சி பெறுநராகக் கலந்து கொண்டார் அண்ணன் முருகப்பன்.

அந்த பயிற்சியில், ஐந்து பேர் கொண்ட பத்து குழுக்களை பிரித்திருந்தார்கள். அதில் நானும் அவரும் ஒரே குழுவில் இடம் பெறவில்லை. அதனால் நாங்கள் இருவரும் நெருங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு எளிதாக அமையவில்லை. அவருக்கு ஊர் திண்டிவனம். எனக்கு திருநெல்வேலி. எளிதில் பற்றிக்கொள்ளும் பொது ஒற்றுமை என்று எதுவுமில்லை. ஆனாலும் அப்போது எப்படி அறிமுகமாகிக் கொண்டோம் என்று சரியாக நினைவில் இல்லை.

அந்த பயிற்சிக்குப் பின்னர், 2004ஆம் ஆண்டு, மக்கள் கண்காணிப்பகத்தில் நான் மனித உரிமை மீறல்கள் தொடர்பான, கள ஆய்வு செய்யும் பணியில் சேர்ந்தேன். 2003ஆம் ஆண்டிலேயே அவர் அங்கு பணிக்கு சேர்ந்திருந்தார். அதன் காரணமாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நேரில் மட்டுமில்லாமல், செல்போன் வாயிலாகவும் தொடர்ந்து இணைப்பில் இருந்து வந்தோம்.

2004 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் சுனாமி தாக்கியபோது, சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கும் அதிகமாக நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்தோம். அப்போது இரண்டு நாள் முருகப்பன் அண்ணன் வீட்டில் போய் தங்கி இருந்தேன். அவரது மூலமாகத்தான் எனக்கு பேராசிரியர் “கல்யாணி” யின் அறிமுகம் கிடைத்தது.

2005ஆம் ஆண்டில் நாங்கள் இருவரும், பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் இருந்து விலகி, வேறு வேறு பணி தளங்களுக்குச் சென்றோம். அதன்பிறகு முன்பு போல அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாமல் போனது. இருந்த போதிலும், அதன்பிறகும் இன்று வரையிலும் எங்களது நட்பு தொடர்ந்து வருகிறது.

நான் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளைப் படித்து, அதற்குத் தேவையான கூடுதல் செய்திகளைத் தருவார். அவர் புதிதாக வாங்கும் புத்தகங்களில் பெரும்பாலும் எனக்கும் சேர்த்து கூடுதலாக ஒரு புத்தகம் வாங்கி அதனை அனுப்புவார். மதுரைக்கும் அல்லது மதுரையைச் சுற்றியும் உள்ள ஊர்களுக்கு வரும்போது என்னைச் சந்திக்காமல் செல்ல மாட்டார்.

சிறிது காலம் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றிய போது, மனித உரிமைகள் மீறல் சார்ந்த செய்திகளுக்கும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான செய்திகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் இவர் 5 முறை சிறை சென்றுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் நடக்கும் பொழுது, எவ்விதமான பிரதிபலனும் எதிர்பாராமல், தனது நண்பர்களுடன் உண்மை அறியும் குழு அமைத்து அந்தப் பகுதிக்குச் சென்று களஆய்வு செய்து, பொது அறிக்கை ஒன்றை தயாரித்து அரசுக்கான பரிந்துரைகளையும் வெளியிடுபவர். அவ்வாறு, 2018 பிப்ரவரி மாதத்தில், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சந்தையூர் கிராமத்தில், தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது தொடர்பாக மேற்கொண்ட, கள ஆய்வில், உடன் வந்த நண்பர்கள் குழுவுடன் என்னையும் இணைத்துக் கொண்டவர்.

பழங்குடி இருளர் மக்களுடன், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இருளர் மக்களின் வாழ்வினை புத்தகமாகவும் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்தை ஆய்வு செய்து, 2014ம் ஆண்டில் “நொறுக்கப்படும் மக்களும், மறுக்கப்படும் நீதியும்" என்ற சிறப்பான புத்தகம் ஒன்றை ஜெசி என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். பின்னர் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இருளர்களின் இதயம் வி.ஆர். ஜெகந்நாதன் என்ற நூலையும் எழுதியுள்ளார். பரந்த வாசிப்பாளரான இவர், மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை, தலித் முரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறார்.

பட்டியலின மக்களில் பலரும் அவ்வாறு பெயர் வைப்பதைத் தவிர்த்து வரும் நிலையில், காதலித்து திருமணம் செய்த தனது துணைவியார் தமிழரசி அவர்களின் ஒப்புதலோடு, அவர்களது மூத்த மகனுக்கு "அம்பேத்கர்" என்று பெயர் வைத்தவர்.

பிறப்பால் பட்டியல் இனத்தைச் சாராத முருகப்பன் அண்ணன், ஜாதி/மத மறுப்பாளர். அதன்படி தனது குழந்தைகளையும் வளர்த்து வருபவர். இதுதான் எங்களது பொது இணைப்பு போல.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்பு குழுவை, சட்டப்படி மாநில அரசு ஆண்டுக்கு இருமுறை கூட்ட வேண்டும் என்று 2012ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடர்வதற்கு காரணமாக இருந்தவர். அந்த வழக்கு காரணமாக, நீண்ட காலமாக கூட்டப்படாமல் இருந்த அந்த கூட்டமானது இரண்டு மாதங்களுக்குள் கூட்டப்பட்டது.

திண்டிவனம் "ரோசனை"பகுதியில் இயங்கிவரும் தாய்த்தமிழ் பள்ளி தொடர்ந்து இயங்குவதில் பெரும் பங்கு வகித்து வருபவர். தற்போது கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என தொடர்ந்து பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தது மட்டுமல்லாமல், மனுதாரராக இருந்து, தேர்வு கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்.

சுனாமி, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தனது நண்பர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர்.

செல்போன் வந்த பிறகு தொலைபேசி எண், முகவரி போன்றவைகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. ஆனால் எனக்கு மனப்பாடமாக நினைவில் இருக்கும் செல்போன் எண்கள் மொத்தம் 15 மட்டுமே. அதுபோல 10க்கும் குறைவான முகவரிகளே நியாபகத்தில் உள்ளது. அதில் முருகப்பன் அண்ணனின் தொடர்பு எண்ணும், முகவரியும் உள்ளது.

பழங்குடியினர், பட்டியலின மக்கள், கல்வி, மனித உரிமைகள் போன்ற பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்துவருபவரும்,
என் வளர்ச்சியில் பங்கெடுப்பதுடன்,
அதில் பெரிதும் மகிழ்பவர்களில் ஒருவருமான
முருகப்பன் அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...




ஆபத்தை அதிகரிக்கும் இணைய வழிக் கல்வி

ஆபத்தை அதிகரிக்கும் இணைய வழிக் கல்வி

தமிழகத்தில் தற்போது 21 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உள்ளது. தமிழ்வழியில் கல்வி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்தப் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. தாய்த் தமிழ் பள்ளிகள் சந்திக்கும் முதல் சிக்கல், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம்தான். வேறுபல சவால்கள் இருந்தாலும் அவைகளைச் சமாளிக்க முடியும்.

இணைய வழிக்கல்வியை யார் விரும்புகிறார்கள், தேவை என்கிறார்கள் என்று பார்தால், யார் எல்லாம் பணம் கட்டி குழந்தைகளை படிக்க வைக்கின்றார்களோ அவர்கள்தான் இணைய வழிக் கல்வி தேவை என்கிறார்கள். குறிப்பாக தனியார் பள்ளிகள்தான் இணைய வழிக் கல்வியை தீவிரமாக செய்கின்றார்கள். அதிலும் ஆங்கில வழிப் பள்ளிகள்தான் செய்கின்றனர். 60% மாணவர்கள் தமிழ் வழியில், அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களுக்கு இது தேவைப்படவில்லை.

ஏற்கனவே இங்கு பணம் உள்ளோருக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதோருக்கு ஒரு கல்வி என்பதுதான் நடைமுறையில் உள்ளது. இந்த இணையவழிக் கல்வி இந்தப் பிரிவினையை தீவிரமாக்கும். பாகுபாடுகள் அதிகரிக்கவே செய்யும். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்த இணைய வழிக் கல்வி என்பதும் form of Discrimination தான். இதனை மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாகவும் நாம் பார்க்கவேண்டியுள்ளது.

நேற்று நண்பர்கள் பலரிடம் பேசினேன். நிறையத் தகவல்கள் உள்ளது இதனைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் காலை 8.30 மணிக்கு இணைய வழிக் கல்வியை தொடங்குகின்றனர். 8.30 முதல் 9.30 வரை காலை கூட்டம் (பிரேயர்) நடத்துகின்றனர். அதன்பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு பாட ஆசிரியர் வந்து வகுப்பெடுகின்றார். மாலை 4 மணிக்குதான் முடிகின்றது. பள்ளி இயங்குகின்ற முழு நாள், முழு நேரத்தையும் இணையம் வழியாக வழங்குகின்றனர். மேலும் சில பள்ளிகள் காலை 2 மணி நேரம் பாடம், நடத்துகின்றனர் மதியம் 2 மணி நேரம் தேர்வு நடத்துகின்றனர்.

இதுபோன்ற இணைய வழி கல்வியை off line, on line என பள்ளிகள் அவர்களுக்கேற்றாற்போல் செய்கின்றனர்.

இதனால் குழந்தைகளுக்கு உருவாகும் பாதிப்புகளையும் நாம் பார்க்க வேண்டும். தலை வலி, கை கால் வலி, கண் வலியில் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இரவெல்லாம் கை, கால் வலிகின்றது என அழுததால் இணைய வழி வகுப்பினை நிறுத்திவிட்டேன் என்றும் ஒரு பெற்றோர் கூறினார். மேலும், செல்பேசியையே உற்றுப் பார்த்துகொண்டிருப்பதால் கண் மற்றும் மூளை தொடர்பான நரம்பியல் சிக்கல்கள் உருவாகின்றன. முகத்தில் கட்டிகள் தோன்றுகின்றன.

எங்கள் பள்ளியில் EMIS போடும்போது, பெற்றோர்கள் சிலருக்கு தொலைபேசி எண் இல்லாத காரணத்தால், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் எண்களைப் போட்டுள்ளோம். எங்களுடைய பகுதிகளில் இணைய வழிக் கல்வி என்பதை நினைத்துகூடப் பார்க்கமுடியாது.

என்னைப் பொறுத்த அளவில், இது குழந்தைகளுக்கு தற்செயலாகக் கிடைத்துள்ள விடுமுறை. ஜாலியாக கொண்டாடட்டும். மகிழ்ச்சியாக இருக்கட்டும். இப்போது நாம் அவர்களுக்கு பாடம் எதுவும் நடத்த தேவையில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே, தோழர் விஜய் அசோகன் சொல்லியதுபோன்று, குழந்தைகள் எப்போதும் எதையேனும் கற்றுக்கொண்டுதான் உள்ளனர்.
இந்த நேரத்தில் புதிதாக நாம் எதையும் கற்றுக்கொடுக்கவேண்டும் என பார்க்காமல், விடுமுறையினை அவர்கள் ஜாலியாக கொண்டாட்டும் என்பதுதான் எனது கருத்து.


இதில் இன்னொரு முக்கியமான ஒன்றையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. தொடக்கக் கல்வி என்பதே தமிழ் எழுத படிக்கக் கற்றுக்கொள்வதுதான். மேலும் இரு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் வர தாமதமானது, முதல் பருவம் முடியும்போதுதான் வந்தது. அதே போன்று சமச்சீர் கல்வி மாறியபோது ஒரு பருவம் முழுவதும் புத்தகமே இல்லை. அதனால் கல்வி ஆண்டின் முதல் மூன்று மாதங்கள், அதாவது முதல் பருவம் புத்தகம், பாடம் இல்லாமல் சமாளித்த அனுபவம் நமக்கு உள்ளது. இது ஒரு நோய்த் தொற்றுக் காலம். பள்ளியை 12 ஆம் வகுப்பிற்கு முதலில் தொடங்கி படிப்படியாக 6 கட்டமாக அரசு பள்ளிகளைத் தொடங்க உள்ளதாக தெரிகின்றது.

நம்மைப் பொறுத்த அளவில் நம்முடையது தொடக்கக் கல்விதான். நாம் ஒன்று அவசரப்படத் தேவையில்லை எனத் தோன்றுகிறது. முதல் பருவம் ஆகஸ்டில் முடியும். அதற்குள் அரசும் என்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்க்கலாம் அதன்பிறகு செப்டம்பர் மாதம் நாம் இதுகுறித்துப் பேசலாம் என நான் நினைக்கின்றேன். இதனை என்னுடைய கருத்தாக முன்வைக்கின்றேன். இதில் இன்னொன்றையும் நாம் பார்க்கவேண்டும், இதுபோன்றச் சூழல்களைக் கருத்தில் கொண்டுதான் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கை எனக்கூறுகின்றது. குழந்தைக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், வயதின் அடிப்படையில் வகுப்பில் சேர்த்து கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகள் கற்றுகொள்வார்கள். இப்படித்தான், பர்கூர் மலைப் பகுதியில் குழந்தைத் தொழிலாளராக இருந்த ஒரு மாணவர்
7-வகுப்பில் சேர்ந்து, ஆய்வுகள் செய்து 2017 ல் மத்திய அரசின் இளம் மாணவர் விஞ்ஞானி என்கிற விருதினைப் பெற்றான். அதனால் 14 வயது வரையுள்ள குழந்தைகள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டாட்டும் என விடுவதுதான் சிறப்பு என நினைக்கின்றேன்.
இதனையொட்டிதான் கர்நாடகாவில்  7 வகுப்பு வரை இணையவழிக் கல்வி முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.


அடுத்தது, இந்த விடுமுறையில் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதைவிட ஆசிரியர்களுக்கு கருத்துப் பயிற்சி அளிக்கலாம் என நினைக்கின்றேன். இணையம் வழியாக வேறு யாரேனும் உள்ளே புகுந்து அவர்களது கருத்துகளை திணிக்கும் ஆபத்து உள்ளது என தோழர் கீர்த்தி முதலிலேயே குறிப்பிட்டார்கள். அதுபோன்ற கருத்துகள் ஆசிரியர்களிடம் எளிதில் வந்தடையும். அதனால்தான், கோ கோ கொரோனா பாடுவது, விளக்கேற்றுவது, தட்டிக்கொண்டு ஊர்வலம் போவது எல்லாம் நடக்கின்றது. இன்னும் கொரோனா நோய் தொற்று பரவல், மருந்து கண்டுபிடிக்கின்ற முயற்சி, கொரோனா தொடர்பான அறிவியல் கருத்துக்கள், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்புகள், பாதிபுகள் குறித்தெல்லாம் ஆசிரியர்களுக்கு நிச்சயம் தெரியவேண்டும். எத்தனை ஆசிரியர்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. எனவே, இந்த விடுமுறை நாட்களில் நமது தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் குறித்து யோசிக்கலாம்.
அடுத்ததாக ஒரு செய்தி. நேற்று ஒரு நண்பரிடம் இணையவழிக் கல்வி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது திண்ணைப் பள்ளி குறித்த பேச்சு வந்தது. அப்போதுதான் நினைத்தேன், நம்முடைய தெருவில், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலரையோ அல்லது தெருவில் உள்ள ஒரு ஆசிரியரையோ கொண்டு சொல்லிக்கொடுக்க முடியுமா என்பது குறித்தும் யோசிக்கலாம். இதுவும் கூட 9 ஆம் வகுப்பிற்கு மேலுள்ள மாணவர்களுக்குதான். 14 வயது வரை எதுவும் தேவையிலை என்பது என் கருத்து.

இதுபோன்ற இணையவழி கல்வி தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு வழிகாட்டுதல் உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கல்வியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள், குறிப்பாக நரம்பியல் மருத்துவர்கள் அடங்கிய குழுவிடம் ஆலோசனை பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கலாம்.

இறுதியாக 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து சில வார்த்தை. என்னுடைய மகன் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பு. நோய்த் தொற்று அதிகரிக்கும் நிலையில் மாணவர்களை தேர்வு எழுதச்செய்வது சரியில்லை என்பதை உணர்ந்து, தேர்வை ரத்து செய்யக்கோரி பெற்றோர் என்ற முறையில் வழக்கு தொடுத்தேன். நோய் தொற்று காரணமாகவும்; ஒவ்வொரு ஆண்டும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அதிகரித்து வருகின்றது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி தேர்வு நடந்திருந்தால் 97% என அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். 97% என்பது ஏறக்குறைய 100% தான். எனவே, தேர்வை ரத்து செய்யவேண்டும்; ஊரடங்கு காரணமாக 81 நாள்கள் வீட்டிலிருக்கும் மாணவனை 82 வது நேரடியாக தேர்வெழுத வைப்பது குழந்தைகள் மீதான வன்கொடுமையாகும். கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, தேர்வினை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வழக்கு தொடுத்தேன். வழக்கமாக இரவு 12 மணிக்கு மேல் தூங்கும் என் மகன் தேர்வு ரத்து என அறிவித்த அன்று இரவு 9.30 மணிக்கெல்லாம் நிம்மதியாகத் தூங்கிவிட்டான். தலையிலிருந்து ஏதோ ஒன்றை இறக்கி வைத்தது போல் ஃபிரியாக உள்ளது என்றான். 10-ஆம் வகுப்பு மாணவன் நிலையே இப்படி எனில் குழந்தைகள் குறித்து நாம் சொல்லவேத் தேவையில்லை. நன்றி.

(கல்வி சிக்கல்கள் குறித்தும், இணைய வழிக் கல்வி குறித்தும், அமெரிக்காவில் உள்ள Eduright அறக்கட்டளையும், தாய்த்தமிழ்க் கல்விப் பணியும் இணைந்து 13.06.2020 அன்று நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, நான் பேசியதன் சுருக்கம்)

14.06.2020 முகநூல் பதிவு