காவல் நிலைய சித்திரவதையால் அஜீத்குமார் மரணத்திற்கு காரணமான போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் சிலவற்றை கருத்திலும் கவனத்திலும் கொள்வது நல்லது.
இந்தக் கைது நடவடிக்கையால் நீதி கிடைத்துவிடுமா என்றால் சந்தேகமே. இந்தப் போலீசார் பிணை கேட்டுச் சென்றால், இதே நீதிபதியோ / இதே நீதிமன்றமோ இப்போதுள்ள உணர்வுடன் பிணை மறுப்பார்களா. குறைந்த பட்சம் இப்போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரையாவது இவர்கள் பிணை வழங்கப்படாமல் இருக்கவேண்டும்.
சிபிசிஐடி விசாரணை என்பது, இப்போது சி.பி.ஐ விசாரணை என மாறியுள்ளது, குற்றமிழைத்த போலீசாருக்கு மிகுந்த வசதி. கிடப்பில் போட்டு வழக்கினை நீர்த்துப்போக செய்வதற்கான வழி இது.
போலீசார் கைது செய்யப்பட்டது, அப்போலீசாரின் குடும்பம் போராட்டம் நடத்துகின்றனர். இதனை காவல் துறையே திட்டமிட்டு, வழிகாட்டி நடத்துகின்றது. இது ஒரு வகையான Balance / Noramalice செய்யும் முயற்சி.
கடந்த 2011 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் போலீசார் 5 பேர், 4 பழங்குடி இருளர் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் பதவியிலுள்ள போலீசார் செலவுகளை பார்த்துகொண்டனர்.
இன்று வரை அந்தப் போலீசார் 5 பேரும் பணியில் உள்ளனர். 14 ஆண்டுகள் ஆகியும் விசாரணை நடைபெறவில்லை. மாநில மனித உரிமை ஆணையம் 4 பழங்குடி பெண்களும், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்திற்கும் இழப்பீடாக மொத்த 15 லட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க உத்திரவிட்டது. போலீசார் சென்னை உயர் நீதி மன்றத்தில் இதற்கு தடை வாங்கிக்கொண்டனர்.
இதற்கு மட்டுமல்ல, பொதுமக்களை சித்திரவதை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் செலுத்துமாறும், மனித உரிமை ஆணையம் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் வழங்கிய நூற்றுக்கணக்கான உத்திரவுகளுக்கு போலீசார் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி உள்ளனர். இவையெல்லாம் அரசின் ஆதரவு இல்லாமல் நடைபெறாது.
சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது மாநில மனித உரிமை ஆணையல் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு போலீசார் அரசு வாகனத்தில், அரசு செலவில் வந்து செல்கின்றனர். புகார் அளித்த பாதிக்கப்பட்டோர் அன்றைய வேலை மற்றும் வருமானத்தை இழந்து கடன் வாங்கி சொந்த செலவில் வந்து செல்கின்றனர். தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு / குற்ற வழக்கிற்கு விசாரணைக்குச் செல்லும் போலீசார் அரசு செலவில், அரசு வாகனத்தில் வருவதை தடை செய்யவேண்டும்.
அரசின் இதுபோன்ற ஆதரவும் சலுகையும்தான் போலீசா தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனக்குத் தெரிந்து செஞ்சி கிளைச் சிறையில் ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை வழக்கிலும், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் வழக்கிலும் சிறைக்காவலர்களும், போலீசாரும் பிணை இல்லாமல் உள்ளனர்.
மீதமுள்ள அனைத்து வழக்கிலும் கொலை, சித்திரவதை, ஊழல், கொள்ளை உள்ளிட்ட அனைத்துவித குற்றச் செயல்பாடுகளிலும் தொடர்புடைய போலீசார் பணியிடை நீக்கம், காத்திருப்போர் பட்டியல் என்பதோடு அரசு நின்று விடுகிறது. அஜீத்குமார் போன்ற பொது சமூக அழுத்தம் பெறும் சம்பவங்களில், போலீசார் மீது வழக்கு பதிவு செய்தாலும் பணியிடை நீக்கம், கைது, பிணை என்பதோடு அரசு நின்று விடுகிறது.
பெண் காவல் கண்காணிப்பாளரை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த, மிரட்டிய அச்சுறுத்திய உயர் காவலதிகாரி ராஜேஷ்தாஸ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும், சிறை செல்லாமல் வெளியில்தான் உள்ளார்.
பல்பிடுங்கிய பல்பீர் சிங் மீதோ, ஸ்டெர் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு தங்களை எப்படியும் காப்பாற்றும், விட்டுவிடாது என்று காவல் துறை குற்றமிழைக்கும் போலீசார் 100% நம்புகின்றனர். போலீசாரின் இந்த நம்பிக்கைதான் அவர்களை தொடர்ந்து பல்வேறு வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கின்றது.
இன்னொன்று முதல்வரிடம் துறை மாற்றப்படவேண்டும். தனி அமைச்சர் நியமிக்கப்படலாம். முதல்வர் பொறுப்பேற்கமாட்டார் என்பதாலும் தொடர்ந்து போலீசார் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், உயர் காவலதிகாரிகள், தங்களுக்கு கீழுள்ள போலீஸ் அதிகாரிகளின் தவறுகளை, குற்றங்களை, தங்கள் துறையின் ஒழுங்கீனங்களை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல மாட்டார்கள். முதல்வருக்கு தெரிவிக்காமல் மறைப்பார்கள். இதுவும் குற்றமிழைக்க காரணமாக உள்ளது. முதல்வருக்கான பலதுறைகள், நேரம், பணி காரணமாக இதில் கவனம் செலுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, பராமரிப்பது, குற்றங்களைத் தடுப்பது, நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பது போன்றவைகளில் தனி அமைச்சர் இருந்தால் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படமுடியும். பல்வேறு பணிகளையும் துறைகளையும் வைத்துள்ள முதல்வருக்கு நேரம் ஒதுக்கி, கவனம் செலுத்தி செயல்படுவது சிரமம்.
No comments:
Post a Comment