Friday, September 11, 2015

மலைக் குறவர்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டும் குற்றப்பிரிவு காவல் துறையினர்

மலைக் குறவர்களை கடத்திச் சென்று  
பணம் கேட்டு மிரட்டும் சென்னை-பூந்தமல்லி
குற்றப்பிரிவு காவல் துறையினர்!  தேவை உடனடித் தலையீடு!


குழந்தைகளையும் தொழிலதிபர்களையும் கடத்திச் சென்று மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கின்றவர்களை குற்றவாளிகள் என்போம். இதனை தடுப்பதற்கும், தண்டனை வாங்கிகொடுப்பதற்கும் உருவாக்கப்பட்ட காவல் துறையே இதனை செய்தால் அவர்களை என்னவென்று சொல்வது? அப்படிப்பட்டதுதான் இது….

புதிதாக திருமணமான சக்திவேல்-சரஸ்வதி தம்பதியரை தியாகதுருகம் அருகிலுள்ள சித்தலூர் கிராத்தில் அமைந்துள்ள அவர்களது குலதெய்வமான பெரியாயி கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு முடித்து மாலை 6 மணியளவில் திண்டிவனம், திருவக்கரை அருகே உள்ள நெம்மிலி கிராமத்திலுள்ள தங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஜோதி தம்பதியினரும், அவர்களது குடும்பத்தினரும். புதுமணத் தம்பதியினரோ கள்ளக்குறிச்சி அருகே உள்ளே கச்சிராபாளையம் கிராமம். அவர்களது வீட்டில் அவர்கள் இருந்தனர். நள்ளிரவு தாண்டி விடியற்காலை 3 மணியளவில் தலையில் துண்டுகட்டி, வெறும் பணியன், கைலியுடன் நெம்மிலி கிராமத்திற்குச் சென்ற 7 போலீசார், நல்ல தூக்கத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது அண்ணன் செல்வராஜ், மைத்துனர் ராஜா ஆகியோரை தட்டி எழுப்பி, அடித்து இழுத்துச் சென்று, தூரத்தில் நிறுத்தியிருந்த வெள்ளை நிற போலீஸ் வேனில் ஏற்றிகொண்டு சென்றுள்ளனர்.

இவர்களுடன் கச்சிராபாளையம் சென்று புதுமாப்பிள்ளையான சக்திவேல் உள்ளிட்ட சிலரையும் அடித்து இழுத்து வேனில் ஏற்றியுள்ளனர் சீருடை அணியாத காவலர்கள்.

இது நடந்தது 2-ஆம் தேதி. மறுநாள் 3-ஆம் தேதி காலை 6 மணியளவில் கிருஷணமூர்த்தியின் மனைவி ஜோதி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் இரவு போலீசார் தங்கள் கணவர் உள்ளிட்டோரை கடத்திச் சென்றதையும், தம்பி ராஜாவை கூட்டேரிப்பட்டில் இறக்கிவிட்டுள்ளதையும் கூறியுள்ளார். அவரும் வானூர் காவல் நிலையில் விசாரித்து தகவல் எதுவும் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இதனால் 4-ஆம் தேதி டி.எஸ்.பி அவர்களிடமும், 5-ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக புகார் அளித்துள்ளார்.

இதன்பிறகு வானூர் காவல் நிலைய அதிகாரிகள் மூலமாக கிடைத்த தகவல்படி ஜோதி, அவரது மாமியார் ரோகினி, சக்திவேல் மனைவி சரஸ்வதி ஆகியோர் பூந்தமல்லி காவல் நிலையம் செல்கின்றனர். 8-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சென்றவர்களை, மறுநாள் காலை 10.30 க்கு வரும்படி போலீசார் கூறியுள்ளனர். இரவு பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் படுத்திருந்த இவர்கள் காலை காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போதுதான் திம்மலை கிராமத்திலுள்ள இவர்களது உறவினர் ஆறுமுகம் என்பவரையும் போலீசார் பிடித்து வந்துள்ளதை அறிந்துள்ளனர். இவருக்காக திம்மலை ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்கம் மற்றும் ஒரு வழக்கறிஞர் இருந்துள்ளனர்.

காலையிலிருந்து கெஞ்சி, கூத்தாடி தங்கள் கணவன்மார்களை பார்த்த பெண்கள் இருவரும் பயந்துபோயுள்ளனர். போலீசாரால் கடும் சித்திரவதைக்கு ஆளாகி உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் காயங்களுடன் பெரும் அவதியில் இருந்துள்ளனர்.

நாளை 10 ஆம் தேதி 3 மணிக்குள் 30 ஆயிரம் பணமும், 10 பவுன் நகையும் கொண்டுவந்து கொடுத்தால் வழக்குபோடாமல் விடுவிக்கின்றோம், அழைத்துச் செல்லுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இன்று மாலை 6.45 மணிக்கு ஜோதி மூலமாக புகார் எழுதிக்கொண்டிருக்கும்போதே 5 பவுனும், 10 ஆயிரம் பணமும் கொண்டுவந்தால் இருவரையும் விட்டுவிடுவதாக ஜோதியின் செல்பேசிக்கு, பூந்தமல்லி காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி செல்போனில் இருந்து போலீசார் பேசினர்.

இவை அணைத்தையும் விரிவாக குறிப்பிட்டு உள்துறைச் செயலாளர், காவல் துறைத் தலைவர்,  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டகுப்பம் டி.எஸ்.பி, வானூர் கா.நி ஆய்வாளர், பூந்தமல்லி டி.எஸ்.பி மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் ஜோதி புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இப்புகாரில் சட்டவிரோதக் காவலில் உள்ள தனது கணவர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படவேண்டும், கடத்தி சென்று சித்திரவதை செய்த போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிகை எடுக்கவேண்டும், பாதுகாப்பு மற்றும் நீதி கிடைத்திடவேண்டும் என்ற கோரிக்கையினை கேட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட மலைக்குறவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.
கடத்திச் சென்று சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்துவைத்துகொண்டு பணம் கேட்டு மிரட்டும், பணம் பறிக்க முயலும் பூந்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 


 

No comments: