Thursday, September 17, 2015

பாழடையும் பெரியாரின் ஈரோடு நினைவிடம்.. பாதுகாக்கப்பட வேண்டும்..

பாழடையும் பெரியாரின் ஈரோடு நினைவிடம்..
பாதுகாக்கப்பட வேண்டும்..


கடந்த மாதம் நண்பர் பழனிச்சாமியின் திருமணத்திற்கு சத்தியமங்கலம் சென்று திரும்புகின்ற வழியில் ஈரோட்டில் பெரியார் நினைவில்லம் சென்று வந்தோம். மனம் பெருத்த கவலையில் ஆழ்ந்தது. பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்கின்றவர்களுக்கும், விமர்சனங்களும் நாம் பதில் சொல்லிவிடுகின்றோம். ஆனால் பெரியார் பிறந்து, வளர்ந்து, சமூக பணிக்கான செயல்பாடுகளை தொடங்கிய அவருடைய வீட்டினை – தற்போது நினைவில்லம் என்று அழைக்கப்படுகின்ற – இடத்தினைப் பார்க்கின்ற பெரியார் ஆதரவாளர்கள் வேதனைப்படாமல் வெளியேற முடியாது.

பலபேர் தங்களுடைய சொந்த தாய் தந்தையருக்கான நினைவிடத்தை அவ்வளவு நேர்த்தியாக, பொறுப்புணர்வுடன், சுத்தமாகவும், அழகாகவும் பாதுகாத்து வருகின்றனர். நான் கூட எனது அப்பாவின் நினைவாக அவர் பயன்படுதிய மேசையை ஊரில் இருந்து எடுத்துவந்து பாதுகாத்து வருகின்றேன்.

ஆனால் சமூக நீதிக்கும், தமிழ் சமூகத்திற்கும், பகுத்தறிவிற்கும், மூட நம்பிக்கை எதிர்ப்பிற்கும், சமூக ஜனநாயக் செயல்பாடுகளுக்கும் தந்தையான தந்தைப் பெரியாரின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பும் இன்றி பாழடைந்து வருகின்றது. இதனையே அய்யாவின் 137-வது பிறந்த நாள் கருத்தாக வேதனையுடன் பதிவிடுகின்றேன். 
இதனையொட்டி சில குறிப்புகள்…

  1. இந்தியாவிற்கே வழிகாட்டி என பெருமையோடு குறிப்பிடுகின்றோம். அந்த பெருமைகள் எதுவும் நினைவிடத்தில் இல்லை. நாம் ஏற்கனவே பல முறை பத்திரிகைகளில், தமிழக அரசு விளம்பரங்களில் பார்த்திருந்த மிகவும் பிரபலமான புகைப்படங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளும் மழை, வெயிலில் பாதுகாக்காமல் வெளிரிப்போய் பொலிவிழந்து காணப்படுகின்றது. இருக்கின்ற படங்களிலும் ஜெ.மட்டுமே முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். கலைஞர் ஒன்றிரண்டு மட்டுமே. இவைகளை சில நிமிடங்களில் சுற்றிப் பார்த்துவிடலாம். மிகவும் அரிதான படங்கள் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு ஒன்றுமில்லை. பெரியார் நடத்திய இதழ்கள் ஒன்று கூட காட்சிக்கு இல்லை. பகுத்தறிவு, குடியரசு இதழ்களின் ஒன்றிரண்டு முதல் பக்கம் மட்டும் பெரிதாக ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
  2. இதே நினைவிடத்தில் பின்பகுதியில் அண்ணா தங்கியிருந்தார் என அதுவும் பாதுகாக்கப்படுகின்றது. இப்பகுதி ஓப்பீட்டளவில் முக்கியத்துவம் கொடுத்து செய்துள்ளனர். பெரியாரின் நினைவில்லத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. அண்ணாவிற்கு வேண்டாம் என்பதில்லை. பெரியார் நினைவுகள் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான்.
  3.  பெரியார் பிறந்த கட்டில் என்று ஒரு அட்டையில் வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனாவில் எழுதி அந்தக் கட்டில் மீது வைத்துள்ளார்கள். அந்தக் கட்டி எவ்விதப் பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியில் சாதாரணாமாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் மேல்பகுதியில் உள்ள மரங்கள் உளுத்து கொட்டுகின்ற தூசுகள் படிந்து ஒரு சதவீதம் கூட பாதுகாக்கப்படாமல் போட்டுவைக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெரியார் பயன்படுத்திய மேசை, ஈசிசேர், கைத்தடி போன்றவைகளும் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கண்ணாடியிலான ஒரு கதவு உள்ளது. ஆனால் அதன் ஜன்னல்கள் அனைத்தும் திறந்தபடியே உள்ளது. ஒரே அழுக்கும், புழுதியும், குப்பையுமாக அந்த அறை உள்ளது. எதற்காக இவைகளை இப்படியான மோசமான நினைவுகளுடன் காட்சிப்படுத்துகின்றார்கள் என்று தெரியவில்லை.
  4. மிகப்பெரிய வீட்டின் ஒரு பாதி மட்டுமே இப்படி நினைவில்லம் என்ற பெயரில் உள்ளது. மறுபாதி பூட்டப்பட்டு எவ்வித பயன்பாடுகளும் இல்லாமல் பாழடைந்து, குப்பைகள் சூழ்ந்து உள்ளது. நகரங்களில் தெருமுனைகளில் கேட்பாரற்று கிடக்கும் கட்டங்களை நினைத்துப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. அங்கிருந்த மேலாளர் இடம் அந்த வீடு ஏன் பூட்டப்பட்டு கிடக்கிறது என்று கேட்டதற்கு அது டிரஸ்டில் உள்ளது என்றார். அதென்ன டிரஸ்ட்? பெரியாரின் நினைவுகளை பாழடைந்து மறக்கடிப்பதற்கு ஒரு டிரஸ்ட்டா?
  5.   உலகத்தோடு பெரியாரை ஒப்பிடுகின்றோம். அவரின் நினைவிடத்தை உள்ளூரில் உள்ள ஒருவன் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவில்தான் வைத்துள்ளோம். ஹைதாராபாத்தில் நிஜாம் அரசர்களின் நினைவிடத்தை அருங்காட்சியமாக மாற்றி அம்மாநில அரசு பாதுகாத்து, உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது. அதனை சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது. ஆனால் நமது பெரியாரின் நினைவிடத்தைப் பார்க்க பத்து நிமிடமே அதிகம்.
  6. உலகத் தரத்தில் பெரியாரின் நினைவிடத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு அரசு தனியொரு சுதந்திரமான நிர்வாக அமைப்பினை உருவாக்கவேண்டும். பெரியாரின் எழுத்து, பேச்சுக்களை நாட்டுடமை ஆக்கவேண்டும். அருகில் பூட்டப்பட்டு பாழடைந்து வரும் மறுபாதி வீட்டையும் திறந்து புணரமைத்து பாதுகாப்பான பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். 
  7. வாய்ப்புள்ள அனைவரும் பெரியாரின் நினைவில்லம் சென்று உலகத் தரத்தில் பெரியாரின் நினைவிடம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை பிரச்சாரமாக எடுத்துச் செல்லவேண்டும். இதுவே பெரியாரின் 137-வது பிறந்த நாள் வாழ்த்தும் செய்தியும். 

1 comment:

சிவக்குமார் said...

வீரமணி கருணாநிதிக்கெல்லாம் இது குறித்துத் தெரியாதவர்களா ?