Friday, October 4, 2024

கொட்டுக்காளி

 கொட்டுக்காளி.



பலவும் இப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நம்ப வைக்கப்பட்டு பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றோம். அப்படி இல்லை என்றால், கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றோம். அல்லது சந்தேகப்படுகின்றோம். அதுவும் இப்போதைய சமூக வலைதள சூழலில் இது மிக எளிமையாகிவிட்டது. சிலர்தான் அதில் என்னதான் உள்ளது, எப்படித்தான் உள்ளது என்பதை அறிய, புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார்கள். இவ்வகையான முயற்சிகள் குறைவு அல்லது மிக மிகக் குறைவாக இருக்கலாம். இம்முயற்சியின் கருத்துகள் அனைத்திலும் வேறுபட்டதாக வெளிபடும். இது எப்போதேனும் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அல்லது பெறும்.
குறிப்பாக அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, ஹோட்டலில் உணவு, பேருந்து & தொடர்வண்டி பயணம் ரேஷன் கடை பொருட்கள் போன்றவை எல்லாம் சரியில்லாதவை, மோசம் என்று நம்பப்படுவதைப் போன்று, ஒரு திரைப்படம் என்றால் இப்படித்தன் இருக்கும், இருக்கவேண்டும் என்று நமது புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது.
கொட்டுக்காளி இப்படி இரண்டு வகையிலும் அணுகப்பட்டுள்ளது. அதனால்தான் வெகுமக்களை படம் சென்றடையவில்லை என்றாலும், திரை உலக தளத்திலும், தீவிர ரசிகர்களாலும் விருப்பத்துடன் அணுகப்பட்டு, அதன் எல்லையைத் தொட்டுள்ளது.
என்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள்ளுங்கள், என்ன வேண்டுமானலும் நடக்கட்டும் என்ற இறுக்கமான, உறுதியான மனநிலையில் முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் அன்னாபென். எரிச்சலுடன் பயணிக்கும் இவரது தாய்மாமன் சூரி மற்றும் 10 பேர். ஒரு சிறுவன், ஒரு சேவல். ஒரு ஆட்டோ. ஒரு ஸ்பிளண்டர் பைக், ஒரு ஸ்கூட்டி, ஒரு எம்80 என மூன்று இரு சக்கர வாகனங்கள்.

இந்த மூன்று வண்டியிலும், ஆட்டோவிலும் சென்றுகொண்டே இருக்கின்றார்கள். சாலையும் மரங்களும், வெயிலும் வெட்டவெளியுமாக போய்க்கொண்டே இருக்கின்றார்கள். சில இடங்களின் தார்சாலையிம் வெப்ப அணல் முக்கத்தில் அடிப்பது போல் உள்ளது.
Live Recording Sound மிகவும் புதிதானது. எங்காவது ஒன்றிரண்டு காட்சிகள் இல்லாமல் முழு படமும் Live Recording, காற்று வீசும் சத்தத்துடன், ஆட்டோ மற்றும் மூன்று இரு சக்கர வண்டிகளின் சத்தமும் சேர்ந்து பலருக்கும் ரசிக்க முடியாத தன்மையை அளித்துள்ளது.
கூழாங்கல் படத்தில் நடந்துகொண்டே இருப்பார். இதில் 10 பேர் கொண்ட உறவினர் கூட்டம் வாகனங்களில் சென்று கொண்டே இருக்கிறது.
கூழாங்கல்லில் எங்கு செல்கிறார் என்பது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. இதில் எங்கு செல்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள் என்பது பாதிக்குமேல்தான் புரியத்தொடங்குகிறது. அதனாலும் படம் பார்ப்போருடன் ஒட்ட முடியாமல் இருந்திருக்கும்.
பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிலிருந்து அதுவும் இதுபோன்ற ரசிப்புத் தன்மை மிக்கதில் நாம் புதிய பார்வைக்கு செல்ல ரொம்ப யோசிக்கின்றோம்.
படத்தின் போக்கு Making மட்டுமல்ல, படத்தின் மையமும் புதிது. கல்லூரிக்கு படிக்கச் சென்ற இடத்தில் வேறு பையனை காதலிக்கும் பெண்ணின் மனதை, மந்திரம் ஓதி, பூசை செய்து மாற்ற ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்வதுதான் மையம். அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகும் தாய்மாமன் சூரி. இதற்கு முந்தைய இரு படங்களை விட இதில் நன்றாகப் பொருந்திப் போயுள்ளார். இயல்பாக இருந்துள்ளார்.
கதைக்கு தொடர்பில்லை என்றாலும் இடை இடையே சின்ன சின்னக் காட்சிகள் எல்லாம் மனிதர்களை மனிதர்களாகக் காட்டும் முயற்சி.
காதலித்து திருமணத்திற்குப் பிறகு கொலை செய்யப்படுவதைப் போன்று, காதலித்து திருமணத்திற்கு முன்பாகவே இப்படி கையாளப்படும் போக்கு அதிகம் என்பதை படம் சொல்கிறது. ஆனால் இதுகுறித்து பொதுச் சமூகம் பேசவில்லை.
கொட்டுக்காளி என்பது ஏதோ சேவல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தான் நினைத்த ஒன்றில் யாருக்கும் கட்டுப்படாமல் பிடிவதமாக இருக்கும் பெண்ணை ‘கொட்டுக்காளி’ என்று அப்பகுதியில் கூறுவார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒரு சொல் இருக்கும்.
இப்படி இருக்கும் ஆண்களை தடிமாடு, கோவில் மாடு, ஊராகாலி (இவ்வார்த்தையை சொல்வது சரியல்ல. ஆனால், கிராமத்தில் இருந்தது) என்று சொல்வதை கேள்விபட்டுள்ளேன்.
ஒவ்வொரு பகுதியிலும் ஆண்களையும் பெண்களையும் குறிப்பிட சொற்கள் இருக்கும்.

(01.10.2024 முகநூல்)


No comments: