Monday, October 25, 2021

பஞ்சாப் - போராட்டம்-உத்தம்சிங்

ரெளலட் சட்டத்தை எதிர்த்தும், திரும்பப் பெறக்கோரியும் பஞ்சாபில் போராட்டம் நடத்தக் கூடிய மக்கள்தான் முதல் படம்.

தங்களை எதிர்க்க நினைத்தால் அச்சம்வரவேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷார் திட்டமிட்டு நடத்திய  ஜாலியன்வாலாபாக் படுகொலைதான் சம்பவம்தான்

அடுத்த இரண்டு படங்கள்.

பிரிட்டிஷார் செய்த இந்தப் படுகொலைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது, இப்போது  விவசாயச் சட்டங்களை திரும்பப்பேற கோரி போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகள் மீது கார் ஏற்றி பாஜக அரசு செய்த படுகொலை. 





உத்தம்சிங்

இந்திய விடுதலைப் போராட்டத்தை பஞ்சாப்பிலிருந்த பகத்சிங் உள்ளிட்டோர் உயிர்ப்போடு எடுத்துச்சென்றனர். உத்தம சிங்கும் மிக முக்கியமானவர் என்பதை இப்படம் உணர்த்துகின்றது.

இப்போதுள்ள இந்தியக் கொடுங்கோலாட்சிக்கு எதிரான போராட்டங்களையும் பஞ்சாப்தான் உயிர்ப்போடு ஏந்திச் செல்கிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கதான் ஜெனரல் டயரை லண்டனில், உத்தமசிங் கொலை செய்தார் என இதுவரை சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், இந்தப் படத்தில், நீதிமன்ற விசாரணையின்போது உத்தம்சிங் சொல்வார், "நான் குற்றமிழைக்கவில்லை. பிரிட்டாஷாரைக் கொலை செய்யவில்லை. பழிவாங்கவும் இல்லை. நான் சுதந்திரப் போராட்ட வீரன். இது என்னுடைய போராட்டம்" என்கிறார்.

இன்னும் நுணுக்கமான பலக் காட்சிகள் உள்ளன. ஜாலியன்வாலாபாக் படுகொலையினை ஏறக்குறைய 30 நிமிடம் காட்சிப் படுத்தியுள்ளனர். 

ஜெனரல் டயர் சுடும் காட்சியும், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தையும் ஒரு சில நிமிடங்களில் காட்டிவிடுவார்கள். ஆனால், உத்தம்சிங்க அவ்விடத்திற்குச் சென்று, அவதியுறுவதும், காயம்பட்டோரை தேடிப்பிடித்து காப்பாற்றும் காட்சிகள் கொடூரமாக உள்ளன. மனதை பதைபதைக்கச் செய்கின்றது. 



தமிழக அரசு அறிவித்திருக்கவேண்டும்

தமிழக அரசு அறிவித்திருக்கவேண்டும்.

Swiggy முந்திக்கொண்டுவிட்டது.


 

மாணவர்களும் போக்குவரத்தும்

இந்த ஆண்டு இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், தனியார் பள்ளிகளில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவர்கள் அரதப் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 1.50 லட்சம் மாணவர்களுக்கான பள்ளிகளில் வகுப்பறை, ஆசிரியர், ஆய்வகம், மதிய உணவு இவைகளுடன் ம முக்கியமான, போக்குவரத்து வசதிகள்..... அரசு என்ன செய்யப்போகின்றது எனத் தெரியவில்லை.

செய்தியின் கவனத்திற்குரிய தகவல்கள்..

- நகரில் ஆண்டுக்காண்டு பள்ளி பேருந்துகள் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது.

- அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றியதாக தனியார் வாகனங்கள் மீது பதியப்படும் வழக்குகள் எண்ணிக அதிகரித்தபடியே உள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் நிலைமை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  50% பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்| உதவி தலைமை ஆகிய இல்லை.

30% வட்டாரம் கல்வி அலுவலர்கள்,  28% பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்திருக்கும் நிலையில், பெருமளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

இந்நிலையில்தான் நவம்பர் 1 பள்ளி திறக்கப்படுகிறது. 



வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டவர்கள்

2016 ல் 2208 பேர், 

2017 ல் 2404 பேர், 

2018 ல்  2741 பேர் 

2019 ல் 2801 பேர் என, 4 வருடங்களில் மொத்தம் 10, 154 பேர் 

வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  

இத்தகவலை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் பதிவான வழக்குகளை தொடுக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவர அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெரும்பகுதி தற்கொலைகள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற நிலையில் உண்மை எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்கும். 

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) மதிப்பீடுகளின்படி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட 2016 நவம்பர் மாதத்தில் 1.29 கோடி பேர் வேலை இழந்தார்கள். 

CMIE மதிப்பீடுகளின்படி வேலையின்மை ஏப்ரல் 2021 ல் 8 சதவீதமாக இருந்தது . தற்போது 11.9 % அதிகரித்துள்ளது . 

2021 ஜனவரி முதல் மே மாதம் வரை 2.53 கோடி பேர் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

- அரசு ஊழியர், அக்டோபர் 2021 இதழில் 

LIC நாட்டிற்கு என்ன தந்தது?

நாட்டுடமையாக்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) நாட்டிற்கு என்ன தந்தது? 


2 வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய காப்பீட்டு கழகம் வழங்கிய நிதி ரூ. 184 கோடி .

3 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 285 கோடி.

4 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .1,530 கோடி. 

5 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .2,942 கோடி , 

6 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .7,140 கோடி , 

7 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .12,969 கோடி , 

8 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .55,097 கோடி , 

9 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .1,70,929 கோடி , 

10 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .3,94,799 கோடி , 

11 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .7,047 , 720 கோடி , 

12 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ .14,23,055 கோடி .


- அரசு ஊழியர், அக்டோபர் 2021 இதழில். 

மெய்யான வலிமை

"மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைபடுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை."

"பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம் மேல் வைக்கிற நம்பிக்கை - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிதான்".

"நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்து விட முயல்கிறோமோ அப்போதுதான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது"

"வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அரசியலிலா, சமுகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா, எங்கு அழுகத் தொடங்கியிருக்கிற தென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால்தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல் தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையையும் அணுக வேண்டுமென்று..."

'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி, முகமன் வார்த்தைகள் தான்'

- நெற்றிக்கண் நாவலில் நா.பார்த்தசாரதி


"........சிதம்பரத்துக்கு அருகில் கவரப்பட்டு என்ற கடற்கரைக்கோ, சரக்குக் கடத்திவர அத்தனை 'ரதங்களும்' புறப்பட்டுப் போயிருப்பதாக அர்த்தம்...."  நா.பா. எழுதியுள்ள நெற்றிக்கண் நாவலில் வரும் ஒருவரி இது.

தமிழக அரசியலைக் கவனித்துக் கொண்டிப்பவர்களுக்கு கவரப்பட்டு என்பதை விட, "வாண்டையார்" என்று சொன்னால் நன்கு தெரியும். சிதம்பரம் அருகே உள்ள இந்தக் கவரப்பட்டு என்கிற கிராமம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் இன்றும் வாண்டையார்கள் ஆதிக்கம் உள்ளது. வாண்டையார்கள் விரும்புவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க முடியும். மீறி நிற்க விரும்பினாலும் அவர்களது வீட்டிற்கு அழைத்து அன்பாகக் கூறுவது போல் மிரட்டுவார்கள். இவர்களது ஆதிக்கம்வெறும் அதிகாரத்திலானது மட்டுமல்ல, சாதி ஆதிக்கத்தையும் கடைபிடிப்பவர்களாகும்.

வாண்டையார்கள் இப்படி அரசியல் மற்றும் சாதி ஆதிக்கம் கொண்டவர்களாக இப்பதற்கு கடத்தல்தான் முழுநேர தொழிலாக இருந்துள்ளது. இக்கடத்தல் தொடர்பாக இன்றும் அப்பகுதியில் உள்ள பலரும் பல கதைகள் சொல்கிறார்கள்.

அநேகமாக நா.பா அவர்கள் 1965 வாக்கில் இந்த நாவலை எழுதியிருப்பார் என நினைக்கிறேன். அப்போது கவரப்பட்டு குறித்து குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது. கார்களைத்தான் ரதங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

- நெற்றிக்கண் நாவலில் நா.பார்த்தசாரதி

இதற்குதான் 1-ஆம் தேதி பள்ளி திறக்கப்படுகிறதா?

இதற்குதான் 1-ஆம் தேதி பள்ளி திறக்கப்படுகிறதா?

3, 5 -வகுப்பு குழந்தைகள் எல்லாம் பேனா, பென்சில் பிடிப்பதை மறந்தே போயிருப்பார்கள்.


#அடைவுத்_தேர்வு

#திறனறிவுத்_தேர்வு

#பொதுத்_தேர்வு

Tuesday, October 12, 2021

நவம்பர் 1 - பள்ளித்திறப்பு செய்ய வேண்டியது என்ன?

 பள்ளிக்கல்வி தொடர்பாக தொடர்ந்து அறிவிப்புகளும், தகவல்களும் வந்தபடியே உள்ளன. 1 ம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது ஏறக்குறைய 100% முடிவானது போன்றுள்ளது. நல்லது. இந்நிலையில், 20 மாதங்களுக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டுதல்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

ஊரடங்கு தொடங்கிய ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் சலிப்பான மனநிலையிலிருந்து விடுபட்டு, பள்ளிகள் மறந்த தற்போதைய சூழலுக்கு மிகவும் பழகியிருப்பார்கள்.

1ம் தேதி பள்ளித் திறப்பை, ஏதோ, சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்களன்று பள்ளி திறப்பதைப் போன்று அரசு | கல்வித்துறை கருதி விடக்கூடாது.

20 மாதங்கள் குழந்தைகள் கட்டுபாடுகள் இன்றி, சுதந்திரமாக, இயல்பாக இருந்திருப்பார்கள். அதனால், பள்ளிகள் திறந்த அன்றே பாடம், புத்தகம், குறிப்பேடு, படிப்பு, வீட்டு பாடம் என்றில்லாமல், குழந்தைகளை நிறைய பேசவைத்து எல்லோருடனும் சகஜமாக பழக வைக்க வேண்டும். பள்ளிச் சூழலுக்கு அவர்கள் இயல்பாக பழக வேண்டும். சுமையாகவோ, தொந்திரவாகவோ நினைத்து விடக்கூடாது.

குறைந்தபட்சம் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முழு நாளும் பள்ளி இல்லாமல், பள்ளி வேலை நேரத்தைக் குறைக்கலாம்.

மக்கள் பள்ளித் திட்டம் யாருக்கு?

மக்கள் பள்ளித் திட்டம் யாருக்கு?

மக்கள் பற்றி மற்றும் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா தொகுப்பு புத்தகம் வழங்கல் மற்றும் பயிற்சி என பள்ளிக் கல்வி ஒரே பரபரப்பாக உள்ளது.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க மக்கள் பள்ளி திட்டத்தை அமைச்சர் அறிவித்துள்ளார். தன்னார்வலர்களுக்கு அரசு ₹ 1000 ரூபாய் வழங்க உள்ளதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் எனக்குள்ள சந்தேகம், இத்திட்டம் யாருக்கானது. 

குழந்தைகளே இல்லாமல் எப்படிக் கற்றுக் கொடுப்பார்கள்.

தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம்  ஒரு சத வீதம் கூட பயனளிக்காது. 

ஏனெனில், தனியார் பள்ளி மாணவர்கள் யாரும், பள்ளி விட்டு வந்த பிறகு வீட்டில் இருக்க மாட்டார்கள். பாடங்களுக்கான தனிப்பயிற்சி செய்வார்கள். மேலும், நடனம், இசை, பாடல், சதுரங்கம், சிலம்பம், கராத்தே, தட்டச்சு, ஹிந்தி என ஏதேனும் இரண்டு பயிற்சிகளுக்கும் செல்வார்கள். பெற்றோர்களின் வசதிய பொறுத்து நீட் போன்ற நுழைவுத்தேர்வு பயிற்சிகளும் நடக்கும். குழந்தைகளை பயிற்சி மையத்தில் விடவும், அழைக்கவும் என பெற்றோர்களும் ஒரே பரபரப்பாக இருப்பார்கள். அதனால் இத்திட்டம் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பொருந்தாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குதான் இத்திட்டம் என்றால், இதை விட பிள்ளைகளுக்கு தண்டனை அளிக்கக்கூடிய ஒன்று இருக்காது. காரணம் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும், தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பண வசதி இல்லாத பெரும்பாலான பெற்றோர்களின் குழந்தைகள்தான் அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களிலும் கூட ஒன்றிரண்டு குழந்தைகள் தங்கள் தெருவிலோ, அடுத்த தெருவிலோ உள்ள ஏதேனும் ஒரு அக்காவிடம் மாலை தனிப்பயிற்சி செல்வார்கள். மேலும், பல குழந்தைகள் மாலை வேலை முடிந்து பெற்றோர்கள் வந்து சமைப்பதற்கு முன்பான பிற வீட்டுவேலைகள் செய்வார்கள்.

இந்நிலையில், பகல் முழுவதும் பள்ளியில் இருக்கும் குழந்தையை, பள்ளி முடித்து வீடு சென்றதும், மீண்டும் படிப்பு என  உட்கார வைப்பது பெரும் தண்டனையாக அமையும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில்தான், இந்த மக்கள் பள்ளி யாருக்காது, ஏதற்காக என்பது குறித்து விரிவாக அரசு பேச வேண்டும். 

(10.10.21 முகநூல் பதிவு)

திண்ணைப் பள்ளியும் - இணையக் கல்வியும்

///கடந்த ஆண்டு இதே நாளைய பதிவு இது. இந்தக் கூட்டம்தான் 

173 நாட்கள் நாங்கள்

தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம் பள்ளியில் நுண் வகுப்பறைத் திட்டம் நடத்த அடிப்படைக் காரணமாக இருந்தது../////


திண்ணைப் பள்ளியும் -  இணையக் கல்வியும்



பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணையவழிக் கல்வி பெரும் வணிகமாக / சூதாட்டமாக வடிவெடுத்துள்ளது. இதனை தடை செய்யவேண்டும் என்ற குரலும் வலுவாக ஒலிக்கின்றது. அதிலும் சரியாக பேச்சுகூட வராத  மழலையர்களுக்கெல்லாம இணையம் வழியாக கல்வி கொடுப்பது என்பது உச்சக்கட்ட கொடுமை. குழந்தைகள் மீதான சித்திரவதை.  ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இணைய வழிக் கல்வி வேண்டாம் என்று சொன்னால், பள்ளி திறக்கும்போது தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காதோ என்று நினைக்கும் பெற்றோர்களின் தயக்கத்தை, பயன்படுத்திக்கொண்டு பணம் பிடுங்குகின்றனர். பெற்றோர்களும் வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு தங்கள் இயலாமையை வெளிக்காட்டாமல் அழுதுகொண்டே பணத்தை அள்ளிக்கொடுக்கின்றனர். 

0


இணைய வழிக் கல்வி தொடர்பாக  தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினோம். 30 பேர் பங்கேற்றோம். பெரும்பாலோனார், இணைய வழிக் கல்வி  தேவையில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைகள் அந்தக் கல்வியைப் பெறும் குடும்ப சூழலில் இல்லை. குழந்தைகளுக்கு அது தேவையும் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பல மாதங்கள் கல்வியோடு தொடர்பில்லாமல் இருப்பதும் நல்லதில்லை என்ற கருத்தும் வெளிப்பட்டது. குறைந்த பட்சம் 7 அல்லது 8-ஆம் வகுப்பு வரை இணைய வழிக் கல்வி உட்பட எதுவுமே தேவையில்லை. விடுமுறையாக கருதிக் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும். 8 ஆம் வகுப்பிற்கு மேல், குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் இணைய வழிக் கல்வி இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையில் கற்பித்தல் பணி செய்வது என்பது குறித்து பேசலாம் என கருத்து வந்தது. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள், இணைய வழிக் கல்விக்கான செல்பேசி, கணிணி, மடிக்கணிணி, இணையம் இணைப்பு, அதற்கான செலவினம் என எதுவும் சாத்தியமில்லாத மாணவர்கள் சதவிகிதம் அதிகம் எனவே, இணைய வழிக் கல்வி தேவையில்லை என்றும் வேறு எப்படி கல்வி கொடுப்பது என மாற்று குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ’’திண்ணைப் பள்ளி” என்ற வார்த்தை வெளிப்பட்டது. 

0


திண்ணைப் பள்ளி என்ற கருத்தின் அடிப்படையில், நாம் சில முயற்சிகளை எடுக்கலாம். ஒரு தெருவில் அல்லது ஒரு பகுதியில் அல்லது ஒரு குடியிருப்பில் 8 ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் விரும்பினால் யாராவது ஒரு வீட்டில் ஒருங்கிணைப்பது. அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியர் அல்லது ஒரு தன்னார்வலர் அல்லது கல்வியில் அக்கறையுள்ள ஒருவர் மூலமாக ஒரு வீட்டில் கற்பித்தல் பணி செய்வது. அதுவும், பாடப்புத்தகம் இல்லாமல் பொதுக்கல்வியை வழங்குவது. அதுவும்,  தமிழ் ஆங்கிலம் நன்றாக தவறில்லாமல் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பது. கணிதம், அறிவியலின் அடிப்படைகளை சொல்லி புரிய வைப்பது என்ற அளவில் இருந்தால் போதும். பாடங்களை பள்ளி திறந்தபிறகு மாணவர்கள் படித்துக்கொள்ளட்டும் என்று பேசினோம். 

0


இந்நிலையில், உங்கள் நூலகம், ஏப்ரல்-மே இதழில், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதியுள்ள ”திண்ணையில் பாடமெடுத்த அண்ணாவிகள்” என்ற கட்டுரையை இன்று பார்த்தேன். திண்ணைப் பள்ளிகள் குறித்த சில தகவல்களை தெரிந்துகொள்வது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாகவும், தேவையானதாகவும் இருக்கும் என்பதால், அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தொகுத்துள்ளேன். 

0


ஒரு செய்தியை இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. இந்தத் திண்ணைப் பள்ளிகளில் நடக்கும் கற்பித்தலில் வட்டார ரீதியாக வேறுபாடுகள் இருந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரி, ஒரே பாடங்களைக் கற்பிக்கவில்லை. 


0

#அ_கா_பெருமாள்_அவர்கள்_எழுதியுள்ள #திண்ணையில்_பாடமெடுத்த_அண்ணாவிகள்’’


0

‘#நிலாப்பள்ளி

யாழ்ப்பாணம் குடநாட்டில் நிலாக்காலங்களில் பனையோலையை நார்நாராகக் கிழித்து மாடுகளுக்குக் கொடுபர்கள். இதைச் செய்கின்ற வயதான மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு பாரத, ராமாயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பார். சில சமயம் நீதி நூல் பாடல்களைச் சொல்லி விளக்கமும் கூறுவார். இதை நிலாப்பள்ளி படிப்பு என்பார்கள். சி.வை.தாமோதரன் பிள்ளை இப்படியான நிலாப்பள்ளியில் படித்திருக்கிறார். 


#திண்ணையில்_படித்தவர்கள் 

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வையாபுரிப் பிள்ளை தாமிரபரணித் தமிழறிஞர்கள் சிலர் திருநெல்வேலி தெற்கு புதுத்தெருவில் இருந்த கணபதியா பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் வாழ்ந்த தமிழறிஞர்களில் பலரும் இது போன்ற திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தாம். ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை (திருச்சி ஓதுவார் திண்ணைப் பள்ளிக்கூடம்) மறைமலை அடிகள் (காடம்பாடி தி.ப) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (மகிபாலன் பட்டி தி.ப) பி.ஸ்ரீ (தென்திருப்பேரை தி.ப) என இப்படியான தமிழறிஞர்களின் பட்டியல் நீளமானது.  

தொன்மமாகிவிட்டது 

திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய செய்திகள் எல்லாம் இன்று தொன்மமாகிவிட்டன. இது பற்றிய செய்திகள் பெரிய அளவில் சேகரிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் முறையும், நெறிமுறையும் தமிழகத்தின் ஒரே மாதிரியான போக்கில் இருக்கவில்லை. இது வட்டார ரீதியான வேறுபாடு இருந்தது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி போன்ற மொழிகளைக் கற்பித்த திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இது போல தமிழின் பாடத்திட்டமும் கணக்கு கற்பித்தலிலும் வேறுபாடு இருந்தது.

திண்ணைப் பள்ளிக்கூடம் தொடர்பான சொற்கள் முழுதும் வழக்கில் இல்லை. இவை அழிந்து விட்டன. இவற்றில் சில பழம் அகராதிகளில் கூட இடம்பெறவில்லை இவை எல்லாவற்றிற்கும் மாற்றுச் சொற்கள் வந்து விட்டன. தமிழகக் கல்வி குறித்த பழம் தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. கல்வி உயர்வானது, கற்றவன் சமூகத்தில் மதிப்புடையவன் என்பன போன்ற அறச் சார்புடைய சில சிறு குறிப்புகள் பழம் பாடல்களில் வருகின்றன. முந்தைய காலங்களில் இயங்கிய கல்வி நிலையம், மாணவர்களின் பாடத் திட்டம் ஆசிரியர் தகுதி, பெண்கள் கற்கும் நிலை என்பன போன்ற பல விஷயங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன.  17, 18, 19, நூற்றாண்டு கதைப் பாடல்களில் ஆசிரியரின் தகுதி, கற்பித்த பாடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. இவை கிராமங்களில் கற்பித்தமுறை தொடர்பானவை கல்வெட்டுகளில் காணப்டாதவை.


#திருவிதாங்கூர் 

திருவிதாங்கூரில் அரசு பள்ளிகள் அறிமுகமாவதற்கு முன் இருந்த                திண்ணைப் பள்ளிக் கூடங்கள் பற்றி திருவிதாங்கர் சர்ச் வரலாற்றை எழுதிய சி.எம்.ஆகர் என்பவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். "1903 இல் திருவிதாங்கூரில் 1300 திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவற்றில் 50,000 மாணவர்கள் படித்தனர். ஒரு பள்ளிக்கு ஒரே ஆசிரியராக இருந்தார். பெண்கள் இந்தப் பள்ளிகளில் படிக்கவில்லை. திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர்கள் செல்வந்தர் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்கிறார். திருவிதாங்கூரில் 1860 லேயே பள்ளிகள் வந்த பின்பும் 40 ஆண்டுகள் கழித்தும் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன.  இது போன்றே தமிழகத்தின் நிலையும், சென்னையில் பல்கலைக்கழகம், ராஜதானி கல்லூரி, தாம்பரம் கல்லூரி, பிஷப் ஹியூபர் கல்லூரி, பாளை தூய சேவியர் கல்லூரி, வளனார் கல்லூரி எல்லாம் தொடங்கப்பட்ட பின்பு 60 - 70 ஆண்டுகள் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன. 


#திண்ணையில்_#பள்ளிகள் 

பள்ளி என்பது சமண சமயம் தொடர்பான சொல். மடங்களைக் குறிக்கவும் பின் கல்விக் கூடங்களைக் குறிக்கவும் பயன்பட்டது. ஆசிரியரின் வீட்டுத் திண்ணையே பள்ளியாகச் செயல்பட்டது. இது தமிழகத்தில் பரவலான ஆரம்பகால நிலை. இது பற்றிய குறிப்புகள் உ.வே.சா. போன்ற பழைய தமிழறிஞர்களின் அனுபவக் கட்டுரைகளில் உள்ளன. பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்த ஊரில் உள்ள மாணவர்களே இங்குக் கற்றனர். மாணவர்கள் வீட்டிற்குச் சென்று திரும்பும் அளவு தூரத்தில்தான் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது. 


#இரண்டே_பாடங்கள் 

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ் கணக்கு இரண்டு மட்டும் கற்பிக்கப்பட்டன. தொடக்ககாலத்தில் நீதி நூற்கள் வழி ஒழுக்கத்தைக் கற்பிப்பதே கல்வி என நம்பப்பட்டது. கணக்கு என்பது வாய்ப்பாடுகளை மனனம் செய்வதுதான். அவை கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம் குழிமாற்று நெல்லிலக்கம் என்பவை. முக்கியமாக பெருக்கல் வகுத்தல் கூட்டல் வாய்ப்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டன. மரபுவழியான தொழில் நுட்பம் கல்வியாக அங்கீகரிக்கப் படவில்லை. இவை தந்தை / மாமா வழியே அறியப்பட்டன. 


#முறண்டு 

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடத்தை ஒப்புவிப்பதை முறை சொல்லுதல் என்றனர். இதற்கு முறண்டு என்றும் பேச்சுவழக்குச் சொல்லும் உண்டு. திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்பது இதன் பொருள். முறண்டு பிடித்தல் என்னும் சொல் வழக்காறு இதிலிருந்து வந்திருக்கலாம். 


திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்பட்ட இன்னொரு விஷயம் ஓலையில் எழுதவும் படிக்கவும் பயிற்சி கொடுத்தது. பனை ஓலையை வடிவமைப்பது எழுதுவது, பாதுகாப்பது எனப்பல விஷயங்களை திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரே கற்பித்திருக்கிறார்.


#திண்ணைப் பள்ளிக் கூடம் தொடர்பான சில சொற்கள் இப்போது வழக்கில் இல்லை.

அண்ணாந்தாள் - மாணவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை.

ஏற்றாள் அல்லது வேற்றாள் - பள்ளிக் கூடத்துக்கு முதலில் வரும் மாணவன். கட்டை மாட்டல் - மாணவனுக்குரிய தண்டனை 

குதிரை ஏற்றம் - மாணவனுக்குரிய தண்டனை.

கோதண்டம் இடுதல் - மாணவனுக்குரிய தண்டனை சட்டம். 

சட்டாம்பிள்ளை - மாணவர் தலைவன்.

சுவடி தூக்கு - ஓலைச் சுவடிகளை ஒரு பலகையில் வைத்து முதுகின் முன் தொங்கவிட்டு தூக்கிச் செல்வது. 

துவக்கல் - புதிய ஏட்டை படிக்கத் தொடங்கும் முதல் நிகழ்வு.

படியோலை - மூல ஓலையிலிருந்து பிரதி செய்யும் ஓலை. 

மானம்பூ - ஆசிரியருக்கு நவராத்திரியில் வரும் உபரி வருமானம். 

முறங்கு சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.

முறை சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்.

முரண்டு – உருப்போடுதல், திரும்பத் திரும்பச் சொல்லுதல்.

வாவுநாள் - விடுமுறை நாள் 

வாவுக்காசு - ஆசிரியரின் சம்பளம்.

பார்ப்பனர் மற்றும் சடங்குகள் இல்லாத திருமணம் - 1956 இல்






 1956 இல் 

பேருந்து வசதியில்லாத கிராமத்தில் -

பார்ப்பனர் இல்லாத திருமணம்

--------------------------------------------------------

இருவரும் இன்று உயிரோடு இல்லை. எனது தாய், தந்தையான அவர்களின் திருமண நாள் இன்று.

இன்றும் கூட சரியான பேருந்து வசதியில்லாத சிறிய கிராமம் எங்களுடையது. 1956 இல் போக்குவரத்து வசதி என்பது ? 

இதே நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்திலேயே நடைபெற்ற எனது தாய்-தந்தையின் திருமணத்தின் வாழ்த்து மடல்.

திருமணத் தம்பதியரான எனது பெற்றோருக்கு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வி.வா.சுந்தரம் என்பவர் என்பவர் வழங்கிய 

மு.வ-வின் நண்பர்க்கு என்கிற அன்பளிப்பு நூல். 

இத்திருமணத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் 65 வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறு கிராமத்தில் பார்ப்பனர் மற்றும் எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெற்ற ஒரு திருமணம். 

அருகே உள்ள பரவளூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் பூமாலை என்பவர் தாலியினை எடுத்துக்கொடுக்க திருமணம் நடைபெற்றுள்ளது.

இப்படி திராவிட இயக்கம், அதன் கொள்கைகளை உள்வாங்கி, எங்கள் மீது எவ்வித ஆதிக்கமும் செய்யாமல் எங்கள் விருப்பத்திற்கு எங்களை வளர்த்தனர் பெற்றோர்.


இதன் தொடர்ச்சியாக, 

எனது அண்ணன் அண்ணாதுரையின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.


என்னுடையது பதிவுத் திருமணமாக மட்டுமே நடைபெற்றது.